27.10.20
ரேவா
பாதியில்_முடிந்த_
பரிவேள்வி_யாத்திரை_74
உடலெங்கும் புழுதியுடனும், தூக்கத்தைத் தொலைத்த கண்களுடனும் வந்து நின்ற ஒற்றர் படைத் தலைவன் சீராளனைக் கண்டதும் வியப்பு மேலிட,
"என்ன சீராளா..ஏதேனும் முக்கிய செய்தி உண்டா..? மிகவும் களைப்பாக காணப்படுகிறாயே..சரிவர ஓய்வெடுத்துக் கொள்ளவில்லையா..? " என்றான் உதயச்சந்திரன்.
" படைத்தலைவரே, திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் நிகழ்த்தப்பட்ட நந்திபுர விண்ணகரத்திற்குச் சென்றிருந்த நம்முடைய மன்னரை பாண்டியன் பராங்குசன் முற்றுகையை நீடித்து சிறைப்படுத்தி இருக்கிறான்.."
" என்ன..?! " அதிர்ச்சியில் திகைத்தான் உதயச்சந்திரன்.
" ஆம்..அது மட்டுமின்றி காஞ்சியிலோ..நமது முதலமைச்சர் பிரம்மஸ்ரீ ராஜனை மாளிகைக் காவலில் சிறை வைத்த சாளுக்கிய விக்கிரமாதித்தன் காஞ்சியையும் கைப்பற்றி விட்டதாக வரும் வழியில் அறிந்தேன்." என்றான் துயரந்தோய்ந்த குரலில் சீராளன்.
" என்ன..?! " ஏக காலத்தில் இப்போது அங்கிருந்த அனைவருமே அதிர்ந்தார்கள்.
"தந்திதுர்க்கரே..பரிவேள்வியினை நாம் இத்துடன் நிறுத்திக் கொள்வோம், நமது உதவி இப்போது நந்திவர்மனுக்கும் தேவைப்படுகிறது, காஞ்சிக்கும் தேவைப்படுகிறது."
" உண்மை தான்.." என்றார் காடவ முத்தரையர்.
" நல்லது..நாம் அனைவரும் திரும்பலாம்.." என்றார் தந்திதுர்க்கன்.
" தந்திதுர்க்கரே..தங்களது அச்சல்பூர் படையை தங்களது தேசத்திற்கு அனுப்பி விடுங்கள்.இப்போது தங்களது படையின் உதவி தேவையிராது. தேவைப்படின் வரவழைத்துக் கொள்ளலாம். பியூஷாவையும், நிரஞ்சனாதேவி இருவரையும் ரதமொன்றில் காஞ்சிக்கு அழைத்துச் சென்று விடலாம். முதியவர் தேவசேனன் காஞ்சி வருவதாக இருந்தால் தாராளமாக வரட்டும். நாங்கள் உடனே நாடு திரும்ப ஏற்பாடு செய்ய வேண்டும்." என்றான் உதயச்சந்திரன்.
" சீராளா..நீ சற்றே ஓய்வெடுத்துக் கொள்..படைகளை ஒன்றிணைத்து கிளம்ப ஆயத்தப் படுத்துகிறேன்." என்றவாறு வெளியேறினான் உதயச் சந்திரன்.
அன்றைய மாலை..
பல்லவரதுப் பெருஞ்சேனை, கோதாவரி நதிக்கரை சபர தேசத்தை விட்டுக் கிளம்பியது.
பல்லவரதுப் படைகளுடன் ஐயாயிரம் வீரர்கள் கொண்ட சிறு படையை மட்டும் அச்சல்பூர் அரசன் தந்திதுர்க்கன் இவர்களோடு அனுப்பி வைத்தான். சபர தேசத்தின் நிர்வாக ஒழுங்கையும் சேர்த்துக் கவனிக்க வேண்டியதிருந்த காரணத்தால் தந்திதுர்க்கன் அங்கேயே விடைபெற்றுக் கொண்டதோடு, சில தினங்களில் தான் வந்து இணைந்து கொள்வதாகவும், அதற்கிடையில் ஏதேனும் உதவி தேவைப்பட்டாலும் தயங்காது அழைக்குமாறும் கேட்டுக் கொண்டான்.
உதயச்சந்திரன் தலைமையில் பல்லவரதுப் படைகள் வெயில் கொடுமையினைத் தணித்துக் கொள்வதற்காக மட்டுமே ஓய்வெடுத்துக் கொண்டது, மற்றபடி விரைவாக நந்திபுரத்தை நோக்கி சென்றடைவதில் முனைப்புடன் செயல்பட்டது.
* * *
காஞ்சியில் தனது பூஜை அறையில் காலை வேளை பூஜையை முடித்துக் கொண்டு வெளிவந்த பல்லவ முதலமைச்சர் கூடத்து ஆசனத்தில் கம்பீரமாக வீற்றிருந்த சாளுக்கிய விக்கிரமாதித்தனை முற்றிலும் அங்கு அவ்வேளையில் எதிர்பாரா காரணத்தால் சற்றே திடுக்கிட்டுப் போனாலும், உடனே அதை மறைத்துக் கொண்டவராய், சாளுக்கிய சக்கரவர்த்தி அடியேனைத் தேடி வந்ததன் காரணம் ..? " என்றார் சற்றே இளநகை கூட்டியவராய்.
" காரணம் இருந்தால் தான் தங்களைக் காண வரவேண்டுமா..? " என்றான் விக்கிரமாதித்தனும் சளைக்காமல் இளநகையை கூட்டியபடி.
" சிறைப்பட்டவனைப் பார்க்க நாட்டின் காவலனே வருவதென்பது.." சொல்லிக் கொண்டுப் போனவரை இடைமறித்த விக்கிரமாதித்தன்.
" சின்ன திருத்தம்.. தாங்கள் சிறைப் பட்டவர் என்று யார் கூறியது..? "
" மாளிகைக் காவலில் இருந்தால் சிறையில் இருப்பதென்று ஆகாதா..? " என்றார் பிரம்மஸ்ரீ ராஜன்.
" சிறையில் இருப்பவர்களுக்கு, பூரண சௌகரியத்துடன் பூஜை செய்வதற்கும், பெண்களைத் தூது அனுப்புவதற்கெல்லாம் சுதந்திரம் வழங்கப் படுவதில்லை..என எண்ணுகிறேன்.." என்றான் சற்றே இகழ்ச்சியாக விக்கிரமாதித்தன்.
திடுக்கிட்டுப் போன பிரம்மஸ்ரீ ராஜன், தனது ஒவ்வொரு நடவடிக்கையும் விக்கிரமாதித்தனால் மிக உன்னிப்பாகக் கவனிக்கப் பட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்து கொண்ட பிரம்மஸ்ரீ ராஜன், "சாளுக்கிய வேந்தருக்கு, இந்த ஏழை பிராமணன் பேரில் தான் எத்தனை அக்கறை.." என்றார் சற்றே விஷமம் கலந்த குரலில்.
" பல்லவ அமைச்சரே, நான் தங்களைத் தேடி வந்த காரியமே வேறு..இங்கு பேச்சு திசைமாறிச் செல்கிறது." என்றவனாய்.
" பிரம்மஸ்ரீ ராஜரே நந்திபுரத்தை பாண்டியரது சேனைகள் முற்றுகையிட்ட செய்தி கிடைத்ததா உங்களுக்கு..! "
சற்றே திடுக்கிட்டாலும் , அதை வெளிக் காட்டிக் கொள்ள விரும்பாதவராய் , " அப்படியா..! " என்று கேட்டதோடு நிறுத்திக் கொண்டார்.
சாளுக்கிய விக்கிரமாதித்தன் , அவரிடம் இது போன்ற தொரு மறுமொழியை எதிர்பார்க்கவில்லையாதலால் விக்கிரமாதித்தன் தான் ஆச்சர்யத்தின் வசமானான்.
" பல்லவ மந்திரியாரே, இங்கு வந்ததில் இருந்து உடல்நலம் சரியில்லை, எனவே நான் கல்யாணபுரம் செல்ல உத்தேசித்து இருக்கிறேன். காஞ்சியின் பொறுப்பினை எனது மைந்தன் கீர்த்திவர்மன் ஏற்பான். தாங்கள் எனக்களித்த ஒத்துழைப்பினை அவனுக்கும் அளித்து காஞ்சியின் நிர்வாகம் சிறக்க ஒத்துழைக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். இதனை தங்களிடம் கூறி விடைபெற்றுச் செல்லவே இங்கு வந்தேன்." என்று கூறி முடித்தான் சாளுக்கிய விக்கிரமாதித்தன்.
சிறைப்பட்டிருப்பவனிடமே வந்து ஒத்துழைப்பைக் கேட்டு நின்ற விக்கிரமாதித்தனின் செயலைக் கண்டு அதிர்ச்சியில் மலைத்து நின்றார் பல்லவ முதலமைச்சர் பிரம்மஸ்ரீ ராஜன்.
* * *
நந்திபுரக் கோட்டையை முற்றுகையிட்ட பாண்டியரது பாசறை.
பலத்த யோசனையுடன் காணப்பட்ட பாண்டியன், நந்திவர்ம பல்லவன் பாண்டியர்களது சேனையின் தாக்குதல்களை வெற்றிகரமாக இருமுறையும் முறியடித்து கோட்டையைக் காப்பாற்றியதனால், பாண்டியனின் பலத்த கோபத்திற்கும், சீற்றத்திற்கும் ஆளானான். தனது மனைவி பூசுந்தரியின் தந்தையும் கங்க நாட்டு மன்னன் சிறீபுருஷனின் முன்னிலையில் ஏற்பட்டு விட்ட இந்த முறியடிப்பு பாண்டியனுக்கு பலத்த அவமானமாய் இருந்தது. மேலும் பல்லவனுக்கு வேறெங்கும் இருந்து உதவிகள் வருவதற்குள் அவனைச் சிறைப்படுத்தி விடுவது நல்லதென நினைத்திருந்தான். எனவே, அடுத்தக்கட்டத் தாக்குதலை நன்கு திட்டமிட்டு நடத்துவதென்ற எண்ணத்தோடு, கோட்டையின் தெற்கு வாயிலை தகர்த்து உள்ளே நுழைய முடிவெடுத்தவனாய், " சங்கரா நீ உன் வீரர்களுடன் தெற்கு வாயிலை தகர்த்து முன்னேறு. சித்ரமாயன் கிழக்கு வாயிலை தகர்த்து முன்னேறட்டும். கோட்டையை விட்டு பல்லவரது படைகள் வெளியேறினால் நமது சேனாதிபதி சாத்தன் கணபதி அவர்களை எதிர்த்து நின்று களம் காண்பார்.." என்றான் பாண்டியன் பராங்குச மாறவர்மன்.
அனைவரும் ஒருமனதாக அதனை வரவேற்றனர்.
பாண்டியன் எதிர்பார்த்தது போல் நந்திபுரக் கோட்டையின் தெற்கு வாயில், பாண்டியர் தகர்க்கும் முன்பே திறக்கப் பட்டது..கூடவே கிழக்கு வாயிலும் திறக்கப் பட்டது..ஆனால் பாண்டியனே எதிர்பாராத பலவிசயங்கள் தொடர்ந்து நடந்தேறி விட்டன.
_ தொடரும்..
#அனுராஜ்..



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக