அமுதை பொழியும் நிலவே..
...
அமிழ்தினி... ஆமாம்! அவள் அமுதைப் போன்றவள் தான்... பேரழகி.. தனது மகள் அழகில் மட்டும் அல்ல, வீரத்திலும் கலைகளிலும் குறிப்பாக சொல்வதைக் கேட்டு சித்திரங்கள் வரைவதிலும் கை தேர்ந்தவள் என்பதில் அரசருக்கு பெருமிதம்தான்.
மிக சமீபகாலமாக அரசர் அவளுக்கு இணையாக அரச குமாரனை தேர்வு செய்து கொண்டிருந்தார். ஆனால் அமிழ்தினி அதில் அதிக நாட்டம் காட்டாமலும் தந்தையிடம் மிக்க பரிவுடன் இல்லாமலும் இருப்பது போல அரசர் வேம்புலி உணர்ந்தார்
. இது பற்றி அறிய அவளை வரச்சொல்ல, அவள் சித்திரகூடத்தில் ஓவியம் வரைந்து கொண்டிருப்பதாகவும் சற்று நேரம் கழித்து வருவதாக சொன்னாள்.
தாயின் பரிவும் தந்தையின் பாசமும் காட்டினாலும், செல்ல மகளும் சென்று விட்டால் தனக்கு என்று யாரும் இருக்க மாட்டார்களே! என்று கவலை அடைந்தார் . அவள் வருவதற்கு நேரம் ஆன காரணத்தினால் அவரே சித்திரகூடம் சென்றார்.
உடனே அவள் ஒரு திரைச் சீலை போட்டு ஓவியத்தை மூடி விட்டாள். அவசர அவசரமாக மூடியதால் முகம் மட்டும் சரியாக தெரியவில்லை. ஆனால் ஒரு ராஜகுமாரனை வரைந்து கொண்டிருந்தாள் என்பது தெரிந்தது.
“யாரம்மா இது?
“ தந்தையே! இன்னும் ஓரிரு தினங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள்.. முழுவதும் முடிந்ததும் காட்டுகிறேன்”
“உனது உள்ளம் கவர்ந்த அரச குமரனா?”
ஒன்றும் சொல்லாமல் அவரையும் அழைத்துக் கொண்டு அரச சபைக்கு வந்தாள்
இரவில் வேம்புலிக்கு தூக்கம் வரவில்லை. மகள் வரைந்த அந்த ஓவியத்தில் இருந்த அந்த முகம் எப்படி இருக்கும்? என்று பார்க்க ஆசைப் பட்டார்.
மெதுவாக சித்ரக் கூடம் சென்றா.ர் திரையை விலக்கிப் பார்த்தவர், அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டார்.
இது.... இது... தன்னையும் மஹாராணியையும் சிறை பிடித்துச் சென்ற வாஞ்சியூர் இளவரசன் கார்வண்ணன் அல்லவா?
இவனது முகத்தை துல்லியமாக இவள் எப்படி வரைந்தாள்?
என்று குழம்பியவாறே வந்து பஞ்சணையில் சாய்ந்தார்.
தூக்கம் வரவில்லை.
மூன்று நாட்கள் கழிந்தன
அமிழ்தினி அரசரை காண வந்தாள்.
“தந்தையே! வாருங்கள் சித்திரக்கூடம் செல்லலாம்”
மிக மிக அழகாக கார்வண்ணன் நேரில் நிற்பது போல தோன்றியது.
வேம்புலிக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது இவள் எப்படி இத்தனை துல்லியமாக வரைந்தாள் என்று.
“யாரம்மா இது?”
“தந்தையே! எனக்கு தெரியவில்லை... எனது மனம் போன போக்கில் வரைந்தேன் முழுவதும் வரைந்தும் முகத்தில் உயிரோட்டம் தெரிகிறது . நேரில் நிற்பது போலவும் என்னுடன் பேசுவது போலவும் தோன்றுகிறது”
அரசன் வேம்புலி முகம் கோவத்தில் சிவந்தது.
“உங்கள் முகத்தில் சினம் தெரிகிறதே! உங்களுக்கு இந்த ஓவியம் பிடிக்கவில்லையா?”
“அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை ஆனால் இந்த முகத்தைப் பார்த்தால் கோவம் வருகிறது”
“ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா?”
“ம்ம்... இவன் என்னையும்... உன் தாயையும்... சிறை பிடித்துச் சென்றவன்”
“அப்படியா? எதற்கு?”
“எதற்கு என்றெல்லாம் கேட்காதே! நமது நாட்டின் மீது படை எடுத்து வந்து சிறை பிடித்துச் சென்றான்.”
“நான் சொல்லவா?”
“என்ன...?”
“ஆமாம்... நான் சொல்லவா?”
எனது தாய் சுயம் வரத்தில் உங்களுக்கு என் தாயின் மீது நாட்டம் இருந்தாலும் எனது தந்தை கார்வண்ணன் அவரைத் திருமணம் செய்து கொண்டு போய் விட்டதால் என் தாயின் மீது நீங்கள் கொண்டிருந்த தீராத மோகம் அவரை அடைய வேண்டும் என்ற தீராத வெறி எனது தாயை அபகரித்து வந்தீர்கள்.
எனவே அவர் உங்கள் மீது படை எடுத்து எனது தாயை அழைத்துச் சென்றார். மீண்டும் நீங்கள் வஞ்சகமாக எனது தந்தையைக் கொன்று என்னையும் எனது தாயையும்உங்கள் நாட்டுக்கு அழைந்து வந்தீர்கள்
உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?
மரணிக்கும் தருவாயில் என் அன்னை என்னிடம் எல்லாம் சொன்னார். எனது தாயின் ஒரு ஆபரணத்தில் மிக மிக சிறிய அளவில் எனது தந்தையின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.”.
“சரி! இதெல்லாம் தெரிந்து நீ இப்போது என்ன செய்யப் போகிறாய்?”
“என் தந்தைக் கொன்று, என்னைப் பணயமாக வைத்து, என் தாயை வேட்டையாடிய உங்களை என்ன செய்ய வேண்டும் என்று கூடவா நான் யோசிக்காமல் இருப்பேன்?”
சித்திரக் கூடம் அதிரும் வண்ணம் சிரித்தாள் அமிழ்தினி..."



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக