நீ வருவாய் என...நான் இருந்தேன்...
வழக்கமாக வாக்கிங் சென்று கொண்டிருந்த பார்க்கிற்கு ஒரு வாரமாக போகாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தார் விஸ்வநாதன்.
“ என்னங்க! ஆனது ஆயிடிச்சு! விட்டுத் தள்ளுங்க! உங்க உடம்பைப் பார்த்துக்குங்க”
பரிவுடன் மனைவி விசாரிப்பது போல தோன்றியது
விஸ்வத்திற்கு திட்டுகிட்டுப் மனைவியின் போட்டோவைப் பார்த்தார் பரிமளம் அவரையே பார்ப்பது போல தோன்றியது..
அவருக்கு நினைக்க நினைக்க ஆறவில்லை . இருபது வருடங்களுக்கு முன்பு ஆறு வயது மகளையோ, முப்பத்திநாலு வயது கணவரையோ விட்டு விட்டு செல்கிறோம் என்ற உணர்வு கூட உணர முடியாமல் , கோமாவில் இறந்த பரிமளா தன்னை தவிக்க விட்டு சென்றதை நினைத்து அவள் மேல் கோபம் வந்தது ..
எல்லோரும் வேறு கல்யாணம் பண்ணிக்கொள்ளச் சொன்னபோது புதிதாக வருபவள் மகளுக்கு அம்மாவாக நடந்துகொள்வாளா? என்ற தயக்கம் காரணமாக மறுமணம் செய்து கொள்ளவில்லை.
மகள் தீப்திக்கு... அம்மாவாக, அண்ணனாக, நண்பனாக எல்லாமாக இருந்தார் . அவளும் எவ்வளவு பிரியம் வைத்து இருந்தாள்.
அவள் காட்டியது எல்லாம் நடிப்பா? எப்படி அவளால் காதல் என்ற ஒற்றை வார்த்தையில் அனைத்தையும் உதறி விட்டுப் போக முடிந்தது ?
போன மாதம் சாப்பிட்டு விட்டு இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது,
“ அப்பா இதை நிதானமா படிச்சுப் பாருங்க ஒரு நல்ல பதில் சொல்லுங்க”
என்று அவள் கொடுத்த கடிதத்தில், அவளுடைய காதல் பற்றியும், அவனை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பது பற்றியும் அவரது ஒப்புதலோடு திருமணம் நடக்க விருப்பம் என்றும் சொல்லி இருந்தாள்.
மகளுக்கு எப்போது என்ன செய்ய வேண்டும்? என்று பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்த அவருக்கு, அப்பாவிடம் ஒளி மறைவு இல்லாமல் இதுநாள் வரை நடந்துகொண்ட மகள், அதிரடியாக இப்படி சொன்னது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது மட்டும் அல்ல பரிமளா போனபிறகு மகளுக்காக என்று வாழ்த்து விட்டார்.
‘ சட்’ என்று இன்னொருவன் மகள் வாழ்வில் வருவான் என்றோ, தன்னிடமிருந்து மகள் சென்று விடுவாள் என்றோ அவர் நினைத்தும் பார்த்திருக்கவில்லை.
அவர் எதற்கும் வீட்டுக் கொடுத்து பேச தயாராக இல்லாததால் பத்து நாட்களுக்கு முன்பு லெட்டர் எழுதி வைத்து விட்டு போய் விட்டாள் தீப்தி .
மகளை பிரிந்த துக்கம், அவள் நடந்து கொண்ட விதம், அவரை ரொம்பவே பாதிக்க, தினசரி சென்றுகொண்டிருந்த நடை பயிற்சிக்கும் செல்லவில்லை.
தீப்தி இரண்டாம் நாளே அவரைக் கூப்பிட்டாள் . ஆனால் அவர் போன் எடுத்து பேச விரும்பவில்லை. தினமும் அவள் கூப்பிட்டு கொண்டே இருப்பதும், இவர் எடுக்காமல் இருப்பதும் தொடர்ந்தது. பக்கத்துக்கு வீட்டில் இருப்பவர்கள் கொஞ்சம் ஆறுதல் அளித்து அவரை வாக்கிங் செல்ல வற்புறுத்தினர்
அடுத்த நாள் மாலை வழக்கம் போல நடந்து கொண்டு இருந்தவருக்கு தலை சுற்றுவது போல தோன்ற விழப் போனவரை, அங்கு ஜாக்கிங் செய்து கொண்டிருந்த வாலிபன் கை தாங்கலாக பிடித்துக் கொண்டான்.
அவனிடம் இருந்த தண்ணீர் எடுத்து முகத்தில் தெளித்து துடைத்து விட்டான். குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொடுத்து அவர் அருகில் உட்கார்ந்து கொண்டான்.
அவர் நார்மல் ஆனதும்,
“ அப்படியே உட்கார்ந்து இருங்க! நான் போகும் போது உங்க வீட்டில் விட்டுட்டு போறேன்”
என்று சொன்னவன் பத்து நிமிடத்தில் வந்து அவரை அவனது காரில் அழைத்துச் சென்றான். தனக்கு ஒரு மகன் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டார்.
அடுத்தநாள் அவனைப் பார்த்து மெல்லச் சிரித்தார். அவன் கைகளை ஆட்டியபடி ஓடிக் கொண்டிருந்தான் . கொஞ்சம் கொஞ்சம் அவனிடம் மனம் விட்டு பேசலானார். அவனும் அவருக்கு ஆறுதலாக பேசி போகும் போது அவரை அவரது வீட்டில் விட்டு விட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தான் .
தீப்தி மீண்டும், மீண்டும் போன் செய்வதும் இவர் எடுக்காததால் போன் செய்வதை நிறுத்தி விட மகளைப் பற்றிய நினைவு வந்து வாட்டியது. தீப்திக்கு போன் செய்யலாமா? என்று நினைத்தார். ஆனால் அப்படி செய்ய மனது ஒப்புக் கொள்ளவில்லை . அவள் போன் செய்தபோது ஒரு முறையாவது எடுத்து பேசியிருக்கலாமே என்று தன்னைத்தானே நொந்து கொண்டார்.
ஒரு வாரம் அந்த வாலிபனும் கார்டனுக்கு வரவில்லை. ஜோடி ஜோடியாக கார்டனுக்கு வருபவர்களைப் பார்த்ததும் தீப்தி நினைவு வந்தது. எப்படி இருக்கிறாளோ ? நல்லா பார்த்துக்காரனோ? இல்லையோ ? ஏதாவது பிரச்சனைனு போன் பண்ணி நாம எடுக்காததால் சொல்ல முடியலையோ?
பலவாறு குழம்பிக் கொண்டிருந்தபோது, தினேஷ் வந்து கொண்டிருப்பது தெரிந்தது.
அவனை அருகில் அழைத்து,
“ தினேஷ் என்னோட மனசு எப்படியோ இருக்கு. நீயும் ஒரு வாரமா வரலை.
கோயிலுக்கு போயிட்டு வரலாம் என்கூட வரையா ?”
“ம்ம்.. வரேன்”
“உனக்கு கஷ்டம் இல்லையே“
“கஷ்டம் இல்லை. கோயிலுக்கு போய்விட்டு டின்னருக்கு என்னோட வீட்டுக்கு வாங்க”
அவருக்கு இப்படி ஒரு தோழமை அமைந்ததில் சந்தோசம் தாங்க முடியவில்லை.
வீட்ல யாரெல்லாம் இருக்காங்க
“ சார் நான் அனாதையா வளர்ந்தவன்.. சொந்தம்னு சொல்லிக்க என்னோட வைப் மட்டும்தான் இருக்காங்க.. இப்ப நீங்களும் ...”
அவரது கண்களில் வழித்த கண்ணீரைத் துடைத்து விட்டான்.
கோயிலுக்கு போனதும் அவரது மனம் ஆறுதல் அடைந்தது காரில் செல்லும் போது கடையில் பழங்கள் வாங்கிக் கொண்டார் .
வீடு அழகான பகுதியில் அமைந்திருந்தது. காரை நிறுத்தி விட்டு அவரை முதல் மாடிக்கு அழைத்துச் சென்றான்.
அழைப்பு மணியை அழுத்தினான் .
தீப்தி வந்து கதவைத் திறந்தாள்..



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக