பெண்.... மனம்.....
அவை ஜோதிடரை அரசன் அழைப்பதாக கூறவே, ஓடோடி வந்தான் செங்குட்டுவன்.
“ வணங்குகிறேன் அரசே”
“ செங்குட்டுவா நீ நேற்று என்ன சொன்னாய்? மறுபடியும் சொல்.”
“தங்களுக்கு தென் திசையில் இருந்து ஒரு அதிசயமும், அதே சமயம் ஒரு போர் எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதும் உங்களுக்கு மிக மிக வேண்டிய ஒருவர் உங்களுக்கு பகை யாவார் என்றும் புலப்படுகிறது மன்னா”
“ எனக்கு மிக மிக வேண்டியவர் தென் திசையில் யாரும் இல்லையே! அண்டை நாட்டுடன் நாம் நட்புடனேயே இருக்கின்றோம். விளங்கவில்லை... அதை விட ஒரு அதிசயம் என்றும் சொல்கின்றாயே .. ஒன்றும் புரியவில்லை பார்க்கலாம் “
இந்த பேச்சுவார்த்தை நடந்து ஒரு மண்டலம் கழிந்து இருக்கும்.
செங்குட்டுவனும் அரசனும் தோணியில் சென்றுகொண்டிருந்த போது, மிக மிக பலத்த காற்று வீசி படகை மறுபுறம் நகரச் செய்ய அங்கே தூரத்தில் ஒரு அரண்மனை தெரிகிறது.
“ செங்குட்டுவா! அது யாருடைய அரண்மனை?
“ அரசே அது சிற்றரசர் பாண்டியனுடையது”
“ அப்படியா?”
“ஆமாம் அரசே அவருக்கு ஒரே ஒரு செல்ல மகள் இருக்கிறார் என்றும், மிக நல்ல அழகி என்றும் கேள்விப் பட்டு இருக்கிறேன்.”
அதற்குள் காற்றின் வேகமும், அரசரின் ஆசையைப் போன்று வேகமாக படகை அரண்மனையை நோக்கி செலுத்தியது. என்ன விந்தை? யார் அந்த அழகி? அரசர் வியந்து பார்த்துக்கொண்டிருக்க,
உப்பரிகையில் நின்று கொண்டிருந்தவள் இவர்களைப் பார்த்து வேகமாக இறங்கி வந்தாள். வந்தவள் அரசரை நேருக்கு நேராக பார்த்தாள்.
இதுவரை அரசரை யாரும் இந்த விதம் நேர்கொண்டு பார்த்ததில்லை. அவளது கூர்மையான பார்வையும் வளைந்த புருவமும் ஒவ்வொரு அங்கங்களும் தேர்ந்த சிற்பி செதுக்கிய சிலை போன்று இருந்தது.
“பெண்ணே உனது பெயர்?
“ என் பெயர் செண்பகக்குழல்வாய்மொழி “
.
“ஆகா! ஆகா! அற்புதம்”
“ அரசே உங்கள் பெயர்?”
“என் பெயர் அன்பரசன்”
“ஓ... அன்புக்கு அரசன் நல்ல பெயர்”
“ஆமாம்! உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உன்னை திருமணம் செய்யலாம் என்று நினைக்கின்றேன்.”
“ அரசே நீங்கள் மட்டும் முடிவு செய்தால் போதுமா?”
“ கவலைப்படாதே! நான் என் தந்தையுடன் வந்து உன் தந்தையுடன் பேசுகிறேன்”
கலகலவென்று சிரித்தாள்
“ அரசே அதெல்லாம் சரி! நானல்லவா முடிவு செய்ய வேண்டும்?”
அரசனுக்கு கோபம் வந்தது.
“எனக்கு என்ன குறை?”
“உங்களுக்கு குறை என்று யார் சொன்னார்கள்?”
“ பிறகு?”
“அரசே எனக்கும் விருப்பம் இருக்க வேண்டாமா?”
“உனக்கு விருப்பம் இல்லையா?”
“விரும்புகிறேன்.. உங்களுடன் வந்துள்ளவரை..
அரசன் வாள் எடுத்து செங்குட்டுவனை வெட்ட முற்பட செங்குட்டுவன் சிரம் தாழ்த்தினான்.
“அரசே நிறுத்துங்கள்! நீங்கள் கோபத்தில் உங்கள் நண்பரை வெட்ட துணித்து விட்டிர்களே!”
“இவர் எனது அரண்மனை ஜோதிடர் செங்குட்டுவன்”
“அரசே உங்களை விட அவர் என் மனதினைக் கவர்ந்தார். உடனே அவரை வெட்ட முற்பட்டீர்கள் நாளை நீங்களும் நானும் திருமணம் செய்து மகவை ஈன்று வளர்த்து, பின்னர் அவன் உங்களைவிட தலை சிறந்த அரசனாக உருவானால் அவன் மீது பாசம் கொள்வீர்களா? அல்லது கொல்லத் துணிவீர்களா? நீங்கள் அந்தப்புரத்தில் மற்ற பெண்களுடன் சந்தோஷமாக இருக்க, நாம் பின் ஒருநாளில் வெளியில் செல்லும்போது, நான் யாராவது அழகான கட்டுடல் காளையைக் கடைக்கண்ணால் காண்பதை கண்டால் அவரை உயிருடன் விடுவீர்களா? அதை நீங்கள் கவனிக்க தவறி, நாம் தனிமையில் இருக்கும்போது நீங்கள் என்னைத் தழுவ, நான் மனதால் அந்த காளையை நினைத்து, உங்களை இறுக்கி அணைத்தால் நீங்கள் அந்த அணைப்பின் மூலம் ஏதாவது புரிந்து கொள்ளத்தான் முடியுமா?”
“செண்பா அழகால் மட்டும் அல்ல உனது பேச்சாலும் என்னைக் கவர்ந்து விட்டாய்! நான் என்ன செய்ய வேண்டும்?”
“அரசே செங்குட்டுவனின் தெளிந்த முகமும், கூர்மையான நாசியும் தாமரை மலரைப் போன்ற இதழ்களும் என்னைக் கவர்ந்து விட்டன.
எனக்கு அரச வாழ்க்கையும் பிடிக்கவில்லை. எனவே என் தந்தையை சந்தித்து எனக்கும் செங்குட்டவனுக்கும் திருமணம் செய்விக்க முயற்சி செய்யுங்கள் மன்னா!”
“பெண்ணே! நானும் உன்னிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். செங்குட்டுவனுக்கு உன்னைப் பிடிக்க வேண்டுமே”
“அதை நீங்கள் அவரிடமே கேளுங்கள்”
அன்பரசன் திரும்ப.
செங்குட்டுவனும் செண்பகக்குழல்வாய்மொழி யும் ஒருவரை ஒருவர் புன்முறுவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக