12.11.20
ரேவா_90
கும்பாபிஷேகமும்_விஜயாபிஷேகமும்_90
புஷ்பேஸூ ஜாதி, புருஷேஸூ விஷ்ணு, நாரீஸூ ரம்பா, நகரேஸூ காஞ்சி என வடமொழி இலக்கியங்களால் புகழப்பட்டதும், புத்தர், யுவான் சுவாங் போன்றோரின் வருகையால் சிறப்படைந்ததும், இதிகாசக் காலந்தொட்டு இலக்கியக் காலம் வரை தனித்ததொரு சிறப்பினைப் பெற்றதுமான காஞ்சி மாநகர் நந்திவர்மன் காலத்தில் மிகச் சீரும் சிறப்பும் பெற்றுத் திகழ்ந்து கொண்டிருந்தது.
நந்திவர்மனது சாளுக்கிய வெற்றியைக் குறிக்கும் முகமாய் விஜயாபிஷேக விழாவையும், பரமேஸ்வரவர்மரால் துவக்கப் பட்டு நந்திவர்மனால் நிறைவு செய்யப்பட்ட ஸ்ரீ வைகுண்டப் பெருமாள் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகத்தையும் அன்றைய தினத்தில் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட விருந்த பெருமையும் இணைந்ததால் , காஞ்சி நகரமே விழாக்கோலம் பூண்டு காட்சியளித்தது. அருகில் உள்ள கிராமங்களில் இருந்தெல்லாம் மக்கள் எருதுகள் பூட்டிய வண்டிகளில் கூட்டம் கூட்டமாக காஞ்சி நகருக்குள் பிரவேசித்த வண்ணமிருந்தனர்.
அலைகடலெனத் திரண்ட மக்களின் வெள்ளத்தில் காஞ்சியே தத்தளித்துக் கொண்டிருந்தது.
ஸ்ரீவைகுண்டப் பெருமாள் ஆலயத்தின் மூலஸ்தானம் மூன்று அடுக்களில் தேர்ந்த சிற்ப வேலைப்பாடுகளுடன் அழகாய் எழும்பியிருந்தது. நின்ற நம்பி, கிடந்த நம்பி, அமர்ந்த நம்பி என மேல்தளத்தில் நின்ற கோலத்திலும், இரண்டாம் தளத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராய் சயனக் கோலத்தில் ரங்கநாதராகவும், கீழ் தளத்தில் ஸ்ரீ வைகுண்டப் பெருமாளாகவும் காட்சி தந்து கொண்டிருந்தார். மூலஸ்தான விமானமோ, ஆகம விதிப்படி " அஷ்டாங்க விமானமாக " வடிவமைக்கப் பட்டிருந்தது. ஆலயத்தில் நிர்மாணிக்கப் பட்டிருந்த ஆயிரங்கால் மண்டபத் தூண்களில் எல்லாம் அழகிய சிற்ப வேலைப் பாடுகளும், ஒவ்வொருத் தூணையும் சிங்கமானது தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பது போன்றும் அழகாய் வடிவமைக்கப் பட்டிருந்தது. இதுவே பின்னாளில் பல கோவில்களின் ஆயிரங்கால் மண்டபத்திற்கு முன்னோடியாக அமைந்தது எனலாம். அது மட்டுமின்றி பிரகாரச் சுற்றுச் சுவர்களில் #நந்திவர்மன் உள்ளிட்ட பதினெட்டு பல்லவ மன்னர்களின் பட்டாபிஷேகக் காட்சி வடிக்கப் பட்டிருந்தது.
இவ்வளவு சிறப்பும், பெருமையும் வாய்ந்த ஸ்ரீவைகுண்டப் பெருமாள் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் தான் நடந்தேறவிருந்தது.
அதிகாலை வேளை, வேத பாராயணங்களோடு, உபநிஷத்துக்களும் வாசிக்கப் பட்டுக் கொண்டிருந்தன. மங்கல வாத்தியங்கள் முழங்கி கொண்டிருக்க , அழகிய கீர்த்தனைகள் பாடப்பட்டுக் கொண்டிருந்தன.
வேதியர்கள் மந்திரங்கள் ஜெபிக்க, பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் அழகிய கலசங்களில் நிரப்பப் பட்டிருந்தன. யாக குண்டத்தில் பலவித ஷமித்துகள் இடப்பட்டு, மந்திரம் ஓதி நெய்வார்க்கப் பட்டதனால் எழுந்த அக்னி ஜூவாலை கொளுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது.
நந்திவர்மன், பல்லவடி அரையன், பிரம்மஸ்ரீ ராஜன், உதயச்சந்திரன் , தந்திதுர்க்கன், மூலப்பிரகிருதியார், காடவ முத்தரையர், சீராளன், சேந்தன், கடிகையார், மாதேவிப் பெருந்தட்டார் முதலானோருடன், திருமங்கை ஆழ்வாரும் பயபக்தியுடன் நின்றிருக்க,
பியூஷா, நிரஞ்சனாதேவி, ரேவா, பூங்குழலி, மங்கை, மற்றும் அரண்மனைப் பெண்டிர்கள் அனைவரும் பக்தியுடன் காத்திருக்க, யாகசாலை பூஜையில் ஆகுதி அளித்ததும், எழுந்த மங்கல ஒலியில் வேதியர்களால் எடுத்துத் தரப்பட்ட புண்ணியக் கலசத்தை கைகளில் வாங்கிய ஆலயத்தின் தலைமைப் பட்டர் , அதனைக் கோபுரக் கலசத்தில் வார்த்தார். ஸ்ரீவைகுண்ட நாதருக்கு திருமஞ்சன பூஜைகளும், திருவாராதனம் செய்து சிறப்பு பூஜையும் நடந்தேறியதும் , அனைவருக்கும் சடாரி வைத்தபின், தீர்த்த , திருத்துழாய் பிரசாதமும் வழங்கப் பட்டது.
திருமங்கை ஆழ்வார் கண்களை மூடியபடி ஆழ்ந்த நிஷ்டையில் இருந்தவர் கணீரென்ற குரலில் பாடத் துவங்கினார்..
தேம்பொழில் குன்றெயில்
தென்னவனைத் திசைப்பச் செருமேல் வியந்து அன்று சென்ற
பாம்புடைப் பல்லவர்கோன் பணிந்த
பரமேச்சுவர விண்ணகர மதுவே..!
பாருருவில் நீர் ஏரி கால் விசும்பும் ஆகி
பலவேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற
ஏருருவில் மூவருமே யென்ன நின்ற
இமையவர் தம் திருவுருவேறெண்ணும் போது
ஓருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ
ஒன்று மாகடலுருவம் ஒத்து நின்ற
மூவுருவம் கண்ட போது ஒன்றாம் சோதி
மூகிலுருவம் எம்மடிகள் உருவம் தானே..!
ஆலயத்தின் அமைதியை குலைத்த கணீரென்ற குரல் கேட்போரையெல்லாம் பக்தி பரவசத்தில் ஆழ்த்த, திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெரும் பேற்றினைப் பெற்றது ஸ்ரீவைகுண்டப் பெருமாள் ஆலயமென்றும் பரமேஸ்வர விண்ணகரம் என்றும் போற்றப் பட்ட சிறப்பு மிக்க அவ்வாலயம்.
காஞ்சியின் அரண்மனை கோலாகலக் கொண்டாட்டத்தில் காணப்பட்டது. ரிஷபக் கொடிகள் காற்றில் அசைந்தாடிய அழகே மகிழ்ச்சியைப் புலப்படுத்துவதாக இருந்தது. அலங்காரத் தோரணங்களும், பூக்களால் மாலைகளாய் தொடுக்கப் பட்டு ஆங்காங்கே கட்டப் பட்டிருந்த அழகும் காண்போரின் கவனத்தை ஈர்த்தது.
அரண்மனை வளாகத்தில் காணப்பட்டத் திடலில் மேடை அமைக்கப் பட்டிருந்தது. யாழ்,குழல், முழவு,தடாரி, தண்ணுமை எனும் இன்னிசைக் கருவிகள் முழங்க வருகை புரிந்த நந்திவர்மன், மேடையில் போடப்பட்டிருந்த தந்தத்தால் இழைக்கப்பட்ட சிம்மாசனத்தில் சென்று கம்பீரமாக அமர்ந்தான். அவனுக்கு இருமருங்கிலும், திருமங்கை ஆழ்வார், பிரம்மஸ்ரீ ராஜன், பல்லவடி அரையன்,தந்திதுர்க்கன், காடவ முத்தரையர், உதயச்சந்திரன், மூலப் பிரகிருதியார், நாகநந்திகுரவர், கடிகையார், சுவறன் மாறன் முத்தரையர் ஆகியோர் வீற்றிருக்க, அனைவரையும் ஒழுங்குபடுத்தி மேடைக்கு அனுப்பும் பணியில் சீராளன், சேந்தனுடன் தேவசேனனும் ஈடுபட்டிருந்தான்.
மந்திரங்கள் முழங்க, வேதியர்கள் திருமஞ்சன நீரினையும், பூக்களையும் தூவி ஆசி வழங்கியதன் பின், பிரம்மஸ்ரீ ராஜன் கங்கனிடம் இருந்து கைப்பற்றிய பல்லவ குல பரம்பரை அணிகலனான உக்ரோதயத்தை, திருமங்கை ஆழ்வாரிடம் அளித்து, நந்திவர்மனுக்கு அணிவிக்கச் செய்தார். உக்ரோதயத்தி்ல் பதிக்கப் பட்டிருந்த மாணிக்கத்தின் சிவந்த ஒளியானது அந்த மேடையெங்கும் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து " விடேல் விடுகு நந்திவர்ம பல்லவன்..வாழ்க..! கத்வாங்கதன் பல்லவ மல்லன் வாழ்க..! ரிஷபலாஞ்சினன் நந்திவர்ம பல்லவன் வாழ்க..! கலிபலமர்த்தனன் நந்திவர்ம போத்தரசன் வாழ்க..! ஹரி சரணபரன் நந்திவர்ம பல்லவன் வாழ்க..! என வாழ்த்தொலிகள் தொடர்ந்து ஒலித்த வண்ணமே இருந்தது.
புலவர்கள் பலரும் அவனது சாளுக்கிய வெற்றி குறித்து பாடலினைப் பாடி பரிசில்களைப் பெற்றுச் சென்றனர். நண்பர்களும், சிற்றரசர்கள் பலரும் பல்வகையான பரிசில்களை வழங்கி பாராட்டி மகிழ்ந்தார்கள்.
நந்திவர்மனும் பலருக்கும் பரிசுகளையும், போரில் சிறப்பான பங்களிப்பினை நல்கிய படைத்தலைவர்கள், உப தளபதிகள், வீரர்கள் முதலானோருக்கு விருதுகளையும் , பட்டங்களையும் வழங்கிச் சிறப்பித்தான். பல்லவடி அரையர், உதயச்சந்திரன், காடவ முத்தரையர், ஆகியோருடன் சீராளனும், சேந்தனும் கௌரவிக்கப் பட்டனர்.
நந்திவர்மன் எழுந்தவனாய், காஞ்சி நகர மக்களை வணங்கி விட்டு, "அன்பானவர்களே, காம்புஜ தேசத்தைச் சேர்ந்த நான் காஞ்சியின் மன்னன் ஆவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. இதோ இங்கிருக்கும் பெரியோர்களால் இத்தனையும் நடந்திருக்கிறது. அனைத்திற்கும் மேலாக நான் வணங்கும் ஸ்ரீவைகுண்ட வாசன் என்னை வழிநடத்திச் செல்கிறான். நமது வெற்றியால் கிட்டிய சாளுக்கியரது மண்ணை , அந்த வெற்றிக்கு வழிகோலிய தந்திதுர்க்கருக்கு வழங்குவதாக நான் ஏற்கனவே வாக்களித்து விட்டேன். எனவே இன்று முதல் பரந்து பட்ட சாளுக்கிய பேரரசின் சாம்ராஜ்யாதிபதியாக தந்திதுர்க்கர் விளங்குவார்." என்று கூறி விட்டு அமர்ந்தான்.
தந்தி துர்க்கன் இறுதியாக எழுந்து, அன்புடைய காஞ்சி நகர மக்களே..அச்சல்பூரின் சிற்றரசனாய் இருந்த என்னை இன்று இராஷ்டிரகூடத்தின் பேரரசனாய் ஆக்கிய பெருமை நந்திவர்ம பல்லவரையே சாரும். அவர் எனது வாழ்க்கையில் பலவிதங்களில் ஒளியேற்றியவர், அந்த " இருள் அகற்றும் ஒளி அனையருக்கு " எனது செல்ல மகள் ரேவாவை விவாகம் செய்து தர ஏற்கனவே நான் ஒப்புதல் வழங்கி விட்டேன். அதனை இன்று பல்லவ மக்கள் முன்னிலையில் பகிரங்கமாய் வெளியிடுவதில் பெரும் மகிழ்வு கொள்கிறேன். விரைவில் நல்லதொரு முகூர்த்த நாளில் பல்லவ சாம்ராஜ்யாதிபதி நந்திவர்ம பல்லவருக்கும், இராஷ்டிரகூடத்தின் இளவரசி ரேவாவிற்கும் நடைபெறவிருக்கும் திருமணத்திற்கு அனைவரும் வந்திருந்து வாழ்த்த அன்புடன் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்." என்றுரைத்து விட்டு , ரேவாவை அழைத்து நந்திவர்மனது கைகளில் ஒப்படைத்தவனாய் அமர்ந்தான்.
அன்றைய இரவில் நிலவு பாலெனப் பொழிந்து கொண்டிருந்தது. தென்திசைக் காற்று தென்றலாய் மிதந்து வர..காற்றில் கலந்து வந்த நானாவித மலர்களின் சுகந்தம் மனதை மயக்கிக் கொண்டிருந்தது.
காஞ்சி அரண்மனையை ஒட்டியமைந்த நந்தவனத்தில் பொய்கை கரையோரத்திலும், மலர்ச் சோலை படுகையிலும், பரந்த புல்வெளியிலும் தென்திசை தென்றலின் இதமான தாலாட்டில் மெய்மறந்து போயிருந்தன மூன்று காதல் ஜோடிகள். செண்பகம், பாரிஜாதம், பன்னீர்மரங்களின் பூக்களில் இருந்து கிளம்பிய நறுமணம் மூன்று ஜோடிகளின் நாசியைத் தீண்டிச் சென்றாலும் அதன் மணத்தினை பெரிதெனக் கொள்ளாமல் அவரவர் தங்களது வாழ்க்கைத் துணைவியின் கரங்களைப் பற்றியபடி களிப்பில் மூழ்கியவர்களாய் மெய்மறந்து போயிருந்தனர்.
தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த தந்திதுர்க்கர் எழுந்தவராய், நந்தவனத்தில் உலவி வர ஆசை கொண்டு, நந்தவனத்திற்குள் பிரவேசித்தார். அவரது கண்ணில் உதயச்சந்திரனும்,பியூஷாவும் பட சிரித்துக் கொண்டே திரும்பி நடந்தார்..எதிரே காடவ முத்தரையர் வேகமாக வந்து கொண்டிருந்தார் அவரோ அதே நந்தவனத்தில் நந்திவர்மனையும்,ரேவாவையும் கண்டுவிட்டு, அவர்களது தனிமையை கெடுக்க விருப்பமின்றி வந்து கொண்டிருந்தவர், " தந்திதுர்க்கரே வாருங்கள்..இதோ இந்த திசையில் செல்வோம் என்று ..நடந்தவர்களின் பார்வையில் பட்டார்கள் சீராளனும், பூங்குழலியும்." ஆஹா..காஞ்சியே காதலர்கள் பூமியாக அல்லவா மாறிக் கொண்டிருக்கிறது ". என்றார் அதிர்ந்தவராய் காடவ முத்தரையர்.
" முத்தரையரே..அதனாலென்ன..காதல் இருக்குமிடத்தில் அன்பு மலரும், அன்பு மலர்ந்தால் அமைதி தவழும்..காஞ்சி அமைதி பூங்காவாக திகழப் போவதில் உங்களுக்கென்ன வருத்தம்." என்றார் தந்திதுர்க்கர்.
" ஆஹா..எனக்கென்ன வருத்தம்..அமைதி தவழும் என்பதற்காக அனைவரும் இவ்வாறு ஜோடிஜோடியாய் திரிந்து கொண்டிருந்தால் காஞ்சியின் நிலை.." என்றபடி பலமாய் நகைக்க, அவருடன் இணைந்து கொண்டது தந்திதுர்க்கனது நகைப்பும்.
இருவரது பயங்கர நபைப்பொலியைத் தொடர்ந்து மரங்களில் வாசம் செய்த பட்சிகள் தங்கள் சிறகினை படபடத்தபடி மெல்ல எட்டிப் பார்த்தன.
_ நிறைவு.
# அனுராஜ்..
நாளை " ரேவாவின் முன்னுரையும், இந்த வரலாற்றுப் புதினத்திற்கு உதவிய நூல்களின் விபரமும்."



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக