29.10.20-ரேவா: 76: காஞ்சியை_வாட்டியது_பஞ்சம் - தென்குமரிக் கவிதைக்களம்

வியாழன், 29 அக்டோபர், 2020

29.10.20-ரேவா: 76: காஞ்சியை_வாட்டியது_பஞ்சம்



29.10.20


ரேவா


காஞ்சியை_வாட்டியது_பஞ்சம்_76


காஞ்சிக்குள் சாளுக்கியர்கள் நுழைந்த போதெல்லாம், சாளுக்கிய சக்கரவர்த்திகளின் வாழ்வும் அஸ்தமித்து விடுகிறது என்பதை மெய்பிப்பது போல், இரண்டாம் புலிகேசியில் இருந்து தொடர்ந்தது , முதன் முதலில் விக்கிரமாதித்தன் நுழைந்த வேளை அவனது தந்தையான சக்கரவர்த்தி விஜயாதித்தன் காலமானார். அதே போன்று இப்போது கீர்த்திவர்மன் கால் பதித்த வேளையோ என்னவோ, சாளுக்கிய சக்கரவர்த்தி விக்கிரமாதித்தன் உடல் நலமின்றி காலமானான்.


கீர்த்திவர்மனுக்கு உடனடியாக சாளுக்கிய தலைநகர் கல்யாணபுரத்திற்கு செல்ல வேண்டிய சூழல் உருவாக சாளுக்கியரின் அரச பிரதிநிதியாக சோமேஸ்வரன் என்பவனை நியமனம் செய்து விட்டு தனது தேசத்திற்குச் சென்று விட்டான்.


சாளுக்கியச் சக்கரவர்த்தியாக கீர்த்திவர்மன் முடிசூட்டிக் கொண்டான்.


சாளுக்கிய தேசத்தில் இவ்வளவும் நடந்தேறியிருக்க, நந்திபுரத்திலோ நந்திவர்மன் பாண்டியர்களின் சேனைகளை முறியடித்து வெற்றியை ஈட்டியிருந்தான். 


உதயச்சந்திரனும், காடவ முத்தரையரும் நந்திவர்மன் சிறு படை கொண்டே பாண்டியரது முற்றுகையை நீட்டித்ததற்குப் பாராட்டினர்.


" நமது படைத் தலைவர் சரியான நேரத்தில் வந்து சேர்ந்துவிட்டார். அவரது வருகையினால் தான் நமது வெற்றி சாத்தியமானது. இல்லையென்றால் அறுநூறு வீரர்களைக் கொண்டு பாண்டியரது சேனைகளை எதிர்த்து நிற்பது இயலாத காரியம் தான். " என்றான் நந்திவர்மன்.


" பிடுகு சுவறன் மாறன் முத்தரையரின் பங்களிப்பும் பாராட்டுதற்குரியது. அவரது படைகளும் தொடர்ந்து பாண்டியர்களின் படையை விரட்டிச் சென்று திரும்பியது..! " என்றார் பெருமையுடன் பல்லவடி அரையன்.


பல்லவர்களின் பெரும் சேனை காஞ்சியை நோக்கி நகரத் துவங்கியது.


பல்லவர்களின் பெரும் படையை எதிர் கொள்ள முடியாத சோமேஸ்வரனின் சாளுக்கியப் படைகள் பின் வாங்கி ஓடத் துவங்கியது. சாளுக்கியர்களின் தலைநகரான கல்யாணபுரத்திலிருந்து படை உதவிகள் வந்து சேராத நிலையில் சாளுக்கியர்களின் தோல்வி  தவிர்க்கவியலாத ஒன்றாய் அமைந்தது.


வெற்றிக் களிப்பில் காஞ்சி நகருக்குள் நுழைந்தது பல்லவரது படைகள்.

வீதியெங்கும் மலர்களைத் தூவி மக்கள் வரவேற்றனர். அரண்மனை வாயிலில் நந்திவர்மன், உதயச்சந்திரன், காடவ முத்தரையர், பல்லவடி அரையன், சீராளன், சேந்தன் ஆகியோருக்கு புஷ்பஹாரம் சூட்டப்பட்டு, ஆரத்தி எடுக்கப் பட்டது. காஞ்சி நகரே விழாக் கோலம் பூண்டது.


பிரம்மஸ்ரீ ராஜன் அவரது மாளிகைக் காவலில் இருந்து விடுவிக்கப் பட்டார். 


காஞ்சியின் எழிலும், மக்களின் அன்பிலும் பூரித்துப் போயிருந்தாள் பியூஷாவின் தாய் நிரஞ்சனா தேவி. தேவசேனனும் காஞ்சிக்கு வந்து விட்டிருந்த படியால் , வயதினைக் கருதி அவருக்கு மாளிகைக் காவல் பணி பல்லவ அரசால் வழங்கப் பட்டது. நல்லதொரு நாளில் உதயச்சந்திரன் பியூஷாவின் கழுத்தில் மங்கல நாணைச் சூட்டினான்.


அரண்மனைக்குள் மகிழ்ச்சியும், குதூகலமும் நிறைந்திருந்த வேளையில் தான் , தொண்டை மண்டலத்தை வாட்டும் படியான ஒரு பெரும் பஞ்சம் வந்து சேர்ந்தது. மக்கள் அனைவரும் துன்பக் கடலில் மூழ்கும் படியானது.


மும்மாரி பொழிந்த நாட்டில் மழையும் பொய்த்தது. பாண்டியர்கள் முற்றுகைப் போரில் விளைந்த கதிர்களுக்கு தீ வைத்துக் கொளுத்தி எரிபரந்தெடுத்தல் நடத்தியதும் உணவு பற்றாக் குறைக்கு ஒரு காரணமாகிப் போனது. வானத்துக் கதிரவனின் உக்கிரப் பார்வையினால் தொண்டை மண்டலத்தின் நீர்நிலைகள்அனைத்தும் வற்றிப்போக , தொண்டை மண்டலத்தின் இராசத் தடாகம், திரளயத் தடாகம்( தென்னேரி ), மகேந்திரத் தடாகம், சித்திர மேகத் தடாகம் ( மாமண்டூர் ஏரி ) , பரமேசுவரத் தாடகம் ( கூரம் ஏரி ) போன்ற தடாகங்கள் அனைத்தும் வறண்டு மக்கள் பசியாலும், பட்டினியாலும் வாடும் நிலையை அடைந்தார்கள். அரசு ஈடுபட்ட ஓயாதப் போர்களினால் தான் பஞ்சம் வந்து விட்டது என ஒரு சாராரும், பரிவேள்வியை வெற்றி முகம் கண்டபின் தொடராமல்,  பாதியில் நிறுத்தி விட்டு வடதேச யாத்திரையை முடித்துவிட்டு வராத காரணத்தால் தான் பஞ்சம் வந்து விட்டது என ஒரு சாராரும் நகரெங்கும் பேசத் துவங்கினார்கள். மக்களுக்கு பேசுவதற்கு ஏதாவது ஒரு காரணம் போதாதா..?


நிலத்தின் உரிமையாளர்கள்  பலரும் , விளைச்சலின்றி நிலத்தினை ஒற்றி வைத்து தங்களது பணத் தேவையினைப் பூர்த்தி செய்து கொண்டார்கள். அந்நாளில் பழங்காசு என்பது நடைமுறையில் இருந்தது. பழங்காசினோடு உறைப்ப துளைப்பொன்  என்ற வரிகளின் வாயிலாக துளையிடப்பட்ட பொன்னுக்கு அதிக மதிப்பிருந்ததையும் அறிய முடிகிறது. பொன்னைக் கொடுத்து தங்களது உணவு தானியங்களை வேற்று தேசத்திலிருந்து தருவித்தார்கள். 


திருவீழிமிழலையில் இறைவனைப் பாடி பொற்காசு பெற்று அடியவர்களையும், மக்களையும் சமயக்குரவர்கள் உண்பித்த நிகழ்ச்சிகளும் நடந்தேறியதை காண முடிந்தது. வசதியானோர் வறியவர்க்கு உதவியும், கோவில் பண்டாரங்களில் இருந்து தானியம், மற்றும் பொன்னும் வழங்கப் பெற்று பஞ்சத்தினைப் போக்கிட உதவி புரிந்தார்கள். பல்லவ நாட்டின்  பஞ்சத்தினைப் பற்றி கேள்வியுற்ற தந்திதுர்க்கன் ஏராளமான பொருளுதவி செய்தும், உத்தரமேரூரில் தனது பெயரில் ஏரி ஒன்றையும் வெட்டுவித்தான். அதுவே வைரமேகத் தடாகம் என வழங்கப் பட்டது. நிறைய பொன்னும் பொருளும் பெற்றவர்கள் தாங்கள் பெற்ற கடனை ஈடு செய்ய , தானும் தனது வாரிசுகளும் தங்களுக்கு அடிமை என்று எழுதித் தரும் #ஆளோலை" முறைப்படி அடிமைப் படுத்தும் வழக்கமும் அந்நாளில் வழக்கத்தில் இருந்தது.


பரிவேள்வி மூலம் பல நாடுகளில் இருந்து கொணர்ந்த செல்வம் பஞ்சத்தில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கப் பட்டது.  ஆலயங்கள் வாயிலாக அனேக உதவிகளை சிவனடியார்களும், வைஷ்ணவர்களும் மக்களுக்குச் செய்தனர். #பஞ்ச காலத்தில் பல்லவ மன்னன் நந்திவர்மன் தனது தேசத்து மக்கள் துயருறா வண்ணம் பல்வகை செயல்களால் பட்டினியை விரட்டிட அரும்பாடு பட்டான்.


ஒரு வழியாகப் பஞ்சத்திலிருந்து மீண்டெழுந்த பல்லவ தேசத்தின் மீது போர் தொடுக்க சாளுக்கிய கீர்த்திவர்மன் நல்லதொரு வாய்ப்பினை எதிர் நோக்கி காத்திருந்தான்.


_ தொடரும்..


#அனுராஜ்..


குறிப்பு :  ஆளோலை முறை அந்நாளில் வழக்கத்தில் இருந்ததை சுந்தரமூர்த்தி நாயனாரின் வாழ்க்கை வாயிலாக அறியலாம். 


தொண்டை நாட்டில் எழுந்த பஞ்சத்தை திறம்பட சமாளித்து மக்களின் துயரினை துடைத்த பல்லவ மன்னன் நந்திவர்மனை "கலிபலமர்த்தனன்" கலியை ஒழித்தவன் என உதயேந்திர பட்டயம்  தெரிவிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages