18.11.20 - தென்குமரிக் கவிதைக்களம்

புதன், 18 நவம்பர், 2020

18.11.20








வரலாற்றில் இன்று 18.11.2020


November 18, 2020


என்றும்....


அன்புடன்.....


என் இனிய காலை வணக்கங்கள்...


நவம்பர் 18  கிரிகோரியன் ஆண்டின் 322 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 323 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 43 நாட்கள் உள்ளன.


நிகழ்வுகள்


1421 – நெதர்லாந்தில் கடல் தடுப்புச் சுவர் ஒன்று இடிந்து வெள்ளம் பரவியதில் 10,000 பேர் வரையில் உயிரிழந்தனர்,

1477 – இங்கிலாந்தில் அச்சியந்திரசாலையில் அச்சிடப்பட்ட முதலாவது நூலான “Dictes or Sayengis of the Philosophres” வில்லியம் கக்ஸ்டன் என்பவரால் வெளியிடப்படட்து.

1493 – கொலம்பஸ் புவேர்ட்டோ ரிக்கோ என இன்றழைக்கப்படும் நாட்டை முதன்முறையாகக் கண்ணுற்றார்.

1626 – புனித பீட்டர் பசிலிக்கா தேவாலயம் ரோம் நகரில் திறந்து வைக்கப்பட்டது.

1803 – எயிட்டி புரட்சியின் கடைசிப் பெரும் போர் இடம்பெற்றது. இது எயிட்டி குடியரசு என்ற மேற்கு அரைக்கோளத்தின் முதலாவது கறுப்பினக் குடியரசு அமைக்கப்பட வழிவகுத்தது.

1863 – டென்மார்க்கின் ஒன்பதாம் கிறிஸ்டியன் ஷ்லெஸ்விக் நகரம் டென்மார்க்குக்குச் சொந்தம் என அறிவிக்கும் சட்டமூலத்துக்கு ஒப்பமிட்டான். இது 1864 இல் ஜேர்மன்-டென்மார்க் போர் ஏற்பட வழிவகுத்தது.

1883 கனடாவும் ஐக்கிய அமெரிக்காவும் ஒரே நேர எல்லைகளை வகுத்துக் கொண்டன.

1903 – பனாமா கால்வாய்க்கு தனிப்பட்ட உரிமையை ஐக்கிய அமெரிக்காவுக்கு வழங்கும் உடன்பாடு பனாமாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது.

1909 – நிக்கராகுவாவில் இரண்டு அமெரிக்கர்கள் உட்பட 500 புரட்சியாளர்கள் அரசுப்படையினால் கொல்லப்பட்டதை அடுத்து ஐக்கிய அமெரிக்கா இரண்டு போர்க்கப்பல்களை அந்நாட்டுக்கு அனுப்பியது.

1918 – லாத்வியா ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1926 – ஜோர்ஜ் பேர்னாட் ஷா தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசுப் பணத்தை ஏற்க மறுத்தார்.

1929 – அத்திலாந்திக் பெருங்கடலில் நியூஃபின்லாந்துக் கரையில் இடம்பெற்ற 7.2 ரிக்டர் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக பலத்த சேத எற்பட்டது. 28 பேர் கொல்லப்பட்டனர்.

1943 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் பேர்லின் நகரில் குண்டுகளை வீசியதில் 131 பேர் கொல்லப்பட்டனர். இச்சமரில் 9 பிரித்தானிய வான்கலங்கள் அழிக்கப்பட்டன.

1943 – உக்ரேனில் லூவிவ் என்ற இடத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த 6,000 யூதர்கள் நாசிப் படைகளினால் கொல்லப்பட்டனர்.

1947 – நியூசிலாந்தில் கிறைஸ்ட்சேர்ச் என்ற இடத்தில் வர்த்தகத் தொகுதி ஒன்றில் இடம்பெற்ற தீயில் 41 பேர் கொல்லப்பட்டனர்.

1978 – கயானாவில் ஜிம் ஜோன்ஸ் என்பவரின் மக்கள் கோயிலில் இடம்பெற்ற கொலை மற்றும் தற்கொலை நிகழ்வுகளில் 270 குழந்தைகள் உட்பட 918 பேர் இறந்தனர்.

1987 – லண்டனில் கிங் க்ரொஸ் சுரங்கத் தொடருந்து நிலையத்தில் இடம்பெற்ற தீயில் 31 பேர் கொல்லப்பட்டனர்.

1989 – கோபெ செயற்கைமதி விண்வெளிக்கு ஏவப்பட்டது.

1991 – தமிழீழ காவல்துறையின் முதலாவது அணி பயிற்சி முடிந்து வெளியேறியது.

2002 – சென்னை புறநகர் பேருந்து நிலையம் கோயம்பேட்டில் திறக்கப்பட்டது.

2006 – ஈழப்போர்: மன்னார்க் கடற்பரப்பில் இடம்பெற்ற மோதலில் இலங்கைக் கடற்படையினர் 10 பேர் கொல்லப்பட்டு 3 விடுதலைப் புலிகள் காயமடைந்தனர்.

பிறப்புக்கள்

1923 – அலன் ஷெப்பர்ட், விண்வெளிக்குச் சென்ற முதலாவது அமெரிக்கர் (இ. 1998)

1945 – மகிந்த ராஜபக்ச, இலங்கையின் 6வது ஜனாதிபதி


இறப்புகள்


1936 – வ. உ. சிதம்பரம்பிள்ளை, கப்பலோட்டிய தமிழன், (பி. 1872)

1952 – போல் எல்யூவார், பிரெஞ்சுக் கவிஞர் (பி. 1895)

1962 – நீல்ஸ் போர், இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1885)

2014 – சி. ருத்ரைய்யா, தமிழ்த் திரைப்பட இயக்குனர் (பி. 1947)


சிறப்பு நாள்


லாத்வியா – விடுதலை நாள் (1918)

ஓமான் – தேசிய நாள்

இந்தி எதிர்ப்புப் போராளி சி. இலக்குவனார் -


சிறந்த தமிழ் அறிஞருரும், படைப்பாளியுமான பேராசிரியர் சி.இலக்குவனார் (S.Ilakkuvanar) பிறந்த தினம் இன்று (நவம்பர் 17). 


1965ஆம் ஆண்டு மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழராசிரியர்களின் பங்கு முதன்மையானது – மாணவர்களுக்குத் தமிழ்மொழி காக்கும் உணர்வையும், இந்தித் திணிப்பை எதிர்த்திடும் போர்க் குணத்தையும் கற்றுக் கொடுத்தவர்கள் தமிழாசிரியர்கள் என்றால் அது மிகையில்லை.


மதுரை தியாகராசர் கல்லூரி மாணவர்கள் நடத்திய முதல் போராட்டம்தான் தமிழக மெங்கும் மாணவர்களைப் போர்க்களத்தில் இறக்கிவிட்டது. அந்தக் கல்லூரியில் பணியாற்றிய ஒரு தமிழ்ப் பேராசிரியர் வைத்த முதல் ‘தீ’தான் காங்கிரசு ஆட்சிக்கு கொள்ளி வைப்பதில் போய் முடிந்தது. அந்தத் தமிழ்ப் பேராசிரியர் வேறு யாருமல்லர், செந்தமிழ்க் காவலர் என்று அழைக்கப்படும் சி. இலக்குவனார் ஆவார்.


நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் வாய்மேடு என்னும் சிற்றூரில் 17.11.1909ஆம் ஆண்டு சிங்காரவேலார் – இரத்தினத்தாச்சி இணையருக்கு மகனாகப் பிறந்தார் இலக்குவனார்.


எட்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில், இலட்சுமணன் என இவர் பெற்றோர் இட்டப் பெயரை இவரின் தமிழாசிரியர் சாமி சிதம்பரனார் அவர்கள் “இலக்குவன்” என்று தூய தமிழில் மாற்றம் செய்தார். சாமி சிதம்பரனாரின் சீர்திருத்தக் கொள்கைகளும், தமிழ்மொழி மீதான ஈடுபாடும் இலக்குவனாரை கவர்ந்திழுத்திடவே, அது முதலே, தன்னைத் தமிழ் மொழியோடும், தமிழ் இனத்தோடும், பிணைத்துக் கொண்டார்.


திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்று, தஞ்சை மாவட்ட நாட்டாண்மைக் கழக உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக வேலையில் புகுந்தார். அதன் பிறகுதான் பயின்ற திருவையாறு அரசர் கல்லூரி, செ.தெ.நாயகம் அவர்களின் குலசேகரன் பட்டினம் தமிழ்க் கல்லூரி, திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரி, விருதுநகர் வி.இ.செந்தில் குமார நாடார் கல்லூரி, ஈரோடு மகாசனக் கல்லூரி, நாகர்கோயில் தெ.தி. இந்துக் கல்லூரி, மதுரை தியாகராசர் கல்லூரி ஆகியவற்றில் விரிவுரையாளராக, முதல்வராக, தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றி வந்ததில் பல்வேறு இடர்பாடுகளை அவர் சந்திக்க நேரிட்டது.


அங்கெல்லாம் படித்து வந்த மாணவர்களிடம், “எழுத்தாகிய உடல் இல்லையேல், மொழியாகிய உயிர் அழியும்” எனும் தமது தாரக மந்திரத்தை ஒப்புவித்தார். தமிழ் மொழிக்கு வீதியில் வந்து தொண்டாற்றும் படி மாணவர்களைத் தூண்டிய காரணத்தால் கல்லூரி நிர்வாகத்தின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளானார். அதுவே இலக்குவனாரை ஒரே கல்லூரியில் பணி செய்ய விடாது, பல்வேறு கல்லூரிகளுக்குத் துரத்தியது.


இருப்பினும், இலக்குவனார் மற்ற எல்லாக் கல்லூரிகளைக் காட்டிலும், மதுரை தியாகராசர் கல்லூரியில் பணியாற்றும் போதுதான் தமிழகம் அறிந்த ஒரு மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராளியாக உருவெடுத்தார்.


இன்று தமிழர்களால் அறியப்படும் கவிஞர் நா. காமராசன், அமைச்சர் கா. காளிமுத்து, எழுத்தாளர் சூரிய தீபன், கவிஞர்கள் இன்குலாப், மு. மேத்தா ஆகியோர் மாணவக் கண்மணிகளாக இருந்த போது, இலக்குவனாரின் தமிழ்ப் பாசறையில் பயிற்றுவிக்கப்பட்டவர்களே! 1965 மொழிப்போரின் தளபதிகளாக இம்மாணவர்கள் திகழ்ந்தார்கள்.

அப்போது அன்னைத் தமிழைக் காத்திட இந்தி மொழியை ஆட்சி மொழி என்று வலியுறுத்தும் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவை கொளுத்தப் போவதாக மாணவர் பட்டாளம் சூளுரைத்தது. இதைக் கண்டு பக்தவத்சலம் அரசின் காவல்துறை குலை நடுங்கிப் போய் இலக்குவனாரை சந்தித்து முறையிட்டது. மாணவர்கள் தொடங்கிய இந்தி எதிர்ப்புப் போரை கைவிடும்படி அறிக்கை விடுமாறு இலக்குவனாரை கேட்டுக் கொண்டது. அப்போது அவர் கூறியது இதுதான் “தமிழ் மொழிக்காக போராடி வரும் மாணவர்களிடம் போய் போராட்டத்தை நிறுத்து என்று சொல்பவன் நல்ல ஆசிரியனும் அல்லன்; அதுபோல், என் பேச்சைக் கேட்டு போராட்டத்தை நிறுத்துபவன் நல்ல மாணவனும் அல்லன்.”


இலக்குவனாரின் மேற்கூறிய விடையைக் கேட்டு ஆத்திரமுற்ற காவல்துறை இலக்குவனாரை கைது செய்து சிறையிலிட்டது. சில மாதங்களில் வெளிவந்த இலக்குவனார் “தமிழ் உரிமை பெரு நடைபயணம்” மேற்கொள்ளப் போவதாக அறிவிப்பொன்றை வெளியிட்டார்.


இலக்குவனாரை நீண்டநாள் சிறை வைப்பதைத் தவிர இனி வேறுவழியில்லை என்பதை உணர்ந்து கொண்ட பக்தவத்சலம் அரசு அவரைப் பணி நீக்கம் செய்திட ஆணையிட்டதோடு, இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தில் (D.I.R.) சிறையிலும் அடைத்தது. தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்ட முதல் தமிழறிஞர் இலக்குவனார்தான்.


பேராசிரியர் இலக்குவனார் தொல்காப்பியத்தை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். அவர் தொல்காப்பியம் குறித்து பின்வருமாறு கூறினார்: “இன்று நமக்குக் கிடைத்துள்ள பழந்தமிழ் நூல்களுள் தொல்காப்பியமே தமிழர் வாழ்வின் பலதுறை பற்றி அறிவதற்கு துணை புரிவதாகும். இதனைத் தமிழ்ப்புலவர் மட்டுமே தேர்வு கருதிக் கற்று வருகின்றனர். இது இலக்கண நூல்தான் என்றாலும் ஏனைய மொழிகளிலுள்ள இலக்கண நூல் போன்றதன்று; அண்மை நூற்றாண்டில் தோன்றி வளர்ந்து வரும் மொழியாராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி, பண்பாட்டுக் கலைகளாம் உயிரியல், உளவியல், வாழ்வியல் முதலிய அனைத்தையும் அந்தக் காலத்திலேயே தன்னகத்தே கொண்டு இயங்குகின்றது.”


தொல்காப்பியத்தின் காலம் ‘கி.பி. 2ஆம் நூற்றாண்டு’ என்று பல அறிஞர் பெருமக்கள் கூறிய நிலையில் “கி.மு. 7ஆம் நூற்றாண்டே தொல்காப்பியத்தின் காலம்” என்று ஆதாரங்களோடு மெய்ப்பித்தார். அதனை “Thol Kappiam In English With Critical Studies” என்னும் பெயரில் ஆங்கிலத்திலும் வெளியிட்டார். பேரரறிஞர் அண்ணா முதல்வராகி வெளிநாடு சுற்றுப்பயணம் செய்த போது மேற்கண்ட ஆங்கில நூலை போப்பாண்டவருக்கும், அமெரிக்க செனட் உறுப்பினர்களுக்கும் பரிசாக அளித்தார்.


காங்கிரசு ஆட்சியில் இலக்குவனார் பணி நீக்கம் செய்யப்பட்ட போதிலும் கவலையுறாது தமிழ்த் தொண்டு புரிந்து வந்ததைக் கண்டுணர்ந்த அண்ணா, ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பக்தவத்சலம் அரசின் பணி நீக்க ஆணையை நீக்கி மீண்டும் பணி வழங்கிடவும் செய்தார்.


திராவிட இயக்கத்தின் அடியொற்றி வளர்ந்த அறிஞர்களுள் ஒருவராக இலக்குவனார் அறியப்பட்ட போதிலும் பெரியாரைப் போல் சிலப்பதிகாரத்தைப் பழித்தவர் அல்லர். 1951ஆம் ஆண்டு ஆம்பூரில் திராவிடர் கழகத்தின் இலக்கியப் பிரச்சாரகராக இருந்து கொண்டே சிலப்பதிகாரம் பெண்ணைப் பெருமைப் படுத்திப் பேசும் இலக்கியம் என்று பேசினார். அதை விடுதலை ஏடே (15.03.1951) ‘சிலப்பதிகாரத்தின் சிறப்பு’ என்று தலைப்புக் கொடுத்து வெளியிட்டது.


அண்ணாவும் ‘தீ பரவட்டும்’ என்று கூறி கம்பராமாயணம், பெரிய புராணம் போன்ற தமிழ் இலக்கிய நூல்களைக் கொளுத்த வேண்டும் என்று அந்தக் காலத்தில் பேசி வந்தார். அப்போது இலக்குவனார் “கம்ப ராமாயணம், பெரிய புராணம் போன்ற இலக்கியங்கள் மூட நம்பிக்கைகளைப் பரப்புவது உண்மையெனினும் மூடக்கருத்துகளை விலக்கியும் சிறந்த நெறிகளையும் மொழிவளத்தையும் இனங்கண்டு போற்றியும் பின்பற்றுவதை விடுத்து அவற்றைக் கொளுத்த முனைதல் தேவையற்றது”  என்று மறுப்புரை எழுதினார்.


இலக்குவனார் திராவிட இயக்கங்களுக்கே உரிய ஆங்கிலப் பித்துக் கொண்டவரல்லர்; ஒரு முறை நாவலர் நெடுஞ்செழியன் தமிழ்ப் பயிற்று மொழி குறித்த விவாதத்தில் ஆங்கிலத்திற்கு ஆதரவாகப் பேசிடவே, அவர் சினங்கொண்டு “தமிழ்மொழி நாவலரா? ஆங்கிலமொழிக் காவலரா?” என்று அறிக்கை விடுத்தார்.


அவர் அனைத்துக் கல்லூரிகளிலும் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துவதை எதிர்த்து வந்ததோடு, கல்லூரிகளில் உடனடியாகத் தமிழ்ப் பயிற்றுமொழித் திட்டத்தைக் கொண்டுவர வேண்டுமென்று தான் நடத்திய ‘குறள் நெறி’ ஏட்டிலே தொடர்ந்து எழுதி வந்தார். 03.09.1973இல் செந்தமிழ்க் காவலர் சி. இளக்குவனார் மறைவுற்றார்.


அனைத்து நாட்டுக் கல்வியாளர்களும் தாய்மொழிக் கல்வியையே வலியுறுத்துகின்றனர். அதற்கேற்பவே அனைத்து நாடுகளிலும் தாய்மொழிக் கல்வியே நிலவுகிறது. தமிழ்நாட்டுக் கல்வியாளர்களும் அறிஞர்களும் தமிழ்வழிக் கல்வியையே வற்புறுத்துகின்றனர். ஆனால், கல்வியாளர் என்ற போர்வையில் கல்வி வணிகம் செய்வோரும் தமிழ்நாட்டில் செல்வாக்குப் பெற்றுள்ள பிற மொழியாளரும் ஆங்கில மொழிவழிக் கல்வியையும் இந்தி, சமற்கிருதம் முதலான மொழிக் கல்வியையுமே நடைமுறைப்படுத்தி விற்று வருகின்றனர். தாம் வாழ்ந்த காலத்தில் தமிழ்வழிக் கல்விக்காக ஒல்லும் வகையெலாம் அல்லும் பகலும் போராடித் ‘தமிழ்ப் பயிற்சி மொழிக் காவலர்’ எனப்  போற்றப் பெற்றவர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார். 


அவரது தமிழ்ப் பயிற்சி மொழி பற்றிய சிந்தனைகளை நினைவுகூர்வோம்!

 

தமிழே தமிழ்நாட்டில் முழுமையாக ஆட்சி செய்ய வேண்டும் என வாணாளெல்லாம் எழுதியும் பேசியும் பரப்புரை மேற்கொண்டும் போராடியும் வீரத் திருமகனாகத் திகழ்ந்தவர் பேராசிரியர் முனைவர் சி. இலக்குவனார். இத்தகைய பணிகளுள் குறிப்பிடத்தகுந்த ஒன்று இதற்கெனத் தமிழ்நாடு முழுவதும் தமிழ் உரிமைப் பெருநடைப் பயணம் மேற்கொள்வது எனத் திட்டமிட்டது. பெருநடைப் பயணம் தொடங்கும் முன் பேராசிரியர் சி.இலக்குவனார், இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்(D.I.R.)படித் தளையிடப்பட்டார். எனினும் அதுவரை அவர் மேற்கொண்ட முயற்சிகளும் அவரது சிறையிருப்பும் தமிழ் மக்களிடையே தமிழ்ப் பயிற்சி மொழியாகத் திகழ வேண்டியது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தின. 

 

அதன்பின்னர் மாணவர் பெருமளவில் தமிழ்வழிக் கல்வியில் சேர்ந்தனர். இதனைத் தேர்தலில் வெற்றியாகத் தி.மு.க. அறுவடை செய்திருப்பினும் பேரறிஞர் அண்ணாவிற்குப் பிறகு மெல்ல மெல்ல ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம் ஆகியன நம் தலையில் அமர்ந்து கழுத்தை நெரிக்கும் அவல நிலை வந்துவிட்டது. முழுமையாகத் தமிழ் விரட்டுப்படும் பேரவல நிலைக்கு இன்று கல்வி முறை வந்துவிட்டது. இப்பொழுதேனும் நாம் விழித்தெழாவிட்டால் நமக்கு விடிவு என்றைக்கும் கிடையாது. இந்த நேரத்தில் தமிழ்ப் பயிற்சி மொழி குறித்த பேராசிரியர் சிந்தனைகளை நினைவுகூர்வது நமக்கு உரனாக அமையும்.


கல்லூரிகளில் உடனே தமிழைப் பாடமொழியாக ஆக்கவேண்டியதன் இன்றியமையாமையை மக்களிடையே விளக்க வேண்டும். பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்களிடையே தமிழ் மூலம் படிப்பதனால் ஏற்படும் நன்மைகளையும் பிறமொழிகள் மூலம் படிப்பதனால் ஏற்படும் தீமைகளையும் எடுத்துச் சொல்ல வேண்டும். தமிழைப் பாடமொழியாகக் கொண்டு படிக்க வருவோர் தொகையை மிகுதிப்படுத்த வேண்டும். உயர்நிலைப் பள்ளிகளில் ஒரே காலத்தில் தமிழைப் பாடமொழியாக ஆக்கியதுபோல் கல்லூரிகளிலும் ஒரே சமயத்தில் எல்லாத் துறைகளிலும் எல்லா நிலைகளிலும் தமிழைப் பாட மொழியாக்க வேண்டும்” என்பனவற்றைப் பேராசிரியர் சி.இலக்குவனார் தமிழ் உரிமைப் பெருநடைப் பயணத்தில் அடிப்படை வேண்டுகோளாக வைத்தார்.

 

"தமிழைப் பயிற்று மொழியாக்குவதில் எவ்வகை ஆர்வமும் காட்டாததனால் தமிழ் தாழ்நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது" என வருந்தினார் பேராசிரியர் சி.இலக்குவனார்.

 

"உதட்டளவில் தமிழ்ப் பற்றைக் காட்டிவிட்டு உலகப் புகழ் பெற நாடுகின்றீர்கள். ஆனால், உயர் தமிழைப் பின்னுக்குத் தள்ளிவிட்டீர்கள். இப்பொழுதேனும் பிழையை உணர்ந்து திருந்த முற்படுங்கள். தமிழ்ப் பயிற்று மொழித் திட்டத்தை உடனே செயற்படுத்த முனையுங்கள்" என அரசியலாளரிடமும் ஆட்சியாளரிடமும் வேண்டுகோள் விடுத்தார்.

 

"மாணவர்களே! தமிழ் வழியாகப் பயிலுதலே எளிதும் இனிதுமாகும் என்பதை நீவீர் அறிந்திருந்தும் தமிழ்ப் பயிற்றுமொழி வகுப்புக்குப் பெருந்திரளாக வாராதிருப்பது உங்கள் தமிழ்ப் பற்றுக்குக் களங்கம் ஏற்படுத்துகிறது. ஆகவே, தமிழ் வழியாகப் பயில முன் வாருங்கள். தமிழ் வழியாகவே கற்பிக்க வேண்டும் என்று வற்புறுத்துங்கள். மாணவர்களுக்காக ஆசிரியர்களேயன்றி ஆசிரியர்கட்காக மாணவர்கள் அல்லர். மாணவர்கள் விரும்புவது போல் ஆசிரியர்கள் கற்பிக்கக் கடமைப்பட்டுள்ளனர். தமிழ் வாயிலாகப் பயிலுங்கள்; தலைவர்களாக விளங்குங்கள். தமிழும் வாழும்! தமிழரும் வாழ்வர்!" என மாணாக்கர்களிடம் வற்புறுத்தினார்.

 

"அவரவர் மொழிவழியாகப் பயிலலே இயற்கையோடு ஒத்ததும் எளிதும் ஆகும்." என்றும் "உயர்நிலைக் கல்விக் கூடங்களில் தமிழ்வழியாகப் படித்துவிட்டு, கல்லூரிக்கு வந்தவுடன் ஆங்கிலத்தின் வழியாகப் படிக்கும் முறையால் மாணவர்கள் இடர்ப்பாடு அடைகின்றனர்" என்றும் பேராசிரியர் சி.இலக்குவனார் விளக்கினார்.

 


தமிழ் வழியாகப் படித்தால் இன்றுள்ள சூழ்நிலையில் அரசுப் பதவிகள் கிட்டா என்று கருதுகின்றனர். நடைமுறை அவ்வாறு கருதுமாறு செய்கின்றது. தமிழ்நாட்டு ஆட்சிமொழியாகத் தமிழை ஏற்றுக் கொண்டிருந்தும் தமிழ் வழியாகப் படித்தோரைத்தான் முதலில் பணிகளில் அமர்த்திக்கொள்ள வேண்டும் என்ற விதியை மேற்கொண்டிலர்" என்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே பேராசிரியர் நொந்தும் இன்று பெயரளவிற்குத் தமிழில் படிப்போருக்கு 20 விழுக்காடு முன்னுரிமை என்ற சட்டம்தான் வந்துள்ளது. 

 

மேலும்


பிற நாடுகளில் எல்லாம், "இவ்வாறு வேற்று மொழியில் பயில உரிமை கேட்டால், நாட்டுப் பற்றற்ற தன்மையாகக் கருதப்பட்டு, மிகவும் வெறுக்கப்படும். இங்கு உரிமை கிடைத்து விட்டது. இன்று ஆங்கிலத்தில் பயில உரிமை கிடைத்ததைக் கருதி, நாளைக்கு இந்தியில் பயில உரிமைக் கிளர்ச்சி செய்வோரும் தோன்றுவர். பின்னர், தெலுங்கர், மராத்தியர், குசராத்தியர் போன்றோரும் கிளர்ச்சி தொடங்கக் கூடும்" என்று எச்சரிக்கிறார் பேராசிரியர் இலக்குவனார்.

 

"உயர்நிலைக் கல்விக் கூடங்களில் தமிழ் பயிற்றுமொழி நிலை பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மீண்டும் அதனை விடுத்து ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாகக் கொள்ள உரிமையளித்தால், ஆங்கிலேயர் ஆட்சியையே மீண்டும் கொள்ளும் அடிமை நிலைக்கு ஒப்பாகும். உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்று மொழியாவதற்கு ஒரு நாளும் இசைதலே கூடாது. கல்லூரிகளிலும் ஆங்கிலம் பயிற்றுமொழித் திட்டத்தை அகற்ற ஆவன செய்ய வேண்டும். எல்லாக் கல்லூரிகளிலும் ஆங்கிலப் பயிற்றுமொழி இருக்குமேல் மாணவர்கள் இன்றுள்ள சூழ்நிலையில் அதனையே ஏற்பர்; ஏற்குமாறு தள்ளப்படுவர். தமிழ்ப் பயிற்றுமொழி வெறுக்கப்படும், ஒதுக்கப்படும்" என்று பேராசிரியர் சி.இலக்குவனார் எச்சரித்தார். 

 

ஆனால், இன்றைக்குப் பள்ளிகளிலும் தமிழ் அகற்றப்பட்டு, ஆங்கிலம் திணிக்கப்பட்டுக் கொண்டு வருகிறது. அரசு பள்ளிகளில் தமிழ்வழிக் கல்விக் கூடங்களை மேம்படுத்தாமல் ஆங்கில வழியைத் திணித்துக்கொண்டு வருகிறது தமிழக அரசு. நாமோ கைகட்டி, வாய்மூடி வேடிக்கைப் பார்த்துக்  கொண்டுள்ளோம்!

 

கல்வி, வேலை வாய்ப்பிற்காக அல்ல. எனினும் அத்தகைய எண்ணம் வந்துவிட்டமையால், வேலை வாய்ப்பு நோக்கிலும் தமிழைப் பயன்பாட்டு மொழியாக்க வேண்டும் என்கிறார் பேராசிரியர் சி. இலக்குவனார். 

 


ஆங்கிலத்தின் வழியாகப் பயின்றோரே உயர்ந்தோர் எனவும் தமிழ் வழியாகப் பயின்றோர் தாழ்ந்தோர் எனவும் அலுவலக வட்டாரங்களில் கருதுவோர் உளர். கல்வியின் குறிக்கோள் அலுவலகங்களில் பணிபுரிவதே எனக் கருதுகின்ற நிலை நீடிக்கின்ற போது தமிழ் வழியாகப் படித்தோர்க்குப் பணிமனைகளில் தவறாது இடம் கிடைக்கும் என்ற உறுதி ஏற்படச் செய்தல் வேண்டும்" எனத் தமிழ்வழி பயில்வோருக்கு வேலை வாய்ப்பு உறுதி அளிக்கப்பட வேண்டும் என்கிறார்.

 

அயலக வேலை வாய்ப்பினைக் காரணம் காட்டித் தமிழ்வழிக் கல்வியைப் புறக்கணிப்பதும் தவறு என இடித்துரைக்கிறார் பேராசிரியர். "தமிழ் வழியாகப் படித்தால் வெளிநாடுகளில் வேலை கிடைக்கப்பெறாது வருந்துவரே என்பர். கல்வியின் நோக்கம் வேலை தேடிப் பிழைப்பதற்கு என்பதே தவறு. அன்றியும் எங்கும் அந்தந்த நாடுகளில் அந்தந்த நாட்டினர்க்கே வேலை என்ற உணர்ச்சி மேலோங்கி நிற்பதைப் புறக்கணிக்க முடியாது. அதனையும் கடந்து வேலை கிடைப்பதற்கு உதவியாக உலகப் பொதுமொழியாம் ஆங்கிலத்தைக் கற்க நம் கல்லூரிகளில் வசதியுண்டு. ஆகவே தமிழைப் பாட மொழியாக ஆக்குவதற்கு வேலை வாய்ப்பினைத் தடையாகக் காட்டுவதும் பொருந்தாது" என்கிறார்.

 

பாடப் புத்தகங்கள் இல்லை எனக் கூறிக் கல்லூரிகளில் தமிழ்ப் பயிற்றுமொழியைத் தடுக்கக் கூடாது எனவும் தமிழ்ப் பயிற்சிமொழியானால் நூல்கள் பெருகும் எனவும் பேராசிரியர் கூறுகிறார். ஆனால், இன்றைக்குப் பாட நூல்கள் இருக்கக்கூடிய உயர்நிலைப் பள்ளிகளிலும் தமிழ் அகற்றப்பட்டுக்கொண்டு வரும் அவலநிலை பெருகுகிறது.

 

"ஆங்கிலத்தின் வழியாகவும் படிக்கலாம் என்று வைத்து, அதன் வழியாகப் படித்து வருவோரே சிறந்தவர் என்று மதித்தால் தமிழ் வாயிலாகப் படிக்க வருவோர் அரியவே இருப்பர்" என்று நடைமுறை உண்மையை உணர்த்தி, தெரிவுமுறையின்றித் தமிழ் மட்டுமே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்கிறார்.

 

“மொழிப்பற்றும் நாட்டுப் பற்றும் அற்றவர்கள், பதவிகளில் அமர்ந்து கொண்டு தமிழ்ப் பயிற்று மொழித் திட்டத்தைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வருகின்றனர்” என்றும் “ஆங்கிலப் புலமையும் பற்றும் உடையோர்தாம் ஆட்சி செலுத்துகின்றனர்” என்றும் தமிழ்வழிக் கல்வி இன்மைக்கான காரணங்களைப் பேராசிரியர் இலக்குவனார் விளக்குகிறார்.

 

"உலகில் வேறெந்த உரிமை நாட்டிலும் வேற்று மொழி வாயிலாகக் கல்வி கற்பிக்கப்படவே இல்லை. நம் நாட்டில் நம் மொழி வாயிலாகக் கல்வி கற்பிக்கப்படவே இல்லை" என்னும் நிலை, மிக மிக வருந்தத்தக்கது; நாணத்தக்கது என வருந்தி உரைக்கிறார் பேராசிரியர் சி.இலக்குவனார்.


நம் நாட்டில் நம் மொழி வாயிலாகக் கல்வியளிக்கப்படாத காரணத்தினாலேயே பேரறிஞர்களும் புதியது புனையும் அறிவியற் கலைஞர்களும் உலகம் புகழும் வகையில் பேரளவில் தோன்றிலர். தொழில்நுட்ப அளவில் மிகவும் பிற்பட்ட நிலையில் உள்ளோம். ஆன்ற அறிவும் ஆள்வினையும் அற்றுள்ளோம். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட வரலாற்றுச் சிறப்புடைய நாம், இரு நூறாண்டுகட்குக் குறைந்த வரலாற்றினுடைய நாடுகளின் நல்லன்பை நாடி உதவி பெற வேண்டிய நிலையில் உள்ளோம்" என உணர்த்தி, உடனே தமிழை அனைத்து நிலைகளிலும் பயிற்சி மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிறார் பேராசிரியர் சி.இலக்குவனார். 

 

"தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு கல்லூரிகளில் பாடம் கற்பித்தாலன்றி நம்நாடு முன்னேறாது. பேரறிஞர்கள் தோன்றும் வாய்ப்பு ஒருநாளும் ஏற்படாது. நாடென்ப நாடா வளத்தன எனும் வள்ளுவர் மறைக்கு இலக்காக இலங்காது" என்னும் பேராசிரியர், "தமிழ் வழியாகப் படித்தலே தமிழர் பிறப்புரிமையாகும். அதுவே அறிவைப் பெருக்கும் எளிய இனிய வழியாகும்." எனத் தமிழ்வழிக் கல்வியை நம் பிறப்புரிமை என உணர்த்துகிறார்.

 

“தமிழ்நாட்டில் தமிழ்தான் - தமிழ் மட்டும்தான் பயிற்று மொழியாக இருத்தல் வேண்டும். ஆங்கிலம், இந்தி, ஆரியம் வேறு எம்மொழி வழியாகவும் கற்பிக்கும் நிலை இங்கு உண்டாதல் கூடாது” என்ற பயிற்சிமொழிப் போராளி பேராசிரியர் சி்.இலக்குவனார் வேண்டுகோளை நிறைவேற்ற நாம் போராடி வாகை சூடுவோம்! தமிழ்வழியில் பயிற்றுவிப்போம்! தகைமையாளர்களை உருவாக்குவோம்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages