நினைவோ ஒரு பறவை.....
வியாழக்கிழமை விசு வீட்டுக்கு வரச்சொல்லியிருந்தான் .
அவன் பாட்டி கிளம்புவதற்கு ரெடியாக சின்னதாய் பேக் வைத்து இருந்தாள் . நான் ஆட்டோ பிடித்து பாட்டியை கூட்டிக்கொண்டு மதுரை செல்வதற்காக ரயில் நிலையம் வந்து இருந்தேன் . பகல் நேர பிரயாணம் என்பதால் படிப்பதற்கு சில வார பத்திரிகைகளை வாங்கி கொண்டேன். ஆனால் போகும் வழியில் பாட்டி என்னுடன் பேசிக்கொண்டே வந்ததால் பத்திரிகை படிக்கவில்லை...
அதைவிட பாட்டி சொல்லிக்கொண்டு வந்த விஷயங்கள் சுவாரசியமாக இருந்தன. பாட்டி பிறந்து வளர்ந்தது எல்லாம் மதுரைதானாம் .அன்னக்குழி மண்டபம் என்ற பள்ளியில்தான் படித்தாராம் . வீடு கோயில் அருகே இருந்ததால் லீவு நாட்களில் கோயிலிலும் சற்று தள்ளி இருந்த காலியிடங்களிலும் தான் விளையாடுவார்களாம் .தனக்கு வயதாகி வருவதால் கடைசியாக ஒருமுறை எல்லாவற்றயும் பார்க்க ஆசையாக இருப்பதாக சொன்னார்.
தன்னை பற்றியே சொல்லிக் கொண்டு வந்த பாட்டி “ சட்“ என்று நிறுத்தி என்னை பார்த்து,
“ஆமா, நீ ஏன் கல்யாணம் பண்ணிக்காம இருக்கே?
என்று கேட்டாள்.
எதை சொல்வது?
நான் காதலித்த பெண் நிர்பந்தத்தால் வேறு ஒருவருக்கு மனைவி ஆனதையும், அவள் நினைவு இருப்பதால் வேறு யாரையும் திருமணம் செய்ய முடியாமல் இருப்பதையும் எப்படி பாட்டிக்கு சொல்லி புரியவைப்பது?
“ சரி சரி விருப்பம் இல்லாட்டி சொல்ல வேண்டாம்.”
நான் பதில் எதுவும் சொல்லாமல் லேசாக சிரித்தேன். அதன் பின் பேச்சுவார்த்தையை தவிர்க்க நான் ஒரு பத்திரிகையை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். பாட்டி ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்தபடி வந்தார்.
காற்று நன்கு வீசியது. பாட்டி அதை அனுபவிப்பதுபோல கண்களை மூடிக்கொண்டார் . தூங்குகிறாரா அல்லது பழைய நினனைவுகளில் மூழ்கி உள்ளாரா ? அறிய முடியவில்லை.
மதுரை கோயிலுக்கு அருகே ஒரு ஹோட்டலில் அறை எடுத்துக்கொண்டோம்.
பயணக்களைப்பில் பாட்டி சிறிது தூங்கினார். பாட்டி வீட்டிலிருந்து கொண்டுவந்திருத்த சாப்பாட்டை ரயிலிலேயே நாங்கள் சாப்பிட்டு விட்டதால் வேறு ஒன்றும் எங்களுக்கு வேண்டி இருக்கவில்லை.
மாலை நான்கு மணிக்கு ஆட்டோ பிடித்து, பாட்டி படித்த பள்ளி, அவரது பழைய வீடு முதலியவற்றை பார்க்க கிளம்பினோம். புதிய புதிய கட்டிடங்கள் முளைத்திருந்தன. பாட்டி முதலில் குழம்பியவர் பழைய வீடுகளை பார்த்து தன் வீட்டை உறுதிப்படுத்த திரும்பினார் அவரது வீடு இருந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு இருந்தது .
பாட்டியின் கண்களில் கண்ணீர் வந்தது. கண்களை துடைத்தபடி,
“ சேகர் வா அந்த வீடுகளுக்கு போகலாம்.”
“ அங்க யார் பாட்டி இருக்காங்க?
.....2........
“ ஒரு வீட்டில் என் கூட புடிச்ச கமலா இருக்கா. இன்னொரு வீட்ல சுப்பிரமணி இருக்கான்
அவங்களை போய் பார்க்கலாம்.”
அந்த வீட்டின் கால்லிங் பெல்லை அடித்தேன்.
“ யாரு? ஒரு இருவது வயது மதிக்கத்தக்க வாலிபன் கதவை திறந்தான்.
“ நாங்க பாண்டிச்சேரியில் இருந்து வருகிறோம், இங்கே சுப்ரமணின்னு.....”
“நான் தான் சுப்பிரமணி. நீங்க யாருனு தெரியலேயே?”
நான் சிரித்தபடி, தம்பி நாங்க தேடிட்டு வந்தது உங்க தாத்தாவை.”
“ வாங்க உள்ளே வாங்க. அம்மா இங்க வாயேன்.”
உள்ளே இருந்து, ஒரு நடுத்தர வயது பெண் வந்தார்.
“ வாங்க, என்ன விஷயம்?”
“நாங்க பாண்டிச்சேரியில் இருந்து வரோம். சின்ன வயசில இவங்க வீடு எதிர்த்தப்பால இருந்திச்சு. இப்ப பிளாட் ஆயிடிச்சு . சுப்ரமணியன் சார் இவர் கூட படிச்சவர். அதுதான் அவரை பார்த்திட்டு போகலாம்னு வந்தோம்.”
அந்த பெண் சற்று தயங்கி,
“ அவரு.. அவரு... இரண்டு வருஷம் முன்னாடி செத்து போயிட்டாரே....”
பாட்டியின் கண்கள் கலங்கின .
“அடுத்த வீட்டில் கமலா இருக்காங்களா இல்லே......
பாட்டி விசும்பியபடி கேட்டாள்.
“ கமலா இருக்காங்க. போய் பாருங்க.”
பாட்டிக்கு சற்று நிம்மதி ஏற்பட்டது. சொல்லிக்கொண்டு கிளம்பினோம். கமலாவுக்கு காது சுத்தமாக கேட்கவில்லை. கண் பார்வையும் குறைந்து போனதால் ரொம்ப கஷ்டபட்டு புரிய வைக்க வேண்டிவந்தது.
இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள முடியாமல் கட்டி தழுவி, ஆனந்த கண்ணீர் விட்டனர். பாட்டி ஊரில் இருந்து கொண்டுவந்திருந்த சின்ன எவர்சில்வர் சம்படத்தை கமலாவிடம் கொடுத்தார்.
“ என்னடி இது?”
“ உனக்கு பிடிக்குமேனு ரவா லட்டு செஞ்சு கொண்டுவந்திருக்கேன்.”
“ என்னது?
மேற்கொண்டு கத்திபேச பாட்டிக்கு சக்தியில்லாததால்,
ஒரு ரவா லட்டை விண்டு கமலாவின் வாயில் போட, சுவைத்தவர்,
.....3.............
“ ரவா லட்டு..... ரொம்ப நல்லா பண்ணியிருக்கேடி.” உன் கைப்பக்குவம் யாருக்கு வரும்? ராமனுக்குத்தான் கொடுத்து வைக்கலை. அல்ப ஆயுசுல போயிட்டான். “ பாவி, நான் மகாபாவி” அழுதாள்.
,
“ சும்மா இருடி, அழாதே .”
பாட்டி சொன்னது கமலாவுக்கு கேட்கவில்லை.
“ நீ வீசி எறிந்த பந்தை நீ தான் எடுத்துதரணும்னு நான் சொன்னபோ ... ராமன் பந்தை எடுக்கப்போய் உசிரை விட்டுட்டானேயே ஜானகி.....´ அழுதாள்.
பாட்டிக்கும் உதடுகள் துடிக்க, கண்கள் கலங்கி அழுதாள். சிறிது நேரம் இருந்து விட்டு கிளம்பி விட்டோம்.
“ பாட்டி கோயிலுக்கு போகலாமா?”
“ நாளைக்கு போகலாம் சேகர், மனசு சரியில்லை.”
“ சரி பாட்டி”
அடுத்தநாள் கோயிலுக்கு போய் தரிசனம் முடித்து திரும்பும்போது, வெளிப்ரகாரத்தில் ஒரு தூண் அருகே போய் அமர்ந்துகொண்டார்.
“ ஏன் பாட்டி? இங்கே உட்கார்ந்துக்கிட்டிங்க? கால் வலிக்குதா ?”
“ இல்லே கொஞ்சம் இங்கே உட்கார்ந்து அப்புறம் போகலாம்.”
பாட்டி தூணில் எதையோ தேடினார்.
“ என்ன பாட்டி தேடுறீங்க?”
“ ஓண்ணுமில்லே “.
... பாட்டி சொன்னாரே தவிர, கண்கள் அலை பாய்ந்தன.
பின் ஒரு இடத்தை பார்த்து, பாட்டியின் முகத்தில் புன்னகை படர்ந்தது. நான் பாட்டி
அருகே சென்று பார்த்தேன்.
அந்த தூணில் ஜானகிராமன் என்று ஆணியால்
அழுத்தமாக எழுதப்பட்டு இருந்தது. பாட்டியின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
“ பாட்டி ஏன் அழறீங்க?”
“ சேகர் நான் உன்கிட்ட ஒண்ணு சொல்வேன் யார் கிட்டயும் சொல்லகூடாது. நான் ஒன்பதாவது படிச்சிட்டு இருந்தபோது என் சொந்தத்தில ராமன்னு ஒருத்தன் இருந்தான்.
அவனுக்கு அப்போ பதினேழு வயதிருக்கும். அவனுக்குத்தான் என்னை கல்யாணம் செய்து கொடுப்பதாக இருந்திச்சது . ஒருநாள் விளையாடிகிட்டு இருந்தபோ, நான் வீசின பந்து பாம்பு புற்று பக்கம் போய் விழிந்திடிச்சு.
கமலா பிடிவாதமா பந்து வேணும்னு அழுதா .... அதை எடுக்க எனக்கு பயமா இருந்திச்சு. அங்கு வந்த ராமன் தைரியமா பந்தை எடுத்து தந்தான். ஆனால் புற்றுக்கு வந்த பாம்பை திரும்பி போகும் போது தெரியாமல் மிதிச்சிட்டான்
. உடனே அது அவனை கொத்த, அவன் செத்துப்போயிட்டான். இந்த தூணில் என் பெயரையும் அவன் பெயரையும் சேர்த்து ஜானகிராமனு எழுதி வச்சிருக்கான் . எனக்கு கல்யாணம் ஆனபோது அவர்கிட்ட எல்லாத்தையும் சொன்னேன். என்னை அன்பா கவனிச்சுக்கிட்டாரு. அவர் இருந்தபோ அடிக்கடி மதுரை வந்திருக்கோம். அவர் இறந்தபின் நான் மதுரை வருவதில்லை.
.....4.......
இன்னும் அதிகநாள் நான் இருக்க மாட்டேன்ன்னு நினைப்பு வந்திருச்சு. அதனால கடைசியா மதுரையை பார்க்க ஆசை இருந்திச்சு. அதுதான் வந்தேன்.
கேட்க ...கேட்க... எனக்கு ஒரே பரவசமாய் இருந்தது
. என் கண்களும் கலங்கின.
அன்றே பாண்டிச்சேரி கிளம்பினோம்.
“ டேய் ரொம்ப நன்றிடா “
விசு என் கைகளை பற்றி குலுக்கினான்.
“ போடா... நான் தான் உனக்கு நன்றி சொல்லணும். மதுரை போயிட்டு வந்ததுல என் மனசும் மாறிடுச்சு. வீட்ல சொல்லி பொண்ணு பாக்க சொல்லணும்.”
சிரித்தபடி பாட்டியை பார்த்தேன்.
பாட்டி ஸ்நேகமாய் சிரித்தார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக