30.11.20-கதையின் பெயர் : ஓடுமீன் ஓட ... உறுமீன் வரும்வரை... - தென்குமரிக் கவிதைக்களம்

திங்கள், 30 நவம்பர், 2020

30.11.20-கதையின் பெயர் : ஓடுமீன் ஓட ... உறுமீன் வரும்வரை...







ஓடுமீன் ஓட ... உறுமீன் வரும்வரை...


பாக்கியம் நீண்ட பெருமூச்சு விட்டாள். நல்லபடியாக பேத்தியின் திருமணம் முடிந்துவிட்டது. ஆச்சு இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பி விடுவாள். அவளோட அண்ணன் வினோத் மும்பையில் வேலை கிடைத்து போய்விட்டவன் திருமணத்திற்கு வந்திருந்தான் . அவனுக்கு இரவு பிளைட்.


“பாட்டி எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க”


காலில் விழுந்து வணங்கிய பேத்தியை நடுங்கும் கைகளால் தூக்கி நிறுத்தினாள்.


“நல்லா இருப்பாய் குழந்தை! அம்மா போட்டோக்கு நமஸ்காரம் பண்ணு”


“ பாட்டி என்னையும் அண்ணாவையும் தவிக்க வச்சு தற்கொலை பண்ணிக்கொண்ட அம்மா மேல கோவம்தான் இருக்கு”


“அப்படிச் சொல்லாதே என்னவானாலும் அது உன்னோட அம்மா”


வேண்டா வெறுப்பாய் விழுந்து கும்பிட்டாள் .


“அண்ணா, அப்பா, பாட்டி போயிட்டு வரேன்”


பாக்கியம் கண்ணீரைக் காட்டாமல் அடக்கி கொண்டு, சிரித்த முகத்துடன் அனுப்பி வைத்தாள்.


இரவு வினோத் மும்பைக்கு கிளம்பினான் .


“வரேன் பாட்டி! வரேன் அப்பா”


இரவில் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தாள் பாக்கியம் . விடிந்தது .காலை முதல் வேலையாக காவல் நிலையம் சென்றாள். ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த கடிதத்தைக் கொடுத்தாள்.


வணக்கத்திற்குரிய காவல் துறை இன்ஸ்பெக்டர் அவர்களுக்கு,


நான் எனது மகளுடன் திருமணம் முடிந்த பிறகும் தங்கி இருந்தேன். மாப்பிள்ளைக்கு அப்பா அம்மா இறந்து விட்டனர். எனக்கு ஒரு பேரன் மற்றும் ஒரு பேத்தி. இருபது வருடம் முன்பு பேரனுக்கு ஏழு வயது பேத்திக்கு நான்கு வயது. குடும்ப சண்டையில் எனது மருமகன் எனது மகளை எரித்துக் கொன்று விட்டார். நான் தான் ஒரே சாட்சி என்னால் என்ன செய்வது என்று தெரியவில்லை. கண் முன்னே மகள் கரிக்கட்டையாக எரிந்து கிடந்தாள். சின்னஞ்சிறு பிள்ளைகள். அவர்களை கரை சேர்க்க வேண்டும். நான் என்ன செய்வேன்?  அப்போது போலீஸ் விசாரணையில் எனது மகள் தற்கொலை செய்துகொண்டாள். அவளுக்கு தீராத வயிற்று வலி இருந்தது என்று சொல்லி எனது மருமகனை காப்பாற்றினேன். ஏனென்றால் எனது பேரன் பேத்தி பாதிக்க கூடாது என்று. எனது பேரன் படித்து நல்ல வேலைக்கு சென்று விட்டான். பேத்திக்கு நேற்று திருமணம் முடிந்துவிட்டது. எனது கடமைகள் முடிந்து விட்டன. இதுநாள் வரை நான் மறைத்து வைத்ததற்கான காரணம் பிள்ளைகள் ஒரு நிலையை அடையவேண்டும் என்று. இருபது வருடமாக நான் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டு இருக்கிறேன் .

எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறேன்.


கடிதத்தை படித்து கண்களில் இரக்கத்துடன்  பாட்டியை பார்த்தார் இன்ஸ்பெக்டர் வெற்றி .


தீர்க்கமாக உட்கார்ந்து இருந்தாள் பாக்கியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages