20.11.20 - தென்குமரிக் கவிதைக்களம்

வெள்ளி, 20 நவம்பர், 2020

20.11.20

 







அறிவியல் ஆய்வுக்காக அரசு வேலையை உதறியவர்..! சர்.சி.வி.ராமன் 


சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். 


பிறப்பு

நவம்பர் 7, 1888 

திருவானைக்காவல், திருச்சிராப்பள்ளி, சென்னை மாகாணம், இந்தியா

இறப்பு

21 நவம்பர் 1970 (அகவை 82) 

பெங்களூரு, கர்நாடகம், இந்தியா


கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்னர் தன் மேற்படிப்புக்காக இங்கிலாந்து செல்ல விரும்புகிறார் ஓர் இளைஞர். அப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், உடல்நிலை தகுதிச் சான்று கிடைக்கவில்லை. எனவே, அன்று அவருடைய விருப்பம் நிறைவேறாமல்போனது. அதன் பிறகு இந்தியாவிலேயே படித்து பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளையும் ஆய்வுகளையும் மேற்கொண்டார். 1930-ம் ஆண்டில் தன் `ராமன் விளைவு'க்காக நோபல் பரிசும் பெற்றார். நோபல் பரிசுக் குறிப்பில் இருக்கும் முதல் தமிழ்ப் பெயருக்குச் சொந்தக்காரரான சர் சி.வி.ராமன்.


அக்காலம் ஐன்ஸ்டீன் எல்லாம் ஒளிபற்றி ஆராய்ச்சி செய்த காலம். அந்த நேரத்தில் சிவி ராமனின் முடிவு ஐன்ஸ்டீனையே வியக்க வைத்தது


சாதாரண சாதனை அல்ல அது.


இந்திய விஞ்ஞானி இயற்பியலில் வாங்கிய முதல் நோபல் அது.


அதன் பின் உலகின் எல்லா விருதும் தேடி வந்தது, இங்கிலாந்து வழங்கிய சர் பட்டம் (இம்சை அரசனில் வடிவேலு கேட்பார் அல்லவா?) இத்தாலி, அமெரிக்கா என எல்லா நாடுகளும் கொண்டாடின. ‌


தன் முதுமை காலத்தை ராமன் மைசூரில் கழித்தார், காரணம் மைசூர் சமஸ்தானம் அவரை சிறப்பு விருந்தினராக அமர்த்தி கவுரவபடுத்தியது.


பின்னாளில் மாநில பிரிவினை வரும்பொழுது அவர் மைசூர் வாசியானார். அதனால் அவர் பிறப்பால் கன்னடன் என சொல்லிவிட முடியாது, பிறந்ததும் கற்றதும் தமிழகத்தில்தான்


கல்வியில் கரை கண்டவர்:


தமிழ்நாட்டில் உள்ள திருச்சியில் உள்ள 1888-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஏழாம் தேதி பிறந்தார். இவர் தந்தை ஒரு இயற்பியல் விரிவுரையாளராக பணியாற்றினார். இவரின் தந்தை விசாகப்பட்டினத்தில் பணியாற்றியதால் அங்கேயே பள்ளி படிப்பை முடித்தார். தன்னுடைய இளங்கலை மற்றும் முதுகலை படிப்பை சென்னை மாநிலக் கல்லூரியில் படித்து சிறப்பு தகுதியுடன் பட்டம் பெற்றார். இவர் முதுகலை படிப்பில் சாதனை மதிப்பெண்களை பெற்றார்.


இந்திய இயற்பியலில் சிறந்து விளங்கியவர்:


1907-ம் ஆண்டு நடைபெற்ற நிதித்துறை தேர்வில் முதலிடம் பெற்று கொல்கத்தாவில் உள்ள கணக்குத் துறையில் தலைமை அலுவலராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். நிதித்துறையில் பணியாற்றினாலும் அவரின் கவனம் முழுவதும் அறிவியலில் ஆய்வுகள் செய்வதிலேயே இருந்தது. அதற்காகவே தன்னுடைய வீட்டில் அறிவியல் ஆய்வகம் ஒன்றை உருவாக்கியும் வைத்து இருந்தார். ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தை அறிவியல் ஆய்வகத்திலேயே கழித்தார். நிதித்துறை பணியில் இருந்து பத்து ஆண்டுகளுக்கு பின்பு அதவாது 1917-ம் ஆண்டு நிதித்துறை பணியை விட்டு விலகி கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றினார். 1933-ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தில் இயக்குநராக பணியாற்றினார். இந்த நிறுவனத்தில் பணியாற்றிய முதல் இயக்குநரும் இவரே. தன்னுடைய பெயரில் ராமன் ஆராய்ச்சி நிறுவனம் என்ற நிறுவனத்தை 1943-ம் ஆண்டு தொடங்கினார்.


வாசிப்பை நேசித்தவர்: 


விளையாட்டுச் சிறுவனாக இருந்தபோதே தன் தந்தையின் அலமாரியில் இருந்த புத்தகங்களின்வசமானார் ராமன். அங்கே இருந்த எண்ணற்ற அறிவியல் புத்தகங்கள், அவரை அறிவியலின் பக்கம் திருப்பின.


ஆசிய ஜோதி - எட்வின் அர்னால்டு


தி எலமண்ட்ஸ் - யூகிலிட்


Sensations Of Tone - Hermann von Helmholtz.


இந்த மூன்று புத்தகங்களும் அவருக்கு மிகவும் நெருக்கமானவை. சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்ற ராமன், 1907-ம் ஆண்டில் நடைபெற்ற நிதித்துறைத் தேர்வில் முதல் இடம் பெற்றார். பிறகு அவரது வாழ்க்கை கொல்கத்தாவில் தலைமைக் கணக்கு அலுவலராகத் தொடர்ந்தது. அந்த வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தபோதும் அவரது அறிவியல் ஆர்வம் காரணமாக தன் ஊதியத்தின் பெரும்பங்கை ஆய்வுக்கே செலவுசெய்தார். அப்போதுதான் அவருக்கு `இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம்' பற்றித் தெரியவந்தது. பகல் முழுவதும் வேலை பார்த்துவிட்டு மாலையில் அங்கு சென்று ஆய்வுகள் செய்துபார்ப்பார். ஒருகட்டத்தில் தன்னுடைய வேலையைத் துறந்துவிட்டு முழுநேரமாக ஆய்வை மேற்கொள்ள ஆரம்பித்தார்.


ஆய்வுக் கருவிகள் கண்டுபிடிப்பு: 


தான் மேற்கொள்ளும் ஆய்வுக்குத் தேவையான சிறுசிறு கருவிகளைத் தானே உருவாக்கினார். முக்கியமான சில கருவிகளை மட்டுமே வெளிநாட்டிலிருந்து வரவழைப்பார். ஆய்வுகளை, மிகவும் சிக்கனமாகச் செய்து முடிப்பார். இவை தவிர, அறிவியல் இதழ் ஒன்றையும் நடத்திவந்தார். Mediterranean Sea வழியாகக் கடற்பயணம் மேற்கொண்டிருக்கும்போதுதான் `கடல் மற்றும் வானம் நீல நிறமாக இருப்பது ஏன்?' என யோசித்ததன் விளைவுதான் `ராமன் விளைவு'க்கு வித்தானது. தன் ஆய்வு மாணவர்களிடம், `அறிவியலை, கற்றலின் வழி மட்டுமே கண்டடைய முடியாது; தொடர்ச்சியான கேள்வி கேட்பதன் மூலமாகத்தான் அடைய முடியும்' என்பார். ராமனின் அந்தத் தொடர் கேள்வி கேட்கும் தன்மைதான் அவரை நோபல் பரிசு வரை அழைத்துச் சென்றது. 


நோபல் பரிசு:


நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் ஆர்தர் காம்ப்டனின் X- கதிர்கள் குறித்தான ஆய்வு, ராமனை `ராமன் விளைவு' குறித்த ஆய்வுக்குத் தள்ளியது. தொடர்ச்சியான ஆய்வுகளின் வழியே அதில் வெற்றியும் கண்டார். 1954-ம் ஆண்டில் பாரத் ரத்னா விருதும், 1957-ம் ஆண்டில் லெனின் அமைதிப்பரிசும் பெற்றார். இவரது மார்பளவு சிலை ஒன்று கொல்கத்தாவின் பிர்லா இண்டஸ்டரியல் அண்ட் டெக்னாலஜி நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ளது. ராமன் விளைவு கண்டுபிடிக்கப்பட்ட பிப்ரவரி 28-ம் தேதி `தேசிய அறிவியல் தின'மாகக் கொண்டாடப்படுகிறது.


ஐந்து வயதிலிருந்தே குழந்தைகளை விஞ்ஞானியாக வளர்க்க வேண்டும். அவர்களின் கேள்விகளை மதித்து சலிப்படையாமல், நாம் அதற்குப் பதில் சொல்ல வேண்டும். அவர்களின் கற்றல் அறிவு, புத்தகங்களோடு தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம் நாடு அறிவியலில் ஒளிரும்' என்பார் ராமன். சம்பளம், டார்கெட் எனத் தங்கள் கல்வி, அறிவு முழுவதையும் பணம் சம்பாதிக்கப் பலரும் முதலீடு செய்கையில், மிகப்பெரிய வேலையை உதறித் தள்ளிவிட்டு, தனக்கான திறமையும் விருப்பமும் உள்ள ஒன்றில் சிகரம் தொட்ட சர் சி.வி.ராமனும் `உலக நாயகன்'தான்.


1928-ம் ஆண்டு சர்.சி.வி.ராமன் பல்வேறு சோதனைகள் மூலம் ராமன் விளைவை கண்டறிந்தார். ராமன் விளைவு பற்றி கண்டறிய  ஏழு ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு தோல்விகளுக்கு பின்பு தான் ராமன் விளைவு கண்டறியப்பட்டது. ஒரிரு நாட்களில் எளிதாக கண்டுபிடிக்கப்பட்டது அல்ல. ராமன் முதன் முதலாக கடல் வழியாக ஐரோப்பா பயணம் செய்தபோதுதான் ராமன் விளைவு பற்றிய ஆய்வைத் தொடங்கினார். ஓளிச்சிதறல் பற்றிய இவரின் பெயராலேயே அழைக்கப்படும் ராமன் விளைவை கண்டுபிடித்தற்காக 1930-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.


வாழ்க்கையின் கடைசி வரை ஆய்வுகள்:


இவரின் அறிவியல் கண்டுபிடிப்புகளை பாராட்டி 1929-ம் ஆண்டு ஆங்கிலேய அரசு இவருக்கு சர் பட்டம் வழங்கியது, ஆனால் இவர் தன்னுடைய பெயருக்கு முன் சர் என்ற பட்டத்தை பயன்படுத்த விரும்பவில்லை. அறிவியலிலும், இயற்பியலிலும் அதிக ஆர்வம் கொண்ட ராமன் தன்னுடைய எண்பத்தி இரண்டாம் வயது வரை தொடர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டே இருந்தார். இவரின் மரணம் தான்  இவரின்  தனது ஆய்வுகளுக்கு ஓய்வை தந்தது. இவரின் பல்வேறு கண்டுபிடிப்புகள் இன்றும் அறிவியல் இயற்பியல் மற்றும்  தொழிற்துறை போன்ற பல்வேறு துறைகளில் பயன்பட்டுக் கொண்டு இருக்கிறது. இவ்வுலகில் இயற்பியல் துறை இருக்கும் வரை சர்.சி.வி.ராமன் பெயரும் உச்சரிக்கப்படும் என்பதில் துளியும் ஐயம் இல்லை எனலாம்.


யார் யாருக்கோ அடையாளம் உள்ள தமிழகத்தில் இம்மண்ணின் அறிவு சூரியன், நோபல் வென்றவனுக்கு ஒரு நினைவு அடையாளமும் இல்லை.


இன்று அந்த சர் சி.வி ராமனின் நினைவு நாள். எங்கள் தமிழகத்திலும் ஒரு நோபல் விஞ்ஞானி இருந்திருக்கின்றான், அவன் உலக விஞ்ஞானிகளுக்கு, யூத, ஜெர்மன் விஞ்ஞானிகளுக்கு சரிக்கு சமமாக அமர்ந்து விருது வாங்கியிருக்கின்றான் என்பதை நினைத்து பெருமை அடைவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages