சுந்தரம்
இனி..... நான்...... அம்மா
கைகளை தட்டியபடி காசு கேட்டுக்கொண்டு வந்து கொண்டிருந்த என்னை, அப்படியே உறித்து விடுவது போல சிலர் பார்த்தனர்.
எத்தனை எத்தனை பார்வைகள். பரிதாபம், கேலி, காமம், கோவம், பயம். என்னுடைய சுபாவம் யாரையும் கட்டாயப் படுத்தி காசு கேட்க மாட்டேன்.
என்னதான் இந்த பிறவி எடுத்திருந்தாலும், ஆண்களைக் கண்டால் ஒரு வித அச்சம் ஏற்படுவதை என்னால் உணர முடிந்தது.
சிலர் காசு கொடுக்கும் போது உள்ளங்கையில் விரலால் தடவி சமிங்கை செய்தனர். நான் அதை எல்லாம் பொற்படுத்தாமல் போய் விடுவேன்.
பசித்தது. டீ விற்றுக் கொண்டு வந்து கொண்டிருந்தான் சலீம்.
அவன் அசப்பில் என்னுடைய அண்ணன் போலவே இருப்பான். அவனைப் பார்த்தால் என் அண்ணனை பார்ப்பது போல இருக்கும்.
அவனுக்கும் என்னுடைய எல்லா கதையும் தெரியும். என்னைக் கண்டதும் முகம் மலர,
“ராதா டீ குடிக்கிறாயா? “ என்றான்.
என்னுடைய பசியை அறிந்து கொடுத்தான். வாங்கிக் கொண்டேன். எப்போதும் என்னிடம் காசு வாங்க மாட்டான்.
என்னைக் கடந்து செல்ல இருந்தவனை தடுத்து நிறுத்தி, நான் அவனுக்கு வாங்கி வைத்திருந்த வெள்ளி மோதிரத்தை அவனுக்கு அணிவித்தேன். ட்ரைனில் இருப்பவர்களின் பார்வையை நான் லட்சியம் செய்யவில்லை. அவனும் தான்.
வாட்டர் பாட்டில் விற்பவன் எங்களை கேலியாக பார்த்தபடி நகர்ந்தான். அவனுடைய மனதில் ஏதேதோ கற்பனை கலந்திருக்கும்.
கண்கலங்க என்னைப் பார்த்தான் சலீம்.
“ ஆமா கொஞ்சநாளா உன்னைப் பார்க்க முடியலையே எங்க போயிருந்தே?”
“ சலீம் கூத்தாண்டவர் கோயிலுக்கு போய் இருந்தப்ப எங்க ஊர் கேசவனைப் பார்த்தேன். அவரு சொன்னாரு என்னோட அம்மா அப்பா கஷ்டப்படறாங்கனு... அப்பாக்கு நடக்க முடியலை.. அண்ணன்கள் அவங்களை பாத்துக்கறது இல்லை. அவங்களைப் எல்லாம் பாக்கணும்னு போயிருந்தேன்”
“கேசவன் உன்னோட லவர் தானே?”
.
“ ஆமா அவனுக்கு கல்யாணம் ஆயிடிச்சு!”
“ எதுக்கு மறுபடியும் வந்தே? பேசாம அப்பா அம்மாகூட இருந்திருக்க வேண்டியது தானே?”
.
“ நீ சொல்லறது சரிதான் சலீம். அப்பாக்கு திடிர்னு நெஞ்சு வலிச்சப்ப, ஆம்புலன்சில் கூட்டிட்டு போய்கிட்டு இருந்தப்போ ஆக்ஸிடெண்ட் ஆயி அப்பா அம்மா இறந்திட்டாங்க. எனக்கு காலுல அடிபட்டிடுச்சு . எல்லாம் என்னோட நேரம் நான் செத்துப் போயிருக்கக் கூடாதா?”
.
“சரி உன்கூட பிறந்தவங்க இருந்தாங்களே!”
“அவங்களுக்கு எங்க பழைய வீட்டை வித்து காசு வேணும்னு சொன்னாங்க நான் வாங்கி அதுல இருந்துக்கறேன்னு சொன்னேன் ஆனா கேசவன் மனைவிக்கு எங்க மேல நம்பிக்கை வரலை. நான் அவங்க வாழ்க்கையை பங்கு போட்டுக் கொண்டுவிடுவேன்னு பயந்தாங்க. அந்த ஊரிலேயே நான் இருந்தா, அவங்க கேசவனைக் கூட்டிக்கிட்டு அவங்க ஊருக்கு போய்க்கறேன்னு சொன்னாங்க! என்னோட கூடப் பிறந்தவர்களுக்கு என்னோட நகைங்க வீடு பணம் அதுலதான் ஆசை இருந்திச்சு. என் பேர்ல இல்லை.. ஆசை ஆசையா ஊருக்கு போய் நொந்து போயிட்டேன்.”
“சரி! இனி என்ன பண்ணப் போறே?”
“ சலீம் எங்களை போன்றவர்களை நல்ல விதமா வாழ இந்த சமூகம் விடறதில்லை.... நாங்க படிச்சுக்கிட்டு இருக்கும்போதுதான் அந்த வயசில் எங்களுக்கு மாற்றம் ஏற்படுது. யாரும் புரிஞ்சுக்கறது இல்லை. வீட்டில இருக்கறவங்க அவமானமா நினைக்கறாங்க. உடல் ஊனத்தை சகிச்சுக்கறாங்க. மன ஊனத்தை புரிஞ்சிக்க மாட்டேங்கறாங்க. பள்ளிக்கூடத்துல நாங்க எங்க சுயத்தை மறைச்சுக்கிட்டு நடிச்சுக்கிட்டு படிக்க வேண்டியிருக்கு. எங்களை மீறி ஏதோ எங்களோட செயலால நாங்க யாருனு மத்தவங்க புரிஞ்சுக்கிட்டா அப்புறம் தொல்லைதான் . அதனால இன்னும் ரெண்டு மூணு வருஷம் கழிச்சு ஒரு கிராமத்திற்கு போய் சலிசா இடம் வாங்கி ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பிக்க போறேன். என்னை போல வீட்டை விட்டு துரத்தி விடப்பட்டவங்களுக்கு பள்ளிப்படிப்பை முடிக்கச் செய்வேன். அவங்களுக்கு தங்க இடம் கொடுப்பேன்..
சரி! சரி !சலீம் நீ போ... நான் கிளம்பறேன்”
.
அடுத்த பெட்டிக்கு போனேன். கடைசி இரண்டு பெட்டிகள் மட்டுமே இருந்தன. கால் வலித்தது. கழிவறை அருகில் உட்கார்ந்து கொண்டேன்.
அப்போது கழிவறையில் ஒரு சிறுவனின் அலறல் சப்தம் கேட்க, கதவை பலமாக தட்டினேன்.
ஒருநிமிடம் கழித்து கதவு திறந்தது.
ஒரு சிறுவன் நடுங்கியபடி நின்றுகொண்டிருந்தான்.
அருகே இரண்டுபேர் நின்று கொண்டிருந்தனர் .
அந்த சிறுவன் வெளியில் ஓடி வந்தான். அவர்களை நான் அடித்து உதைத்தேன். அவர்கள் வேகமாக அடுத்த பெட்டிக்குச் சென்றனர்.
சிறுவனுக்கு பனிரெண்டு வயதுக்குள் இருக்கும் மை தீட்டியது போன்று அடர்ந்த இமைகள் அவனைப் பார்த்ததும் அவன் யார் என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
அவன் என்னை கட்டிப் பிடித்துக் கொண்டான்.
முதன் முதலாக நான் தாய்மையை உணர்ந்தேன்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக