30.11.20-கதையின் பெயர் : அரவணைப்பு - தென்குமரிக் கவிதைக்களம்

திங்கள், 30 நவம்பர், 2020

30.11.20-கதையின் பெயர் : அரவணைப்பு






சுந்தரம்


அரவணைப்பு - 


ஒருநாள் ரத்தக்கொதிப்பு மாத்திரை சாப்பிடாதது அதன் வேலையை காட்டியதால், தலைசுற்றல் அதிகமாகி அவதிப்பட்டார் விஸ்வம். 


 ஓரளவு சரியாக ஆரம்பித்தபோது வெளியே ” திடீர்”  என்று பேச்சுக்குரல்கள் கேட்டது. என்ன?  ஏது?  என்று விசாரிக்க

உடல் ஒத்துழைக்காதலால் தன் அறையிலேயே முடங்கிக்கிடந்தார்.


  காலை ஏழு மணியாகிவிடவே,  அறையை விட்டு வெளீயே வந்தார்.  காபி சாப்பிடலாம் என்று கிளம்பியவரின் எதிரே ராகவன் வந்துகொண்டு இருந்தார் .


“ விஸ்வம் இப்போ தான் எழுந்து வறீங்களா ?”


“  ஆமா! ஏன் ?”


“அப்போ பாலன் போனது தெரியாது இல்லியா ?”


“என்ன சொல்றேங்க ராகவன்?”


“ஆமா விஸ்வம்!  பாலன் நேத்து ராத்திரி ஒரு மணிக்கு போயிட்டாரு. அவர் பையனுக்கு தகவல் சொல்லியாச்சு. வரேன்னு சொல்லிருக்காரு.”


“ என்ன திடீருனு ?  நல்லதானேயிருந்தாரு ?”


“ நெஞ்சுவலிக்குதுனு சொல்லிருக்காரு. டாக்டர் வர்றதுகுள்ளே போயிட்டார்.”


முன் அறையில் சடலம் கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டுஇருந்தது.


 முதியோர் இல்ல நிர்வாகிகள் கவலையுடன்  ஆனால்  பரபரப்பாக போன் பேசிக்கொண்டிருந்தனர்.  பல வருடங்கள் பாலனுடன் பழகியவர்களும், தங்கள் முடிவும் இப்படித்தானே இருக்கும் என்று சுயபச்சாதாபத்தால்  பரிதவித்தவர்களும் அழுதுகொண்டு இருக்க , அந்த முதியோர் இல்லத்திற்கு புதிதாக வந்தவர்கள் விரக்தியாய் என்ன நடக்கிறது என்று பார்த்துக்கொண்டு இருந்தார்கள். 


 பாலனின் மகனும் ,மருமகளும் ,  பேர குழந்தைகளும் காரில் வர , வேறு சில உறவினர்கள் காரிலும்,  ஆட்டோவில் வந்து சேர்த்தனர்.  அதுவரை அமைதியாக இருந்த இல்லத்தில்  அழுகை சப்தம் வெடித்தது .


 அவர்களில் யாரையும் இங்கிருந்தவர்கள் பலரும் ஒருமுறை கூட பார்த்தது கிடையாது. பதினைந்து நிமிடம் கழித்து, அழுகையை நிறுத்தி, கண்களை துடைத்துக்கொண்டு ,தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.  சிலர் விவஸ்தை இல்லாமல் சிரிப்பதையும் பார்க்க முடிந்தது. 


 பாலன் போய் சேர்த்த ஒரு வாரத்திற்குள் புதிதாக வந்து சேர்ந்தார் ரகுராமன்.  இங்கு வருபவர்கள் பலர் அவர்களது நெருங்கிய உறவுகளால் அழைத்துவரப்படுபவர்களே!


 ஆனால் சிலர் தீர்க்கமான முடிவுடன் தானாக வருவார்கள் . சிலர் மனைவியுடன் வருவார்கள் .முதல் சில நாட்கள் தங்கள் அறையிலேயே முடங்கி கிடப்பார்கள்.  பின் கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரிடமும்

...........2..........

பேசுவார்கள்.  ஆனால் புதிதாக வந்த ரகுராம் வித்தியாசமாக இருந்தார்.  ஆறுமாதம் ஆகியும் யாருடனும் சரியாக பேசுவது இல்லை. ஏதாவது  கேட்டால் ஒற்றை வார்த்தையில் பதில் சொல்வார்.


 மேலும் பேச்சு கொடுத்தால் எழுந்து தன் அறைக்கு சென்று விடுவார். எனவே அனைவரும் அவருடன் பேசுவதை குறைத்துக்கொண்டனர்.  ஆனால் எல்லோரிடமும் நன்கு பழகும் ராகவன் மட்டும் அவரிடம், பேச்சு கொடுத்து, பேச்சு கொடுத்து ரகுராமனை கலகலப்பாக்கினார்.


“ ராகவன் சார்!  நான் சம்பாதித்த எல்லாத்தையும் பசங்களுக்கு பிரிச்சிட்டு கொடுத்திட்டேன். அதுவரை பாசமா இருந்தவங்க அதன் பின் வேறுவிதமா நடக்க ஆரம்பிச்சிட்டாங்க


.  நானும்,  மனைவியும் ஆறு மாசம் ஒரு பையன் கிட்டையும் இன்னொரு ஆறு மாசம் இன்னொரு பையன்கிட்டையும் இருந்தோம். ரெண்டு மருமகள்களும் வேலைக்கு போய்கிட்டு இருந்ததால என் மனைவி சமையல் பண்ணுவாள். 


 நான்  தண்ணி  வரி,  வீட்டு வரி,  கரண்ட் பில்ன்னு எல்லா வேலைகளையும் செய்திட்டு வந்தேன்.  எனக்கு நாளாக நாளாக முடியாம போன போது அந்த வேலையையும் என் மனைவி தலையில கட்டிட்டாங்க.பாவம் சார் !என் மனைவி , எட்டு மாசத்துக்குள்ள போய் சேர்ந்திட்டாங்க.அவங்க போன பிறகு என்னை கவனிக்க யாரும் இல்லை. சம்பளம் வாங்காத வீட்டு காவலாளியா இருந்தேன்.


பள்ளிக்கூடம் விட்டு வரும் பேர பிள்ளைகள்க்கூட என்கிட்டே பேசமாட்டாங்க .வீடியோ கேம்ஸ் விளையாட போயிடுவாங்க.  மருமக வந்தவுடன், ஒரு அரைமணி நேரம் படுத்திருப்பா!  பின் சமையல் கட்டுக்கு போயிடுவா ! பையன் ராத்திரி வருவான்.


ஏதாவது  கேட்டால் எரிச்சலாய் பதில் சொல்வான். அவனுக்கு என்ன

டென்ஷனோ ?கவலையோ? 


 ஞாயிறுக்கிழமை வரிசையா பிளான் வச்சிருப்பாங்க.

இல்லே யாராவது விருந்தாளி வந்திடுவாங்க . எனக்குன்னு யாருமில்லைனு தோணிச்சு .அதுதான் இங்கே வந்தேன்.


“ சரி கவலை படாதீங்க!  உங்களுக்கு நாங்க இருக்கோம்” .


“ராகவன் சார்!  உங்களை மாதிரி என்னால அவ்வளவு சீக்கிரம் உடனே பழக முடியாது எல்லாம் வெறுப்பா   இருந்திச்சு.  நீங்க தான்,  நான் அலட்சியம் செய்த்தாலும் என்னை ககலகலப்பாகிடீங்க.  ஆனா எனக்குன்னு  யாருமில்லையே”


´”ஏன்  நாங்க இல்லை .”

“அதில்லை!  என் உறவுகளோ நண்பர்களோ யாருமில்லையே!  அதை நினைச்சா வருத்தமா இருக்கு. ஆனா ஓண்ணு!  உங்க பேர்ல எனக்கு ஒரு நண்பன் இருந்தான் . என் கூட ஒண்ணாம் வகுப்பில் இருந்து எட்டாவது வரை படிச்சான்”


“எந்த ஊர்லே?


“ சிதம்பரத்தில “


“ என்னது?  சிதம்பரமா ? நானும் சிதம்பரம்தான்... எந்த பள்ளிக்கூடத்தில படிசீங்க?”


“ குப்புசாமி செட்டியார் அறக்கட்டளை பள்ளிக்கூடத்தில... ராமன்தான்

எனக்கு வகுப்பு ஆசிரியர்.”


.................3.............

“ அட  நான்தான்டா ! அந்த ராகவன்.”


“ என்னது ?”


“  ஆமாண்டா!


அதன்பின் மிகவும் உற்சாகமானார் ரகுராம்.  நண்பர்கள் தங்கள் பழம்கதையை பேசிக்கொண்டனர்.


“ டேய்  நம்ம சோமு இல்லே...”


“ எந்த சோமுடா?”


“ நம்ம கமலா டீச்சர் பையன்..”


“ ஆமா!”


“ அவன் அமெரிக்கால இருக்கான்டா !”


“அப்படியா ! ஆண்டுவிழாவிலே நீ என்ன வேஷம் போட்டே ஞாபகம் இருக்கா?”


“ ம்ம்... ராஜா வேஷம்.”


“ போடா! மறந்திட்டயா!  நீ முயலாகவும் நான் சிங்கமாகவும் நடிச்சோமே !


´ஆமா ஆமா”


“ அதுல கடைசீல கலாட்டாவாகி முயல் சிங்கத்தை துரத்த, ஒரே சிரிப்புதான்.”


விழுந்து விழுந்து சிரித்தனர். 


 முதியோர் இல்லத்தில் அந்த வருட தீபாவளியை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார் ரகுராமன் .எல்லோரும் தங்களிடமிருந்த நல்ல சட்டை அணிந்து கொண்டனர் . பெண்கள் கோலம் போட்டு விளக்கு ஏற்றினார்கள் .நிர்வாகிகள் செயற்கை சர்க்கரை சேர்த்த இனிப்புக்கள் அனைவருக்கும் வழங்கினர் .


ஒரு மாதம் கழிந்திருக்கும். ராகவனுக்கு உடம்பு ரொம்பவே முடியாமல் போக, மூன்று நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்தார்


.  டாக்டர்கள் கைவிட்ட நிலையில் ,ரகுராமனை பார்க்க வேண்டும் என்று சொன்னார்.

ராகவனை பார்த்து கண்ணீர் விட்டார் ரகுராமன்.


“ ராகவா என்னை விட்டு போயிடாதேடா! இப்பத்தான் நான் கொஞ்சம் சந்தோசமாக இருந்தேன். எனக்கு நிரந்தர துக்கத்தை  கொடுத்திடாதேடா”


....4.......

ரகுராமை மிக அருகில் வரச்சொல்லி அமர வைத்து கொண்டார். அவரது கையை எடுத்து தனது நெஞ்சில் வைத்து கொண்டார் ராகவன். அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.


“ ரகுராம் என்னை மன்னிச்சுடு!”


“ எதுக்கு ராகவா?”


“ நான் உன்கிட்டேயே ஒரு பொய் சொல்லிட்டேன்.”


“ என்னடா சொல்றே?”


“ நான் உன்கூட படிச்சேனு சொன்னது பொய். உன்னை கலகலப்பாக்கவே அப்படி நடந்துக்கிட்டேன். உண்மையில் நான் படிச்சது சேலம். இதை நான் இப்ப உன்கிட்ட சொல்லறது காரணம் நெருங்கிய நண்பனும் போயிட்டான்னு வருத்தப்படக்கூடாதுனு தான்.”


“ ராகவா நீ என்கூட படிக்கவில்லையென்றாலென்ன என்ன?   நீ எங்கிட்ட காட்டின பாசமும்,  நான் உன்கிட்ட காட்டின பாசமும் என்றைக்கும் மாறாது.. ராகவா ....”


கண்ணீர் விட்டார் ரகுராமன்.


அவரது கண்களை துடைக்க ராகவன் கைகளை தூக்கினார்.


அது செயல் இழந்து விழுந்தது....



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages