02.11.20-ரேவா : 80 : பல்லவரதுப்_படைப்புறப்பாடு - தென்குமரிக் கவிதைக்களம்

திங்கள், 2 நவம்பர், 2020

02.11.20-ரேவா : 80 : பல்லவரதுப்_படைப்புறப்பாடு



02.11.20


ரேவா


பல்லவரதுப்_படைப்புறப்பாடு_80


சாளுக்கியத் தலைநகர் கல்யாணபுரம். தன்முன் கைகளைக் கட்டிக் கொண்டு நின்றிருந்த வீரர்களை நோக்கிய சாளுக்கியச் சக்கரவர்த்தி கீர்த்திவர்மன் இதழ்களில் புன்முறுவல் விகசிக்க,  "வீரர்களே..உங்களது முகங்களைப் பார்த்தால் காரியத்தைக் கச்சிதமாக முடித்து விட்டு வந்திருப்பது போல் தெரிகிறதே..! " என்றான் மகிழ்வுடன்.

அவனது சமீபத்திய ஆசை நிறைவேறப் போகும் ஆவல் கொண்டவனாய்.


" ஆம்..அரசே..தாங்கள் எங்களுக்கு வழங்கிய ஆலோசனையின் படி , இராஷ்டிரகூட இளவரசியை கங்க மன்னரது வசந்தமாளிகையில் விட்டு வந்திருக்கிறோம். நமது வீரர்களில் சிலரைத் தான் , கடத்தி வர நேர்கையில் இழந்து விட்டோம்."


" இது போன்று காரியங்களை ஆற்றுகையில் இழப்புகள் ஏற்படுவது சகஜமான ஒன்று தான்.. இறந்து போன வீரர்களின் குடும்பங்களுக்கு இழப்பிற்குத் தகுந்த பொன்னை வழங்கி விடுங்கள். கங்க மன்னனது வசந்தமாளிகை பாதுகாப்பான ஒன்று தானே..? "


" ஆம்..அரசே.. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டு இருக்கிறது..கவலை கொள்ள ஏதுமில்லை. "


" நல்லது..நீங்கள் செல்லலாம்.."


கீர்த்திவர்மனுக்கு அப்போதே கங்க மன்னனது வசந்தமாளிகைக்குச் சென்று ரேவாவைச் சந்திக்க எண்ணம் எழுந்தது. 


ஆனால்..காஞ்சியில் இருந்து தனஞ்செயன் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியிருந்த காரணத்தால் தனது உள்ளத்தில் எழுந்த ஆசையை உறங்கச் செய்து விட்டான்.


அடுத்த நாளே ..தனஞ்செயன்

பரபரப்புடன் கீர்த்திவர்மனைக் காண்பதற்காக அரண்மனைக்குள் நுழைந்தான். 


அரசனது தனியறை. ஆசனத்தில் அமர்ந்திருந்த கீர்த்திவர்மன் கண்களில் ஆவலும், வேட்கையும் தாண்டவமாடின.


" அரசே..பல்லவர்களது படை வருகின்ற சதுர்த்தி திதியன்று காஞ்சியை விட்டு நகர்கிறது.."


" எதிர்பார்த்த விசயம் தான்..இருப்பினும் உடனே படையெடுக்க உத்தேசித்து விட்டானா #போத்தரசன்...! "


 "ஆம்..அரசே..நாளினைக் குறித்துத் தந்த நிமித்திகன் கூறிய தகவல் அது. "


" வரட்டும் ..நல்லதொரு பாடத்தைக் கற்றுத் தந்து அனுப்புவோம். காஞ்சியை விட்டு நம்மைத் துரத்தியடித்தான் அல்லவா..! அதற்கான பலனை அனுபவிக்க வேண்டாமா..? "


" அரசே..தந்திதுர்க்கனும் காஞ்சியில் தான் இருக்கிறான். அவனது படையும் நம்மை எதிர்கொள்ளும் என எண்ணுகிறேன்."


" மகளைக் கடத்தி வந்தால், தந்தை வராமல் என்ன செய்வான்..? வரட்டும்..அவனையும் நிர்மூலமாக்கி விடலாம்..! சாளுக்கியரது கடல் போன்ற சேனையின் பலமறியாமல் வருபவரை ஓட ஓட விரட்டியடிப்போம்." என்றான் குரூரமாய் நகைத்தபடி.


 கொண்டு வந்த தகவலைக் கேட்டதும் சாளுக்கியப் படைகளை ஒன்றிணைக்க வேண்டியதன் அவசியம்  வந்ததனால் ரேவாவை அடியோடு மறந்துவிட்டான்

சாளுக்கியச் சக்கரவர்த்தி கீர்த்திவர்மன்.


" தனஞ்செயா நமது படைத்தலைவரை உடனே அழைத்து வா.."


சில நாழிகைகள் கழிந்து வந்து நின்ற படைத்தலைவரை நோக்கிய கீர்த்திவர்மன், " படைத்தலைவரே , பல்லவர்கள் நம் மீது போர் தொடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள்."


" என்ன..! "


"ஆம்..சதுர்த்தி திதியன்று படைகள் காஞ்சியை விட்டு நகர்கின்றன.."


" அப்படியெனில்..." படைத்தலைவன் வார்த்தைகளை முடிக்கவில்லை. 


" ஆம்..நாமும் நமது படைகளை தயார் நிலையில் அணிவகுத்து நிறுத்துவதோடு, காஞ்சியை நோக்கி நகர்த்த வேண்டியது தான்.." என்றான் கோபத்துடன்.


" தனஞ்செயா, போரில் கங்கரது படையையும் பங்கேற்றுக் கொள்ளக் கேட்டு ஓலை எழுதி உள்ளேன். இதோ இந்த குழலில் ஓலை நறுக்கு உள்ளது. கங்க மன்னர் சிறீபுருஷனிடம் சேர்ப்பித்து விடு. நமது சேனைகள் கங்கர் நாட்டினை அடைந்ததும் இரண்டு நாட்டுப் படைகளும் ஒன்றிணைந்து செல்லட்டும்.  பல்லவனையும், தந்திதுர்க்கனையும் ஒழிப்பது ஒன்றே இப்போது நம்முன் உள்ள பிரச்சனை."


" அப்படியே ..அரசே..! "


நமது படைகள் நாளை மறுதினம் தனது அணிவகுப்பினை நடத்தப் போகிறது என்பதையும் கங்கனுக்குத் தெரிவித்து விடு.."


" நல்லது அரசே.. அப்படியே செய்கிறேன்.." என்றவனாய் விடைபெற்றான் தனஞ்செயன்.


அதே வேளையில்..


காஞ்சியில் பிரம்மஸ்ரீ ராஜனின் முன்னிலையில் கூடியிருந்தனர் பல்லவ தேச அரசின் உயர் அரச பிரதானிகள். பல்லவ தேசத்தின் அனைத்துக் கோட்டத் தலைவர்களும் வந்திருந்தார்கள். பல்லவர்களுக்கான முக்கியமான போராக இது பார்க்கப் பட்டது. 


சாளுக்கியனையும், கங்கனையும் ஒடுக்கியே ஆக வேண்டுமென்ற வைராக்கியம் ஒவ்வொருவருக்குள்ளும் கொளுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது.


கோபத்தாலும் , சீற்றத்தாலும் கொந்தளித்தவனாய் காணப்பட்டான் நந்திவர்ம பல்லவன்.


" நமது பல்லவ குலப் பரம்பரை பெருமை வாய்ந்த உக்கிரோதயத்தையும், பரமேஸ்வரவர்மர் போரில் இழந்த வெண்கொற்றக் குடையையும், நமது பல்லவ இலச்சினைகளையும் கங்கனிடமிருந்து மீட்டெடுப்பதோடு, ரேவாவையும் மீட்டு,  கங்கனுக்கும் சாளுக்கியனுக்கும் தகுந்தப் பாடத்தையும் புகட்டுவேன்." எனக் கர்ஜித்தான்.


அனைவரும் கோபத்தின் வசப்பட்டவர்களாகவே காணப்பட்டார்கள். பிரம்மஸ்ரீராஜனது முகமோ எவ்வித உணர்ச்சிகளையும் பிரதிபலிக்காது இறுகிப் போயிருந்தது.


பல்லவடி அரையர் காலாட் படைக்கும்,  உதயச்சந்திரன் புரவிப் படைக்கும் , நந்திவர்மன் யானைப்படையை வழிநடத்தவும், காடவ முத்தரையர் வில்லாளிகளை வழி நடத்தவும் ஏற்பாடாயிற்று. கங்க மன்னன் யானைகளை வழி நடத்துவதில் நிபுணத்துவம் பெற்றவன் என்பதனால்  , நந்திவர்மன் தானே பல்லவரது யானைப் படையை வழி நடத்துவதாக விரும்பி பொறுப்பேற்றான். காஞ்சி நகரே கடந்த சில தினங்களாய் அல்லோகலப்படத் துவங்கியிருந்தது. 


வீதியெங்கும் புரவிகளில் வீரர்கள் போய்க்கொண்டும், வந்தபடியும் இருந்தனர். நகருக்குள் நுழைவதற்கு பயங்கர கெடுபிடியாய் இருந்தது. அவசியமின்றி அன்னியர் எவரும் நகருக்குள் நுழையத் தடை விதிக்கப் பட்டிருந்தது. கோட்டையில் காவல் பலப்படுத்தப் பட்டிருந்தது. மக்கள் வீதிகளில் கூட்டமாய் நிற்பதற்கும் தடை விதிக்கப் பட்டிருந்ததோடு, அவ்வாறு நின்று கொண்டு பேசிக் கொண்டிருப்பவர்களை நகரக் காவலர்கள் கண்டித்து அப்புறப்படுத்தவும் செய்தனர். 


காஞ்சியை போரின் தாக்கம் பீடிக்கத் துவங்கியதால் , வணிகர்கள் அத்தியாவசியப் பொருட்களின் விலையை கூடுதலாக்கி விற்றனர். போரே இன்னும் துவங்கவில்லை, அதற்குள்ளாக இந்த வணிகர்களின் தொல்லை தாளமுடியவில்லை என்ற பேச்சும் மக்களிடம் எழுந்தது.


கிருஷ்ணபட்சத்து சதுர்த்திதிதி , காஞ்சி நகரமெங்கும் ஆரவாரமும், காணுமிடமெங்கும் "ஜெய..விஜெயீ பவ.." கோசங்களும், "வெற்றி வேல்..வீர வேல் .." என்ற கோசங்களும் விண்ணதிர பட்டத்துயானை மேல் கம்பீரமாக நந்திவர்ம பல்லவன் அசைந்தாடி முன்னே செல்ல, அவனைத் தொடர்ந்து புரவிகளில் பல்லவடி அரையன், உதயச்சந்திரன், காடவ முத்தரையர், சீராளன், சேந்தன் மற்றும் பல்லவ கோட்டத் தலைவர்கள் எனப் பலரும் செல்ல, பல்லவர்களின் யானைப் படை முன் செல்ல, தொடர்ந்து புரவிகள், காலாட்படை வீரர்கள், வில்லாளிகள், மருத்துவக் குழுக்கள், உக்கிராணிகள் , முரசறிவிப்போர், துந்துபி முழங்குவோர், பறையடிப்போர் எனப் பலரும் அணிவகுத்துச் செல்ல பல்லவக் காஞ்சியே குலுங்கியது .


_ தொடரும்..


# அனுராஜ்..


குறிப்பு : பல்லவர்கள் போத்தரசர் என அழைக்கப் பட்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages