30.10.20-ரேவா : 77: கடல்மல்லையில்_காதலர்கள் - தென்குமரிக் கவிதைக்களம்

வெள்ளி, 30 அக்டோபர், 2020

30.10.20-ரேவா : 77: கடல்மல்லையில்_காதலர்கள்

 



30.10.20


ரேவா


கடல்மல்லையில்_காதலர்கள்_77


பல்லவ தேசத்தைப் பாடாய் படுத்திய பஞ்சம் வருண பகவானின் கருணையினால் ஓரளவு ஓய்ந்திருந்தது.

பல்லவ தேசத்தின் தடாகங்களில் எல்லாம் நீர் தளும்பி வழிந்து கொண்டிருக்க, மனிதர்களும் தங்களது இயல்பான வாழ்க்கைக்கு திரும்பியிருந்தார்கள்.


தந்திதுர்க்கன் வந்திருந்த காரணத்தால் , கடிகையில் இருந்து ரேவாவும் காஞ்சி அரண்மனைக்கு வந்திருந்தாள். ரேவா நந்திவர்மனுக்கு என மண உறுதி கொண்ட நாள் முதலாய் வாரந்தோறும் 

காஞ்சி அரண்மனைக்கு கடிகையில் இருந்து வரத் தொடங்கியிருந்தாள்.


நந்திவர்மனும், ரேவாவை அழைத்துக் கொண்டு மாமல்லபுரம், மாமண்டூர், உத்தரமேரூர் என தொண்டைமண்டலப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று வருவது வாடிக்கையாகி இருந்தது. எதிர்கால பல்லவ தேசத்து ராணியல்லவா. பல்லவ தேசத்தின் நகர்களையும் பார்த்தது போலிருக்கும், அங்கு வாழும் மக்களின் நிறை குறைகளையும் விசாரித்தறிந்து வருவது போலிருக்கும் என்பதனால் இருவரும் இதனை நடைமுறைப் படுத்தி இருந்தனர். இதற்கிடையே கட்டப் பட்டுக் கொண்டிருக்கும் வைகுண்டப் பெருமாள் ஆலயத்திற்கும் நந்திவர்மன் செல்ல மறப்பதில்லை.


காஞ்சியிலிருந்து ரதமொன்று மாமல்லபுரம் செல்லும் பாதையில் சென்று கொண்டிருக்க, அதன் முன்னே இரு புரவிகளில் உதயச்சந்திரனும், சீராளனும் சிரித்து பேசியபடி பயணித்துக் கொண்டிருந்தார்கள்.

ரதத்தின் பின் நான்கு காவல் வீரர்களும் புரவிகளில் ஆரோகணித்துச் சென்று கொண்டிருந்தார்கள். ரதத்திற்குள் பியூஷாவும், பூங்குழலியும் சிரித்து பேசியபடி அமர்ந்திருந்தார்கள். ரேவா கடிகைக்கு சென்று விட்ட காரணத்தால் இவர்களுடன் வர இயலவில்லை. நந்திவர்மனுக்கோ சிற்றரசர்கள் சிலரை காணும் முகமாக நந்திவர்மனும் இவர்களது பயணத்தில் பங்கேற்கவில்லை.


பல்லவர்களின்  துறைமுக நகரமெனும் சிறப்பினைப் பெற்றிருந்தது கடல்மல்லை எனும் மாமல்லபுரம். குணதிசைக் கடல் நீலவானைப் போல நீலம் பூத்துக் காணப்பட்டது. கரையை நோக்கித் திரண்டு வரும் பேரலைகள் தும்பைப் பூவைப் போல வெண்மையாய் ஓடி வந்து கரையை ஆலிங்கனம் செய்து மகிழ்ந்து கொண்டிருந்தது.


கடல்மல்லையின் அழகினைக் கண்டு ரசிப்பதற்காகவே வந்திருந்த அவர்கள், மகேந்திரவர்ம பல்லவரின்  கலைப் படைப்பையெல்லாம் கண்டு ரசித்துவிட்டு, ராஜசிம்ம பல்லவரால் கட்டப்பட்ட ஜலசயன ஆலயத்துப் பெருமாளையும் தரிசனம் செய்து விட்டு வந்திருந்தார்கள்.


கடற்கரை மணலில் அமர்ந்த படி நீலவானை முத்தமிட்டபடி தெரிந்த கடலையும், கடலில் ஆங்காங்கு அசைந்தாடிக் கொண்டிருந்த நாவாய்களையும், மரக்கலங்களையும், பரதவர் படகுகளையும் கண்டு ரசித்தபடி இருந்த பியூஷாவிற்கு திடீரென காம்புஜ தேசத்து டோன்லே சாப் நதிப் பிரவாகமும், அங்கு படகோட்டிய நினைவும் வரப் பெற்றவளாய், ஒரு நீண்ட பெருமூச்சினை விட்டபடி தனக்கு அருகில் அமர்ந்திருந்த உதயச்சந்திரனது மார்பில் சாய்ந்து கொண்டாள். அவர்களது கண்பார்வையில் படும் தூரத்தில் சீராளனும், பூங்குழலியும் மணற் பரப்பில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருப்பதையும் கண்ணுற்ற படியே உதயச்சந்திரன், " பியூஷா ஏனிந்த பெருமூச்சு ..? " என வினவினான்.


" ஊஹூம்..ஒன்றுமில்லை.."


" பெண்கள் ஒன்றுமில்லை என உரைத்தாலே..அதில் ஓராயிரம் பொருள் ஒளிந்துள்ளது என்றல்லவா அர்த்தம்.."


" ம்..ஓஹோ..இது வேறா..! "


" இது வேறல்ல , அது தான்..! உனது பெருமூச்சிற்கான காரணம் தான் என்ன..?"


" எங்கோ பிறந்த நான், எங்கோ வளர்ந்து , வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளையும், பின்னிப் பிணைந்த சிக்கல்களையும்  கண்டு மலைத்து  எண்ணிப் பார்த்தேன்..பெருமூச்சொன்று என்னிலிருந்து வெளிப்பட்டது..! "


" உண்மை தான். நீ மட்டுமல்ல அனைவரது வாழ்வுமே ஏதோ காரண காரியத்திற்காகவே இறைவனால்  படைக்கப்பட்டுள்ளது என உணரலாம். உனக்கும் எனக்குமான பந்தம் கூட ஏதோ ஒரு முன்வினை பயனாய் இருக்கக் கூடும்..! "


" ம்..உண்மை தான்..இல்லையென்றால் காம்புஜத்தில் மன்னர் ஊர்வலத்தில் உங்களது தலையைத் தாழ்த்தி தங்களது அறிமுகத்தை பெற்றிருக்க முடியுமா..?"


" அன்று உன்னால் தாழ்ந்த தலை, இன்றும் உன்னிடத்தில் தாழ்ந்தே இருக்கிறது ..என் மன சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தினி அல்லவா நீ.." என்றவனாய் குறும்பாய் நகைத்தான்.


பியூஷாவோ நாணம் மேலிடத்  தலை கவிழ்ந்தாள். 


சீராளனும் பூங்குழலியும் நந்திபுரக் கோட்டையின் முற்றுகையைப் பற்றி விழிவிரியப் பேசிக் கொண்டிருந்தார்கள்.


" நீங்கள் தான் என்னை காஞ்சியில் இருந்து அழைத்துச் சென்றவுடன், நந்திபுரத்தில் தந்தையின் அருகில் விட்டுவிட்டு உடனடியாக வடதிசையை நோக்கிச் சென்று விட்டீர்கள்..நான் எவ்வளவு வருத்தத்தில் ஆழ்ந்தேன் தெரியுமா..? ஆண்களுக்கு பெண்களின் உள்ள உணர்வுகளே புரிவதில்லை.." என்றாள் முகத்தை திருப்பிக் கொண்டு.


இலேசாய் சிரிப்பு வந்தது அவனுக்கு , "பூங்குழலி காஞ்சியில் இருந்து உன்னை நந்திபுரம் அழைத்துச் செல்லும் போது நானும் நமது பொழுது களிப்பாய் கழியுமென்றே எண்ணியிருந்தேன்.

ஆனால் பாழாய்ப் போன பாண்டியன் நந்திபுரத்தை வந்து முற்றுகையிட வருவான் என்று எண்ணினோமா..! அவனால் அல்லவா நான் நமது படைத்தலைவரைச் சந்திக்க வடதிசை நோக்கிச் செல்லும் சூழல் வந்தது. உன்னிடம் மனம் விட்டு உரையாட முடியாமல் செல்கிறோமே என்று போகும் போது எண்ணிக் கொண்டே தான் போனேன்.. எவ்வளவு துயராய் இருந்தது தெரியுமா..? என் மனதை நீ எங்கே அறியப் போகிறாய்..! " என்றான் குரலில் வருத்தம் தோய்ந்தவனாய்.


பல்லவ தேசத்தின் இணையற்ற ஒற்றனாய் விளங்குபவன் தன்னிடத்தில் மனம் நெகிழ்ந்து உரையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு, மனம் மகிழ்ந்தவளாய் அவனது கரத்தினை எடுத்து தனது கரங்களுக்குள் சிறைபடுத்தியவளாய் தனது கன்னங்களுக்குக் கொண்டு போனவள், திடீரென தன் இதழ்களால் அவனது கரத்தில் முத்திரையும் பதித்தாள்.


அவளது செயலால் , சற்றே உடலை நெளித்த அவனது செய்கையைக் கண்டோ என்னவோ ஒரு நண்டு அந்த மணல் வெளியில் குடுகுடுவென ஓடி தன் வளைக்குள் நுழைந்து கொண்டது.


கடற்கரை மணல்வெளியெங்கும் இருள் கவியத் துவங்க, வீரர்கள் ஆங்காங்கு பந்தங்களை கொளுத்தியும், விளக்குத் தூண்களில் எண்ணெய் ஊற்றி , 

துணிகளால் ஆன திரியைத் தூண்டி எரிய விட்டுக் கொண்டும் இருந்தனர்.

இருப்பினும் இயற்கையாய் விழும் ஒளிக்கும் செயற்கை ஒளிக்கும் எழுந்த பெரிய வித்தியாசத்தை மெய்ப்பிப்பதுப் போல ஆங்காங்கு இருள் படர்ந்தே காணப்பட்டது.


கடற்கரையெங்கும் பரதவர்களும், வணிகர்களும் , பல்வேறு தேசத்தவர்களும் அவ்வேளையிலும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.


உதயச் சந்திரன் கடற்கரை மணலை விட்டு எழுந்ததோடு, பியூஷா எழ தனது கரத்தினை நீட்டினான். இருவரும் எழுந்ததைக் கண்டதும் சீராளனும், பூங்குழலியும் எழுந்து  இவர்களை நோக்கி வந்தார்கள்.


" சீராளா..அரண்மனைக்குச் செல்லலாமா..? "


" செல்லலாம் ..படைத்தலைவரே.."


" நாளைக் காலை காஞ்சிக்கு செல்ல வேண்டும். " என உதயச்சந்திரன் கூறிக் கொண்டிருக்கும் போதே ஒரு புரவி் இவர்கள் இருக்கும் திசை நோக்கி மணலில் தனது குளம்பினைப் பதித்து வந்து கொண்டிருந்தது. அதன் மேல் சேந்தன் வீற்றிருந்தான். 


குதிரையில் இருந்து குதித்து இறங்கிய சேந்தன் சற்றும் படபடப்பு அடங்காதவனாய், " படைத்தலைவரே, ரேவா சாளுக்கியர்களால் கடத்தப் பட்டார்கள். தங்களை உடனே அழைத்து வரும்படி அரசர் உத்தரவு.." என்றான் .


" என்ன..! " அனைவரும் ஏக காலத்தில் அதிர்ந்தார்கள். 


_ தொடரும்..


அனுராஜ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages