சுந்தரம்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
“ரேணுகா ..... டிபன் சாப்பிட வாடி”
”போம்மா! எனக்கு இன்னிக்கு எக்ஸாம் நிறைய படிக்கணும். டிபன் வேண்டாம் “
“பசியோட எப்படி எழுதுவே?”
“சரி... நீ... ஊட்டி விடு “
டிபன் தட்டுடன் மகளது அறைக்குப் போனாள். டிபன் சாப்பிட்டு அப்படியே தண்ணீர் குடித்து அம்மாவின் முந்தானையில் வாயை துடைத்துக் கொண்டாள்.
வெளியில் எச்சில் தட்டுடன் வந்த பர்வதத்தை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார் விஸ்வம்
“என்ன அப்படி பாக்கறீங்க?”
“ நீ ரொம்ப செல்லம் கொடுக்கறையோனு நினைக்கிறேன்”
“ஏதாவது பேசி அவ மூடை மாத்திடாதீங்க.. கொஞ்சம் சும்மா இருங்க”
“அப்பா டைம் ஆயிடிச்சு.. கொஞ்சம் ஷூ போட்டு விடேன்”
ரமேஷ் சோபாவில் அமர்ந்தபடி விஸ்வத்தை ஏவினான்.
ஒன்றும் சொல்லாமல் ஷூ கொண்டுவந்து மாட்டி விட்டார். பாலிஷ் இல்லாததால் அதையும் எடுத்து வர,
“ இதெல்லாம் வேண்டாம்.. நேரமாயிடிச்சு”
பைக்கில் கிளம்பிச் சென்றான் .
இரண்டாவது காபி விஸ்வத்துக்கு கொண்டு வந்த பர்வதம், அவரை அர்த்தத்துடன் பார்த்தாள்.
என்ன? என்பது போல அவளைப் பார்க்க, ஒன்றும் இல்லை என்று தலையை ஆட்டி சிரித்தபடி திரும்பிச் சென்றாள்.
ரேணுகா திருமணம் முடிந்து அதே ஊரிலேயே வாழ்ந்து வர ரமேஷ் ஹைதெராபாத்தில் வேலை .மனைவியும் வேலைக்கு போக, அவனது மகன் முதல் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.
ரமேஷ் கிளம்ப, வாசலில் நின்று கொண்டிருந்தார் விஸ்வம்.
“அப்பா கதவை பூட்டிக்கிங்க”
“ம்ம்.. இன்னிக்காவது என்னோட மருந்து.......”
“சரி.. வாங்கிட்டு வரேன்”
கதவைப் பூட்டிக் கொண்டு உள்ளே வந்தார்.
பர்வதம் டிபன் சாப்பிட உட்கார்ந்தாள்.
“பர்வதம் உன்னோட உடம்பை பார்த்துகோ.. மணி ஒன்பதரை.. சுகர் வேற.. இப்பத்தான் டிபன் சாப்பிடறே... எனக்கு தந்தப்பவே நீயும் சாப்பிட்டு இருக்க வேண்டியது தானே?”
“இங்க பாருங்க... குழந்தையை ரெடி பண்ணனும்... டிபன், சமையல் செய்யணும்... அவளும் கிளம்பணும்.. அவ ஒருத்தி எப்படி பறக்கறா? நான் பாட்டுக்கு டிபன் சாப்பிட்டுக்கிட்டு இருந்தா நல்லா இருக்காது. அது மட்டும் இல்லே அவசர அவசரமா என்னால சாப்பிட முடியாது”
“என்னமோ பண்ணு... உன்னோட நல்லதுக்கு சொன்னேன்”
மாலை நாலுமணிக்கு பேரன் வந்ததும் அவனுக்கு பூஸ்ட் கொடுத்து செய்து வைத்திருந்த போளி சாப்பிடக் கொடுத்தாள்.
“ பாட்டி நல்லா இருக்கு இன்னொண்ணு கொடு “
பேரன் சாப்பிடுவதை ஆசை தீரப் பார்த்தாள். கால் வலி இருந்தாலும், அவனுக்கு தினமும் ஏதாவது புதிது புதிதாக செய்து கொடுப்பாள்.
சாப்பிட்டுவிட்டு நண்பர்களுடன் விளையாட கீழே சென்றான்.
மருமகள் தீபா ஆறு மணிக்கு வந்ததும், அவளுக்கு சூடாக காபி கொடுத்து, இரண்டு போளிகள் கொடுத்தாள்.
“ ஒண்ணு போதும்மா.. ஏன்மா தினமும் கஷ்டப்படறீங்க நிறைய ஸ்னாக்ஸ் இருக்கே?”
“ அது எப்ப வேணா சாப்பிடுங்க.. என்னால முடியறப்போ செய்து தரேன் எனக்கு வேற வேலை என்ன?”
கொஞ்ச நேரம் அப்படியே கொஞ்சம் ரெஸ்ட் எடுத்த தீபா, ஆறரை மணிக்கு தீபம் ஏற்றினாள். இரவு எட்டுமணிக்கு ரமேஷ் வந்தான். உடை மாற்றி வந்தவன், காலையில் அவசர அவசரமாக படித்த பேப்பரை நிதானமாக படிக்க ஆரம்பித்தான்.
பர்வதம் இரவு டிபன் செய்து கொண்டிருந்தாள். தீபா பிள்ளைக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
சோபாவில் இருந்து ரமேஷ் எழுந்தபோது விஸ்வம்,
“ரமேஷ் மெடிசின் வாங்கியாச்சா “
மெதுவாக கேட்டார்.
“இங்க பாருங்க ... ஆபீஸ் டென்ஷன்ல மறந்திட்டேன்.. நாளைக்கு வாங்கிட்டு வரேன்”.
ஆனால் அடுத்த நாளும் வாங்கி வரவில்லை. .அவரை தனியே வெளியில் போகக் கூடாது என்று சொல்லி இருக்கிறான். வாரம் ஒரு நாள் அதே தெருவில் இருக்கும் கோயிலுக்கு போவார்கள். அவ்வளவுதான்.
வீடு, டிவி, கோயில் என்று சுருக்கிக் கொண்டு விட்டார்கள்.
எதிர்த்த வீட்டுப் பையனிடன் சொல்லி மருந்து வாங்கி வரச் சொன்னார். அவனும் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தான். அதில் ஒரு மருந்து மாற்றிக் கொடுத்திருந்தார்கள். ரமேஷிடம் சொல்லி மாற்றிக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார் .
ரமேஷ் வழக்கம் போல் வந்தவன், அவனும் மருந்து வாங்கிக் கொண்டு வந்து அவரிடம் நீட்ட, அவர் மருந்து வாங்கிய விபரம் சொல்லி ஒரு மருந்து மாற்றவேண்டும் என்று சொல்ல, ரமேஷ் கத்தினான்.
“ இனி மருந்து கடையில் திருப்பி எடுக்க மாட்டான் . அடுத்த மாசத்துக்கு வச்சுக்குங்க”
“ டாக்டர்கிட்ட போகணுமே அவரு வேற எழுதிக் கொடுத்தா என்ன பண்ணறது?”
ரமேஷ் எரிச்சலுடன் மருந்தை வாங்கிக் கொண்டு சென்றான்.
இதுபோல எத்தனையோ தூக்கி எறிந்து பேசிய நிகழ்ச்சிகள். பார்த்து பார்த்து வளர்த்த பிள்ளை. வீட்டில் உழைப்பையும் தந்து பென்ஷனும் கொடுத்து, மரியாதை இல்லாமல் அங்கு இருக்கப் பிடிக்கவில்லை.
அடுத்த நாள் ரேணுகாவிடம் இருந்து போன் வந்தது.
“ரேணு எப்படி இருக்கே?”
“நல்லா இருக்கேன் என்னோட மாமனாரும் மாமியாரும் ஒரு மாசம் பொண்ணு வீட்டில இருக்கப் போயிருங்காங்க”
“அப்பாக்கு இங்க போரடிக்குது.. உங்களை எல்லாம் பாக்கணும்னு நினைக்கறாரு .. ஒரு பத்து நாள் அங்க வரலாம்ன்னு நினைச்சுகிட்டு இருக்கோம்”
“ அம்மா! இப்பதான் கொஞ்சம் வீட்டு வேலை கொறஞ்சிருக்கு. நாங்க ஒரு வாரமா வெளில வாங்கி சாப்பிடறோம். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருக்கேன்”
“ஏண்டி நான் சமைப்பேனே”
“அம்மா.. புரிஞ்சுக்கோ... நானும், அவரும் பிள்ளைகளும் தனியா இருக்க விரும்பறோம்... அடுத்த மாசம் அவங்க வந்த பின்னால நான் ஹைதெராபாத் வரேன்”
பர்வதம் பாவமாக விஸ்வத்தைப் பார்த்தாள் . ஒரு மாதம் கழித்து பிள்ளையிடம் சொன்னார்.
“நானும் அம்மாவும் சென்னையில் இருக்கற முதியோர் இல்லம் போகப் போறோம் “
“உங்களுக்கு இங்க என்ன குறைச்சல்? பையன் அப்பா அம்மாவை பார்ப்பதில்லை என்று மத்தவங்க சொல்லவா? அங்க போனா உங்களைப் பார்க்க நான் அங்க வர மாட்டேன்... அங்க இருக்கறவங்க எங்களை ஒரு மாதிரி பாப்பாங்க... நீங்க வேணா இங்க வந்து எங்களைப் பாருங்க”
கோபத்தில் கத்தினான்.
விஷயம் கேள்விப்பட்ட ரேணுகா ரமேஷிடம் சொன்னாள்.
“வயசானா இத்தனை வீம்பு கூடாது.. பேசாம வீட்ல அடக்கி இருக்கணும்”
விஸ்வம் தேர்ந்தெடுத்திருந்த முதியோர் இல்லம் நன்றாக இருந்தது. பரந்து விரிந்து இருந்தது. ஒரு சிறிய சமையல் அறை, ஒரு மாஸ்டர் பெட் ரூம். பொதுவாக சமையல் எல்லோருக்கும். விருப்பம் இருப்பவர்கள் தனியே வேண்டுமெனில் சமைத்துக் கொள்ளலாம். அதிக கட்டணமும் இல்லை. இல்லாதவர்களுக்கு இலவசம். தங்குவதற்கு பொதுவான பெரிய ஹால். இருப்பவர்களிடம் அவர்கள் வசதிக்கு ஏற்ப பணம் வாங்கிக் கொண்டார்கள். .
இதை நிர்வகித்து வந்த ரமணன் ஏழை வீட்டுப் பிள்ளை எனவும் கஷ்டப்பட்டு படித்து இருபது வருடம் அமெரிக்காவில் வேலை பார்த்து இப்போது இதை நிர்வகித்து வருகிறார் என்று கேள்வி பட்டார்கள்..
அவர்கள் சேர்ந்து ஒரு பதினைந்து நாள் சென்றிருக்கும் . ரமணன் தனி தனியே எல்லோரையும் சந்தித்து பேசிக் கொண்டு வந்தான்.
விஸ்வம் கதவைத் திறந்தார்.
கண்களில் ஒளி பாய, விவேகானந்தர் போல நின்று கொண்டிருந்தான் ரமணன்.
“சார் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருக்கா? மாசத்தில ரெண்டு தரம் நான் வருவேன்.”
“இல்லேப்பா.. ரொம்ப ரொம்ப நல்லா இருக்கோம்”
புன்சிரிப்பு மாறாமல் விடை பெற்றவன் முகத்தில் ஒரு சிறிய சந்தேக பார்வை.
“சார்.. நீங்க டெலிபோன் ஆஃபிஸில் வேலை பார்த்துக்ட்டு இருந்தீங்களா..?”
“ஆமாம்பா”
“சார்.. என்னை தெரியுதா?”
“தெரியலேயேப்பா”
“சார் நான் வருஷா வருஷம் காலேஜ் பீஸ் கட்ட உங்க ஆபீஸ் வந்து பணம் கலெக்ட் செய்வேன். நீங்க வருஷா வருஷம் மூவாயிரம் எனக்கு தருவீங்க. ஒரு தடவை டிரஸ் கூட எடுத்து கொடுத்திருக்கீங்க “
அவருக்கு நியாபகம் வந்தது. பர்வதம் கூட சண்டைக்கு வந்திருக்கிறாள்.
யாரோ ஒரு பிள்ளைக்கு கொடுக்கறீங்க நல்லது தான் ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தானு சொல்லுவாங்க ஆனா மூவாயிரம் அதிகம் தான்”
“சார் படிப்பு முடிஞ்சதும் அமெரிக்காவுக்கு போயிட்டேன். இருபது வருஷம் கழிச்சு திரும்பி வந்து இதை ஆரம்பிச்சிட்டு நடத்திக்கிட்டு வரேன். ஒரு தடவை அமெரிக்காவில் இருந்து வந்தபோது உங்களை தேடினேன். நீங்க எங்க இருக்கீங்கன்னு தெரியலை. உங்களுக்கு இங்க இருக்க பிடிக்கலைனே என்னோட வீட்டுக்கு வந்திடுங்கப்பா நல்லா பாத்துக்கறேன்.”
கண்ணீர் துளிர்க்க பர்வத்தை பார்த்தார்.
பர்வதம் விஸ்வத்தை கை எடுத்துக் கும்பிட்டாள்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக