20.11.20-கிருஷ்ணா..... கிருஷ்ணா.... - தென்குமரிக் கவிதைக்களம்

சனி, 21 நவம்பர், 2020

20.11.20-கிருஷ்ணா..... கிருஷ்ணா....

 








கிருஷ்ணா..... கிருஷ்ணா....


 Sundaram.


அஞ்சு மணிக்கெல்லாம் வந்துடுற பால்காரன் இன்னைக்கு அஞ்சரையாகியும் வரலையே... வாசலில் உட்கார்ந்து தெருவையே  பார்த்துக் கொண்டிருந்த சதாசிவம், வீட்டுக்குள்ள போகலாம்னு நெனைச்சு கொண்டு இருந்தபோது, பக்கத்து வீட்டின் கதவு திறந்து கமலம் வெளிப்பட்டாள்.


“ என்னாச்சு? இந்த நேரத்தில உட்கார்ந்து இருக்கேள்?”


“ பால்காரனுக்குத்தான் கார்த்தாலே யூஸ் பண்ண வச்சிருந்த பால்  கெட்டுப்போயிடுத்து. எனக்கு சுகர் இருக்கு இல்லையா, ரொம்ப பசி.  டிகாஷன் போட்டுட்டேன். பால் விடாமல் குடிக்கப் பிடிக்கலை.”


“ கொஞ்சம் இருங்கோ:


என்று உள்ளே போனவள்,உடனே வந்தாள்.


“ இந்தாங்கோ“


“மணக்க மணக்க காபி கொண்டு வந்து தந்தாள்.


“அதுக்குள்ள எப்படி?”


“எனக்கு கலந்து வச்சேன். அதுக்குள்ள  கோலம்போட்டு வந்துடலாம்னு வந்தேன்.”


ஒரு கணம் கமலம் அவரது அம்மா போலத் தோன்றினாள்.

தேங்க்ஸ் கூட சொல்லத் தோன்றாமல் வாங்கிக் கொண்டார்.


அம்மாக்கு தேங்க்ஸ் தேவையா? நாம அம்மாக்கு  சொல்லறோமா?


அவர் காபி குடிச்சு முடிக்கவும், பால்காரன் வரவும் சரியா இருந்துது.

அலம்ப எடுத்துண்டு போகக் கிளம்பினவரிடம்,


“ தாங்கோ  இப்போ  பத்து நிஷத்தில வேலைக்காரி வந்துடுவா!”


என்று வாங்கிக் கொண்டு  போனாள்.


சதாசிவம் பசி  தாங்க மாட்டார்  என்பதும் , ருசித்துச் சாப்பிடுவார்  என்பதும்,  அவர் மனைவி வேதவல்லி சொல்ல, கமலா கேட்டு இருக்கிறாள்.மனைவி


.....2...

இருந்தவரை,  நன்கு கவனித்து கொண்டாள். பிள்ளைகள் தங்களோடு வந்து விடும்படி சொன்ன போதும்,  ஊரைவிட்டுச் செல்ல அவர் விரும்பவில்லை.


 கல்யாணமாகி வந்து, இந்த ஊரிலேயே ஐம்பது  வருஷமாக இருக்கிறார்.


காலையில் டிபன், சமையல் செய்து கொடுக்க ஒரு மாமி வந்து  இரண்டையும் செய்து வைத்து விட்டு போய்விட,  இவர் இரவு மட்டும் கோதுமை தோசை செய்து கொள்வார். ஒரு சில நாள் சமையல் மாமி வராவிட்டால்  கமலம் டிபன் கொடுப்பாள். கொஞ்சம் குழம்பும் கொடுப்பாள். சாதம் இவர் வைத்துக் கொள்வார்.


கமலாவுக்கு ஒரு மகன். ஒரு பேத்தி.  மருமகள் நல்லவள்தான் என்றாலும்,கொஞ்சம் பிடிவாதக்காரி.  தான் நெனைச்சது தான் அந்த வீட்டில் நடக்கும்னு நினைப்பாள். கமலா பலதும் விட்டுக் கொடுத்து விடுவாள்.  சிலவற்றில் கமலாவும் பிடிவாதமாக நிற்கும்போது , அங்கு அப்பப்போ  பிரச்சனை  வருவதும்  தீர்வதுமாக  இருக்கும் ..


கமலாவுக்கு ஏழுபத்திரண்டு வயதாகி விட்டாலும் சமையல் அவர் தான்.

அதே போல,  விசேஷ நாட்டிகளில் நேரமே எழுந்து குளித்து ஆச்சாரமாக ஸ்வாமிக்கு நைவேத்தியங்கள் செய்வார். மருமகள் ஸ்வேதா வேலைக்கு போவதால் இதில் எல்லாம் தலையிட மாட்டாள்.


 தொந்தரவு செய்யாமல் விட்டுவிட்டால் போதும்  என்று  நினைப்பாள். மகன் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்து விடுவான். இரண்டு பேரில் யாருக்கும் பரிந்து பேசி வரமாட்டான் என்பதால், அவனிடம் இருவரும் புகார் தெரிவிக்க மாட்டார்கள்.

அதைத்தானே அவனும் எதிர்பார்த்தான்.


கமலாவுக்கு நவராத்திரி ஏன்றால் இன்னும் பல வருடங்கள் வயது குறைந்தது போல உற்சாகமாகி விடுவாள். 


 நவராத்திரிக்கு பல  மாதங்கள்  முன்பிருந்தே டைலர் கடையில் இருந்து துண்டுத் துணிகளை வாங்கி பொம்மைகளுக்கு துணி தைக்க ஆரம்பித்து விடுவாள். தினமும் அவைகளுக்கு புதிது புதிதாக மாற்றுவாள்.


........3......

நிறைய பொம்மைகள் சேர்ந்து விட்டதால் அவைகளை கிடைக்கும் இடத்தில் வைப்பாள். ராமர் அருகில் போலீஸ்க்காரர் நின்று கொண்டு இருப்பார். செக்கூரிட்டியா?  டாக்டர் பொம்மை அருகே புலி நின்று கொண்டிருக்கும் .கோயில் வாசலில் நுழைய  வாசலை விட பெரிய பொம்மை நின்றுகொண்டு இருக்கும்..மீராவை பார்த்தபடி குறவன் நிற்க,  குறத்தி அருகில் செட்டியார் உட்கார்ந்து வியாபாரம் பார்த்துக்கொண்டிருப்பார்.


 ரசிக்க நன்றாக இருக்கும்.

கமலாவிடம் மிக மிக பழமையான ஒரு கிருஷ்ணர் பொம்மை இருந்தது. பெயிண்ட் பல  இடங்களில் இல்லாமல் இருக்கும்.  ஆனால் கட்டாயம் அதை வைத்தே தீரவேண்டும் என்பாள் கமலா


.  சின்ன வயதில் அப்பாவிடம் அடி வாங்கி அடம் பிடித்து, வாங்கிக் கொண்டது.  அப்பா ஞாபகமாக வைத்திருந்தாள்.


பல பொம்மைகள் பள பளவென இருக்க, இது மட்டும் எப்படியோ இருக்கும். ஸ்வேதா வேண்டாம் என்றால் கண்டிப்பா வைக்கணும்னு பிடிவாதம் பிடிப்பாள்.  


பேத்தி தீபா பாட்டிக்கு துணை நிற்ப்பாள். எல்லா பொம்மைகளையும் நவராத்தி முடிந்து எடுத்து வைக்கும் போது கமலாவுக்கு அழுகை வரும். அடுத்த வருஷம் நான் இருந்தால் உங்களை எல்லாம் பார்ப்பேன் என்று பொம்மையுடன் பேசுவாள். 


 அடுத்த வருடம் பேப்பரில் சுற்றியுள்ள பொம்மைகளை எடுக்கும் போது இது என்ன பொம்மையாக இருக்கும் என்று கெஸ் பண்ணி விளையாடுவார்கள் பாட்டியும் பேத்தியும்.


“பாட்டி எங்க ஸ்கூலில் பொம்மை கொலு வைக்க பொம்மை கொண்டுவரச் சொல்லறாங்க!  உன்னோட கிருஷ்ணன் பொம்மையை தருவாயா?”


தீபா சீண்டுவாள்.


“ போடி அது என் அப்பா எனக்கு ஆசையா வாங்கி தந்தது”

எடுத்து வைத்துக்கொள்வாள்.


அந்த வருடம் நவராத்திக்கு கமலா வைத்திருந்த கிருஷ்ணன் பொம்மையை

ஸ்வேதா ஒரு பெரிய பொம்மைக்கு பின்னால் மறைத்தபடி  வைக்க,

கமலாவின் குரல் ஓங்கி ஒலித்தது.


.....4....

“என்னோட கிருஷ்ணன் பொம்மை எங்க வீட்டுக்கு வந்து அறுபத்தஞ்சு வருஷமாச்சு. நீ உன் வீட்டில் இருந்து வந்து பதிமூணு வருஷம் கூட ஆகலை.

நீ கொண்டு வந்த பொம்மை பின்னால என் கிருஷ்ணனை வைக்கிறே?”


“ அம்மா தப்பா நினைக்காதீங்க! நான் அப்படி நினைக்கலை. பெயிண்ட் எல்லாம் போய் எப்படியோ இருக்கு ..வேண்டாம்னா கேக்கமாட்டேங்கறீங்க.. அதுதான்”


“ அப்போ நாளைக்கு நான் படுத்துட்டா என்னைத் தூக்கி போட்டுடுவயா?”


ஸ்வேதா கிருஷ்ணனை எடுத்து முன்னால் வைத்த பின்னரே கமலா அமைதியானாள்.


மறுநாள் மருமகள் வேலைக்கு போவதற்குள், கோயிலுக்கு சென்று வரலாம் என்று கமலா போய் வந்தாள். வந்து பார்த்தபோது கிருஷ்ணன் பொம்மையை காணவில்லை.


 மணி ஒன்பதரை ஆகிவிட்டது. ஸ்வேதா வேலைக்கு நேரமாகி விட்டதால் அவசரமாக கிளம்பிக் கொண்டிருக்க, கமலா கிருஷ்ணன் பொம்மையை காணாமல்  கொதித்துப் போனாள்.


“எனக்குத் தெரியாது அம்மா.  தீபா வந்தா கேக்கலாம் “


“அவ கிட்ட எதுக்கு கேக்கணும்? நீதான் என்னவோ பண்ணிட்டாய்!”


“சொன்னா கேளுங்க. எனக்குத் தெரியாது. நான் வேணா சாயங்காலம் வரும்போது பத்து கிருஷ்ணன் பொம்மை வாங்கி வரேன். இப்போ நான் கிளம்பணும்.”


“ஏண்டி நீ வாங்கறதும், எங்கப்பா எனக்கு வாங்கித் தந்ததும் ஒண்ணாகுமா?


பதில் சொல்லிக் கொண்டிருந்தால் நேரமாகிவிடும் என்பதால் ஒன்றும் சொல்லாமல் கிளம்பினாள்.

...5...

கமலாவுக்கு அழுகை வந்தது. சின்ன குழந்தைபோல அழுதாள்.


“பாட்டி எங்க ஸ்கூலில் பொம்மை கொலு வைக்க பொம்மை கொண்டு

வரச் சொல்லறாங்க!  உன்னோட கிருஷ்ணன்

 பொம்மையை தருவாயா?”


பேத்தி கேட்டது ஞாபகத்துக்கு வந்தது.  தீபா கொண்டுபோய் இருப்பாளோ? என்று எண்ணினாள். அன்று அவள் சாப்பிடவே இல்லை.


மதியம் மூணு மணி இருக்கும் கதவு தட்டும் ஓசை கேட்டது.

சதாசிவம் நின்றுகொண்டிருந்தார்.


கமலா கதவைத் திறந்தாள்.


“வாங்கோ”


உள்ளே அழைத்தாள்.


“நான் கார்த்தால நேரமே வெளில போயிட்டேன்.. தீபா இல்லையா?”


“அவ வர நேரம்தான்.. என்னாச்சு?”


“அவ வந்தா கொடுத்திடுங்கோ..”


“என்னது இது?”


சுற்றியிருந்த பேப்பரைப் பிரித்தாள்.


தீபா பெயிண்ட் பண்ணி இன்னிக்கே வேணும்னு சொன்னா.

வேலை முடிச்சிட்டுதான் வெளில போனேன்..


அவளது கிருஷ்ணன் பொம்மை  அப்பா வாங்கித் தந்தபோது எப்படி இருந்ததோ அதே மாதிரி பளபளவென அவளைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages