மலைச்சாமி
வரலாற்றில் இன்று 29.10.2020
October 29, 2020
என்றும்..
அன்புடன்.....
என் இனிய காலை வணக்கங்கள்....
அக்டோபர் 29 (October 29) கிரிகோரியன் ஆண்டின் 302 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 303 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 63 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
969 – பைசண்டைன் படைகள் சிரியாவின் அண்டியோக் நகரைக் கைப்பற்றின.
1422 – ஏழாம் சார்ல்ஸ் பிரான்சின் மன்னனாக முடிசூடினான்.
1618 – ஆங்கிலேய எழுத்தாளரும் நாடுகாண் பயணியுமான சேர் வால்ட்டர் ரேலி இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சிற்கு எதிராக சூழ்ச்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு மரனதண்டனக்குள்ளாக்கப்பட்டார்.
1665 – போர்த்துக்கல் படையினர் கொங்கோ பேரரசைத் தோற்கடித்து அதன் மன்னன் முதலாம் அண்டோனியாவைக் கொன்றனர்.
1859 – ஸ்பெயின் மொரோக்கோ மீது போரை அறிவித்தது.
1863 – சுவிட்சர்லாந்தில் கூடிய 16 நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அமைக்கத் தீர்மானித்தனர்.
1886 – அன்றைய பிரித்தானிய இந்திய அரசுக்கும், திருவாங்கூர் மன்னருக்கும் இடையே முல்லைப் பெரியாறு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
1901 – ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் வில்லியம் மக்கின்லியைக் கொலை செய்த குற்றத்திற்காக லியோன் சொல்கோஸ் என்பவனுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
1913 – எல் சல்வடோரில் பெரும் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் இறந்தனர்.
1922 – முசோலினி இத்தாலியின் பிரதம மந்திரியானார்.
1923 – ஓட்டோமான் பேரரசு முறிவடைந்ததைத் தொடர்ந்து துருக்கி குடியரசானது.
1929 – “கருப்பு செவ்வாய்” என அழைக்கப்பட்ட இந்நாளில் நியூ யோர்க் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தது. பெரும் பொருளியல் வீழ்ச்சி ஆரம்பமானது.
1948 – “சாஃப்சாஃப்” என்ற பாலஸ்தீனக் கிராமமொன்றில் புகுந்த இஸ்ரேலியர்கள் 70 பாலஸ்தீனர்களைச் சுட்டுக் கொன்றனர்.
1950 – அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் தொடர் வரலாற்றுப் புதினம் முதற் தடவையாக கல்கி இதழில் வெளிவர ஆரம்பித்தது.
1956 – இஸ்ரேலியப் படைகள் சினாய் தீபகற்பத்தைக் கைப்பற்றி எகிப்தியப் படைகளை சூயஸ் கால்வாய் நோக்கி விரட்டினர்.
1961 – ஐக்கிய அரபுக் குடியரசில் இருந்து சிரியா வெளியேறியது.
1964 – தங்கனிக்கா மற்றும் சன்சிபார் இரண்டும் இணைந்து தன்சானியாக் குடியரசு ஆகியது.
1964 – 565 கரட் (113 கிராம்) “ஸ்டார் ஒஃப் இந்தியா” உட்படப் பல பெறுமதி மிக்க வைரங்கள் நியூ யோர்க் நகரில் உள்ள அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டன.
1967 – மொண்ட்ரியால் நகரில் 50 மில்லியன் மக்கள் கண்டு களித்த எக்ஸ்போ 67 உலகக் கண்காட்சி முடிவடைந்தது.
1969 – உலகின் முதலாவது ஒரு கணினியில் இருந்து வேறொரு கணினிக்கான தொடுப்பு ARPANET மூலம் இணைக்கப்பட்டது.
1983 – துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,300 பேர் கொல்லப்பட்டனர்.
1991 – நாசாவின் கலிலியோ விண்கலம் 951 காஸ்ராவுக்குக் கிட்டவாகச் சென்று சிறுகோள் ஒன்றுக்குக் கிட்டவாக சென்ற முதலாவது விண்கலம் ஆனது.
1998 – டிஸ்கவரி விண்ணோடம் STS-95 என்ற விண்கப்பலுடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.
1998 – 39 பேருடன் சென்ற துருக்கிய விமானம் ஒன்று குர்தியத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது.
1998 – சூறாவளி மிட்ச் ஹொண்ட்டூராசைத் தாக்கியது.
1999 – ஒரிஸாவில் இடம்பெற்ற பெரும் சூறாவளியினால் 10,000 பேர் வரை இறந்தனர். 2.5 மில்லியன் மக்கள் வீடுகளை இழந்தனர்.
2002 – வியட்நாமின் ஹோ ஷி மின் நகரில் பல்பொருள் அங்காடி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
2005 – டில்லியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 60பேர் வரை கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்
1931 – வாலி, தமிழகக் கவிஞர் (இ. 2013)
1971 – மதிவ் எய்டன், அவுஸ்திரேலியத் துடுப்பாட்ட வீரர்
1981 – ரீமா சென், இந்திய திரைப்பட நடிகை
1985 – விஜேந்தர் குமார், இந்தியக் குத்துச்சண்டை மெய்வல்லுனர்
இறப்புகள்
2001 – சுந்தா சுந்தரலிங்கம், இலங்கை வானொலி, மற்றும் பிபிசி தமிழோசை அறிவிப்பாளர்
2007 – லா. சா. ராமாமிர்தம், தமிழ் எழுத்தாளர் (பி. 1916)
சிறப்பு நாள்
துருக்கி – குடியரசு நாள் (1923)
மு. அருணாசலம் பிறப்பு: 29-10-1909, இறப்பு: 23-11-1992)
தமிழுக்கு மிக முக்கியமான பல பங்களிப்புகளைச் செய்த பெரும் தமிழறிஞர். நூற்றாண்டு வாரியாகத் தமிழ் இலக்கிய வரலாறு எழுதியவர். தமிழிசை இலக்கிய வரலாறு, தமிழிசை இலக்கண வரலாறு ஆகியவற்றையும் இவர் எழுதியுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் என்னும் ஊரைச் சேர்ந்தவர்.
முத்தையா பிள்ளைக்கும்-கௌரியம்மாளுக்கும் மூத்த மகனாய்ப் பிறந்தார் மு.அருணாசலம். தொடக்கத்தில் திருச்சிற்றம்பலத்தில் திண்ணைப் பள்ளிக்கூடத்திலும் அடுத்து, மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலம் (திருத்துருத்தி) உயர்நிலைப் பள்ளியிலும் அதன்பின் சிதம்பரம்மீனாட்சிக் கல்லூரியிலும் கல்வி கற்று, கணிதத்தில் பட்டம் பெற்றார். சென்னையில் அரசு ஊழியராகப் பணிபுரிந்து, அதனை விடுத்து, காசி இந்துப் பல்கலைக்கழகத்தில்இரண்டாண்டுகள் தத்துவப் பேராசிரியராகவும், ராஜா சர் முத்தையா செட்டியார் அமைத்த தமிழ்-வடமொழி நிறுவனத்தின் இயக்குநராகவும் நிறைவாக தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்அகராதித்துறையின் தலைவராகவும் பணியாற்றினார்.
தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்ற அருணாசலம் இலக்கிய, இலக்கண தத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொள்வதிலும், ஓலைச்சுவடிகளைத் தேடிச் சேகரிப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். மேலும், கல்வெட்டுகளைப் படிப்பதிலும் தேர்ச்சி பெற்று விளங்கினார். பிறசமயக் காழ்ப்பற்ற சைவப்பற்று கொண்டவர்.மு. வரதராசனார், கா.சு.பிள்ளை, உ.வே.சாமிநாதன், வையாபுரிப்பிள்ளை, திரு.வி.கலியாணசுந்தரம்., ரசிகமணி டி.கே.சி, வெ.சாமிநாத சர்மா, கல்கி, வ.ரா., கருத்திருமன் போன்ற தம் சமகாலத்திய தமிழறிஞர்களோடும் அரசியல் தலைவர்களோடும் நெருக்கமான பழக்கம் கொண்டிருந்தார்.காசிப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது இந்தியக் குடியரசுத் தலைவராகப் பின்னர் பணியேற்ற தத்துவமேதை ராதாகிருஷ்ணனோடும் பழகியுள்ளார்.
இவரைப் பற்றித் திரு.வி.க. தம் வாழ்க்கைக் குறிப்பில் ""அருணாசலனாரின் நீண்ட வடிவம் மலர்ந்த முகமும் தண்மை நோக்கும் எனக்குப் புலனாகும் போதெல்லாம் என் உள்ளம் குளிரும்...அருணாசலனார் தமிழ்நடை இக்காலத்துக்கு உரியது. அஃது இக்காலத் தமிழ்த் தாள்களில் இடம் பெறப் பெற, தமிழ் விடுதலையடைந்து ஆக்கம் பெறும் என்பது எனது உட்கிடக்கை என்று எழுதியுள்ளார். இவர் பத்திரிகையாசிரியப்பணி, கல்வி நிலையங்களை நிறுவிப் பராமரிக்கும் திறமை, தேசியப் பற்று ஆகிய பண்புகளைக் கொண்டவர்.
கணக்குப் படித்த மு.அருணாசலம் உ.வே.சா, வையாபுரிப்பிள்ளை ஆகியவர்களோடு நெருங்கிப் பழகியதால் தமிழ்படித்து எம்.ஏ. பட்டம் பெற்றார். தமிழாராய்ச்சியில் ஈடுபாடு கொண்டார். தமிழிலக்கிய வரலாறுகுறித்த விரிவான ஆய்வுமுடிவுகள் கொண்ட நூல்களை எழுதினார். அறிஞர்கள் கா.சு.பிள்ளை, தஞ்சை சீனிவாசபிள்ளை ஆகியோர் எழுதிய தமிழிலக்கிய வரலாற்று நூல்களே அத்துறையில் முன்னோடி நூல்களாகும். ஆனால் மு. அருணாசலம் 9-ஆம் நூற்றாண்டு முதல் 17-ஆம் நூற்றாண்டு வரையிலான இலக்கிய வரலாற்றை கால முறைப்படி மிக விளக்கமாக ஆராய்ந்து பதினான்கு தொகுதிகளாக வெளியிட்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றுத் துறையில் முத்திரை பதித்தார். மிக அரியதான பலருக்கும் பெயர்கூடத்தெரியாத தமிழ் நூல்களைப் பற்றியும் தமிழ்ப்புலவர்களைப் பற்றியும் பல தகவல்களை இந்நூலில் காணலாம்.
மு.அருணாசலம் ஆங்கிலத்திலும் குறிப்பிடத்தக்க நூல்களை எழுதியுள்ளார். தம் பட்டறிவால் பழத்தோட்டம், பூந்தோட்டம், வாழைத்தோட்டம், வீட்டுத்தோட்டம், காய்கறித்தோட்டம் போன்ற நூல்களையும், படிப்பறிவால் இலக்கிய வரலாறு, புத்தகமும் வித்தகமும், திவாகரர் போன்ற நூல்களையும் இலக்கிய ஆர்வத்தால் காற்றிலே மிதந்த கவிதை, தாலாட்டு இலக்கியம் போன்ற நாட்டுப்புற இலக்கியத் தொகுப்பு நூல்களையும், சாத்திரப் புலமையால் தத்துவப்பிரகாசம் உரை, திருக்களிற்றுப்படியார் உரை போன்ற உரைநூல்களையும் தந்துள்ளார். அவற்றுள் காய்கறித்தோட்டம் தமிழக அரசின் பரிசு பெற்றது.
உ.வே.சா. உடன் பழகியதால் ஏடு சேகரிக்கும் பழக்கமும் அவருக்கு இருந்தது. அதன் விளைவாக 11-ஆம் திருமுறையில் இடம்பெற்றுள்ள ஈங்கோய்மலை எழுபது என்ற நூல் முழுமையடைந்தது. அவர் சேகரித்த சுவடிகளில் "திருத்துருத்தி ஆபத்தோத்தாரணன் என்பவரால் எழுதப்பட்டது' என்னும் குறிப்போடு கூடிய அழகிய சுவடி வெளியிடப்பட்டது. இது இன்றைய கையடக்கப் பதிப்புகளை விடச் சிறிதானதாகும்.
மு.அருணாசலனார், இசைத்தமிழ் பற்றிய வரலாறு பற்றிய இரண்டு ஆய்வு நூல்களைமிக விரிவாக எழுதியுள்ளார். தமிழ் இசை இலக்கிய வரலாறு, தமிழ் இசை இலக்கண வரலாறு என்பவையே அவை. மு. அருணாசலனார் இந்த இருநூல்களை எழுதி வெளியிடாமல் கையெழுத்துப் படியாக வைத்தவண்ணம் இயற்கை எய்தினார்.மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் உல.பாலசுப்பிரமணியன் இந்தக் கையெழுத்துப்படிகளை அரிதின் முயன்று வெளிக்கொண்டு வந்துள்ளார்.
இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழில் இசை வளர்ந்த வரலாற்றை, தக்க ஏற்புடைய சான்றாதாரங்களுடன் விளக்கும் இப்பெரு நூல்கள் தமிழின் இசை தொடர்பான அனைத்தையும் ஆவணப்படுத்துகிற களஞ்சியமாக விளங்குகின்றன. “கருநாடக சங்கீதம் என்ற ஒன்று இல்லை; அந்தப் பெயரால் சொல்வதெல்லாம் தமிழிசை தான். திருவையாற்றில் தியாகையர் பாடியதெல்லாம் தமிழிசையைத் தெலுங்கு மொழியில் பாடிய கீர்த்தனங்கள்’’, என்னும் கருத்தை சான்றாதாரங்களுடன் இவை நிறுவுகின்றன.
இந்நூல்களுள் தெளிவு தர வேண்டுமென்பதற்காக கருநாடக சங்கீத மும்மூர்த்திகள் பற்றிய, அடிப்படை வரலாறுகள் தரப்பட்டுள்ளன. தெலுங்கு, சமஸ்கிருத கீர்த்தன இசைகளின் தோற்றம்; வளர்ச்சி பற்றிய விவரங்களையும் அவை எவ்வாறு தமிழிசையினின்று மொழிமாற்றம் பெற்றன என்பதையும் இந்நூல்களில் காணலாம். சமஸ்கிருத இசை இலக்கண நூல்கள் பற்றிய விவரமும் விளக்கமும் இவற்றில் உள்ளன. இவ்வடமொழி குறிப்புகள் முக்கியமானவை. பொதுவாக இந்நூல்கள் தரும் செய்திகள் தமிழிசை வரலாறு பற்றி மட்டும் அமையாமல், தமிழகத்தில் நிகழ்ந்த பொது இசை பற்றிய அனைத்து வரலாறுகளையும் தெரிவிக்கின்றன. கர்நாடக இசை என்பது பழந்தமிழ் இசையேஎன்பதனைக் காட்டி தமிழிசைச் சிற்பிகளான முத்துத்தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்துப் பிள்ளை ஆகியோரின் வரலாற்றை விளக்கி, மூவருமே கருநாடக இசையின் ஆதி மும்மூர்த்திகள் என நிறுவி, உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய பெருமையும் அருணாசலனாரையேச் சாரும்.
காந்தியடிகளின் ஆதாரக் கல்வி, கிராம நிர்மாணத் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு 1946-இல் வார்தா சேவா கிராமத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார். அங்கு வினோபா பாவே, ஜே. சி. குமரப்பா, ஜே.பி.கிருபளானி ஆகியவர்களின் நட்புக் கிடைத்தது. அதன் விளைவாகத் தம் சொந்த ஊரில், தம் சொந்த முயற்சியால் காந்தி வித்யாலயம் என்னும் கல்வி நிறுவனத்தை அமைத்தார்.
மு. அருணாசலம் தம் ஊரில் தொடக்கப் பள்ளி, மகளிர் உயர்நிலைப் பள்ளி, ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, அனாதைக் குழந்தைகள் விடுதி ஆகியவற்றை ஏற்படுத்தினார். அவர் நடத்திய ஆசிரிய ஆதாரப் பயிற்சிப் பள்ளி, பிரிவுபடாத தஞ்சை மாவட்டத்தில் அந்நாளில் எட்டாம் வகுப்புக்கு மேல் கல்வியைத் தொடர முடியாத ஏழை மாணவர்களுக்குத் மிகவும் உதவியாக அமைந்தது. இப்பள்ளியில் கட்டணமேதுமில்லாமலேயே அவர் மாணவர்களைச் சேர்த்துவந்தார்.
தம் பகுதியில் அமைந்திருக்கும் தருமை, திருப்பனந்தாள், திருவாவடுதுறை ஆகிய மூன்று சைவ மடங்களோடும் இணக்கமான தொடர்பு கொண்டிருந்தார். தருமை ஆதீனத்தைத் தோற்றுவித்த குருஞானசம்பந்தரின் வாழ்க்கை குறித்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர் எழுதிய நூல் ஆதீனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. சைவ சித்தாந்த சமாஜம் (இன்று சைவ சித்தாந்தப் பெருமன்றம்) நடத்திவரும் சிந்தாந்தம் தமிழ் - ஆங்கில இதழ்களின் ஆசிரியராக இருந்து பல சமயக்கட்டுரைகளை எழுதியுள்ளார்.
தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் தமிழுக் காகவும் இலக்கியத்துக் காகவும் பணியாற்றிய ஓர் உன்னத ஆளுமை மு. அருணாசலனார். மயிலாடு துறைக்கு அருகில் உள்ள திருச்சிற்றம் பலம் கிராமத்தில் பிறந்தவர். பள்ளிக் கல்வியை முடித்த பின் கணிதத் துறையில் இளநிலை பட்டம் பெற்ற மு.அ.வுக்குத் தன் 21-வது வயது வரை தமிழியல் சார்ந்து இயங்குவதற்கான களம் உருவாகவில்லை என்பது ஆச்சரியம்!
தமிழும் நட்பும்
1931-ல் சென்னை தி.நகருக்குக் குடிபெயர்ந்ததுதான் மு.அ.வின் ஆளுமை உருவாக்கத்துக்குக் காரணம். தன் வீட்டருகே குடியிருந்த ரசிகமணியின் நட்பும் ரசனையும் மு.அ.வைப் பெரிதும் வசப் படுத்தியிருந்தன. எனினும் வையாபுரிப் பிள்ளையிடமிருந்துதான் மு.அ.வின் தமிழ்ப் புலமைக்கான பயிற்சி தொடங்குகிறது. அப்போது சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராக இருந்த அவரிடமே மாணவராகச் சேர்ந்து முதுகலைப் பட்டமும் பெற்றார்.
எட்டு நூற்றாண்டு வரலாறு
வையாபுரிப்பிள்ளையிடமிருந்து பதிப்பு நுட்பங்களை உள்வாங்கிக்கொண்ட மு.அ., 1940-ல் முக்கூடற்பள்ளு நூலைப்பதிப்பித்தார். மு.அ.வுக்கும் சரி, முக்கூடற்பள்ளு சரி இதுதான் முதற்பதிப்பு! மு.அ. ஊர்ஊராகச் சென்று தேடி அலைந்து 150-க்கும் மேற் பட்ட ஓலைச்சுவடிகளைத் தன் வீட்டில் சேகரித்து வைத்திருந்தார். தொடர்ந்து பல நூல்களைப் பதிப்பித்தார். இதன் தொடர்ச்சி தான் தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள்.
தமிழகக் கல்விப் புலத்தில் புற்றீசலாய்ப் பெருகியிருக்கும் மேலோட்டமான இலக்கிய வரலாற்று நூல்களுக்கு மத்தியில் மு.அ.வின் வரலாற்று நூல்கள் மிகவும் தனித்துவமானவை. ஒரு பல்கலைக் கழகம் செய்ய வேண்டிய பணியைத் தனி யொரு மனிதராகச் சாதித்துக் காட்டியவர் மு.அ. வரிசையாக ஒவ்வொரு நூற்றாண் டிலும் வெளிவந்த எந்த நூல்களும் விடுபட்டுவிடக் கூடாது என்ற கவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட முயற்சி இது.
இலக்கணம், சமய இலக்கியம், ஓவியம், சோதிடம், நிகண்டு, கல்வெட்டு, கணிதம் என்ற பல்துறைச் சார்ந்த நூல் களை இலக்கிய வரலாற்றில் இடம்பெற செய்ததது, முறையான ஆய்வு முறை, கவித்துவ நடை என்று பல்வேறு புதுமைகளைப் புகுத்தி எட்டு நூற்றாண்டுத் தமிழிலக்கிய வரலாற்றை எழுதி பதினொரு தொகுதிகளாக வெளியிட்டார்.
புத்தகத்தில் பெயர் போடாத பதிப்பாளர்!
கவிமணி தேசிக விநாயகத்தின் கவிதைகளைத் தொகுத்து முதன்முதலில் புத்தகமாக வெளியிட்டது மு.அ.தான். 1938-ல் வையாபுரிப்பிள்ளையின் துணையுடன் ‘மலரும் மாலையும்’என்ற நூலாக கவிமணியின் கவிதைகளை வெளியிட்டார் மு.அ.
அந்தப் பதிப்பில் அவர்தான் பதிப்பித்தார் என்பதற்கான எந்த குறிப்பும் இடம்பெறவில்லை. ‘புதுமைப் பதிப்பகம், 3, சாம்பசிவம் தெரு, தி.நகர்’ என்கிற பதிப்பக முகவரி இந்நூலின் முன்பக்கத்தில் உள்ளது. இம்முகவரி மு.அ.வின் வீட்டு முகவரி. இன்றும் இம்முகவரியில் மு.அ.வின் வாரிசுகள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். ஆனால், கவிமணியின் வரலாற்றை விளக்கும் நூல்களில் மு.அ.வின் பெயர் இடம்பெறுவதில்லை என்பதுதான் வரலாற்றுச் சாபக்கேடு.
வாய்மொழி இலக்கிய ஆய்வாளர்
நாட்டாரியல் துறையில் முக்கியமான பங்களிப்புகளைச் செய்தவர் மு.அ. ‘தமிழ் நாட்டுப்புறப்பாடல் தொகுப்பின் முன்னோடி’ என்று ஆய்வாளர்களால் சுட்டப்படுபவர். ‘காற்றிலே மிதந்த கவிதை’ என்ற தலைப்பில் 1943-ல் இவர் எழுதிய நூல்தான் தமிழில் முதலில் வெளியான வாய்மொழிப் பாடல்கள் தொகுப்பு. தமிழ்க் கதைப்பாடல் ஆய்வின் முன்னோடியாகவும் இவரே அறியப்படுகிறார்.
1992-ல் தான் இறக்கும் வரை ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் தொடர்ச்சியாகத் தமிழ் இலக்கியத்துக் காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டிருந்த இந்த மாபெரும் வரலாற்று ஆளுமையின் பங்களிப்புகள் இனியாவது வகுப்பறைகளில் வாசிக்கப்பட வேண்டும்.
சிறப்பு
தமிழ்ப் பல்கலைக்கழகம் 1991 டிசம்பரில் மதிப்புறு முதுமுனைவர் பட்டம் அளித்து கௌரவித்தது.
மறைவு
தமிழிலக்கியம், தமிழிலக்கணம், தமிழிசை ஆகியவற்றுக்கு தொண்டாற்றிய மு. அருணாசலம் 1992-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி மறைந்தார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக