மலைச்சாமி
வரலாற்றில் இன்று 30.10.2020
October 30, 2020
என்றும்...
அன்புடன்.......
என் இனிய காலை வணக்கங்கள்..
அக்டோபர் 30 (October 30) கிரிகோரியன் ஆண்டின் 303 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 304 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 62 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1485 – ஏழாம் ஹேன்றி இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.
1502 – வாஸ்கோ ட காமா இரண்டாவது தடவையாக கோழிக்கோடு வந்தார்.
1831 – ஐக்கிய அமெரிக்காவில் அடிமை கிளர்ச்சி செய்த நாட் டர்னர் வேர்ஜீனியாவில் கைது செய்யப்பட்டான்.
1905 – ரஷ்ய மன்னன் இரண்டாம் நிக்கலாஸ் ரஷ்யாவின் முதலாவது அரசியலமைப்பை அறிவித்து பிரதிநிதிகள் அவையை நிறுவினான்.
1918 – ஒட்டோமான் பேரரசு கூட்டுப் படைகளுடன் உடன்பாட்டுக்கு வந்ததில் மத்திய கிழக்கில் முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.
1920 – அவுஸ்திரேலியக் கம்யூனிஸ்ட் கட்சி சிட்னியில் அமைக்கப்பட்டது.
1922 – முசோலினி இத்தாலியின் பிரதமர் ஆனார்.
1925 – ஜோன் லோகி பயர்ட் பிரித்தானியாவின் முதலாவது தொலைக்காட்சி ஒளிபரப்பியை அமைத்தார்.
1941 – மேற்கு உக்ரைனில் 1,500 யூதர்கள் நாசிகளினால் பெல்செக் வதைமுகாமிற்கு அனுப்பப்பட்டனர்.
1945 – இந்தியா ஐநாவில் இணைந்தது.
1961 – சோவியத் ஒன்றியம் 50 மெகாதொன் அளவுள்ள “சார் பொம்பா” என்ற அணுகுண்டை வெடிக்க வைத்தது. இதுவே இந்நாள் வரை வெடிக்கப்பட்ட மிகப்பெரிய அணுகுண்டாகும்.
1961 – ஜோசப் ஸ்டாலினின் உடல் மாஸ்கோவின் கிரெம்லினில் லெனின் நினைவகத்தில் இருந்து அகற்றுவதற்கு முடிவெடுக்கப்பட்டது.
1964 – இலங்கையின் மலையகத் தமிழர்களை நாடு கடத்த உதவிய சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
1970 – வியட்நாமில் இடம்பெற்ற பெரும் வெள்ளம் காரணமாக 293 பேர் கொல்லப்பட்டு 200,000 பேர் வீடுகளை இழந்தனர்.
1972 – சிக்காகோவில் இரண்டு பயணிகள் தொடருந்துகள் மோதியதில் 45 பேர் கொல்லப்பட்டனர்.
1973 – ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் பொஸ்பரஸ் பாலம் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் அமைக்கப்பட்டது.
1985 – சலேஞ்சர் விண்ணோடம் தனது கடைசி வெற்றிகரமான பயணத்தை ஆரம்பித்தது.
1991 – மத்திய கிழக்கு அமைதி மாநாடு மாட்ரிட் நகரில் ஆரம்பமானது.
1995 – கனடாவில் இருந்து பிரிந்து செல்ல கியூபெக் மாநிலத்தில் எடுக்கப்பட்ட மக்கள் வாக்கெடுப்பு 50.6% to 49.4% என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டது.
2001 – இலங்கைப் பிரதமர் பேசவிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அருகே வெடிகுண்டு வெடித்ததில் 4 பேர் இறந்தனர். 15 பேர் காயமடைந்தனர்.
2006 – ஜெனீவாவில் விடுதலைப் புலிகளிக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தன.
2006 – பாகிஸ்தானின் எல்லையோரத்தில் கார் பகுதியில் உள்ள மதரசா மீது இராணுவம் நடத்திய தாக்குதலில் 80 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்
1735 – ஜான் ஆடம்ஸ், ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் (இ. 1826)
1821 – ஃபியோடார் டாஸ்டோவ்ஸ்கி, ரஷ்ய எழுத்தாளர் (இ. 1881)
1908 – முத்துராமலிங்கத் தேவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1963)
1909 – ஹோமி பாபா, இந்திய அணிவியல், இயற்பியல் ஆராய்ச்சியாளர் (இ. 1966)
1962 – கொட்னி வோல்ஷ், மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட பந்து வீச்சாளர்
1977- டிமிட்ரி மாஸ்கரேஞாஸ், இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்
இறப்புகள்
1910 – ஹென்றி டியூனாண்ட், செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தவர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1828)
1963 – முத்துராமலிங்கத் தேவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1908)
1973 – ரா. கிருஷ்ணசாமி நாயுடு, தமிழக அரசியல்வாதி (பி. 1902)
1975 – குஸ்டாவ் லுட்வீக் ஹேர்ட்ஸ், ஜேர்மனிய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1887)
1979 – சுபத்திரன், இலங்கையின் முற்போக்கு இலக்கிய கவிஞர் (பி. 1935)
1999 – சௌமியமூர்த்தி தொண்டமான், இலங்கையின் மலையகத் தமிழர்களின் அரசியல் தலைவர் (பி. 1913).
சைக்கிள்.........!
ஓரம்போ !, ஓரம்போ !, ருக்குமணி வண்டி வருது !”
நம்மிடையே தற்போது மறைந்து வரும் முக்கிய பழக்கம் சைக்கிள் ஓட்டுதல். பெரும்பாலான கல்லுாரிகளில் சைக்கிள் ஸ்டாண்டுகள், பைக் ஸ்டாண்டுகளாகவும், கார் ஸ்டாண்டுகளாகவும் மாறி விட்டன. வருங்காலத்தில் சைக்கிள் என்ற வாகனம், அருங்காட்சியகத்தில் மட்டும் இருக்கும் என்ற நிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் உள்ளது.
1839ல் மேக்மில்லன் என்பவரால் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் வெளாசிட்ட என்று பெயரிடப்பட்டு, பிற்காலத்தில் சைக்கிள் என மாறியது. பின்னர் டன்லப் என்பவரால் ரப்பர் சக்கரம் கொண்டதாக, சைக்கிள் மாற்றியமைக்கப்பட்டது.
1985க்கு முன்பு முன்னூறு வீடுகள் உள்ள கிராமம் ஒன்று இருந்தால் சுமார் ஐம்பது வீடுகளில்தான் சைக்கிள்கள் இருக்கும். மோட்டார் பைக்குளைப் பார்ப்பதே மிக மிக அரிது.
கிராமங்களில் யாரோ ஒருவர் SWEGA வண்டி வைத்திருப்பார். HERO MAJESTIC, TVS மொபெட்டுகளுக்கு முந்தினது SWEGA.....! அது மணிக்கு இருபது அல்லது முப்பது கிலோ மீட்டர் வேகத்தில்தான் போகும்.
இப்போது கார், மோட்டார் பைக் வாங்குவதற்கு கூட அவ்வளவு விசாரிப்பதில்லை. ஆனால், அப்போது பழைய சைக்கிள் (SECOND HAND) வாங்குவது என்றால் கூட அவ்வளவு எச்சரிக்கையோடு விசாரிப்பார்கள்.
ராலி, ஹெர்குலஸ், அட்லாஸ், ஹீரோ போன்ற கம்பெனிகளின் தயாரிப்புகள் இருந்தாலும் ராலி சைக்கிள் வைத்திருப்பவர்கள் தான் "கெத்து" .
அடுத்து...... அதிக எடை ஏற்றிச் செல்ல வேண்டுமானால் ஹெர்குலஸ் சைக்கிள் வைத்திருப்பார்கள். குறைந்த பட்ஜெட்காரர்கள் ஹீரோ அல்லது அட்லஸ் சைக்கிள்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.
ஒவ்வொரு ஊரிலும் சைக்கிள் பழுது பார்க்கும் கடையும் வாடகை சைக்கிள் கடைகளும் இருக்கும். வாடகை சைக்கிள்களில் பெரும்பாலும் கேரியர் இருக்காது. கேரியர் உள்ள சைக்கிள்களுக்கு கொஞ்சம் வாடகை அதிகம். சிறுவர்கள் சைக்கிள் பழக சிறிய சைஸ் சைக்கிள்களும் கிடைத்தது. விடுமுறை நாட்களில் இது மட்டுமே பொழுதுபோக்கு.
இப்போது கார்கள் , மோட்டார் பைக்குகளை "சர்வீஸுக்கு"விடுவது போல அப்போது சைக்கிள்களை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸுக்கு சைக்கிள் பழுது பார்க்கும் கடைகளில் விடுவார்கள். அதற்கு "ஓவராயில் " செய்வது என்பார்கள்.
அன்று சைக்கிள் ரிப்பேர் பார்ப்பவர்கள் பலர் கண்ணுக்கு ஹிரோவாக தெரிந்தார்கள்,,
இப்போது கார்களுக்கு "WHEEL. ALIGNMENT, WHEEL BALANCING " செய்வதுபோல சைக்கிள்களுக்கும் செய்வார்கள். அதற்கு " வீல் கோட்டம் எடுப்பது" என்பார்கள்.
1979க்கு முன்பு சைக்கிள்களுக்கு பஞ்சாயத்து அல்லது நகராட்சிகளில் கட்டாயம் கட்டணம் செலுத்தி LICENSE எடுக்க வேண்டும். ஒரு வட்ட வடிவ தகரத்தில் முத்திரையிட்டுத் தருவார்கள். அதை சைக்கிளின் முன்புறம் HANDLE BAR க்கு கீழை நிரந்தரமாக இணைத்து வைத்துக் கொள்வார்கள். இது இல்லாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டும்.
சைக்கிளில் டைனமோ இருக்கும். இரவு நேரங்களில் சைக்கிள் ஓட்டும்போது டைனமோ இல்லாவிட்டால் காவல்துறையினர் பிடித்து அபராதம் விதிப்பார்கள்.
சைக்கிளில் ஒருவர் செல்ல மட்டுமே அனுமதி இருந்தது. இருவர் சென்றால் அபராதம். எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது தான் இருவர் செல்ல அனுமதி கொடுக்கப் பட்டது. அந்த லைசென்ஸும் ஒழிக்கப் பட்டது.
அந்த சைக்கிள்களின் கைப்பிடிகளுக்கு பல நிறங்களில் கவர்கள் போட்டும், இரண்டு வீல்களிலும் தேங்காய் நார்களில் செய்யப்பட்ட பலவித நிறங்களில் அலங்காரப் பொருட்களை வாங்கிக் கட்டி "கெத்து" காட்டுவதுமே பெருமையாக இருந்தது.
இந்த தலைமுறையினர் சிறு சைக்கிள்களை வீட்டுக்குள் ஓட்டுவதோடு சரி..... இன்னும் ..... அது கூட இல்லாமல் சிறிய சைஸ் மோட்டார் பைக்குகள், கார்களை வாங்கிக் கொடுத்து வீட்டுக்குள்ளேயே ஓட்டச் செய்கிறோம்.
ஐரோப்பிய நாடுகளில், முக்கியமாக சுவிட்சர்லாந்து, நெதர்லாந்தில் மக்கள் அலுவலகங்களுக்கு, பள்ளிகளுக்கு சைக்கிளில் செல்வதைத்தான் விரும்புகிறார்கள். சாலைகளில் இருபுறமும் சைக்கிள் செல்வதற்கு நேர்த்தியாக தளம் அமைத்து, சைக்கிளில் செல்வதை ஊக்குவிக்கிறார்கள்.
நமது நாட்டில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. அதிகமாக மோட்டார் வாகனங்களை பயன்
படுத்துவதால் சுற்றுப்புற சூழ்நிலை அசுத்தமாக மாறி, நுரையீரல் தொடர்பான நோய்கள் அதிகமாகி வருகிறது. மேலை நாடுகளில் பெரிய பதவிகளில் இருப்பவர்கள் கூட சைக்கிளில் செல்வதை விரும்பும் போது, நமது நாட்டில் அது தகுதி குறைவு என்ற நிலை வந்து விட்டது.
நன்மைகள் என்ன
தினமும் 8 கி.மீ., சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் பல
* சைக்கிள் ஓட்டுவது உடலை வருத்தி செய்யக்கூடிய பயிற்சி அல்ல. எனவே மிகவும் மோசமான இதய நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களை தவிர, எல்லோருமே சைக்கிள் ஓட்டலாம்.
* சைக்கிள் ஓட்டும் போது உடம்பில் உள்ள அனைத்து தசைகளும் பயன்பட்டில் இருக்கின்றன.
* உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ப வேகமாகவும் ஓட்டலாம், மெதுவாகவும் ஓட்டலாம்.
* சைக்கிள் ஓட்டும் போது, நல்ல ஆரோக்கியமான ஆக்ஸிஜனை நாம் சுவாசிக்கிறோம்.
* நமது உடம்பில் உள்ள மூட்டுகளில் இறுகும் தன்மை மாறி, வலுவான மூட்டாக மாற்றுகிறது. எனவே மூட்டுகளை நன்றாக மடக்கி நீட்டி வேலை செய்ய முடியும்.
* எலும்புகளை பதப்படுத்தி, உறுதிப்படுத்துகிறது. உடல் கொழுப்பை குறைக்கிறது.
* சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு, மிகை கொழுப்பு தொடர்பான நோய் வராமல் பாதுகாக்கிறது.
* மார்பக புற்றுநோய், உடல் புற்றுநோய்கள், பக்கவாதம் வராமலும் தடுக்கிறது.
* மனநிம்மதியை கொடுக்கிறது. மன அழுத்தம் மற்றும் மனசோர்வு ஏற்படாமல் தடுக்கிறது.
* தினமும் சைக்கிள் ஓட்டும் பயிற்சி செய்வதால், இதயத்தில் புது ரத்த நாளங்கள் ஏற்படுகின்றன. இவை, இதயத்தசை நார்களில் அதிகமான ரத்தத்தை எடுத்து செல்கின்றன. இதனால் மாரடைப்பு வராமல் தடுக்கப்படுகிறது.
* சர்க்கரை நோயாளிகள் சைக்கிள் ஓட்டும் போது இன்சுலினுடைய வேலைத்திறன் அதிகமாகிறது. ஆதலால் குறைந்த அளவு இன்சுலினால் அதிக அளவு நன்மை கிடைக்கிறது.
* காலில் உள்ள அனைத்து தசைகளுக்கும் சைக்கிள் பயிற்சி வலுவைக் கொடுக்கிறது. முக்கியமாக பாதங்களில் உள்ள சிறிய தசைகள் வலுவாக மாறுகின்றன.
* சைக்கிள் பயிற்சி தசை நார்களை வலுவாக்குவதுடன் சிரை வீக்க நோய் வராமல் பாதுகாக்கின்றன.
* நமது கைகளில் உள்ள சிறிய தசை நார்களும் சைக்கிள் ஓட்டும் போது வலுவாகின்றன. இதனால் எழுதுவது போன்ற விரல்களால் செய்யப்படும் வேலைகளை துல்லியமாக செய்ய முடிகிறது.
* மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகமாவதுடன், சிறுமூளையின் வேலைத்திறன் அதிகமாகிறது.
* தோலுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் அரிப்பு, புண் வராமலும் தடுக்கிறது.
* தினமும் சைக்கிள் ஓட்டினால் மலச்சிக்கல் வராது.வேலைத்திறன் அதிகரிப்பு மேலை நாடுகளில், பள்ளி மாணவர்களிடையே இந்த பயிற்சியை கட்டாயமாக்கியதால், மாணவர்களின் வேலைத்திறன் அதிகமானது என ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு தனிமனிதனின் உடல்நலக் குறைவு ஒரு குடும்பத்தை பாதிக்கும். ஒரு குடும்பத்தின் உடல்நலக் குறைவு தெருவை பாதிக்கும். தெருவின் உடல்நலக் குறைவு ஊரை பாதிக்கும். ஊரே உடல்நலக் குறைவாக இருந்தால், நிச்சயமாக அது நாட்டை பாதிக்கும். சற்றே கற்பனை செய்து பாருங்கள்.
அனைவரும் சைக்கிள்களிலேயே பள்ளி, அலுவலகம் செல்வதாக கற்பனை செய்து கொள்வோம்.
நிச்சயமாக, மோட்டார் வாகனத்தில் விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு இறந்து போகும், எத்தனையோ மாணவர்களின் உயிரை காப்பாற்றலாம். அது மட்டுமல்லாமல் நாம் சுவாசிக்கும் காற்றும் சுத்தமானதாக மாறும்.
தனிநேரம் தேவை இல்லை அன்றாட வேலைகளுக்கு சைக்கிளை பயன்படுத்துவதால், உடற்பயிற்சி மற்றும் நடைப்
பயிற்சிகளுக்கு தனியாக நேரம் ஒதுக்க தேவையில்லை. மிக அவசர வேலைகளுக்கு கார், இரு சக்கர வாகனம் பயன்படுத்தலாம். தினமும் சைக்கிள் ஓட்டுபவர்கள் அதிக நாள் வாழ்கின்றனர்
என்கிறது ஒரு ஆய்வு. எனவே சைக்கிள் என்பது உயிர் காக்கும் தோழன்.ஏரோபிக் உடற்பயிற்சிகள், எடை உடற்பயிற்சிகள், நீட்டி மடக்கும் உடற்பயிற்சிகள் என உடற்பயிற்சிகளை மூன்று வகைகளாக பிரிக்கலாம். நடைப்பயிற்சி மட்டும் மேற்கொண்டால் நடப்பதற்கு பயன்படும் தசைகள் வலுப்
படுமே தவிர, மற்ற தசை நார்களை வலுப்படுத்தாது. அதை போல் நீட்டி மடக்கும் பயிற்சிகள் உடம்பில் மூட்டை சுற்றியுள்ள தசை நார்களை வலுவுடையதாக்கும். சைக்கிள் ஓட்டுவதன் மூலம் இந்த மூன்று வகையான பயிற்சிகளையும், ஒரே பயிற்சியில் செய்ய முடியும்.
கலோரி கணக்கு
சைக்கிள் ஓட்டும் போது செலவழிக்கும் கலோரிகள் பற்றி அறிவோம்!
நாம் செலவழிக்கும் கலோரி அளவு உடல் எடை மற்றும் சைக்கிள் ஓட்டும் நேரம், வேகம் ஆகியவற்றை பொறுத்தது.
உதாரணமாக 60 கிலோ எடையுள்ள ஒருவர் மணிக்கு 18 கி.மீ., வேகத்தில் ஒரு மணி நேரம் சைக்கிள் ஓட்டினால் ஏறக்குறைய 480 கலோரிகள் செலவழிக்கலாம். 480 கலோரி அளவு என்பது 100 கிராம் உருளைக்கிழங்கில் உள்ள கலோரி அளவு ஆகும்.
* குறைந்தபட்சம் வாரத்தில் மூன்று நாட்கள் சைக்கிள் ஓட்டி அலுவலகத்திற்கு செல்லலாம். பெட்ரோல் செலவு குறையும்.
* அசையாத சைக்கிளில் தனி அறையில் ஓட்டுதலை விட, ஓடும் சைக்கிளில் திறந்த வெளியில் ஓட்டுதலே சிறந்தது.
ஆரம்ப நிலையில் சற்று மெதுவாக சைக்கிள் ஓட்டலாம்.நமது நாடு வளர்ந்து
வரும் நாடு. வசதி படைத்த வளர்ந்த நாடுகளில் சைக்கிள் ஓட்டுதல், மக்களிடையே அன்றாட வாழ்க்கையில் ஒரு நிகழ்வாக இருக்கும் போது, வளரும் நாடான நாம் சைக்கிளை ஒதுக்கி கொள்ளுவது முறையாகுமா?
எப்படி ஆயினும் ......
பழைய நினைவுகள் ஆனந்தத்தையும் வைராக்கியங்களையும் தான் தருகின்றன.
வாழ்நாள் முழுவதும் போராளியாக வாழ்ந்தவர்
முத்துராமலிங்கத் தேவர் (அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) தென் தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் எனும் சிற்றூரில் பிறந்தவர். ஆன்மிகவாதியாகவும், சாதி எதிர்ப்புப் போராளியாகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர்.
விவேகானந்தரின் தாசராகவும் நேதாஜியின் நேசராக, நேர்மையின் துதராக, சத்தியத்தை சீடராக விளங்கியவர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர். அவர் வார்த்தை பிறழாது நடக்கக்கூடியவர். திடமானவர், நெறியாளர், திட வைராக்கிய மெய்ஞானி, திறமைமிகு தியாகச்சுடர், தீரமிகு அரசியல் தீர்க்கதரிசியாவார். வெண்மை நிறங்கொண்டு உடையளவில் மட்டுமல்லாது மனதளவிலும் விளங்கியவர்.
பதவிகள் புகழை நிலைநாட்டாது, நிலைக்கச் செய்யாது. உண்மையும், நேர்மையும், உழைப்பும், தன்னலமற்ற மக்கள் பணியும்தான் நிலைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டான ஒரு தலைவர் தேவர் திருமகனார்.
இந்துவின் வயிற்றிலே பிறந்து முஸ்லிம் மடியில் தவழ்ந்து கிருஸ்துவரின் அரவணைப்பிலே கல்வி கற்று பாரத நாட்டின் விடுதலை போரில் விடுதலை தளபதியாய் விளங்கியவர்.
20 ஆம் நுற்றாண்டில் உணர்ச்சிகளை உள்ளடக்கி தியாகத்தை வெளிப்படுத்தி மனோதத்துவம் என்பதை ஏற்படுத்தி தெய்வீகத்தையும் தேசியத்தையும் ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி துல்லியமாக தனது பாதை விலகாது நடந்தவர் முத்துராமலிங்கத் தேவர் ஆவார்.
மன்னராக இல்லாவிட்டாலும் மன்னராக விளங்கியவர். தமிழகம் உயர தமிழ் வளர தமிழ்ச்சமுதாயம் உயர போராட்டக்கல்லில் உரசி உரசி மக்களுக்காக பாடுபட்டிருக்கிறார். சேது வேங்கை முத்துராமலிங்கத் தேவர்.
பிறப்பு: தமிழகத்தின் தென்கிழக்கு மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன் என்கிற சிற்றூரில் மிகுந்த வசதி படைத்த குடும்பத்தில் அக்டோபர் 30, 1908 -ல் உக்கிரபாண்டி தேவருக்கும் இந்திராணி அம்மையாருக்கும் பிறந்த ஒரே மகனாவார். இவரது தாயார் இவருக்கு ஒருவயது நிரம்பும் முன்பே காலமானார். தாயை இழந்த இந்தத் தனயனுக்கு ஒரு இஸ்லாமியப் பெண் தாய்ப்பால் ஊட்டி வளர்த்தார். தாயை இழந்தபின்பு இவரது தந்தையார் குறுகிய காலத்திலேயே மறுமணம் புரிந்துகொண்டார். அந்த இரண்டாவது மனைவியாரும் இறந்த காரணத்தினால் உக்கிரபாண்டி தேவர் மீண்டும் ஒரு திருமணம் புரிந்து கொண்டார். இதனால் முத்துராமலிங்க தேவர் இவரது உறவின் முறை பாட்டியான பார்வதியம்மாளின் பாதுகாப்பில் கல்லுபட்டி என்கிற கிராமத்தில் வளர்ந்தார்.
கல்வி: இளமைப் பருவத்தில் தேவரவர்கள் குழந்தைசாமி பிள்ளை என்கிற குடும்ப நண்பரால் பயிற்றுவிக்கப்பட்டார். குழந்தைசாமி பிள்ளை தேவரின் பள்ளிப்படிப்பிற்கு மிகுந்த சிரத்தை எடுத்து தனிக்கல்வி பயிற்சி அமைத்துக் கொடுத்தார். பின்னர் ஆரம்பப்பள்ளி படிப்பைக் கமுதியில் உள்ள அமெரிக்கன் மிசனரீசால் நடத்தப்பட்டு வந்த பள்ளியில் முடித்தார். பின்னர் தேவர் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள பசுமலை மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்தார். பின்னர் மதுரையில் உள்ள யூனியன் கிறிஸ்டியன் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து பள்ளிப்படிப்பை முடித்தார்.
1924ஆம் ஆண்டு ஏற்பட்ட உடல்நலக்குறைவின் காரணத்தால் தேவர் அவர்கள் பள்ளிப்படிப்பை முழுமையாக முடிக்க இயலவில்லை. இவரது தந்தையாரின் அடுத்தடுத்த இரண்டு திருமணங்களின் காரணத்தால் பசும்பொன் திரும்பிய பிறகு வாரிசு உரிமைக்கும் குடும்பப் பாரம்பரிய சொத்துகளுக்கும் இவர் போராட வேண்டியிருந்தது. 1927 இல் வழக்குமன்றத்தில் இது சம்பந்தமான தீர்ப்பானது முத்துராமலிங்க தேவருக்குச் சாதகமாக முடிந்தது. தேவரின் தந்தையார் உக்கிரபாண்டி தேவர் 1939 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் நாள் மறைந்தார்.
குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டம்:
தென்னக அரசியலில் குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்கிற ஆயுதத்தை தேவர் கையில் எடுத்ததும் இவர் மீது தனித்தன்மையான அரசியல் நோக்கர்களின் பார்வை திரும்பியது. 1920 ஆம் ஆண்டில் இருந்து அப்போதைய மதராஸ் மாகாணத்தில் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அமுலில் இருந்த குற்ற பரம்பரை சட்டம் என்கிற சட்டத்திற்கு எதிராக தேவர் அவர்கள் முதன் முதலாக போராடினார். தேவர் அவர்களின் அரசியல் பிரவேசத்திற்கு பின்பு தான் இந்த போராட்டம் உச்சகட்டம் எட்டியது. இந்த சட்டத்தினை எதிர்க்கும்படி விழிப்புணர்ச்சி உண்டாக்கும் வண்ணம் மேற்கண்ட பகுதிகளில் இவர் சுற்றுப்பயணம் செய்து மக்களை திரட்டினார்.
அப்போது 19 கிராமத்தைச் சேர்ந்த மறவர் சமூகத்தினர் இந்த சட்டத்தின் கீழ் அப்போதைய அரசால் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு தேவர் மிகப்பெரிய பிரச்சாரத்தினை கிராமங்கள் தோறும் நிகழ்த்தி மக்களை ஒன்றுதிரட்டி போராட்டங்களை நடத்தினார். இந்த போராட்டத்தில் தேவருடன் இருந்த Dr.P.வரதராஜுலு நாயுடு, பெருமாள் தேவர், சசிவர்ண தேவர், மற்றும் நவநீதக்ருஷ்ண தேவர் ஆகியோர் இணைந்த சமாதான பேச்சுவார்த்தை குழு நியமிக்கப்பட்டு அப்போதைய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் மீண்டும் தேவரின் தலைமையில் போராட்டம் சீற்றமடைந்ததால் இந்த சட்டம் நீக்கப்பட்டது.
1927 ஆம் ஆண்டு தனது பத்தொன்பது வயதில் சிவில் வழக்குகளை நடத்துவதற்காகச் சென்னைக்குச் சென்றார். ‘அம்ஜத் பார்க்’ என்கிற பெயருள்ள மாளிகை. மயிலாப்பூரில், மூன்று ஏக்கர் சுற்றளவு உள்ள மாளிகை. அந்த மாளிகையின் சொந்தக்காரர் சீனிவாச அய்யங்கார். மிகப்பெரிய வழக்கறிஞர். அவரிடம் சென்றார் வாலிபராக இருந்த தேவர்.
‘ஐயா, இந்த வழக்குகளை நடத்த வேண்டும். அதற்காக வந்து இருக்கிறேன்’ என்றவுடன், பெரிய குடும்பத்துப் பிள்ளை அல்லவா? சீனிவாச அய்யங்கார் அவ்வளவு பெரிய மாளிகையில் அவரை வரவேற்று உபசரித்து, ‘நான்கு நாள்கள் காங்கிரஸ் மாநாடு இங்கே நடக்கிறது. அந்த வேலையில் இருக்கிறேன். நான்கு நாள் கழித்து, இந்த வழக்கு விசயங்களை, இந்த ஆவணங்களைப் பார்க்கிறேன்’ என்று சொல்கிறார்.
பிறகு சில நிமிடங்கள் கழித்து அவர் கேட்கிறார், ‘இந்த நான்கு நாள்களும் நீங்கள் இங்கேயே தங்க முடியுமா?’ என்று கேட்கிறார். எதற்காக ஐயா கேட்கிறீர்கள்? என்றார். அந்தக் காலகட்டத்தில் சென்னையில் பெரிய ஓட்டல்கள் கிடையாது. நட்சத்திர ஓட்டல்கள் கிடையாது. விருந்தினர் விடுதிகள் கிடையாது. தலைவர்களை முக்கியமான வீடுகளில்தான் தங்க வைப்பார்கள். நாட்டின் புகழ் வாய்ந்த தலைவர்கள் அவர் காந்தியாராகட்டும், நேருவாகட்டும், திலகராகட்டும் அந்தத் தலைவர்களை எல்லாம், வீடுகளில் தங்கவைப்பார்கள். அது வழக்கம்.
‘நான்கு நாட்கள் நான் சொல்கின்ற ஒரு சிறுபணியை, நீங்கள் செய்ய முடியுமா?’ என்று கேட்கிறார். தேவர் திருமகன் ஆங்கிலமும் நன்கு பேச வல்லவர், ‘சொல்லுங்கள் செய்கிறேன்’ என்கிறார்.
‘ஒன்றுமில்லை; வட இந்தியாவில் இருந்து பெரிய தலைவர்கள் வந்து இருக்கிறார்கள். அவர்கள் வீடுகளில் தங்க வைக்கப்படுகிறார்கள். அப்படி ஒரு தலைவருடைய வீட்டில், அவரோடு இருந்து அவரை மாநாட்டுக்கு அழைத்து வரவும், திரும்ப அழைத்துச் செல்லவும், அவருடைய செளகரியங்கள் நன்றாக நடக்கிறதா என்பதை உடனிருந்து கண்காணித்து உதவிசெய்வதற்கும் உங்களால் இயலுமா?’ என்றார். ‘தாராளமாகச் செய்கிறேன், மகிழ்ச்சியாகச் செய்கிறேன்’ என்கிறார். தேவர் வாழ்விலே அதுதான் திருப்பம்.
இந்த விலாசத்தில் இருக்கின்ற வீட்டுக்குச் சென்று, அந்தத் தலைவரிடத்தில் இவரை அறிமுகப்படுத்தி வைத்து, ‘உங்களுக்கு உதவியாக இருப்பார் இந்த இளைஞர்’ என்று சொன்னார். அந்தத் தலைவர்தான் நேதாஜி. இப்படித்தான் உறவு மலர்ந்தது. சந்தர்ப்பங்கள் ஒரு மனிதரின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட திருப்பங்களை ஏற்படுத்துகின்றன பாருங்கள்!
நாட்டுக்கு அருட்கொடை அவர்கள் சந்திப்பு. இத்தென்னாட்டுக்கு அருட்கொடை அந்தச் சந்திப்பு.
வங்கத்துச் சிங்கம் நேதாஜி அவர்களுக்கு நான்கு நாட்களும் உறுதுணையாக தேவர் இருந்த அந்தச் சந்திப்புதான், வாழ்நாள் முழுமையும் பிரிக்க முடியாத பிணைப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அப்படித்தான், அவர் பொது வாழ்வுக்கு வருகிறார்.
அப்போதுதான வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவருமான எஸ்.சீனிவாச ஐயங்கார் தலைமையில் காங்கிரசில் சேர்ந்தார். அப்போது சென்னையில் டாக்டர் அன்சாரியின் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மகாநாட்டில் கலந்து கொண்டார்.
1933 ஆம் ஆண்டு. விவேகானந்தர் முதலாவது ஆண்டுவிழா என்ற நிகழ்ச்சியில்தான் முதன்முதலாக மேடையில் முழங்குகிறார் தேவர் திருமகன். அதன் பிறகு தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு சுதந்திரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.விவசாயக் குடும்பத்தில் பிறந்த தேவர் புகழ்பெற்ற தலைவர்கள் பலரை அழைத்து ராஜபாளையத்தில் விவசாயிகள் மாநாட்டினை நடத்தினார்.
1936 மாவட்ட வாரிய தேர்தல்: குற்றபரம்பரை சட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் 1936 ஆம் ஆண்டு பர்மாவில் இருந்து திரும்பி வந்த தேவர் தென்தமிழகத்தில் காங்கிரசின் வளர்ச்சிக்காக உழைத்தார். பின்னாளில் வந்த மாவட்ட வாரிய தேர்தலில் தேவர் முதுகுளத்தூர் தொகுதியில் நீதிக்கட்சியின் வேட்பாளரை எதிர்த்து நின்று வெற்றிபெற்றார். இதுவே தேவரின் முதல் தேர்தல் வெற்றியாகும். இந்த வெற்றிக்கு பின்னர் தேவர் மாவட்ட வாரிய தலைவரானார்.
1937 மாநில தேர்தல்: 1937 ஆம் ஆண்டு நடந்த சென்னை மாகாண தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் தேவர் அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு உழைத்திட இளைஞர்களை திரட்டினார். தேவரின் இந்த செயல்பாடுகள் நீதிகட்சியினருக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. இதனால் அந்த அரசாங்கம் தேவரை இராமநாதபுரத்திற்கு வெளியே பயணித்து பிரசாரம் செய்ய முடியாதபடிக்கு சட்டங்களும் கட்டுபாடுகளும் விதித்தது.
1937 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் தேவர் போட்டியிட்டார். இவரது அரசியல் வளர்ச்சியை கண்டு பயந்துபோன ஆங்கிலேய நீதி கட்சியரசு பலம் வாய்ந்த எதிர் வேட்பாளராக இராமநாதபுர மன்னர் அவர்களை நிறுத்தியது. ஆனாலும் முத்துராமலிங்க தேவர் அந்த தேர்தலில் மன்னரை எதிர்த்து மகத்தான வெற்றிபெற்றார்.
பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி மாகாணத்தினை ஆளும் கட்சியாக உருபெற்றது. இந்த காங்கிரஸ் கட்சி அரசு குற்ற பரம்பரை சட்டத்தினை விலக்கும் என்று தேவர் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால் அப்போதைய அரசின் முதல்வரான C.ராஜகோபாலாச்சாரி அவர்கள் அந்த சட்டத்தினை நீக்கவில்லை. தாழ்த்தப்பட்டவர்களை ஆலயத்துள் அழைத்துச் செல்லும் பொறுப்பை மதுரையில் ஏ.வைத்தியநாத ஐயர் மேற்கொண்டார். அவருக்கு அங்கு பயங்கர எதிர்ப்பு ஏற்பட்டது. அந்த எதிர்ப்பை முறியடித்து அந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார் தேவர்.
காமராஜர் தேர்தலில் நிற்க முடியாத நிலையில் இருந்த போது பசும்பொன் முத்துராமலிங்க தேவர் எதுவும் யோசிக்காமல் நான்கு வெள்ளாட்டை விலைக்கு வாங்கி, அதற்கு விருதுநகர் நகரசபையில் காமராஜர் பெயரில் வரி செலுத்தி ரசீதைப் பெற்றுக்கொண்டு ஒரு தகர வில்லையை வரிக் கட்டியதன் அடையாளமாக வெள்ளாட்டின் கழுத்தில் கட்டி விட்டு காமராஜரை வாக்களராக்கி சாத்தூர் தொகுதியில் நிற்க வைத்து கடும் எதிர்ப்பு அமளிக்கு இடையே காமராஜை வெற்றி பெற வைத்தார் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்.
தொழிலாளர்களின் தோழன்: 1930 ல் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்ட தேவர் பசுமலையில் மகாலெட்சுமி ஆலை தொழிலாளர் நலன் கூட்டமைப்பை உருவாக்கி தேவரே தலைமை ஏற்று நடத்தினார். மகாலெட்சுமி ஆலை தொழிலார்கள் சங்கமும் மதுரா பின்னலாடை ஆலை தொழிலாளர் சங்கமும் இணைந்து நடத்திய போராட்டத்தினை தேவர் தலைமை தங்கி நடத்தினார். பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீள் பணியில் அமர்த்தும் போராட்டத்தில் தேவர் 1938 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் நாள் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். இந்த போராட்டங்களில் வெற்றியும் பெற்றார். பின்னர் 1945 ஆம் ஆண்டு TVS தொழிலாளர் சங்க தலைமை பொறுப்பையும் ஏற்றார்.
திரிபுரி காங்கிரஸ் மாநாடும் பார்வர்ட் பிளாக்கின் வளர்ச்சியும்: 1939 ஆம் ஆண்டு திரிபுரியில் நடைபெற்ற 52-வது வருடாந்திர காங்கிரஸ் கூட்டத்தில் தேவர் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை எதிர்த்து பட்டாபி சீதாராமையா போட்டியிட்டார். சீதாராமையா காந்தியடிகளில் ஆதரவு பெற்றவராவார். ஆனாலும் மீண்டு போஸ் அவர்கள் தேவரின் ஆதரவோடு காங்கிரசின் தலைமை பொறுப்பில் அமர்ந்தார். தேவர் தென்னிந்தியாவின் வாக்குகளை போஸ்க்கு ஆதராவக திரட்டினார்.
பின்னர் காந்தியின் தலையீட்ட்டால் நேதாஜி அந்த பொறுப்பை விட்டு விலகி ஜூன் 22 ஆம் நாள் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியை நிறுவினார். காங்கிரஸ் கட்சியின் மீதான கருத்து வேறுபட்டாலும் குற்றபரம்பரை சட்டத்தின் மீதான காங்கிரசின் நிலைபாட்டின் காரணத்தினாலும் தேவர் நேதாஜியுடன் இணைந்தார். பின்னாளில் செப்டம்பர் 6 ஆம் நாள் நேதாஜி மதுரைக்கு வந்திருந்த பொழுது தேவர் அவர்கள் நேதாஜியை வரவேற்கும் விதமாக மிகப்பெரிய கூட்டத்தினை கூட்டினார்.
சிறை வாசம்: வளர்ந்து வந்த தேவரின் செல்வாக்கினாலும் காங்கிரஸ் விரோத போக்கினாலும் கலங்கிய அப்போதைய அரசு தேவரின் தொழிலாளருடன் இணைந்த போராட்டங்கள் மற்றும் இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் தேவர் தீவிரவாத கோஷ்டியைச் சேர்ந்தவர் என்று காரணம் காட்டி மதுரா பாதுகாப்பு என்கிற பெயரில் தேவர் மீது வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் மூலம் தேவர் மதுரையை விட்டு வெளியேற முடியாதபடிக்கு தடுக்க நினைத்தது. இதுபோன்ற அடக்கு முறைகளுக்கு அடிபணியாத தேவர் 1940 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேவர் மதுரையில் இருந்து தனது சொந்த ஊரான பசும்பொன்னிற்கு பயணித்த பொழுது திருப்புவனத்தில் அவரை கைது செய்து திருச்சிராப்பள்ளி மத்திய சிறைசாலையில் 18 மாதகாலம் அடைத்தது. இவரது கைது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சி பேரலையை ஏற்படுத்தியது. 18 மாதங்களுக்கு பின்னர் இவர் விடுதலையான பொழுது சிறை வாசலிலேயே இந்திய பாதுகாப்பு சட்டத்தினை காரணம் காட்டி மீண்டும் சிறையில் அடைத்தனர். பின்னர் 1945 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் விடுதலை ஆனார்.
சிறை வாசத்திற்கு பின்பு: மார்ச் மாதம் 1946 ஆம் வருடம் நடைபெற்ற சென்னை மாகாணத் தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தேவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கபட்டார். இதன் பின்னர் குற்றபரம்பரை சட்டம் நீக்கப்பட்டது. பின்னர் பிப்ரவரி 1948 -ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பார்வர்ட் பிளாக் கட்சி தனித்து பிரதான எதிர் கட்சியானது. இதில் தேவர் பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழத்தின் தலைவரானார் (இந்த பதவியில் இவர் வாழ்நாள் முழுவதும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது).
1949 ஆம் ஆண்டு ஜனவரி 23 அன்று தேவர் சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் கூட்டத்தின் போது சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் உள்ளார் என்றும் அவர் விமான விபத்தில் இறந்ததாக கூறுவது பொய் எனவும் அவரை தாமே சந்தித்தாக பகிரங்கமாக அறிவித்தார். பின்னாளில் பார்வர்ட் பிளாக் கட்சியில் ஏற்பட்ட பிளவினால் 1948 -ல் கட்சி இரண்டாக உடைந்தது. இந்த பிரிவினையில் தேவர் சார்ந்திருந்த பிரிவு மட்டுமே இன்றும் நிலைத்திருக்கிறது.
1952 பொது தேர்தல்: 1952 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதல் பொது தேர்தல் நடைபெற்றது. இதில் மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் அல்லாத ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்கிற முனைப்புடன் பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிட்டது. லோக் சபா மற்றும் சட்டப்பேரவை என இரண்டு தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடந்தது. இதில் தேவர் அருப்புகோட்டை லோக்சபா தொகுதியிலும் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றியும் பெற்றார். இதில் தேவர் அவர்கள் லோக்சபா பதவியை துறந்து சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்று மதராஸ் சட்டப்பேரவை உறுப்பினர் குழுவில் இடம்பெற்றார். இந்த தேர்தலுக்கு பின் காங்கிரஸ் மதராஸ் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை இழந்தது. மேலும் தேவர் கம்ம்யூனிஸ்ட்டுகளுடன் இணைந்து காங்கிரஸ் அல்லாத ஆட்சியை நிறுவ முனைந்தார். ஆளுநர் அவர்கள் C.ராஜகோபாலசாரியார் அவர்களை முதல்வராக நியமித்தார்.
பார்வர்ட் பிளாக் கட்சியின் பிளவு:
1955 ஆம் ஆண்டு பார்வர்ட் பிளாக் கட்சியில் மீண்டுமொரு பிளவு ஏற்பட்டது. இந்திய தேசிய காங்கிரஸ் சகோதரத்துவத்தை ஆதரித்தது. மோகன் சிங்க் மற்றும் சீல் பந்திரா யாகி போன்ற பார்வர்ட் ப்ளாக்கின் முக்கிய தலைவர்கள் காங்கிரசுடன் இணைய முற்பட்டனர். இந்த முடிவை கட்சியின் பிற தலைவர்கள் ஏற்க முன்வரவில்லை. பார்வர்ட் பிளாக் கட்சி தனித்தே இருக்க வேன்றுமென்று விரும்பினர். இருப்பினும் மோகன் சிங்க் - யாகி ஆகியோர் தன்னிச்சையாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இந்த தருணத்தில் 1955 ஆம் ஆண்டு மே மாதம் 11 முதல் 15 தேதிகளில் நாக்பூரில் நடந்தது. இதில் சிங்க் - யாகி ஆதரவாளர்கள் புறக்கணித்தனர். இதில் ஹேமந்த் குமார் போஸ் அவர்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஹல்டுல்கர் பொது செயலாளராகவும் தேவர் அவர்கள் துணை தலைவராகவும் தேர்ந்தேடுக்கபட்டனர்
1957 பொது தேர்தல்: 1955 ஆம் ஆண்டு தேவர் அவர்கள் பர்மா வாழ் தமிழ் மக்களின் அழைப்பை ஏற்று இரண்டாம் முறையாக பர்மா சென்றார். அங்கு பர்மா வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்த பல்வேறு அரசியல் மற்றும் ஆன்மீக நிகழ்சிகளில் பங்கேற்றார். பின்பு 1956 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் நாள் பொது தேர்தலை சந்திப்பதற்காக தாயகம் திரும்பினார். காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைக்கும் பொருட்டு பார்வர்ட் பிளாக் கட்சி உழைத்து கொண்டிருந்த வேளையில். மெட்ராஸ் மாநிலத்தில் புது பரிணாமமாக காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. C.ராஜகோபாலாச்சாரி அவர்களின் தலைமையில் காங்கிரஸ் ரீஃபார்ம் கமிட்டி (CONGRESS REFORM COMMITTEE) என்கிற பிரிவில் காங்கிரஸ் உடைந்தது.
தேவர் இந்த முறை தனது முன்னாள் அரசியல் எதிரியான C.ராஜகோபாலாச்சாரி அவர்களுடன் அமைதியை பேணினார். இதன் காரணமாக பார்வர்ட் பிளாக் கட்சியும் காங்கிரஸ் ரீஃபார்ம் கமிட்டி கட்சியினரும் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க தேர்தலில் இணைந்து பணியாற்றினர். இந்த தேர்தலிலும் தேவர் அருப்புகோட்டை தொகுதியில் லோக்சபா உறுப்பினருக்கும் முதுகுளத்தூர் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினருக்கும் போட்டியிட்டார். இம்முறையும் இரண்டு தொகுதியிலும் வெற்றிபெற்றார். இந்த முறை தேவர் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை துறந்தார்.
இராமநாதபுரம் கலவரம்: தேவர் முதுகுளத்தூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்த காரணத்தினால் இந்த தொகுதிக்கு 1957 ஆம் ஆண்டு சூலை 1 ஆம் நாள் இடைதேர்தல் நடத்தப்பட்டது. இதில் தேவரின் ஆதரவு பெற்ற பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளர் சசிவர்ண தேவர் வெற்றி பெற்றார். இந்த தேர்தல் முடிவு அறிவிப்பு நேரங்களில் ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் பதற்றம் நிலவியது. இது பின்னர் கலவரமாக வெடித்தது. பார்வர்ட் பிளாக் கட்சிக்கு அமோக ஆதரவளித்து வந்த மறவர் இனத்தவர்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்து வந்த தலித் இனத்தவர்களும் பெருமளவில் மோதிக்கொண்டனர். இந்த கலவரம் இராமநாதபுரத்தை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதில் பலர் கொல்லப்பட்டனர் ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கரையாக்கபட்டன.
இந்த கலவர நேரத்தில் லோக்சபா கூட்ட தொடரில் கலந்து கொள்வதற்காக சூலை 17 ஆம் நாள் தில்லி சென்றிருந்த தேவர் அவர்கள் செப்டம்பர் 9 ஆம் நாள் திரும்பவும் தென்னகம் வந்தார். செப்டம்பர் 10 ஆம் நாள் நடந்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் சசிவர்ண தேவர், மற்றும் வேலுவுடன் (பார்வர்ட் பிளாக் கட்சியை சேர்ந்த தலித் சமூகத்தினை சார்ந்த தலைவர்) முத்துராமலிங்க தேவரும் கலந்து கொண்டார். காங்கிரஸ் சார்பில் ஆறு தலித் தலைவர்களும் மேலும் பல நாடார் சமூக தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அனைத்து சமூகத்தவரும் இணக்கமாக வாழ்வதென்று முடிவு செய்யப்பட்டு கூட்டம் கலைந்தது.
இதற்கிடையில் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் என்கிற காங்கிரஸ் கட்சி உறுப்பினர் துரதிஷ்டவசமாக கொல்லப்பட்டார். இந்த அரசியல் படுகொலை நிகழ்வு சற்று நேரத்தில் சாதி சண்டையாக உருவெடுத்து, தென் மாவட்டங்கள் சாதி கலவரத்தில் பற்றி எரிந்தன. கலவரம் காவல் துறை மூலம் கட்டுக்குள் அடக்கப்பட்டு சிறிது நாளில் (செப்டெம்பர் 28 ஆம் நாள்) தேவர் அவர்கள் பாதுகாப்பு சட்டத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இந்த பாதுகாப்பு சட்ட வழக்கு, இம்மானுவேல் சேகரன் கொலையில் தேவர் அவர்கள் சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கொலை வழக்காக மாற்றப்பட்டது. பின்னர் புதுகோட்டை நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது.
பார்வர்ட் பிளாக் கட்சி தேவர் மீதான இந்த வழக்கு அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தேவர் மீது போடப்பட்டது என்று கண்டனம் தெரிவித்திருந்தது. பின்னர் இந்த வழக்கின் முடிவில் தேவர் இந்த வழக்கில் சம்மந்த பட்டிருப்பாரோ என்று சந்தேகிக்க கூட இடமில்லை என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு. தேவரை நிரபராதி என்று இந்த வழக்கில் இருந்து 1959 ஜனவரியில் விடுதலை செய்யப்பட்டார்.
வழக்கிலிருந்து விடுபட்ட தேவர் அவர்கள் 1959 ஆம் ஆண்டு நடைபெற்ற மதுரை நகராட்சி தேர்தலில் மும்முரமானார். இதில் கம்யூனிஸ்டுகள், இந்திய தேசிய குடியரசு காங்கிரஸ்(INDC - முன்னாளில் காங்கிரஸ் ரீஃபார்ம் கமிட்டி) ஆகிய கட்சிகளுடன் இணைந்து பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிட்டது. இந்த தேர்தலின் பொழுது தான் திராவிட முன்னேற்ற கழகமும் உருவானது. இதில் தேவரின் கூட்டு கட்சிகள் வெற்றி வாகை சூடின. இதுவே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் முதல் வீழ்ச்சியாகும். தொடர்ந்து வந்த தேர்தல்களில் தேவர் அவர்கள் உழைத்ததின் காரணமாகவும் உடல்நலக்குறைவின் காரணமாகவும் பொது வாழ்க்கையில் இருந்துது சிறிது காலம் விலகி இருக்க நேர்ந்தது.
பின்னர் 1962 -ல் மீண்டு லோக்சபா தேர்தலுக்கு இவர் முன்னிறுத்தப்பட்டார். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் தேவர் ஓரேயொரு பிரச்சார மேடையில் மட்டுமே தோன்றினார். இவருடன் C.ராஜகோபாலசாரியார் அவர்களும் தேவரும் இணைந்து தோன்றிய கடைசி பிரச்சார மேடை இதுவே ஆகும். தேவர் மீண்டும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனாலும் இவர் தில்லி சென்று பதவி ஏற்றுக் கொள்ளமுடியாதபடி உடல்நிலை கெட்டு விடுகிறது. தன்னுடைய நண்பர் திருச்சி டாக்டர் காளமேகம் அவர்களிடம் தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டு வைத்தியம் செய்தும் முடியாமல் மதுரை சென்று விடுகிறார்.
மறைவு: வாழ்நாள் எல்லாம் நாட்டுக்காகவே வாழ்ந்த உத்தமத் தலைவர் பசும்பொன்.உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் 1963 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் நாள் அவரது 55-வது பிறந்த நாளன்று இயற்க்கை எய்தினார். இவர் மறைவின் காரணமாக அருப்புகோட்டை லோக்சபா தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மீண்டும் பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிட்டு தோற்றது. இதுவே தமிழகத்தில் இந்த கட்சியின் முதல் தோல்வியாகும். 1957-ல் இம்மானுவேல் கொலையில் தேவரை வேண்டுமென்றே குற்றவாளியாக சேர்த்ததால், இவருடைய மறைவுக்கு பின் காங்கிரசு கட்சி தமிழகத்தை விட்டே அழிந்தது எனவும் கூறுவர்.
கொள்கைகள்: * ஆன்மிகம், தேசியம், பொதுவுடைமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் அல்லாத ஆட்சி ஆகியன இவரது முக்கிய கொள்கைகளாக இருந்தன.
* தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்
* வீரமற்ற விவேகம் கோழைத்தனம் - விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம் என்பனவல்லாம் இவர் மொழிந்த வாசகங்களாகும். ஒரு தேசியவாதியாக தேவர் அவர்கள் திராவிடர் கழகம் மற்றும் அதன் வழி கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் ஆகியனவற்றை அவற்றின் பிரிவினை வாதம் மற்றும் குறுகிய நோக்கு போன்ற கொள்கைகளுக்காக வெறுத்தார். அதேநேரம் தேவர் லெனினிசம்-மார்க்சிசம் இரண்டையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இவரது மறைவுக்கு பின் பார்வர்ட் பிளாக் கட்சி தனது அழிவின் பாதையில் சென்றது. இந்த கட்சியின் அடுத்த தலைவராக P.K.மூக்கையா தேவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிறந்த பேச்சாளர்: தேவர் சிறந்த பேச்சாற்றல் கொண்டவராக இருந்தார். குறைந்தது மூன்று - நான்கு மணிநேரம் சொற்பொழிவாற்றும் நாவன்மை பெற்றிருந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் சிறந்த புலமையும் பேச்சாற்றலும் கொண்டவராக இருந்தார்.
ஆன்மீகத்தில் தேவர் கொண்டிருந்த ஞானமும், ஆன்மீக சொற்பொழிவுகளும் இவருக்கு தெய்வத்திருமகன் என்ற பெயரை பெற்றுத்தந்தன. இவர் தமிழ் இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தவராக இருந்தார்.இவரது சொற்பொழிவுகளில் தமிழ் பாடல்களின் மேற்கொள்கள் இடம்பெற்றும் வந்தன.
தங்க கவசம்:
ஆள் தூக்கிச் சட்டத்தை அடியோடு அகற்றுவதற்குத்
தோள்தட்டி நின்றாரடி கிளியே
துணிவுள்ள தேவர் சிங்கம் என்ற நாட்டுப்புறப் பாடலுக்கேற்ப தன்னுடைய வாழ்வில், அடக்குமுறைகளை எதிர்த்து நாட்டுக்காகப் போராடிய தலைவர், தனக்கென்று எதையுமே நாடிக்கொள்ளாத தேடிக் கொள்ளாத, விளம்பரப்படுத்திக்கொள்ளாத தலைவருக்கு இன்றைய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா 2010 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்கக் காப்பு அளிக்கப்படும் என்று அறிவித்தார். இதன் அடிப்படையில் 09.02.2014 அன்று 13 கிலோ எடைகொண்ட தங்கக் காப்பு அணிவித்தார்.
1933 ஜூன் 23-ம் தேதி விருது நகர் நகராட்சித் தேர்தலில் போட்டி யிட்ட காமராஜர், நீதிக்கட்சியின் செல்வாக்கு மிகுந்தவர்களால் கடத்தப்பட்டார். சாயல்குடியில் இருந்த தேவர் இதை அறிந்து, விருதுநகருக்கு விரைந்து வந்தார். காங்கிரஸாரை அழைத்து, பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய் தார்.
தேவரின் முழக்கம்
மேடையேறிப் பேசிய தேவர், ‘‘எங்கள் கட்சியின் உண்மைத் தொண்டரை தேர்தலில் நிற்கவிடா மல் செய்வதற்காக நீதிக்கட்சியினர் சிலர் கடத்திச் சென்றுள்ளனர் என்பதை அறிகிறேன். கூட்டம் முடிந்து நான் மேடையைவிட்டு இறங்கும் முன்பு காமராஜர் இங்கு வரவேண்டும். இல்லாவிட்டால், அவரை கடத்தியவர்கள் அதன் விளைவை சந்திக்க நேரிடும்’’ என்று முழங்கினார். தேவரின் பேச்சு முடிவதற்குள் காமராஜரை மேடை அருகில் கொண்டுவந்து விட்டுச் சென்றனர். மேடைக்கு வந்த காமராஜர், தேவருக்கு நன்றி கூறினார்.
காமராஜருக்காக கட்டிய வரி
சில நாட்களுக்குப் பிறகு, விருதுநகர் நகராட்சிக்கு தேர்தல் வந்தது. வரி செலுத்துவோர் மட் டுமே தேர்தலில் நிற்க முடியும் என்ற விதி இருந்தது. ஓர் ஆட்டுக் குட்டியை விலைக்கு வாங்கிய தேவர், காமராஜர் பெயரில் வரி கட்டி ரசீதைப் பெற்றார்.
காமராஜரை தேர்தலில் நிறுத்தி வெற்றிபெறச் செய்தார். அவரை நகரசபைத் தலைவராக்கி பெருமை சேர்த்தார்.
ராஜாஜிக்கு மறுப்பு
1946 மே 16-ம் தேதி திருப்பரங் குன்றத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் நடந் தது. அதில் காமராஜர் போட்டி யிட்டார். அவரை எதிர்த்து ராஜாஜி அணியினர் காரைக்குடி சா.கணேசனை நிறுத்தினர். தேவரை நேரில் சந்தித்த ராஜாஜி, தங்கள் அணிக்கு ஆதரவு தருமாறு கோரினார். தேவர் மறுத்தார். காமராஜர் வெற்றிபெற தன் செல் வாக்கைப் பயன்படுத்தினார். காம ராஜரின் பெயரை முன்மொழிந்தார். காமராஜர் 152 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சா.கணேசன் 90 வாக்குகள் மட்டுமே பெற்றார். காமராஜர் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரானார். பின்னர் தமிழக முதல்வரானார். இதுவே உண்மை வரலாறு. தெய்வீகத் திருமகன் தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்கே காணிக்கையாக்கினார்.
1963 அக்டோபர் 29-ஆம் தேதி அதிகாலை ஐந்து மணிக்கு தேவர் உயிர் பிரிந்தது. அவர் உடல் பசும்பொன் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. காலமெல்லாம் மாவீரனாக வாழ்ந்த தேவர் பசும்பொன் கிராமத்தில் அடக்கமானார். இன்றும் அவரது நினைவிடம் ஆண்டுதோறும் வழிபாட்டுத் தலமாக விளங்கி வருகிறது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக