26.10.20
ரேவா
தொடங்கியது_போர்_73
வானத்து நிலவு சற்றுத் தயங்கித் தயங்கி மெல்ல உதயமானதோடு, தனது முகத்தைக் காட்டவும் பயந்து மேகங்களினூடே மறைந்து மறைந்து அவ்வப்போது தலைகாட்டிக் கொண்டிருந்தது.
நந்திபுரக் கோட்டையை நோக்கி பாண்டியரதுப் படைகள் பாசறையை விட்டு நகரத் துவங்கியிருந்தது. அதற்கு முன்னதாகவே நந்திபுரக் கோட்டையை பாண்டியர்கள் முற்றுகையிட்டு இருக்கிறார்கள் என்று அறிந்த தஞ்சை பிடுகு சுவறன் மாறன் முத்தரையர் தனது படைகளோடு பல்லவருக்கு உதவி புரிய வேண்டுமென்ற நோக்கில், பாண்டியர்களை எதிர்கொண்டார். ஆனால் அவரது படைகளை மாறன் எயினனும், தீரகரனும் தங்களது படைகளுடன் மறித்து எதிர் தாக்குதல் செய்தனர்.
கோட்டையை நோக்கி யானைகளுடன் சென்று கோட்டைக் கதவுகளைத் தகர்க்கவும், பாரிவிற் கழிகள் மூலம் எரிகின்ற பந்தங்களைக் கொளுத்தி கோட்டைக்குள் வீசவும் பாண்டியன் உத்தரவிட்டிருந்தான்.
கோட்டையை நெருங்க பாண்டியரது படைகள் மரங்கள் வெட்டப் பட்ட மையவெளிப் பகுதியை அடையவும், கோட்டைக்குள்ளிருந்த வேலெறி எந்திரங்களும், விற்க்கூடங்களில் இருந்தும் எந்திரங்கள் கோட்டைச் சுவரின் முகப்பில் நிலை நிறுத்தப் பட்டதோடு, அவை பயங்கரமாக சுழன்று இயங்கவும் துவங்கின. அதிலிருந்து கிளம்பிய வேல்களும், அம்புகளும் படைவீரர்களைச் சாய்த்ததோடு, யானைகளையும் பயங்கரமாய் காயப்படுத்த, மதம் கொண்ட யானைகள் பின்னுக்கு திரும்பி ஓடத் துவங்கியதில் பாண்டியரது சேனையே பலத்த சேதத்தை சந்திக்கும் படியானது. அதிலும் தப்பிப் பிழைத்தவர்கள் கோட்டையை நெருங்கி பெரிய பெரிய மர உலக்கைகளால் கோட்டையைத் தகர்க்கத் துவங்க, அவர்கள் மேல் கொதிக்கின்ற எண்ணெய் மேலிருந்து ஊற்றப் பட்டது. ஒரு சிலர் உடும்புகளால் பிணைக்கப் பட்ட கயிறுகளை வீசி கோட்டையின் சுவர்களில் ஏற முற்பட்டார்கள். அவர்களை நந்திபுர வில்லாளிகள் தங்களது விற் திறமையால் , அகழியில் விழவைத்து முதலைகளுக்கு இரையாக்கினார்கள். கோட்டையின் சுவர்களில் பல்லவரது தலையை மட்டுமே காண முடிந்ததே யன்றி, ஒருவரையும் முழுதாக காண முடியாத காரணத்தால் , பாண்டியர்கள் பிரயோகித்த ஆயுதங்கள் யாவும் பலனின்றி போயின. பல்லவர்களை எதிர்ப்பதற்கு இலக்கின்றி திணறவே செய்தார்கள் பாண்டியர்கள். பாண்டியர் வசம் சேதம் அதிகமானதே தவிர எடுத்துக் கொண்ட முயற்சி முழு வெற்றியைப் பெறவில்லை.
பாண்டியரது முயற்சிகள் அனைத்தும் கனவாகிப் போக..சோர்வுடன் சேனைகள் பாசறைக்குத் திரும்பி விட்டன. வீரர்களின் உடலெங்கும் தீக்காயங்களும், நாண்களால் ஏற்பட்ட காயங்களும் பெரிதாய் காணப்பட்டது.
பலத்தக் காயங்களுடன் வீரர்கள் முனகி கொண்டிருந்தனர். பாண்டியர்களின் சேனைகளே பலத்த இழப்புகளை சந்தித்து இருந்தன. பலரும் அகழிகளில் விழுந்து முதலைக்கு இரையாகி இருந்தார்கள். அகழியில் நிரப்பப் பட்டிருந்த நீர் செந்நிறமாய் மாறிப் போயிருந்தது. பாண்டியர்களின் முகாமில் கோபத்துடன் நடந்து கொண்டிருந்தான் பராங்குச மாறவர்மன்.
" நமது முதல் முயற்சியே தோல்வியில் முடிந்திருக்கிறது. கோட்டையை நெருங்கவே முடியவில்லை. கோட்டைக்கு முன்னிருக்கும் மையவெளியைக் கடந்து கோட்டையின் கதவுகளை நெருங்க முடியவில்லை. தவறி நெருங்கினாலும் கொதிக்கும் எண்ணெயாலும், வேலாலும் தாக்குதல் பலமாக இருக்கிறது. கோட்டைக்குள் அளவானச் சேனைகளை வைத்துக் கொண்டே நம்மைத் துணிவாய் எதிர்த்து நிற்கிறான் நந்திவர்மன்."
" துணிச்சல் மிகுந்தவன் தான்..இருக்கட்டும்.
நமது அடுத்த முயற்சியாக என்ன செய்வது.." என்றார் சாத்தன் கணபதி.
" இரண்டு நாட்கள் பொறுத்திருப்போம்..பிறகு
கோட்டையை மறுபடியும் தகர்க்க வேண்டியது தான்." என்றான் பாண்டியன் பராங்குச மாறவர்மன்.
" அரசே..பாண்டியப் படைகள் பின்வாங்கி விட்டன. கோட்டையைத் தகர்ப்பதை தற்காலிமாக நிறுத்தி விட்டார்கள். இருப்பினும் மீண்டும் தாக்கலாம்." என்றான் நந்திபுரக் கோட்டைக் காவலன்.
" கோட்டைக் காவலரே, உண்மை தான். பாண்டியன் இனி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டான். நாம் இறுதி வரை முயன்று பார்த்து விட வேண்டியது தான். " என்றான் நந்திவர்மன்.
" கோட்டைக் காவலரே, அடுத்தமுறை கோட்டையினை பாண்டியரதுப் படைகள் தகர்க்க முற்பட்டால், கோட்டையின் கதவுகளைத் திறந்து விடுங்கள்..பாண்டியரது முன்பகுதி படைகள் கோட்டைக்குள் வரவும் அனுமதியுங்கள்.." என்றான் நந்திவர்மன்.
" என்ன..! கோட்டையின் கதவினைத் திறப்பதோடல்லாமல், கோட்டைக்குள் நுழையவும் விட வேண்டுமா..? இதனால் விளையக் கூடிய விளைவுகளை அறிந்திருக்கிறீர்களா..? " என்றான் கோபமாய் கோட்டையின் தலைவன்.
" ஒன்றும் நடவாது. சொன்னதைச் செய்."
நந்திவர்மன் கூறியதைப் போன்றே பாண்டியரது சேனைகள் இரண்டு தினங்களில் மறுபடியும் தாக்குதலுக்கு தயாராகி வந்தன. கோட்டையின் கதவும் திறக்கப் பட்டது. ஆனால் பாண்டியரது படையோ எதிர்பாராத விளைவை அங்கு சந்தித்தது.
பாண்டியன் இரண்டு தினங்களுக்குப் பின் மீண்டும் கோட்டையைத் தகர்க்க ஆட்களை அனுப்பினான்.
கோட்டையின் கதவுகளைப் பெரிய மர உலக்கைகள் கொண்டு இம்முறை தகர்க்க முற்பட்டனர் பாண்டியர்.
சென்ற முறை யானைகளினால் பாண்டியரது படைகளே பலத்த சேதத்தை அடைந்த காரணத்தால் இம்முறை யானைகளைத் தவிர்த்து வீரர்களே பெரிய மர உலக் கைகளால் கோட்டைக் கதவுகளைத் தகர்க்கத் தொடங்கினார்கள்.
கோட்டையைத் தகர்க்க முற்படும் போது கோட்டையின் கதவுகள் திடீரென திறக்கப் படவும், பாண்டியரது முற்பகுதி படைகளைச் சேர்ந்த முன்னூறு பேர் கோட்டைக்குள் வேகமாக நுழைந்ததும், திடீரெனக் கோட்டையின் கதவுகளை இறக்கி மூடி விட்டார்கள் நந்திபுர கோட்டை வீரர்கள்.
வெளியே திகைத்து நின்றது பாண்டியரது படை. அவர்கள் மீது கோட்டையின் மீதிருந்த எந்திரங்களால் தாக்குதல் நடைபெற அவர்களும் மெல்ல பின் வாங்கத் துவங்கினார்கள்.
கோட்டைக்குள் நுழைந்த முன்னூறு வீரர்களின் கதியோ, சொல்லத் தரமற்றதாக இருந்தது. உள்ளுக்குள் நுழைந்த வீரர்களைச் சுற்றி வளைத்த பல்லவ வீரர்கள்., சிலரை மேலுலகம் அனுப்பி வைத்ததோடு, பலரை சிறை செய்து காவலில் வைத்தனர்.
கோட்டைக்குள் நுழைந்த வீரர்களின் கதி என்ன..? என்பதறியாத பாண்டியனோ தன் பாசறையில் கோபத்துடன் பலத்த யோசனையோடு நடைபயின்று கொண்டிருந்தான்.
_ தொடரும்..
# அனுராஜ்..



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக