02.11.20 - தென்குமரிக் கவிதைக்களம்

திங்கள், 2 நவம்பர், 2020

02.11.20








மலைச்சாமி


வரலாற்றில் இன்று 02.11.2020


November 2, 2020


என்றும்....


அன்புடன.....


என் இனிய காலை வணக்கங்கள்.....

    


நிகழ்வுகள்


1570 – வட கடலில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக ஒல்லாந்தில் 1,000 பேர் வரையில் இறந்தனர்.

1834 – முதன்முதலாக இந்தியாவில் இருந்து 75 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மொரீசியஸ் சென்றனர்.

1868 – நியூசிலாந்து சீர் நேரத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது.

1889 – வடக்கு மற்றும் தெற்கு டகோட்டா ஐக்கிய அமெரிக்காவின் 39வது, 40வது மாநிலங்களாக முறையே இணைந்தன.

1899 – தென்னாபிரிக்காவில் போவர்கள் பிரித்தானியர்கள் வசம் இருந்த லேடிஸ்மித் பகுதியை 188 நாட்கள் பிடித்து வைத்திருந்தனர்.

1914 – ரஷ்யா ஓட்டோமான் பேரரசு மீது போரை அறிவித்தது.

1917 – பிரித்தானியாவின் வெளிநாட்டு விவகாரங்களுக்குப் பொறுப்பான செயலாளராக இருந்த ஆதர் பெல்ஃபர் வெளியிட்ட பிரகடனத்தில் யூதர்களுக்கு பாலஸ்தீனத்தில் ஒரு தேசியத் தாயகம்   ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை இங்கிலாந்து அரசு ஆதரிக்கிறது எனக் கூறப்பட்டது.

1930 – ஹைலி செலாசி எதியோப்பியாவின் பேரரசன் ஆனான்.

1936 – இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி ரோம்-பேர்லின் அச்சு என்ற அச்சு அணியை அறிவித்தான்.

1936 – பிபிசி நிறுவனம் தொலைக்காட்சி சேவையை ஆரம்பித்தது.

1936 – கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் நிறுவப்பட்டது.

1953 – பாகிஸ்தான், பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு எனப் பெயர் மாற்றம் பெற்றது.

1963 – தெற்கு வியட்நாம் அதிபர் நியோ டின் டியெம் Ngo Dinh Diem இராணுவப் புரட்சியை அடுத்து கொலை செய்யப்பட்டார்.

1974 – தென் கொரியத் தலைநகர் சியோலில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 78 பேர் கொல்லப்பட்டனர்.

2000 – பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு முதன் முதலாக விண்வெளி வீரர்கள் சென்றடைந்தனர்.

2006 – ஈழப்போர்: கிளிநொச்சி வைத்தியசாலை சுற்றவுள்ள பகுதிகளில் இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுத்தாக்குதலில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

2007 – இலங்கை வான்படையின் வான்குண்டுத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.


பிறப்புக்கள்


1795 – ஜேம்ஸ் போக், ஐக்கிய அமெரிக்காவின் 11வது அரசுத் தலைவர் (இ. 1849)

1815 – ஜார்ஜ் பூல், ஆங்கிலேயக் கணிதவியலாளர், (இ. 1864).

1965 – ஷாருக்கான், இந்தி நடிகர்


இறப்புகள்


1903 – பரிதிமாற் கலைஞர் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரிகள், தமிழறிஞர் (பி. 1870).

1917 – ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, ஈழத்துத் தமிழ் எழுத்தாளர் (பி. 1858).

1950 – ஜோர்ஜ் பேர்னாட் ஷா, ஐரிஷ் எழுத்தாளரும் நோபல் பரிசு பெற்றவரும் (பி. 1856).

1966 – பீட்டர் டெபாய், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1884)

1978 – ஏ. பெரியதம்பிப்பிள்ளை, மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழறிஞர் (பி. 1899)

2007 – சு. ப. தமிழ்ச்செல்வன், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் (பி. 1967)


சிறப்பு நாள்


மொரீசியஸ் – இந்தியர்கள் வருகை நாள் (1834)

கல்லறை திருநாள்

பகல் நேர சேமிப்பு உண்மைகள் - 


பகலொளி சேமிப்பு கோடை குளிர் காலம் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது.பூகோளத்தின் வடக்கு பாதியில் ஏப்ரல் மாதம் முதல் செப்டெம்பர் முடியா கோடை.தெற்கு பாதியில் அக்டோபர் முதல் மார்ச் முடிய கோடை காலம்.கோடையில் ஏப்ரல் /அக்டோபர் மாத முதல் திங்களன்று கடிகாரங்கள் ஒரு மணி நேரம் முன்னதாக வைக்கப்படும் . இந்த மாறுதல் ஆறு மாதங்களுக்கு பின் குளிர்காலத்தில் ஒரு மணி பின்னதாக வைக்கப்படும். GMT காலம் தான் இதன் அடிப்படை.


அற்புதங்கள் அதனதன் இயல்பில், தோற்றத்தில், விதிப்பில், வார்ப்பில் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. ஒரு சூரியன் உதிப்பதைக் காட்டிலும், ஒரு பெருமழையைக் காட்டிலும் அற்புதமென்று இன்னொன்று இருந்துவிட இயலாது. ஆனால் மனித மனத்தின் விசித்திர மூலைகளை இந்த அற்புதங்களின் பக்கம் நாம் திருப்பி வைப்பதேயில்லை. ஒரு விடியலை நின்று அனுபவிப்பவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்?


வாழ்க்கையில் எவராலும் விலை கொடுத்து வாங்கவே முடியாத மதிப்புமிக்க பொருள் நேரம். ஆனால், இந்தியா ஏன் அதுகுறித்து யோசிக்கவே மறுக்கிறது என்று தெரியவில்லை. பகல் பொழுது, இரவுப் பொழுது எல்லா நேரமும் தனிமனித வாழ்க்கையில் ஒரே நேரம்தான் என்றால், ஒரு சமூகமாக நாம் ஒன்றுசேர்ந்து உழைக்கக் கூடுதல் சாத்தியங்களைக் கொண்டது என்ற வகையில் பகல் பொழுது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

உலக நாடுகள் எப்போதுமே பகல் பொழுதில் மிகுந்த கவனம் செலுத்துகின்றன. பொதுவாக, கோடைக் காலத்தில் பகல் பொழுது அதிகம், இரவுப் பொழுது குறைவு. குளிர்காலத்தில் இரவுப் பொழுது அதிகம், பகல் பொழுது குறைவு என்பது எல்லோரும் தெரிந்ததுதான். கோடைக்காலம், குளிர்காலம் இரண்டிலும் பகலில் வெளிச்சம் அதிகம் இருக்கும் நேரம் முக்கியமானது.

ஒரு நாட்டில் கோடைக் காலத்தில் மாலையில் 6 மணிக்குப் பொழுது இருட்டுவது வாடிக்கை; அதுவே குளிர்காலத்தில் 5 மணிக்கே பொழுது இருட்டிவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம்; இப்போது குளிர்காலத்தில் அந்த நாடு சொல்லிவைத்து எல்லோர் கடிகாரங்களிலும் ஒரு மணி நேரத்தை முன்கூட்டி மாற்றிக்கொண்டுவிடுகிறது என்றால் என்னவாகும்? பள்ளிக்கூடங்கள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் எல்லாமே ஒரு மணி நேரம் முன்னதாகவே திறந்து, ஒரு மணி நேரம் முன்கூட்டியே சென்றுவிடலாம். இரவு 10 மணிக்குப் படுக்கைக்குச் செல்லக்கூடிய ஒருவர் 9 மணிக்கே சென்றுவிடுவார்; ஒரு மணி நேர மின்சாரம் சேமிக்கப்படும், இல்லையா? இது ஒட்டுமொத்தமாக ஒரு நாட்டுக்கு எவ்வளவு சிக்கனம்? இந்த உத்திக்குப் பெயர் ‘டிஎஸ்டி’ (Daylight Saving Time).

சென்னை – லண்டன் நேர மாற்றம்

பருவநிலை மாற்றங்கள் உலகெங்கும் புவி வெப்பமாதல் தொடர்பாக எல்லா நாடுகளிலுமே பெரும் விழிப்புணர்வை உண்டாக்கிவரும் நேரத்தில், எரிசக்தியை மிச்சப்படுத்துதல் என்பது இன்றைக்குப் பொருளாதாரம் சார்ந்த விஷயமாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. மாறாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது.

ஆகவே, மேற்கத்திய நாடுகள் சமீபத்தில் ஒரு முக்கியமான மாற்றத்தைத் தங்களுடைய நேர நிர்ணயத்தில் செய்தன. கடந்த அக்டோபர் 27 அன்று ஐரோப்பிய நாடுகளில் அனைவரும் தங்களுடைய சொந்த மற்றும் பொதுக் கடிகாரங்களை ஒரு மணி நேரம் பின்தள்ளி வைத்தார்கள். அமெரிக்காவில் இது நவம்பர் 1 அன்று நடந்தது. ஆஸ்திரேலியாவும் நியுஸிலாந்தும்கூட இதைச் செய்திருக்கின்றன.


இதன் விளைவு என்னவென்றால், லண்டனுக்கும் சென்னைக்குமான நேர வித்தியாசம் இதற்கு முன் நாலரை மணி என்றால், இப்போது ஐந்தரை மணியாக மாறிவிட்டது. இப்படி வசந்த காலத்திலும் இலையுதிர் காலத்திலும் உலகின் 70 நாடுகள் தங்களுடைய கடிகாரங்களில் நேரத்தை மாற்றிக்கொள்ளும் முடிவை எடுத்திருக்கின்றன.


இரு நூற்றாண்டு அனுபவம்


இப்படி கடிகார நேரத்தை மாற்றும் வழக்கம் 200 ஆண்டுகளுக்கு முன்பே பரிசோதிக்கப்பட்டிருக்கிறது. 1916-ல் முதலாவது உலகப் போரின்போது, ஐரோப்பாவில் நிலக்கரிக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. மின்சாரப் பயன்பாட்டைக் குறைப்பதற்காக ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி ஆகிய நாடுகள் பகல்நேர வெளிச்சத்தை சேமிக்கும் வழியாக இந்த நேரமாற்ற திட்டத்தை அமலாக்கியது. தொடர்ந்து, போரில் ஈடுபட்ட இரு அணிகளையும் சேர்ந்த பிற நாடுகளும் இந்த உத்தியைப் பின்பற்றின. அடுத்து, அமெரிக்காவும் இந்த நேர மாற்றத்தைப் பின்பற்றியது. இவை யாவும் உலகம் பேசும் செய்திகள் ஆயின.


உலகப் போர் 1918-ல் முடிந்த பிறகு, பல ஐரோப்பிய நாடுகள் இந்த நடைமுறையைக் கைவிட்டன. 1970-களில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டபோது பகல்நேர வெளிச்சத்தை முழுமையாகப் பயன்படுத்த இப்படியான நடைமுறையைப் பின்பற்றினர். பொதுவாக, ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் இப்படியான நடைமுறைகள் பரிசோதிக்கப்படுவதில்லை. இவற்றில் பெரும்பாலானவை பூமத்திய ரேகை நாடுகள் என்பதுதான் காரணம். ஆனால், ஒரே நாடு என்றாலும் நிரந்தரமாகவே ஒன்றுக்கும் மேற்பட்ட நேர நிர்ணயங்களைக் கடைப்பிடித்த மரபு இந்தியாவுக்கே உண்டு.


சுதந்திர இந்தியாவின் துயரம்


நேர மண்டலம் ஒரு நாட்டின் வர்த்தகம், வேலை நேரம் போன்ற பல அம்சங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இங்கிலாந்தின் கிரீன்விச் நகரம் வழியே செல்லும் பூஜ்ஜியம் டிகிரி தீர்க்கரேகையிலிருந்து ஒரு நேர மண்டலத்தைக் குறிக்கும் தீர்க்கரேகை எவ்வளவு தொலைவில் இருக்கிறதோ, அதைப் பொறுத்து அந்த நேர மண்டலத்தின் நேரம் நிர்ணயிக்கப்படுகிறது.


அந்த நேரமே, ஒருங்கிணைக்கப்பட்ட உலகளாவிய நேரம் (யூடிசி). பரப்பளவில் பெரிய நாடுகளில், ஒன்றுக்கும் மேற்பட்ட நேர மண்டலங்கள் இருக்கும். உதாரணமாக, ரஷ்யாவுக்கு 11 நேர மண்டலங்கள், அமெரிக்காவுக்கு 6 நேர மண்டலங்கள் உண்டு. ஆனால், சுதந்திர இந்தியா ஒரே நேர மண்டலத்தைக் கடைப்பிடிக்க முடிவெடுத்தது. எல்லாம், ஒரே தேசம் - ஒரே நேரம் எனும் வியாதியின் விளைவுதான்.


இப்போது நாம் பயன்படுத்தும் நேரமானது கன்னியாகுமரிக்கு மிகப் பொருத்தமானது. ஆனால், மேற்கிலும், கிழக்கிலும் உள்ள மாநிலங்கள் கடும் பாதிப்பை நிரந்தரமாக எதிர்கொள்கின்றன. முக்கியமாக, வடகிழக்கில் உள்ள எட்டு மாநிலங்களுக்கு இது பெரும் பிரச்சினை. தமிழ்நாட்டைக் காட்டிலும் சூரியன் வடகிழக்கில் ஒரு மணி நேரம் முன்னே உதிக்கிறது என்றால், குஜராத்தில் ஒரு மணி நேரம் பின்னே உதிக்கும்.


வடகிழக்கு மாநிலங்களில் சூரிய வெளிச்சம் இருக்கும் நேரத்தை, முழுமையாக வர்த்தகத்துக்கும் அலுவல்களுக்கும் பயன்படுத்த முடிவதில்லை. அங்கு மாலை ஐந்து மணிக்கே சூரியன் மறைந்துவிடுவதால், பணிகள் பாதிக்கப்படுவதோடு எரிசக்தியும் வீணடிக்கப்படுகிறது.


ஆகையால், வடகிழக்கு மாகாணங்களுக்கும், அந்தமான் நிகோபார் தீவுகளுக்கும் தனி நேர மண்டலத்தை உருவாக்க பல்லாண்டு காலமாக இதனால் பாதிக்கப்படும் மக்கள் கோரிவருகிறார்கள். தேசிய இயற்பியல் ஆய்வகமும்கூட இதைப் பரிந்துரைக்கிறது. ஆனால், ‘ஒரே நாடு’ என்ற பெயரிலான கோஷம் அதற்குத் தடையாக நிற்கிறது.


ஐரோப்பாவில் இன்று நடக்கும் மாற்றங்களை இந்தியா சூழல் அக்கறையோடு பார்க்க வேண்டும். சுற்றுச்சூழல் பிரச்சினைகளை அரசியலாகப் பார்க்காமல், சூழல் பிரச்சினையாகவே அணுகும்போதுதான் அதற்கான தீர்வை நாம் கண்டடைய முடியும்!

தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் நினைவு தினம்


பைந்தமிழ் வளர்த்த பரிதிமாற் கலைஞர்!


ஒரு நூற்றாண்டுக்கு முன்பே ‘சூரிய நாராயண சாஸ்திரி’ எனும் வடமொழிப் பெயர் நீக்கி ‘பரிமாற்கலைஞர்’ என்று தனித் தமிழில் சூட்டிய பெருமகனார்.


உயர்தனிச்செம்மொழி தமிழென்றும், வடமொழிக்கு முந்திப் பிறந்தது தமிழென்றும் உலகுக்கு அறிவித்தவர்.


அது மட்டுமின்றி, பிரித்தானியரால் திணிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கு தமிழர்கள் அடிபணியக் கூடாது என்றும் ஆணித்தரமாக வாதுரை செய்தவர் நம் பைந்தமிழ் வளர்த்த பரிதிமாற் கலைஞர்

ஆவார்.


இவர் 6.7.1870 ஆம் ஆண்டு மதுரைக்கு அருகில் உள்ள விளாச்சேரி எனும் சிற்றூரில் பிறந்தார். பெற்றோர் இவருக்கு சூரியநாராயணன் என்று பெயரிட்டனர். இவர் தமது தந்தையார் கோவிந்த சிவன் அவர்கள் மூலம் வடமொழி கற்றதோடு, தொடக்கப் பள்ளியில் சேர்ந்து தமிழும், கணிதமும் கற்றார். பசுமலையில் படித்துக் கொண்டிருக்கும் போதே, பாலகிருஷ்ண நாயுடு என்பவரிடம் சிலம்பம், மல்யுத்தம் போன்ற கலைகளைக் கற்றுக் கொண்டார்.


அதன்பின்னர், 1885இல் மதுரை நகரில் உள்ள மாவட்ட உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தார். அங்கு மகாவித்துவான் க.சபாபதி முதலியாரிடம் பழகி தமிழறிவை முதன்முதலில் அவரிடமிருந்து வளர்த்துக் கொண்டார்.


தமது பத்தொன்பதாவது வயதில் முத்துலெட்சுமி அம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார்..அவருக்கு ஆனந்த வல்லி என்ற மகளும், நடராசன், சுவாமி நாதன் என்ற இரு மகன்களும் உண்டு.


பின்னர் சென்னை சென்று அங்குள்ள கிறித்துவக் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. படித்து வந்தார். அப்போது அங்கு கல்லூரி முதல்வராக டாக்டர் வில்லியம் மில்லர் என்பவர் பணியாற்றி வந்தார். வில்லியம் மில்லர் ஸ்காட்லாந்துக்காரர். இவர் பெரும் செல்வந்தர். தானீட்டிய வருவாயை கல்விக்காக செலவிடுபவர். இவர் ஆங்கில இலக்கியப் பாடம் நடத்துவதை மாணவர்கள் அனைவரும் விரும்பிக் கேட்பது வழமை.


ஒருமுறை, டாக்டர் மில்லர், டென்னிசன் எழுதிய “ஆர்தரின் இறுதி” (Morte D’ Arthur) என்ற பாடலின் பகுதியில் வரும் உவமையை எடுத்துக் கூறினார். துடுப்புகள் இருபுறமும் தள்ள, நீரில் மிதந்து போகும் படகு , பறவை தன் சிறகுகளை விரித்து விசிறியபடி நீந்துவது போல் உள்ளது என்று குறிப்பிட்டு விட்டு, இது போன்ற உவமையை உமது தமிழ் இலக்கியத்தில் காட்ட முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.


அப்போது, சிறிதும் தாமதியாமல் பரிதிமாற் கலைஞர் எழுந்து, “நீங்கள் போற்றும் டென்னிசன் பிறப்பதற்கு ஒன்பது நூற்ற்றாண்டுகளுக்கு முன்பே எங்கள் கவிச்சக்கரவர்த்தி கம்பர் இந்த உவமையை கையாண்டுள்ளார்.” என்றார். அத்தோடு, அயோத்தி காண்டத்தில், கங்கை படலத்தில் வரும்


“விடுநதி கடிதென்றான் மெய்யுயி ரனையானு

முடுகின நெடுநாவாய் முரிதிரை நெடுநீர்வாய்க்

கடிதினின் மடவன்னக் கதியது செலநின்றா

ரிடருற மறையோரு மெரியுறு மெழுகானார்”


பாடலை பாடிக் காட்டியவுடன் மில்லர் எழுந்து வந்து கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தார். அன்றிலிருந்து பரிதிமாற் கலைஞர் மீது டாக்டர் மில்லருக்கு அளவு கடந்த அன்பும், மரியாதையும் ஏற்பட்டது.


மேலும், அக்கல்லூரியிலேயே தத்துவத்துறைக்கு ஆசிரியராக பரிதிமாற் கலைஞரை நியமிக்க மில்லர் முடிவு செய்தார். இதனை ஏற்க மறுத்து பரிதிமாற் கலைஞர் தமிழ்த்துறையில் ஆசிரியராக தன்னை நியமிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதற்குக் காரணம் அன்றைய நிலையில் மாணவர்கள் வேலை பெறும் நோக்கோடு தமிழைப் புறக்கணித்து ஆங்கிலத்தைப் படித்து வந்தனர். இந்நிலையை மாற்றி தமிழின் பால் மாணவர்களை ஈர்ப்பதற்கு தமிழாசிரியப் பணியே சிறந்ததாகக் கருதினார். அப்போது தமிழாசிரியருக்கு சம்பளம் வேறு குறைவு.


பரிதிமாற்கலைஞரின் தமிழார்வத்தைப் புரிந்து கொண்ட டாக்டர் மில்லர் தமிழ்த்துறையை அளித்ததோடு, தத்துவத்துறை பேராசிரியர் பெறும் சம்பளத்தை அளிக்கவும் உத்தரவிட்டார்.


ஒருமுறை, அக்கல்லூரியில் தமிழில் முதலிடம் வந்த வ.சு.செங்ககல்வராய பிள்ளை என்ற மாணவருக்கு பரிசு தராமல், ஆங்கிலத்தில் முதலிடம் வந்த ஆர்.வி. கிருஷ்ணய்யர் என்ற மாணவருக்கு பரிசு அளிக்கப்பட்டது. இதைக் கண்டித்து டாக்டர் மில்லரிடம் நேரில் வாதாடி, தமிழில் முதலிடம் வந்த மாணவருக்கே பரிசினைப் பெறும்படிச் செய்தார்.


அதேபோல், தமிழ்ப்பாடத்தில் மனம் ஒட்டாது கவனமின்றி இருக்கும் மாணவர்களிடம் கண்டிப்போடு நடந்து கொள்வார். ஒருமுறை வகுப்பறையில் பாடம் நடத்தும் போது இதுபோன்ற மாணவனொருவன் சிக்கினான். அப்போது அவனிடம், “நமது சொற்பொழிவை பொருட்படுத்த விரும்பாத நீ இங்கிருந்து எழுவாய், நீ இங்கிருப்பதால் உனக்கோ பிறர்க்கோ பயனிலை, இங்கிருந்து உன்னால் செயப்படுபொருள் இல்லை, ஆதலால் வகுப்பில் இருந்து வெளியேறுக” என நயம்பட உரைத்து வெளியேற்றினார்.


டாக்டர் மில்லரிடம் மாணவர் பருவத்திலிருந்து உறவு வைத்திருந்ததைப் போலவே, யாழ்ப்பாண அறிஞர் சி.வை.தமோதரனார் அவர்களிடமும் நெருங்கிய உறவு கொண்டிருந்தார். சி.வை.தமோதரனார் தமிழ் ஓலைச்சுவடிகளை அச்சில் ஏற்றியதில் உ.வே.சா.விற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். இவர் 1892இல் பரிதிமாற் கலைஞர் பி.ஏ. தேர்வில் தமிழிலும், தத்துவத்திலும் முதலிடம் பெற்ற போது வீட்டிற்கு அழைத்து வந்து பாராட்டினார்.


செந்தமிழ் நடையில் எழுதுவதிலும், சேக்சுபியர் நாடகங்களை தமிழில் மொழிபெயர்த்து தருவதிலும் பரிதிமாற் கலைஞரின் ஆற்றலைக் கண்டு வியந்த தாமோதரனார் ” சாஸ்திரியென்னும் பட்டம் புனைந்திருந்தும், வடமொழி பயில்வதையே தமது குலக் கடமையாகக் கொள்ளும் வகுப்பில் பிறந்திருந்தும், திராவிடமொழியில் ஆழ்ந்த பற்றுக் கொண்டு, அதன் மேன்மையை உலகுக்கு உணர்த்துவதில் உயரிய குறிக்கோள் பெற்றிருக்கும் உம்மைத் ‘திராவிட சாஸ்திரி’ என்று அழைத்தல் சாலப் பொருந்தும்” என்றார்.


எப்போதும் பரிதிமாற் கலைஞரின் கவிதை நடை எளிமையாகவும், உரைநடை கடினமாகவும் இருக்கும். சி.வை.தாமோதரனார் உயர் செந்தமிழ் நடையில் ஒரு நூலினை எழுத வேண்டுமாறு கேட்டுக் கொள்ளவே, பரிதிமாற் கலைஞரும் ‘மதிவாணன் – புதுவது புனைந்ததோர் செந்தமிழ்க் கதை” என்ற புதின நூலினை எழுதி வெளியிட்டார். தமிழ் இலக்கிய வரலாற்றில் முதன்முதலாக உயர் செந்தமிழ் நடையில் எழுதப்பட்ட நூல் இதுவேயாகும்.


1897இல் “ஞானபோதினி” இதழின் மூலமாக நவீன காலத்திற்கேற்ற வகையில் செய்யுள் வடிவில் தனிப்பாசுரங்களை எழுதி வெளியிட்டார். இதில்தான் முதன்முறையாக சூரிய நாராயண சாஸ்திரி எனும் வடமொழிப் பெயரை விடுத்து, பரிதிமாற் கலைஞன் எனும் புனைப் பெயரில் எழுதினார். (சூரியன்=பரிதி, நாராயணன்= திருமால், சாஸ்திரி= கலைஞன்)


1901ஆம் ஆண்டு மே24 இல் மதுரையில் பாஸ்கர சேதுபதியார் தலைமையில் பாண்டித்துரைத் தேவர் மேற்பார்வையில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது. இச்சங்கம் ‘செந்தமிழ்’ எனும் திங்களேட்டை வெளியிட்டது. அதன் முதல் ஏட்டில் தான் பரிதிமாற் கலைஞர் “உயர்தனிச் செம்மொழி தமிழே!” என்று தலைப்பிட்டு கட்டுரை வெளியிட்டார்.


இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வட ஆரிய மொழிகள்தான் எல்லா மொழிகளுக்கும் மூலமொழி என்றும், அதிலிருந்துதான் மற்ற மொழிகள் எல்லாம் பிறந்ததாக ஆரியர்கள் கதை கட்டி வந்தனர். இதை மறுத்து பரிதிமாற் கலைஞர் ‘தமிழ்மொழி வரலாறு’ என்ற நூலினை எழுதி வெளியிட்டார்.


அந்நூலில், “ஆரியர்கள் தமிழரிடமிருந்து பல அரிய விசயங்களையும் மொழிபெயர்த்து தமிழர் அறியும் முன்னரே அவற்றை தாமறிந்தன போலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டிவிட்டனர். தமிழருக்கு ஆரியர் இந்தியாவிற்கு வரும் முன்னரே எழுதப் படிக்கத் தெரியும். எழுத்து சுவடி யென்பன தனித்தமிழ் சொற்களாதலுங் காண்க!” என்று குறிப்பிட்டுள்ளார்.


ஆங்கிலக்கல்வியை அன்றும் பலர் பொருளீட்டுவதற்குப் பயன்படுத்தி தமிழைப் புறக்கணித்து வந்தனர். ஐந்து வமதுக்கு முன்பே குழந்தைகள் மீது ஆங்கிலக்கல்வி திணிக்கப்பட்டதால் அக்குழந்தைகள் வாடி வதங்கி நிற்பதை பரிதிமாற் கலைஞர் பின்வருமாறு தெரிவிக்கிறார்:


“ஐந்து வயதாகுமுன்னர் ஆங்கிலம் கற்கத் தொடங்குகின்றவர், தமிழ் வாசமும் ஏற்காமல் ஆங்கிலக் கல்வி தொடங்கும் மாணவர் உடல் தேய்ந்து கண்பூத்து மனமிற்று நாளடைவில் யமனுக்குணவாகின்றனர்”


குழந்தைகள் பன்னிரெண்டு வயது வரை தமிழ் மொழியில்தான் கல்வி கற்க வேண்டுமென்பதை ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே கூறியவர் பரிதிமாற் கலைஞர் ஒருவரேயாம்.


சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ. பட்டப்படிப்பிற்கு ஆங்கிலமொழியை கட்டயாமென்றும், இலத்தீன், கிரேக்கம், சமஸ்கிருதம் ஆகியமொழிகள் விருப்பமொழி என்றும் அறிவிக்கப்பட்டது. அதிலிருந்த தமிழ், தெலுங்கு மொழிகள் வட்டார மொழிகள் என்று நீக்கப்பட்டது. தமிழை நீக்குவதன் மூலம் அவ்விடத்தில் வடமொழி நிலைபெற்று, அம்மொழி பயிலும் பிராமணரே பயனடைவர் என்பதாக பரிதிமாற் கலைஞர் கருதினார்.


தமது படைப்புகளை வெளியிட்டு வரும் “ஞான போதினி” ஆசிரியர் மு.சி. பூரணலிங்கனார் அவர்களுக்கு இதனைத் தெரிவித்ததோடு, உடனடியாக சென்னை செல்வதற்கு தந்தி அடித்தார். இருவரும் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.


இரண்டு நாட்களுக்குள் ஆசிரியர் சங்கக் கூட்டம் நடப்பதால், உடனடியாக அனைத்து ஆசிரியர் பெருமக்களையும் சந்திக்க முடிவு செய்தனர். இருவரும் வாடகை வண்டி அமர்த்திக் கொண்டு ஒவ்வொரு ஆசிரியர் வீட்டுக்கதவையும் தட்டி தமிழைக் காப்பாற்றும்படி வேண்டினர்.


இதோடு நில்லாமல் மதுரைக்குச் சென்று பாண்டித்துரை தேவரவர்களை நேரில் கண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக தீர்மானம் நிறைவேற்றும் படி கேட்டுக் கொண்டனர். பாண்டித்துரை தேவரும் இருவரின் முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்கினார். பரிதிமாற் கலைஞரும், பூரணலிங்கனாரும் பட்டபாடுக்கு பலன் கிடைத்தது. ஆசிரியர் சங்கக் கூட்டத் தீர்மானமும், மதுரை தமிழ்ச்சங்க தீர்மானமும் சென்னை பல்கலைக் கழகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இறுதியில் தமிழே வெற்றி பெற்றது.


அதுமட்டுமல்லாது தமிழறிஞர் கால்டுவெல் அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு முதலிய மொழிகளை “திராவிட மொழிகள்” என்று அழைத்ததைப் போல, அன்றைக்கு சென்னைப்பல்கலைக்கழகம் தமிழோடு மற்ற மொழிகளை ஒன்றாக இணைத்து “உண்ணாட்டு மொழிகள்” என்று அழைத்து வந்தது. இந்தச் செயலை வன்மையாகக் கண்டித்தும், தமிழ் ஆர்வலர்கள் வாய்மூடி நின்றதையும் குறிப்பிட்டு பின்வருமாறு எழுதினார்:


“தமிழ்நாட்டில் ஆங்கிலவரசாட்சி யேற்பட்ட பின்னர்த் தாய்மொழியாகிய தமிழை அதன் வழிமொழிகளாகிய தெலுங்கு, கன்னட, மலையாள துளுவங்களோடு அடக்கி “உண்ணாட்டு மொழிகள்” என வகைப்படுத்தினர் சிலர். தனிமொழி யொன்றை அதன் வழிமொழிகளோடு வகைப்படுத்தலாமோ? அது முன்னதனை இழிவு படுத்த தாகாதோ? ஆரிய மொழிகளுள் தலை நின்ற வடமொழியை அதன் பாகதகங்களோடு ஒருங்குவைத்து எண்ணத் துணியாமை போலத் தமிழ்மொழியையும் அதன் வழிமொழிகளொடு ஒருங்குவைத்தெண்ணத் துணியாதிருத்தலே அமைவுடைத்தாம்.


இவ்வாறாகவும் சென்னை சர்வகலாசாலையார் மேற்கூறியாங்கு, தமிழை இழிவுபடுத்தி வகுத்த போதே, தமிழராயினார் முற்புகுந்து அவ்வாறு வகைப்படுத்தல் சாலாதென மறுத்திருக்க வேண்டும். அப்போழ்தெல்லாம் வாய்வாளாமை மேற்கொண்டிருந்து விட்டனர் தமிழ் மொழியாளர்”

என்றார்.


தம் வாழ்நாளின் இறுதியில் சென்னை லிங்கிச் செட்டித் தெருவில் வசித்து வந்தார். அப்போது எலும்புருக்கி நோய் மிகுந்து துன்பப் பட்டார். தன்னை வந்து காண்போரிடம், இருமல் எம்முடன் பெருமல் செய்கிறதே! (பெருமல்= பெரிய மற்போர்) என்று துன்பநிலையிலும் விளையாட்டாகக் கூறுவார்.


தனது அருமை மாணவனின் பிணித்துயரம் கேட்டு டக்டர் மில்லர் ஓடோடி வந்தார். பரிதிமாற் கலைஞரின் விரல்களைப் பற்றியபடி, “எனது புருவத்து ரோமங்கள் என் கண்களை மறைக்கின்றன. அவ்வாறு வயது முதிர்ந்தும் நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன். உலக இன்பங்களை அனுபவிக்காத நீர், குறுகிய காலத்தே தமிழ்ப்பணி செய்த நீர் , பலநாள் உலகில் வாழ வேண்டியிருக்க, எமன் உம்மைக் கொண்டு போவது எத்துணைக் கொடுமை ” எனக் கதறி அழுதார்.

பரிதிமாற் கலைஞர் இளம்வயதில் 2.11.1903ஆம் ஆண்டு் காலமானார்.

பரிதிமாற்கலைஞரது ஆசிரியத்தன்மையை பேராசிரியர், உரையாசிரியர், நூலாசிரியர், பதிப்பாசிரியர், இதழாசிரியர் என்று ஐவகையாகப் பிரிக்கலாம்.

33 வயது வரை மட்டுமே வாழ்ந்து மறைந்த பரிதிமாற்கலைஞர் எழுதிய நூல்கள் பின் வருமாறு:

1.ரூபாவதி அல்லது காணாமற்போன மகள், 2.கலாவதி, 3.மானவிஜயம், 4.தனிப்பாசுரத் தொகை, 5.பாவலர் விருந்து முதல் நாள், 6.நாடகவியல், 7.மதிவாணன், 8.தமிழ்மொழியின் வரலாறு, 9.மணிய சிவனார் சரித்திரம்

10. சித்திரகவி விளக்கம் 11.தமிழ் வியாசங்கள் 12. தமிழ்ப் புலவர் சரித்திரம்

13.மாலா பஞ்சகம் (கிடைக்கவில்லை) ஆகியவை.

முப்பத்தி மூன்று வயதுவரை வாழ்ந்தலென்ன, தமிழுக்கு உண்மையாகத் தொண்டு செய்வோன் என்றும் சாவதில்லை!

1.வி.சு. கோவிந்தன் எழுதிய “பரிதிமாற் கலைஞர்”

2. தேனி பொன்.கணேஷ் எழுதிய “தமிழ் வளர்த்த சான்றோர்கள்”

3. குன்றக்குடி பெரிய பெருமாள் எழுதிய

“தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள்”

4. பனிரெண்டாம் வகுப்பு “பொதுத்தமிழ்” பாடநூல்


தமிழ்-தமிழர் முன்னேற்றத்துக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட பரிதிமாற் கலைஞர் 1903-ல் மறைந்தார். ‘‘33 ஆண்டுகளே வாழ்ந்த இவர் அரிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவர் அதிக காலம் வாழ்ந்திருந்தால், தமிழ் அன்னை அரியாசனத்தில் அமர்ந்திருப்பாள்’’ என தமிழ்த் தென்றல் திரு.வி.க. இவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages