30.11.20- கதையின் பெயர் : வந்தேன்.... வந்தேன்.... நானும் வந்தேன் - தென்குமரிக் கவிதைக்களம்

திங்கள், 30 நவம்பர், 2020

30.11.20- கதையின் பெயர் : வந்தேன்.... வந்தேன்.... நானும் வந்தேன்

 






சுந்தரம்


வந்தேன்.... வந்தேன்.... நானும் வந்தேன்


சுடலை... சுடலை....


யாரோ கூப்பிடுவது கேட்டாலும், உடனே எழுந்து கொள்ள முடியாததற்கு காரணம் வயதும், நேற்று போட்ட சரக்கும்.மெதுவாக எழுந்து தகரக் கதவை திறந்தான். வெளியில் முருகேசன் நின்று கொண்டிருந்தான்.


“என்ன சுடலை... குடி பக்கமே தலை வச்சு படுக்காதவன் இப்ப குடியே கதின்னு இருக்கியே... உடம்பை கெடுத்துக்காதே”


“என்ன முருகேசா பண்ணறது பழசை எல்லாம் நினைச்சுப் பார்த்தா மனசு தாங்கலையே”


“ சுடலை காலத்துக்கு ஏத்தாப்போல நாமும் மாற வேண்டியிருக்கு”


அண்ணன் மகன் உதவியால்,  கொஞ்சம் நிலத்தில் இருந்து ஏதோ ஒப்பேற்றிக் கொள்ள எதுவோ கிடைத்துக் கொண்டிருந்தது.   தான் இறந்து போனால் நீதான் கொள்ளி போடணும்னு சொல்லி இருந்தான் அவனும் சுடலையை அப்பாவாகவே பாவித்து தினமும் வந்து பார்த்து விட்டு போவான்.


சிறுது நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு முருகேசன் போனதும், மறுபடியும் வந்து கயிற்றுக் கட்டலில் அமர்ந்தான் சுடலை.  இளம் வயதில் பாஞ்சாலியாக, சீதையாக, கண்ணகியாக, ராதையாக, சகுந்தலையாக கூத்து ஆடியபோது எடுத்த படங்கள் செல்லரித்துப் போய் அங்கங்கே தொங்கிக் கொண்டிருந்தன. அவனது நினைவுகள் பின்னோக்கி சென்றன.


அதென்னமோ தெரியவில்லை அந்த சதங்கை சப்தம் அவனை சிறுவயது முதலே சுண்டி இழுத்தது. அவனது ஆசை அறிந்து அவனது அப்பா அவனுக்கு சதங்கை வாங்கிக் கொடுத்தார் அப்போதெல்லாம் மாதத்தில் பல நாட்கள் கூத்து நடப்பதை பக்கத்தில் இருந்து பார்ப்பது அவனுக்கு ரொம்ப பிடிக்கும்.  ஒரே இடத்தில் அருகருகே ராமர், இராவணன், சீதை அருகில் அமர்ந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அந்த கதாபாத்திரத்திற்கு தங்களை தாங்களே ஒப்பனை செய்து கொள்வதை அருகில் இருந்து பார்த்து இவனும் கூத்து கற்றுக் கொள்ள ஆசைப்பட்டான்.  அவர்களது பளபளக்கும் ஆடைகள், சலங்கை ஒலி, பாடல்கள் இவனை என்னவோ செய்தன.


இவனது அழகு இவனுக்கு பெண் கதாபாத்திரகளே அமைந்தன. முதலில் வெட்கப்பட்டவன், போக போகக்  கர்வம் கொள்ள ஆரம்பித்தான். சுடலைக்கென்றே  ஒரு ரசிகர் கூட்டம் ஒவ்வொரு  ஊரிலும் இருந்தது.  ஆட்டம் முடிந்ததும், இவனை ஒரு தடவையாவது தொட்டு பார்க்க பலர் வருவது இவனுக்கு சிரிப்பை தரும்.  சிலர் முத்தமும், பணமும் கொடுத்து விட்டு செல்வதுண்டு. பெண் கதாபாத்திரம் ஏற்று நடித்ததால் ஊரில் ஒரு ஏளனப் பார்வையும் இவன் மீது இருந்து கொண்டுதான் இருந்தது.


நாளடைவில், அந்த பெண் கதாபாத்திரங்கள் ஏற்று நடித்ததால் அவன் அப்படி ஆகிவிட்டானா?  அல்லது தனக்குள் இருந்த அந்த உணவுகளை இந்த மாதிரி கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து ஆசையை தணிந்துக் கொண்டானா? என்பது அவனுக்கே புரியாத மர்மம். . திருமண பேச்சு நடத்த போது இவனுக்கு விருப்பம் அதிகம் இருக்கவில்லை. நாடகத்தில் நடித்ததை ரசித்த  பெண்கள்,  நேரில் அவனை பிடிக்கிறது என்று சொல்லவும் இல்லை.


கூத்து கலை அழிந்து வருகிறது என்று சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்..  ஆனால் இன்றும்  பல கிராமங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.. பெண் கதாபாத்திரகளுக்கு இப்போது

நிஜ பெண்களே நடிக்க கிடைத்ததால்,  சுடலை பாடு திண்டாட்டம் ஆனது.  வயது மூப்பின் காரணமாக கதாநாயகியின் அம்மா, தோழி என்று ஒன்றிரண்டு வாய்ப்புக்கள் கிடைத்த போது வேண்டாம் என்று

மறுத்து விட்டான். இவன் கதாநாயகியாக நடித்து ஆடிய நாட்கள் கண்முன் நிழலாடியது.


தன்னிரக்கம் கவலையாக மாறி, குடியில் தன்னை மறக்க ஆரம்பித்தான். இவனது நிலையை உணர்ந்த முருகேசன், பழைய சில நண்பர்களிடம் சொல்லி ஒரு கூத்து நடத்த ஏற்பாடு செய்தான்.


முருகேசனும், நண்பர்களும் சுடலை வீட்டின் கதவைத் தட்ட, எழுந்து வந்தான். நடையில் தள்ளாட்டம் தெரிந்தது .


“என்ன சுடலை... காலையிலே சரக்கா?”


“இல்லே கொஞ்சம் ரத்த கொதிப்பு.. அவ்வளவுதான்.. என்னாச்சு எல்லாம் ஒண்ணா வந்திருக்கீங்க”


“சுடலை இந்த மாசம் சகுந்தலை நாட்டிய நாடகம் நடக்க போகுது”


சுவாரிஸ்யம் இல்லாமல், “ ம்ம்..” என்றான்.


“நீதான் பண்ணனும்னு பழைய ஆளுங்க சொல்லிட்டாங்க என்ன முடியுமா?”


கறுத்து சிறுத்து போயிருந்த கண்களில் ஒரு ஒளி வந்து மறைந்தது உடல் விறைப்பானது.


உதடு துடிக்க, “ நிஜமாவா?” என்றான்.


கூத்து நடப்பதற்கு ஒரு வாரம் முன்பிருந்தே மாறி விட்டான். அதிகாலை எழுந்து குளித்து கோவிலுக்கு போய்விட்டு வந்து பழைய பெட்டியில் தேடி தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டான் . தினமும் மாலை பாடல்களுக்கு சதங்கைகள் கட்டி ஒத்திகை பார்த்துக் கொண்டான்.  சதங்கையை கையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தொட்டதினால் ஏற்பட்ட பரவசம் கண்களில் முதன் முதலாக தன்

பிள்ளையை கையில் வாங்கிப் பார்க்கும் தந்தையின் உணர்வில் இருந்தான்.


முதன் முதலாக சுடலையை சகுந்தலையாக காணும் கிராமத்து இளவட்டங்கள் அவனது அழகில் மனதை பறி கொடுத்தனர். சலங்கைகள் கொஞ்சி பேசின.  நீண்ட நாள் மேடை பக்கம் வராதவன் உணர்ச்சி கொந்தளிப்பில் வேகமாக ஆடினான்.  மேடை அதிர்ந்தது.  எழுபது வயது முதியவர் ஆடுவது போல இல்லை. வயசுப் பெண்கள் வாயடைத்துப் போனார்கள்.


இதுநாள் வரை சேர்த்து வைத்திருத்தன அத்துணை ஆசைகளையும் தீர்க்கும் வண்ணம் சுழன்று சுழன்று ஆடினான் சுடலை.


மீண்டும் கலை புத்தொளி பெற்றது.

கலை வாழும் என்ற நம்பிக்கை பிறந்தது முருகேசனுக்கு.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages