28.10.20
ரேவா
வென்றனர்_பல்லவர்_75
காலைச் சூரியன் கீழ்வானைச் சிவந்த நிறமாக்கியதோடு, தானும் உடல் சிவக்க மெல்ல உதயமானான்.
நந்திபுரக் கோட்டையோ, பாண்டியர்களின் இரண்டு முயற்சிகளையும் முறியடித்த வெற்றிப் பெருமிதத்தில் கம்பீரமாக காட்சி தந்து கொண்டிருந்தது. ஆங்காங்கு சுவரில் நின்ற வண்ணம் காவல் புரிந்த வீரர்களின் கழுகுப் பார்வை பாண்டியர்களின் நடமாட்டத்தையே தீவிரமாகக் கண்காணித்துக் கொண்டிருந்தது. பாண்டியர்களின் சிறு அசைவும் உடனுக்குடன் நந்திவர்மனது கவனத்திற்கு கொண்டு செல்லப் பட்டது.
பாண்டியர்களின் படை அணிவகுப்பானது இரண்டுப் பிரிவுகளாக பிரிந்து நிற்பதைக் கண்டதும் , பாண்டியர்களின் உத்தேசத்தை உணர்ந்த கோட்டைத் தலைவன் நந்திவர்மனின் கவனத்திற்கு கொண்டு சென்றான். நந்திவர்மனும் அவனிடம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கூறிவிட்டு, சல்லடம் உடுத்தியவனாய் போருக்குத் தயாரானான்.
" அரசே..நானும் போருக்கு ஆயத்தமாகிறேன்.." என்ற தளபதி பல்லவடி அரையரை நோக்கியவன்.
" தங்களது உடல் பூரண நலமடைந்து விட்டதா..? ஓய்வெடுங்கள் நாங்கள் கவனித்துக் கொள்கிறோம் " என்றான் கரிசனத்துடன்.
" நம்மை ஒருவன் தாக்க முற்பட்டு வாசலில் வந்து நிற்கிறான்..வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வீணில் மஞ்சத்தில் சாய்ந்திருப்பதா..வீரனுக்கு அழகு..! " என்றவராய் மீசைகள் துடிக்க, போருக்கு அவரும் ஆயத்தமானார்.
" சரி..நீங்கள்..நமது வீரர்களில் முன்னூறு பேருடன் கோட்டையின் கிழக்கு வாயில் திறந்ததும் வெளியேறுங்கள்.நான் தெற்கு வாயில் வழியாக வெளியேற விருக்கிறேன்."
பாண்டியர் படைத் தலைவன் சங்கரன் சீதரன் தலைமையில் ஐநூறு பேர் கொண்ட படை தெற்கு வாயிலைத் தகர்க்க முன்னேறியது. அதே வேளையில் கிழக்கு வாயிலைத் தகர்க்கவும் சித்ரமாயன் தலைமையில் ஐநூறு பேர் கொண்ட படை நகரத் துவங்கியது.
தெற்கு வாயிலை இவர்கள் அணுகியதும் , கோட்டையின் கதவுகள் படாரென திறக்கப் பட்டதோடு, புயலின் சீற்றத்தோடு பல்லவனின் படைவீரர்கள் வெளிக் கிளம்பினார்கள். நந்திவர்மன் தலைமையேற்று அதனை நடத்தி வந்தான். சங்கரன் சீதரனும் தன் வேகத்தைக் காட்ட முற்பட்டவனாய் முன்கள வீரர்கள் பலரை வெட்டிச் சாய்த்தவனாய் முன்னேறிக் கொண்டிருந்த போது தான்..அந்த பயங்கரத்தை உணர்ந்தான். பல்லவரது முன் கள வீரர்களிடத்தில் வாளோ, வேலோ இல்லாததையும், பாண்டியர்களின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்த இயலாமல் , பொத்..பொத்தென மண்ணில் விழுந்ததையும் கண்டதும் தான் , சங்கரன் சீதரனுக்கு உண்மை புரிந்தது.
முன்கள வீரர்களாய் நிறுத்தப் பட்டிருந்த அனைவரும் நேற்றைய கோட்டை முற்றுகையில் பிடிபட்ட பாண்டிய வீரர்கள் என்பதும், அவர்களுக்கு பல்லவர்களது ஆடைகள் அணிவிக்கப் பட்டு போரில் கலந்து கொள்ள செய்த நந்திவர்மனது தந்திரம் புரிய செயலற்று மலைத்து நின்று விட்டான்.
அதே வேளையில், கிழக்கு வாயில் திறக்கப்பட பல்லவத் தளபதி பல்லவடி அரையனோ தனது வீரர்களுடன் எதிர் கொண்ட சித்ரமாயன் மீது ஆக்ரோசமாய் பாய்ந்தார்.
இருவரது வாட்களும் பயங்கரமாய் சுழன்றது. சித்ரமாயனது ஆவேசத் தாக்குதலை சர்வ சாதாரணமாக எதிர் கொண்டு முறியடித்துக் கொண்டிருந்தார் பல்லவடி அரையன்.
அப்போது வடக்குத் திசையிலிருந்து எழுந்து வந்து கொண்டிருந்தது ஒரு பெரிய புழுதிப் புயல். உதயச்சந்திரன் தலைமையில் பரிவேள்விக்குச் சென்ற பல்லவரது சைன்யம் தங்களது முழுபலத்துடனும், ஆக்ரோசத்துடனும், கண்களில் தெறித்த வெறியுடனும் நந்திபுரக் கோட்டையை நெருங்கிக் கொண்டிருந்தார்கள்.
உதயச்சந்திரனின் உதவி வந்து விட்டது என உணர்ந்து கொண்ட மாத்திரத்தில் பல்லவர்களின் ஆக்ரோசம் பன்மடங்கு அதிகமாகியது. பல்லவடி அரையனது வாள் வீச்சினைத் தாங்க முடியாத சித்ரமாயனோ சோர்வடையத் தொடங்கினான். பல்லவடி அரையரது வாள் மேலேறி முழுவீச்சில் கீழிறங்கிய போது சித்ரமாயனது நெஞ்சில் ஆழமாய் பாய்ந்தது.
உதயச்சந்திரனது படைகள் உதவிக்கு வந்து சேரவும், பாண்டியரது அணிவகுப்பு மெல்ல சீர் குலைந்ததோடு பகுதி வாரியாக பிரிந்தும் தனது தாக்குதலைத் தொடர்ந்தது.
அப்போது, தஞ்சை பிடுகு முத்தரையரும் மாறன் எயினன் மற்றும் தீரகரனையும் அவர்களது படைகளையும் விரட்டிக் கொண்டு சென்றார்.
பல்லவரது படைகளை விரட்டிக் கொண்டு பல பகுதிகளாக பிரிந்து சென்ற பாண்டியர் படை #நெடுவயல், குறுமடை, மன்னிக் குறிச்சி, பூவலூர், கொடும்பாளூர், போன்ற இடங்களில் பல்லவர்களை வெற்றி கண்டது.
பல்லவரது படைகள் அதே போன்று
#நிம்பவனம், சங்ககிராமம், சூரவழுந்தூர், மண்ணைக்குறிச்சி போன்ற இடங்களில் பல்லவர்கள் பாண்டியர்களை வெற்றி பெற்று புறமுதுகிட்டு ஓடச் செய்தார்கள்.
தஞ்சை மற்றும் புதுக்கோட்டை என்று இன்று வழங்கப்படும் கலசமங்கலம் பகுதிகளில் நடைபெற்ற போர்களில், வெற்றியை இருவரும் பெற்றனர்.ஆனாலும், இறுதியாக பல்லவர்களது படை வீரர்கள், பாண்டியர்களை கூடல் நகரை நோக்கி விரட்டியடித்த பின்னர் தான் ஓய்ந்தார்கள்.
நந்திபுரக் கோட்டை முற்றுகையை எதிர் கொண்ட நந்திவர்மன், இறுதியில் பாண்டியரை முறியடித்து வெற்றியினைப் பெற்றான்.
நந்திபுரக் கோட்டையின் அரண்மனையில் கூடியிருந்த அனைவரது முகத்திலும் வெற்றிப் பெருமிதம் காணப்பட்டாலும், அதையும் மீறிய துன்பமும், துயரமும் படிந்தே காணப்பட்டது.
பல்லவ மன்னன் பரமேஸ்வரவர்மனது மகன் சித்ரமாயன் மறைவிற்கு அஞ்சலி செலுத்தியவர்கள், அவனது துர்நடத்தையே அவனது உயிரைப் பறித்து விட்டதாகவும் கூற மறக்கவில்லை.
அடுத்தபடியாக காஞ்சியில் ஆக்கிரமித்திருக்கும் சாளுக்கியனை விரட்டியடிக்கும் ஆலோசனையில் அனைவரும் இறங்கினா்கள்.
காஞ்சியை தற்போது சாளுக்கிய விக்கிரமாதித்தனின் மகனான கீர்த்திவர்மன் தான் பொறுப்பேற்று ஆட்சி செய்கிறான் என்றதும், அவனைக் காஞ்சியை விட்டு விரட்டுவதற்கான வழிமுறைகளைக் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார்கள்.
ஆனால்..அதற்கும் மேலான ஒரு பிரச்சனை தொண்டை மண்டலத்தை பிடித்து ஆட்டப் போவதை அப்போது அவர்கள் உணரவில்லை.
_ தொடரும்..
#அனுராஜ்..
_குறிப்பு :
#பாண்டியர்_பல்லவர் போர் குறித்த தகவல் திரு. ஏ.நீலகண்ட சாஸ்திரி _PANDIAN KINGDOM page 57. மற்றும்
கச்சி பரமேஸ்வர விண்ணகர பட்டயம், உதயேந்திர பட்டயம் தெரிவிக்கிறது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக