24.11.20-உறவுகள் - தென்குமரிக் கவிதைக்களம்

செவ்வாய், 24 நவம்பர், 2020

24.11.20-உறவுகள்



கவிச்சிகரம் அமுதன், தமிழ்நாடு


உறவுகள்


அவுக அண்ணந்தம்பிக மூணுபேரு அவுக அப்பா பெரிய வசதியானவர் கெடையாது. ஏதோ பொழப்பு ஓடிக்கிட்டு இருந்துச்சு. அந்த ஊருல ஆம்பளைக எல்லாம் ஒண்ணு குலத்தொழில் செய்வாக . இல்லைன்னா புரோக்கர்கிட்ட பணம்குடுத்து வெளிநாடு போயி சம்பாதிச்சுட்டு வருவாக அப்புடிப்போயிவந்தவுக எல்லாம் கொஞ்சம் வசதியா ஆயிடுவாக. ஆப்ப இங்க இருக்குற பொம்பளைகதான் எல்லாத்தையும் பாத்துக்கணும். பெரும்பாலான வீடுகல்ல பொம்பளைக தான் பொறுப்பு.

 

 அப்புடிச் சம்பாரிச்சு காசுவர ஆரம்பிச்சிடுச்சுன்னாஅவுக செய்யிற மொதவேல புருசனோட சொந்தங்களை நெருங்க விடாமப் பாத்துக்கிறதுதான். அப்ப அவுகளுக்கு நம்பிக்கையானவுக பொம்பளையோட கூடப்பொறந்தவுக இல்லாட்டினா அவுகளோட அப்பா அம்மாமாருகதான்.

 

 இந்தக்குடும்பத்துலயும் அதுதான் நடந்துச்சு. மூத்தவன் உள்ளூரிலே வேலைக்கிப்போனான். மொதத்தடவையா ரெண்டாவது மகன் சிங்கப்பூர்போனான்

 

 கொஞ்சம் கொஞ்சமாச்சேத்து காசு அனுப்பினான். அப்ப அதை வாங்கி நல்லபடியாசேத்துவைச்சான். மூத்தவன்.

 

 மூத்தவன் புடிச்சபொண்ண கலியாணம் பண்னிக்கிட்டான் . ரெண்டாவதுமகன் ஓரளவு சம்பாரிச்சபின்னாடி அவனுக்கு கலியாணம் பண்ணுறதுன்னு முடிவெடுத்தாக. அப்ப அவன வரச்சொல்லிட்டு மூணாவது மகன அனுப்புறதுன்னு முடிவாச்சு. ரெண்டாவது மகனுக்குப்பொண்ணு பாக்கயில பொண்ணு வீட்டுக்காரவுக கண்டிசன் போட்டாக மாப்புள்ள வெளிநாடு போகக்கூடாது.உள்ளூரிலதான் இருக்கனும்ன்னு. அதுக்கு ஒத்துக் கிட்டுத்தான் கலியாணமே நடந்துச்சு

 

 அவனுக்கு உள்ளூரில கடையப்போட்டு வியாபாரத்துல எறக்கிவிட்டாக அவன் சம்பாரிச்சதை அவனுக்கே மொதலாப்போட்டு கடைவைச்சாக கட நல்லாப்போயிட்டு இருந்துச்சு.

 

 இப்பம் மூணாவதுமகன் வெளிநாடு போகனும் புரோக்கருக்கு ரெண்டாவது மகன் பணம் கட்டினான், அவனும் வெளிநாடுபோனான். அங்க அண்ணனமாதிரியே கடுமையா பாடுபட்டுச்சம்பாதிச்சான். அதெல்லாம் பெரிய அண்ண்னுக்கு அனுப்பிச்சான்

 

 வருசத்துக்கு ஒருதடவ ஊருக்குவருவான் அந்த தடவ வந்தப்பப்பிரச்சன ஆரம்பிச்சிடுச்சு. ரெண்டாவது மகன் தான் அப்பா அம்மாவ வைச்சிப்பாத்துட்டு இருந்தான். அம்மா அப்பாவ நான் தான வைச்சிப்பாக்குறேன். காச என்கிட்ட குடுத்துவைக்கக்கூடாதா மூத்தவன் காசுமட்டும்தான் வாங்குவானா அவனே அம்மா அப்பாவப்பாக்கட்டும்னு சொன்னான் ரெண்டாவதுமகன்.

 

 மூணாவது மகன் சொன்னான் நீயே அவன்கிட்டத்தான குடுத்த அதுமாதிரிதான் நானும்அனுப்பினேன்.அதுலதப்புஇருக்குறமாதிரி எனக்குத் தெரியலயேன்னான்

 

 அப்ப கஸ்ட்டபடுற என்மேல நம்பிக்கையில்லயான்னான் ரெண்டாவது மகன். அதுக்கு யாரும் ஒத்துக்கல. சண்டயாப்போச்சு. இப்ப மூணாவது மகனுக்குக்கலியாணம்ஏற்பாடாச்சு.

 

 கலியாணத்த முன்னாடி நின்னு நடத்துனான் மூத்தவன். ஒப்புக்குப் போயிட்டு வந்தான் ரெண்டாவதுமகனும் அவன்பொண்டாட்டியும். கலியாணத்துக்கு அப்புறம் மூணாவது மகன் திரும்ப வெளிநாடுபோனான். இப்ப காச பொண்டாட்டிபேருக்கு அனுப்புனான்.

 

 அதுல மூத்தவனுக்கு மனசு வருத்தமாப் போச்சு. தம்பிகிட்டப்பேசுனான். அது சின்னப்புள்ள வெவரம் தெரியாது எனக்கு அனுப்பு பத்திரமாப்பாத்துக்கிறேன்னான்

 

 அதுக்கு மூணாவதுமகன் ஒத்துக்கல என்ன இருந்தாலும் அது என்குடும்பம் இனிமே அவ பாத்துக்குவா. கலியாணத்துக்கு முன்னாடி அனுப்புனகாசுலயே கணக்கு சரியா வரலன்னான். அங்கயும் சண்டயாப் போச்சு.

 

 காச பொண்டாட்டிபேருக்கு அனுப்புனான்

 

 அவனோட பொண்டாட்டியோட அண்ணன் நாட்டாமைக்கி வந்தான். காசெல்லாம் அவன்கிட்டக்குடுத்துவைச்சா. அவ

 

 அவன் சொன்னான் உன் பணத்த சும்மா வச்சிருக்கவேணாம் மூணுவட்டிக்குப் போகுது எங்க ஊருல குடுத்தா பெருசாவரும்ன்னான். இவளும் சரின்னு குடுத்தான். புருசன்கிட்டசொன்னான் அவனும் வாயப்பொழந்தான். எல்லாக்காசையும் அனுப்புனான். அப்ப மூத்தவன் சொன்னான் அதிகவட்டிக்கி ஆசைப்படாத. அது சரிவராதுன்னான்

 

 ஆனா மூணாவது ஆளு கேக்கல இதுக்கு நடுவுல அவனுக்குரெண்டும் பொண்ணாப் போச்சு. அதுனால ரெண்டயும் கட்டிக்குடுக்கனுமேன்னு ஊருக்கு வாரதத்தள்ளிப்போட்டான் . பலவருசம் வெளிநாட்டுலயே இருந்து சம்பாரிச்சான் இவனோடபொண்டாட்டி அவனோட அண்ணன் மூலமா நகைக்கி கடன் கொடுத்தா. நகையாகொண்டாந்து குடுத்தான். இப்ப அவனோட மகளுக்குக்கலியாணம் பேசினாங்க

 

 இனி சம்பாரிச்சது போதும்ன்னு ஊருக்குத்திரும்பினான். மாப்புள்ள பாத்து கலியாண ஏற்பாடு நடந்துச்சு. மச்சான் கிட்ட கலியாணச்செலவுக்கு பணம் கேட்டான் .அதுக்கு அவன் எல்லாம் ரொட்டேசன்ல இருக்கு . அவசரத்துக்கு கடனவாங்கிசமாளிக்கலாம் ரெண்டுவட்டிக்கு பணம் கெடைக்கும்னான்

 

 இவனுக்கும் வேற வழியில்ல அவன் சொன்னமாதிரி கடன வாங்கிக்கலியாணம் பண்ணுனான். ஒருவழியாக்கலியாணம் முடிஞ்சது. அன்னிக்கே பிரச்சன ஆரம்பிச்சிடுச்சு. மருமகன் பொண்ணுக்குப்போட்ட நகையெல்லாம்மட்டமான நகை. ஏமாத்திட்டீங்கன்னு வந்தான். நகைவாங்கித்தந்தது மச்சான்

 

 அவன் அதுல வெளையாடுனது தெரிஞ்சது

 

 இவனுக்கு லேசா சந்தேகம் வந்தது. அவன்கிட்டபணத்த கேட்டு நெருக்குனான்

 

 அவன் சொன்னான் கடன் வாங்குன வனெல்லாம் ஏமாத்திட்டானுக கேட்டா கந்துவட்டின்னு போலீசுல கம்ப்ளெயிண்ட் குடுப்பேன்றானுக நெருக்கிப்போனா

 

 நாமதான் கம்பி எண்ணனும்னான்

 

 சரி அவசரத்துக்கு அடமானம் வாங்குன நகைய மறு அடகுக்கு பேங்குல வைக்கப்போனான் அப்பத்தான் தெரிஞ்சது அதுபூராம் கவரிங் நகைன்னு. இடிஞ்சிபோனான். பொண்டாட்டியக் கேட்டான் அவளுக்கு அப்பத்தான் புரிஞ்சது அண்ணன்காரன் ஏமாத்தினது

 

 அன்னிக்கி ரெண்டுபேருக்கும் சண்ட கோவத்துல பொண்டாட்டிய சாத்திப்புட்டான். ஒலகமே இருண்டுபோச்சு. சம்பாரிச்சது மொத்தமும் போச்சு . இனிமே சம்பாரிக்க வயசுமில்ல். வாங்குனகடன அடைக்க வழியுமில்ல. கொளம்பிப்போயி சரக்க வாங்கி அடிச்சிட்டு வீட்டுக்குப் போனான். திரும்பசண்ட. போதையில என்னபேசுறோம்னு தெரியாமப் பொண்டாட்டியப்பேசுனான். அப்ப மகளும் இருந்தா. அதோட போதையில மயங்கிட்டான்

 

 பொண்டாட்டிகாரிக்கித் தாங்கமுடியல இப்புடி முட்டாத்தனமா ஏமாந்துட்டமேன்னு கண்ணீர்விட்டு அழுதா. மனசு தாங்கல புருசனோட 20வருச ஒழைப்ப மொத்தமாப்பறிகுடுத்துட்டமே அவரு மூஞ்சில எப்புடி முழிக்கிறதுன்னு நெஞ்சுவெடிக்க அழுதா

 

 மறுநா காலயில பொண்டாட்டியோட ரூம் தொறக்கல மக சன்னல் வழியா எட்டிப்பாத்து அலறுனா

 

 அம்மா அம்மான்னு ஆமா அவ தூக்குல தொங்கிட்டா. இவனுக்கு என்னபண்ணுறதுன்னு தெரியல கண்ணீர் பெருகுச்சு. என்ன மன்னிச்சிரும்மா போதையில தெரியாமப்பேசிட்டேன்னு முட்டி முட்டி அழுதான் . மக அப்பனப்பாத்துச்சொன்னா நீதான் எங்கம்மாவக்கொண்ணுட்டன்னு இவனால தாங்கமுடியல. பொம்பளமாதிரி பெருங்கொரலெடுத்து அழுதான். மகளால தாங்கமுடியல அவளும் அழுதா.

 

 அப்ப தொங்கிக்கிட்டு இருந்த பொண்டாட்டிய எறக்குனாக அவ கிட்ட இருந்த பேப்பருல சொந்தத்த நம்பி மோசம்போயிட்டேன் மன்னிச்சிருங்க மாமான்னு எழுதியிருந்துச்சு.......அப்ப என்னத்தவிக்கவிட்டுட்டு போக எப்படி மனசு வந்துச்சு.. .பணம் போனா சம்பாதிச்சிக்கலாம் ஆனா உயிறு போனா திரும்ப வருமா...ன்னு அழுத அவனை யாராலும் தேத்தமுடியல....பாத்தவங்களுக்கும் கலங்கிடுச்சு.....

 

  அ.முத்துவிஜயன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages