04.11.20
ரேவா
இருளில்_ஒரு_உருவம்_82
ஸஹ்யாத்ரி மலைகள் என்றழைக்கப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் காவிரிக் கரையை ஒட்டியமைந்த கானகத்தில் கங்கனது வசந்தமாளிகையானது ஒரு சிறிய கோட்டையைப் போலவே சீராளனுக்கு காட்சி தந்தது. தூரத்தில் இருந்தவாறு அதன் அழகில் தனது மனதை பறிகொடுத்தவன், அங்கு சூழ்ந்து நிற்கும் ஆபத்தையும் தெளிவாய் உணர்ந்து கொண்டான். கோட்டைச் சுவரின் மதிற் சுவர்களில் கங்கனது வீரர்கள் பலர் வேல் தாங்கி காவல் புரிந்து கொண்டிருந்தனர். அம்மாளிகை மலைச் சரிவொன்றில் எழிலாக கட்டப் பட்டிருந்தது. அதை ஒட்டி காவிரி நதியும் சலசலத்து ஓடிக் கொண்டிருக்க , ரம்யமான அழகில் கோட்டை காட்சித் தந்து கொண்டிருந்தது. சுற்றிலும் உயரமான மரங்கள் சூழ்ந்த அக்கோட்டையை பகல் வேளையில் நெருங்குவது உசிதமல்ல என்று எண்ணியவனாய், இரவுப் பொழுதிற்காக கானகத்திலேயே மறைந்திருப்பது என தீர்மானித்தான்.
கோட்டையைக் காவல் புரியும் வீரர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பமாய் தானிருக்கும் என்று கணக்கிட்டவன் , தான் செய்ய வேண்டிய பணிகளை சற்றே நினைவு படுத்திக் கொண்டான். நீ ரேவாவை சந்தித்து இந்த ஓலையைத் தருவது எவரும் அறியா வண்ணம் இருக்குமாறு கவனித்துக் கொள்..வீணான சண்டைச் சச்சரவுகளைத் தவிர்த்து விடு " என நந்திவர்மன் கூறியனுப்பியதும் நினைவிற்கு வந்தது.
நந்திவர்மன் கூறியதைப் போல எவரும் அறியாமல் உள்ளே சென்று விட்டு வந்துவிட வேண்டும் என மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
மதிய வேளையில் மலைக் கானகத்தில் சுற்றி அலைந்து திரிந்ததில் உடலின் களைப்போடு, வயிறும் பசித்தது. கண்களில் ஏதாவது தென்படாதா எனப் பார்த்துக் கொண்டு அலைந்ததில், மரத்திலேயே வெடித்துச் சிதறிய பலாக் கனி பார்வையில் பட்டது. வேறொரு மரத்தில் தென்பட்ட தேன்கூடும் பார்வையில் பட பரவசமானான். மரத்தில் ஏறி கனியை வெட்டிக் கீழ் இறக்கியவன், மற்றொரு மரத்தில் தேன் கூட்டைக் கலைக்க பிரம்மபிரயத்தனம் செய்து வெற்றியுடன் கீழிறங்கினான். காட்டு மரங்களின் பெரிய பெரிய இலைகளின் மீது இரண்டையும் வைத்துக் கொண்டு நன்கு தோய்த்து தோய்த்து பலாவின் சுளைகளை உண்ணத் தொடங்கினான். மதிய உணவு திருப்திகரமாய் முடிய , அடர்ந்து தாழ்ந்திருந்த ஒரு மரக் கிளையில் ஏறிக் களைப்பு தீரக் கண்ணயர்ந்தான்.
அவன் மறுபடி விழித்துக் கொண்ட போது ஆதவன் மேற்கு வானில் நன்கு கீழிறங்கத் துவங்கியிருந்தான். கானகத்தில் மெல்ல கரிய நிறம் படியத் துவங்கியிருந்தது. மரங்களின் ஊடாகவே தனது புரவியை நடத்திக் கொண்டுச் சென்றவன் கோட்டையை நெருங்கும் போது முற்றிலும் இருள் கவிழ்ந்திருந்தது. கோட்டையில் ஆங்காங்கு தீப்பந்தம் கொளுத்தப் பட்டிருந்தது. மதிற் சுவர்களிலும் ஒருவன் வந்து எண்ணெய் ஊற்றி பந்தத்தை திட்டுகளில் செருகி விட்டுப் போனான்.
இரவின் முதலாம் ஜாமம் முடிந்து இரண்டாம் ஜாமம் தொடங்கியிருந்தது. கோட்டையைச் சுற்றி அலைந்து திரிந்ததில் , ஒரு பெரிய மாமரமொன்று கோட்டைச் சுவரின் விளிம்பினைத் தொட்டு வளர்ந்திருப்பது புலப்பட்டது. மெல்ல அம்மரத்தினை நோக்கி நகர்ந்தவன் , குதிரையை அங்கு கட்டாமல் நிறுத்தி விட்டான்.அது அவனது எண்ணமறிந்த ஜீவன். பகைவர் எவராவது வந்தால் அதுவே நகர்ந்து மறைந்து கொள்ளும் உயர்சாதி வகை புரவி. எங்கிருந்தாலும் அவன் ஒலிக்கும் சமிக்ஞையை உணர்ந்து சரியாக வந்து அவனருகில் நிற்கும் திறன் வாய்ந்தது. உதயச்சந்திரன் இவனுக்கென தருவித்துத் தந்த அரபு நாட்டுப் புரவி.
மரத்தில் வேகமாய் ஏறியவன், கோட்டையை நோக்கிச் சென்ற கிளையில் மெல்லமெல்ல தவழ்ந்தபடி முன்னேறிக் கொண்டிருந்தான். அவனது பார்வை கரிய இருளிலும் கூர்மையாய் கோட்டைச் சுவரையே கவனித்துக் கொண்டிருந்தது. கோட்டைச் சுவரின் மேல் நடைபயின்ற ஒரு வீரன் சற்றே கடந்து மறுபுறமும் திரும்பியதும் , சட்டென கோட்டைச் சுவரில் குதித்தவன், தனது இடையில் இருந்த கச்சையில் இருந்து குறுவாளை எடுத்து கைகளில் பிடித்தபடி எச்சரிக்கையாக, இருளடர்ந்த பகுதியிலேயே நகர்ந்து நகர்ந்து சென்றவன், மேல்தள தாழ்வரையில் சற்றே நிதானித்தான். ஒன்றிரண்டு விளக்குகள் மட்டுமே ஏற்றப் பட்டு இருந்ததாலும் , ஆங்காங்கே இருளே ஆக்கிரமித்து இருந்ததாலும், அவனுக்கு மறைந்து மறைந்து செல்ல மிக வசதியாக இருந்தது. ஒரு பணிமகள் தட்டொன்றில் உணவுடன் ஒரு அறைக்குள் நுழைவதைக் கண்டதும்,
தூண் ஒன்றில் மறைந்து நின்றபடி கவனித்தான். அனேகமாக அது தான் ரேவாவை சிறை வைத்திருக்கும் அறையாக இருக்க வேண்டுமென அவனது உள்ளுணர்வு கூறியது.
அந்த அறையை அடைந்ததோடு, சாளரத்தை நோக்கி மெல்ல நகர்ந்தவன் , அறைக்குள் நடப்பதை இருளில் சாய்ந்து நின்றபடி கவனிக்கத் தொடங்கினான். அவனது எண்ணத்தை மெய்ப்பிப்பது போல அறைக்குள் காணப்பட்ட மஞ்சத்தில் இவனுக்கு முதுகை காட்டியபடி ரேவா தான் அமர்ந்திருந்தாள்.
ரேவாவிற்கு எதிரே பணிமகள் உணவுத் தட்டுடன் நின்று கொண்டிருந்தாள்.
" தேவி..தாங்கள் சரிவர உண்பதில்லை. தினமும் ஒருவேளை மட்டும் உணவினை உட்கொண்டால் உடலில் வலு இருக்குமா..? "
" எனக்கு இங்கிருக்கவும் பிடிக்கவில்லை..இந்த தேசத்தின் உணவும் பிடிக்கவில்லை..! "
" தேவி..இந்த தேசத்தின் உணவு என்ன பாவம் செய்தது. உங்களின் மனங்கவர்ந்தவர் வந்து அழைத்துச் செல்ல நேர்ந்தால், அவரைப் பார்ப்பதற்கும், அவருடன் செல்வதற்கும் தங்களின் உடலில் வலு இருக்க வேண்டாமா..? எனவே உணவை பழிக்காதீர்கள்.."
" எனக்கு இப்போது பசியில்லை..ஒரு குவளை பால் மட்டும் கொண்டு வா..போதும்.."
"சரி.." என்ற மங்கை அங்கிருந்து நகர்ந்தாள்.
ரேவாவிற்கு மங்கை கூறியதும் சரியெனப் பட்டது, பல்லவ தேசத்திலிருந்து உதவி வரும் வரையோ அல்லது இவர்களை எதிர்த்து போராடும் சூழல் வந்தாலோ நமது உடலில் வலு இருந்தால் அல்லவா நல்லது. இனி வீணில் கலங்கித் தவிப்பதில் பயனில்லை. இங்கிருந்து தப்பிக்கும் மார்க்கம் அறிய வேண்டும்.அதற்கு நம் உடலில் வலு வேண்டும். என எண்ணியவளாய் தனது முடிவினைச் சட்டென மாற்றிக் கொண்டவளாய் , உணவுத் தட்டினை தன் முன் இழுத்ததோடு, உணவினை உண்ணவும் துவங்கி விட்டாள். அப்போது உள்ளே பால் குவளையுடன் நுழைந்த மங்கை சிரிக்கவும், " மங்கை நீ சொன்னதையும் எண்ணிப் பார்த்தேன்..உண்மை உரைத்தது..அதனால் தான்.."
ரேவா முதலில் வீறாப்பாக பசியில்லை, உணவு வேண்டாமென்றதும், பின்பு தட்டை இழுத்து வைத்துக் கொண்டு உணவினை உண்ணத் துவங்கி விட்டதையும் கண்ட சீராளனும் தனக்குள் நகைத்துக் கொண்டதோடு, "பசி வந்து விட்டால் அனைத்தும் பறந்துவிடுமென்பது சரியாகதானிருக்கிறது" என மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
" ம்..உண்ணுங்கள்..உண்ட பின் இதோ பால் கொண்டு வந்திருக்கிறேன்..
அதையும் அருந்திவிடுங்கள்.." என்றவளாய் சிரித்துக் கொண்டே கூறிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள் மங்கை.
வெளியேறிய பணிமகளது பார்வையில் படாமல் தூணின் பின்னே ஒளிந்து கொண்ட சீராளன், பணிமகள் கீழ் இறங்கிப் போனதும் மீண்டும் சாளரத்திற்கருகே வந்தான். அதற்குள்ளாக ரேவா உணவு உண்டு முடித்தவளாய், தட்டினை அறை மூலையில் கிடத்திவிட்டுக் கைகளை கழுவியவள் தனது முந்தானையால் துடைத்தபடி சாளரத்தருகே வந்தவள், சாளரத்தின் வெளியே இருளில் ஒரு உருவம் நிற்பதைக் கண்டதும் " ஆவென்று " கத்த வாயைத் திறந்தாள்.
_ தொடரும்..
#அனுராஜ்..



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக