01.12.20-கதையின் பெயர் : என் பெயர் ராதாகிருஷ்ணன் - தென்குமரிக் கவிதைக்களம்

செவ்வாய், 1 டிசம்பர், 2020

01.12.20-கதையின் பெயர் : என் பெயர் ராதாகிருஷ்ணன்






சுந்தரம்


என் பெயர் ராதாகிருஷ்ணன் 


 பக்கம் - 1

" பாட்டி எப்படி இருக்காங்க ?"


கேசவன் என்னை அடையாளம் கண்டு அழைத்தபோது நான் கேட்ட முதல் கேள்வி  இதுதான்.


"அவங்க இறந்து ஐந்து  வருஷம்  இருக்கும் "


கண்களில் கண்ணீர் மளமளவென்று பெருக, பழைய நினைவுகள் சுழன்று சுழன்று வந்தது.


பாட்டி நான் பிறந்த கதையை சொல்லு பாட்டி"


நான் எத்துணை தடவையோ கேட்டுருக்கிறேன் . ஆனாலும்  பாட்டி புதிதாக சொல்வதுபோல் சொல்வாள் .


“என்னத்தைச்  சொல்லறதுடா ! அன்னிக்கு கிருஷ்ண ஜெயந்தி .  வீடு பூரா உன் அம்மா கோலமும், கிருஷ்ணன் பாதமும் போட்டிருந்தா... முறுக்கு வெல்லச்சீடை, உப்புச்சீடை எல்லாம் பண்ணியிருந்தா.. பூஜை முடிஞ்சு ஒரே ஒரு சீடை எடுத்து வாயில் போட போனவ,  அம்மானு அலறினா!  ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனோம் .  சிரமம் வைக்காம நீ பிறந்தாய் . அதனால உனக்கு ராதாகிருஷ்ணன்னு பேர் வச்சோம் "


முதலில் இரு அண்ணன்கள். மூன்றாவதாக நான். எனக்குப்பின் மங்களம். அண்ணன்கள் இருவரும் என்னை விட ஐந்து வயது மூத்தவர்கள்.


 ஆரம்பத்திலிருந்தே என்னை விளையாட சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் . மங்களம் பிறந்த பின் நான் அவளை கொஞ்சி மகிழ்ந்தேன். எங்கு போனாலும் இடுப்பில்  தூக்கிச்  செல்வேன் .அவளும் என்னுடன் அன்பாய் இருப்பாள்.


நான், மங்களம், எதிர்த்த வீட்டு கோமதி, பக்கத்துக்கு வீட்டு வைதேகி என அனைவரும் ஒன்றாக விளையாடுவோம் .அவர்கள் கூட ஏழாம்வகுப்பு வந்தவுடன்,  என்னை விளையாட சேர்த்து கொள்ளவில்லை. சில நேரங்களில் அண்ணன்கள் பந்து எடுத்து போடச் சொல்வார்கள் . அதுவே எனக்கு சந்தோஷத்தை தந்தது.


கேசவனின் அப்பா என்னிடம் ரொம்ப பிரியமாக இருப்பார். என்னை மடியில் வைத்து கொஞ்சுவார் . என் அப்பா இதுபோல இருக்கக்கூடாதா?  என நான் நினைத்துக்கொள்வேன்.


கேசவன்,  தாய் இல்லாத பிள்ளை. என் மீது உயிராய் இருப்பான். மீசை அரும்ப தொடங்கியிருந்தது

அழகாக  இருப்பான் . அவனது அருகாமை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவன் என்ன சொன்னாலும் கேட்பேன்.  அவனும் அப்படித்தான். எனக்கு ஏதேனும் தின்பண்டம் கிடைத்தால் அவனுக்கு கொஞ்சம் எடுத்து வைத்து விடுவேன். தினமும் அவனை பார்த்தால் ஒரு திருப்தி.


 என்னவென்று தெரியாத பருவத்தில் இருந்தேன்..

நாளாக நாளாக எனக்குள் ஒரு மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. தங்கை துவைக்க போட்டிருக்கும் ஆடைகளை நான் எனக்கு போட்டுகொண்டு கண்ணாடியில் அழகு பார்ப்பேன். துண்டை எடுத்து தலையில் கட்டிக்கொண்டு தலைமுடிபோல போட்டு கொள்வேன் . ஒருமுறை நனைந்திருந்த அவளது சட்டையை போட்டு கழட்டியபோது சட்டை இறுகி கிழிந்துவிட்டது. மாலையில் வந்தவள் கத்தினாள். என்மீது சந்தேகபட்டாள். .


வழக்கம் போல் ஒருநாள் நான் கேசவன் வீட்டுக்கு போய் இருந்தேன். கேசவன் இருக்கவில்லை. அவன் திடீரென்று ஊருக்கு போய் விட்டதாக அவனது அப்பா சொன்னார். நான் கிளம்ப முயன்றபோது தின்பதற்கு ஜிலேபி தந்தார். அருகில் உட்கார்ந்து என் தொடைமீது கையை வைத்தார். கூச்சமாக

இருந்தது. என் தலையை வருடினார். இடுப்பில் கையை வைத்து அவரது அருகில் என்னை இழுத்தார். இறுக்கமாக என்னை அணைத்தார். உடல் நடுங்க நெளிந்தேன்.


.....2.....

சட்டென்று என் உதட்டில் முத்தமிட்டார். அவரை தள்ள முயன்றபோது, அவரது பிடி மேலும் இறுகியது. என்னை படுக்கையில் தள்ளினார் . நான் பயந்து அலறினேன். உடனேயே என்னை விட்டு விட்டார்..


´போயிடு இனி இங்கே வர வேண்டாம் "


கோபமாக கத்தினார் . எனக்கு அழுகை வந்தது. அழுதபடி உடல் நடுங்க,  அவரை திரும்பி பார்த்தபடி என் வீட்டுக்கு ஓடி வந்து விட்டேன். ஒரு ஓரமாக அமர்ந்து இருந்தேன் . உடல் நடுங்கிக் கொண்டு இருந்தது .


 அம்மா என்னவென்று கேட்டபோது  ஒன்றும் இல்லை என்று சொல்லி விட்டேன் .எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை ...அம்மா என்னை உலுக்கி எழுப்பினாள்..


 வாசலில் கேசவனின் அப்பா கத்திக்கொண்டு இருந்தார்.


“உங்க பையனை , இல்லை உங்க பொண்ணை எங்க வீட்டுக்கு இனி அனுப்பாதீங்க. என் மகன் கூட இனி அவன் பழக வேண்டாம் .வந்தா நடக்கறது வேற."

.

” கேசவன் என்கூட அன்பாக இருக்கிறான். இவர் அல்லவா என்னிடம் எப்படியோ நடந்துகொண்டார் என்று நான் எண்ணிக்கொண்டு இருந்தபோது,


“ அம்மா என்னோட பாவாடை சட்டை எல்லாத்தையும் போட்டு பார்த்து கிழித்து வச்சுடரானம்மா !.


மங்களம் அவள் பங்குக்கு முறையிட்டாள் . எனக்கு பெருத்த அவமானமாக இருந்தது .


" பார்த்தீங்களா ! நான் சொல்லலை . நேத்து என் வீட்டுக்கு வந்து என்கிட்டே...  என்ன சொல்லறது.. கருமம் ! தலையில் அடித்து கொண்டார் .

.

அண்ணன்கள் என்னை கேவலமாக பார்த்தனர்.  கோபமாக வந்த அப்பா, என்னை எட்டி உதைத்தார். .திண்ணையில் இருந்து தெருவில் வந்து விழுந்தேன். 


ஊரே வேடிக்கை பார்த்தது .இளவட்டங்கள் என்னை பார்த்து கைகளால் ஏதோ சைகை பண்ணினார்கள் . புரியவில்லை .


பாட்டி ஓடிவந்து அப்பாவை தடுத்து, '


" பாவி அவனை அடிச்சு கொன்னுடாதேடா " உன் பிள்ளைடா "


"இதுமாதிரி ஒரு பிள்ளை இருக்கிறதைவிட இல்லாமலேயே இருக்கட்டும் போடா! வீட்டுக்குள் வரக்கூடாது . எங்கேயாவது போ"


விரட்டினார்.


பாட்டி அம்மாவிடம் ஓடினாள்

‘ தனம்! உனக்கு கஷ்டம் வைக்காமல் ஆஸ்பத்திரி  போன உடனேயே பிறந்த பிள்ளைடி "


“அதுசரி பிறக்கும்போது கஷ்டம் தராமே, பிறப்பால் கஷ்டம் தந்தவன்தானே! இவன் ஏன் இப்படி நடந்துக்கிறானு தெரியலே நான் என்ன செய்வேன் ? இவரை எதிர்த்து பேசி,  என்னையும் துரத்தி விட்டால் நான் என்ன பண்ணுவேன் ? பிள்ளைகளை எப்படி வளர்ப்பேன்?


அழுதபடி வீட்டுக்குள் ஓடினாள் .


 பாட்டி தனது தகர பெட்டில் இருந்து ரெண்டாயிரம் ரூபாய் எடுத்துவந்து என்னிடம் தந்து,


’ கண்ணா நீ எங்காவது போய் சமர்த்தாக பிழைத்துக்கொள் “

. என்று வழிஅனுப்பி வைத்தாள்.


.......3....

வீட்டின் கதவு சாத்தப்பட்டது..  ஊரார் பார்வை முழுவதும் என்மீது இருந்தது. அழுதபடி வீதியில் நடந்தேன் . கேசவன் வீடு வரும்போது என் கண்கள் அவனை தேடின.அங்கே இங்கே என்று பற்பல அனுபவங்களோடு எப்படி எப்படியோ வாழ்ந்து, இப்போது சென்னையில் சொந்த வீடு, வங்கிகளில்

ஐந்து லட்சம் பணம் , நகைகள் என்று வசதியாக இருக்கிறேன் .


 கூத்தாண்டவர் கோயில் திருவிழாவுக்கு வந்தபோது கேசவன் அடையாளம் கண்டு கொண்டான் .


என்னை அவன் ராதா என்று அழைத்தபோது எனக்கு ரொம்ப சந்தோசம் கிடைத்தது .


அம்மா அப்பா எப்படி இருங்காங்க ?'' அண்ணன்கள் என்ன செய்யறாங்க ? மங்களம் எப்படி இருக்கிறாள் ?"


கேசவன் என்னை பரிதாபமாக பார்த்தான் .


என்ன கேசவா அப்படி பார்க்கிறாய்?.


!'அன்னிக்கு அவங்க உன்னை துரத்தி விடாமல் இருந்திருந்தாங்கன்னா  நீ வீட்டைவிட்டு போகாமல் இருந்திருக்கலாம்தானே? அவங்களுக்கு எப்படியோ எனக்கு நீ இல்லாதது ஒரே தவிப்பா இருந்தது .”


அவன் அப்படி சொன்னதும் எனக்கு அவனை உடனே கட்டி பிடித்துக்கொள்ள ஆசை வந்தது. .அடக்கிக்கொண்டேன் .

.

 மேலும் தொடர்ந்தான்.


“உன் அண்ணன்கள் தனித்தனியா போய்ட்டாங்க! உன் தங்கை கல்யாணமாகி போய்ட்டா ! வீட்டு வாடகை வருவதால் உன் அம்மா, அப்பா பட்டினி இல்லாமல் இருக்காங்க. யாரும் வந்து பார்த்துக்கறது இல்லை .”


எனக்கு உடனேயே அம்மாவையும், அப்பாவையும் பார்க்கணும்னு ஆசை வந்தது .திருவிழா முடியும் முன்னரே வாடகைக்கார் ஏற்பாடு செய்து ஊருக்கு கிளம்பினோம் . கேசவன் என் அருகில் நெருக்கமாக அமர்ந்திருந்தான் .


 எங்கள் இருவருக்கும் திருமணமாகி காரில் ஊருக்கு திரும்புவதுபோல கற்பனை செய்து பார்த்தேன் .  தித்திப்பாக இருந்தது.  


அவனது கைவிரல்களை இறுக்கி பற்றிக் கொண்டேன் . அவன் என்னை பார்த்து , புன்னகைத்தான்.


"கேசவா, உன் மடியில் கொஞ்சம் படுத்துக் கொள்ளட்டுமா ?"


என் தோள்களைப்பற்றி, அவனது மடியில் படுக்க வைத்துக்கொண்டான். என் கண்களில் கண்ணீர் பெருகியது .என்னை சமாதானப்படுத்தினான்


 . கார் டிரைவர் எங்களை கண்ணாடி வழியா பார்த்துக்கிட்டுருந்தான் . 


. சாதாரணமாக எங்களை போன்றவர்களை மற்றவர்கள் பார்க்கும் பார்வைகளை சகித்துக்  கொள்ள பழகி  இருந்தாலும், இன்று  இவனது பார்வை எனக்கு எரிச்சலை தந்தது.  


அவன் மீது எரிந்து விழுந்தேன் .


 அதன்பின் அவன் எங்களை திரும்பி பார்க்கவில்லை.


கேசவன் அவனை பற்றி பேசிக்கொண்டே வந்தான்.  தனக்கு திருமணம் முடிந்துவிட்டது என்றும் இரு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றும்  சொன்னது,  எனக்கு என்று குடும்பம் இருக்கிறது ஆசைகளை வளர்த்துக்கொள்ள வேண்டாம் என்று சொல்வது போல இருந்தது.  அவனது மடியிலிருந்து “சட் “ என்று எழுந்தேன் . 


ஊருக்குள் கார் நுழைந்தது . வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தேன் .


கேசவன் அவனது வீடு வருவதற்கு சற்று முன்பேயே இறங்கிக்கொண்டான். அவனை பார்த்தேன் . 


அவன் என்னை பார்க்கவில்லை . எனது வீட்டுக்கு வந்தேன் . வீடு சிதலமடைந்திருந்தது.


... -4


“அம்மா'


முழு பெண்ணாக என்னை எதிர்பாக்காத அம்மா சற்று தடுமாறி பின் புரிந்து கொண்டாள்.


ராதா என்று ஆசையாக கட்டிக் கொண்டாள்.


“ஏண்டா!  இத்தனைகாலம் எங்கடாயிருந்தாய் ? எங்களை ஏன் பார்க்க வரலே?

அடித்தாள். 


 சுகமாகஇருந்தது .


  அப்பா கட்டிலில் படுத்திருந்தார்.


அப்பா..... நான் ராதாகிருஷ்ணன் வந்திருக்கேன்.!


அப்பா அழுதார் .


“ ராதா உன்னை உதைத்த என் காலுக்கு கடவுள் தண்டனை தந்துட்டார்டா ! எல்லா பிள்ளைகளும் எங்களை கைவிட்டுட்டுப்போயிட்டாங்கடா”!

"அப்பா அப்படியெல்லாம் சொல்லாதீங்க ! இனி நான் உங்களுக்கு துணையா

இருப்பேன் ! இருக்கலாம்தானே....................?


எனது கேள்வி அவர்களை ஏதோ செய்து இருக்க வேண்டும்..... இருவரும் அழுதார்கள் .


“அப்படி சொல்லாதேடா . உன்னோட வீடுடா . தாராளமா இருடா .”.


சென்னை வீட்டை இருபது லட்ச ரூபாய்க்கு விற்றுவிட்டு வங்கியில் எனது பெயருக்கும் அம்மாவின் பெயருக்கும் போட்டு வைத்தேன் . அம்மா தோட்டத்து மல்லிகையை கோர்த்து, எனது தலைமுடியை பின்னல் போட்டு அழகுபடுத்தி உச்சி முகர்ந்தாள் . அப்பாவை நான் குளிக்க வைத்தேன் .


 அவர் கூச்சப்பட்டார் .


" அப்பா நான் உங்க பிள்ளை கிருஷ்ணன்”  என்று சொன்னதும் சமாதானம் ஆனார் . அப்பா தினம் தினம் எனக்கு செய்தசெயலை நினைத்து அழுதார் .


“ராதா உன்னை அந்த பதினாலு வயசுலேயே துரத்திவிட்டுடேன் . எவ்வளவு கஷ்டபட்டிருபாய்டா ! அவமானம் தாங்காமல் அப்படி நடந்துக்கிட்டேன்டா... நீ இப்படி ஆனதுக்கு நீயடா காரணம்?"


அழுதார் .


அப்பா அழுவாதீங்க ! அதுதான் நான் வந்திட்டேனே!"


தினம் தினம் அழுவரை சமாதானப்படுத்தினேன்.  எனக்கு ஏற்பட்ட நல்ல விஷயங்களை மட்டும் கற்பனை  கலந்து சொல்லி அவர்களை  சிரிக்க வைத்தேன்


இத்துணை  வருட  இடைவெளியை ......நெருக்கம் அதிகம் காட்டி..... குறுக்க நினைத்து .......

பல தடவை  தோற்றுப் போனேன் ......

.

நான் வந்திருப்பது தெரிந்தும் என அண்ணன்களோ, ,மங்களமோ என்னை வந்து பார்க்க வரவில்லை.

 அப்பா அதற்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுத்தார்.  என்னை பார்த்த திருப்தியிலோ , தன் மனைவியை தனியே விட்டு செல்ல வேண்டுமே என்ற கவலையோ இல்லாமல் திடீர்ரென்று  காலமானார்.. 


 இறுதிச்சடங்கிற்கு வந்த சொந்த பந்தங்களும் அண்ணங்களும் தங்கையும் என்னிடம் பேசவில்லை. அவர்களுக்குள் குசு குசுவென்று பேசிக் கொண்டார்கள். எனது தோற்றம் ,பணம், நகைகள் அவர்களுக்கு ஒரு பிரமிப்பை ஏற்படுத்தி இருந்ததை என்னால் உணர முடிந்தது.


.... -5

மூவரது குழந்தைகளின் படிப்பு செலவுக்கு தலா இரண்டு லட்சங்கள் கொடுத்தேன் .சற்று தயக்கத்திற்குப் பின் வாங்கிக்கொண்டார்கள். 


 மங்களம் மிக்க வசதி குறைந்தவளாக இருந்தாள். .கேசவன் வீட்டுக்கு வருவான் என்று எதிர்பார்த்து ஏமாந்துபோனேன்.  வழியில் எங்காவது பார்த்தால் புன்னகை மட்டும் சிந்திவிட்டு செல்வான் .கூட மனைவி இருந்தாள் எனில், என்னை பார்க்காதது போல செல்வான்.


 ஏமாற்றங்கள் புதிதல்ல என்றாலும் அவனது செயல்பாடுகள் எனக்கு வருத்தத்தை தந்தது.


ஒருநாள் அம்மா நெஞ்சுவலிப்பதாக சொல்லி துடித்தாள் . தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தார்கள் . யாருமே வந்து பார்க்கவில்லை. கேசவனுக்கு தகவல் சொல்லி அனுப்பினேன் 


.ஒரு நர்ஸ் ஓடிவந்து என்னிடம் ஒரு ஊசி மருந்து வாங்கிவரும்படி சொன்னாள். மருந்து வாங்கி திரும்பும் வழியில் வேகமாக வந்த கார் என் மீது மோதியது 


. அரை மயக்கத்தில் இருந்த என்னருகே யாரோ இருவர் பேசி கொண்டிருந்தது கேட்டது .


" அக்கா இதை பார்க்க யாருமே வரலையா ? அனாதையாக்கா ?".


“இல்லைடி, எல்லாம் இருக்காங்க . இதோட தலையெழுத்து பாவம் ,நெஞ்சுவலினு அட்மிட் ஆனவங்க பொண்ணுதான் இவங்க.."


பெண் என்ற அங்கீகாரம் சந்தோஷமாக இருந்தது.


அம்மா எப்படி இருக்காங்க ? அம்மாவை யாரு பார்த்துக்கறாங்க? ஊசி போட்டுருப்பாங்களா? பல சிந்தனைகள் மனதில் ஓடியது.


"அக்கா வேகமா வாங்க !"


"ஏண்டி?"


"இதோட அம்மா செத்து போய்ட்டாங்கக்கா !"


"சத்தமா பேசத்தடி இதுக்கு கேட்டிடப் போகுது ."


அம்மா இறந்திட்டாங்க என்று கேட்டவுடன் அழுகை வந்தாலும் நான் இப்படி இருக்க இனி யார் பார்த்துக் கொள்ளவர்கள் என்ற கவலை இல்லை.தலை வெடித்துவிடும்போல வலித்தது. எனக்கு ஏதேதோ செய்து கொண்டிருந்தார்கள் கேசவன் வந்து நிற்பது நிழலாக தெரிந்தது .


மீண்டும் கண் விழித்தபோது என்னை தனி அறைக்கு மாற்றியிருந்தார்கள். கேசவன் மனைவியுடன் வந்திருந்தான். எனக்கு சாப்பாடு ஊட்டினான் அவன் மனைவி சாப்பாடு பாத்திரங்களை கழுவி எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.


 ஒரு காலில் கட்டு போட்டு இருந்தார்கள் . தலையிலும் கட்டு. ஒருவாரம் போனதும் வீடு வந்துசேர்த்தேன் கேசவன் தினமும் அவனது வீட்டில் இருந்து சாப்பாடு கொண்டு வந்து தருவான்.


கேசவா! போதும் . எதுக்கு தினமும் சாப்பாடு நான்

 கடையில் வாங்கிக்கறேன் .",


"உனக்கு யார் இருக்காங்க ராதா என்னைத்தவிர? பேசாம சாப்பிடு "


அவனது அன்பு என்னை திக்குமுக்காட செய்தது. ஒருநாள் அண்ணன்களும் மங்களமும் பழங்களுடன் என்னை பார்க்க வந்தனர்.


 எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. கண்ணீர்

வந்துவிட்டது.


 பாசம் விட்டுப் போகுமா என்ன .? 


ஆரம்ப விசாரிப்புகளுக்கு பின் மங்களம் பேச ஆரம்பித்தாள்.


"ராதா ! அம்மா அப்பா நம்ம வீட்ல வாழ்த்து வந்ததால நாங்க ஓண்ணும் பேசல! இப்ப அவங்களும் இல்லை.. உனக்கு வசதி இருக்கு .எங்களுக்கு இல்லை. அதனால் இந்த வீட்டை வித்துடலாம்னு இருக்கோம்  எப்படியும் பத்துலட்சம் கிடைக்கும்  உனக்கு பங்கு தேவையில்லை என்றால் அதையும் நாங்க பிரிச்சிக்கிறோம் ."


என் மீது பாசம் கொண்டு அடிபட்ட என்னை பார்க்க வந்திருக்கிறார்கள் என்ற சந்தோக்ஷம் சட்டென்று வடிந்தது.


“பத்துலட்சம் தந்துவிடுகிறேன் அம்மா அப்பா இருந்த வீட்டில் நான் இருந்து கொள்கிறேன் , இரண்டு மாசம் போகட்டும் என்று சொன்னேன். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு “சரி’  என்று சொன்னார்கள். 


ஒரு மாதம் முடிந்தது. என்னால் இயல்பாக எல்லா வேலைகளையும் செய்ய முடிந்தது.  ஒருநாள் கேசவன் வீட்டுக்கு வந்தான்.

'

“ வா கேசவா! காபி போட்டு தரவா?”

சரி ராதா!  அரை கப் போதும்!”


“என்ன விஷயம் ராகவா ?

'

‘என் மனைவி விசா,  உன்னை நாளைக்கு சாப்பிட வரச்சொல்லி இருக்காங்க!”


“வேண்டாம் கேசவா! இத்தனை நாள் சாப்பாடு கொண்டு வந்து கொடுத்துருக்கிறாய். போதும்! இனி வேண்டாம் உங்க ரெண்டுபேரோட அன்பு போதும் .”


“இல்லை ராதா! கண்டிப்பா வரணும்னு சொல்லிருக்காங்க !”


அடுத்தநாள் கேசவனுக்கு பிடித்த கேரட் அல்வா செய்து எடுத்துக்கொண்டேன். தோட்டத்து மல்லிகை மலர்களை தொடுத்து எடுத்துக் கொண்டேன்.


“வாங்க வாங்க”


“விசாலம் சமயலறையிலிருந்தவரே என்னை அழைக்க, நான் உள்ளே சென்றேன் . கேசவன் என்னை தொடர்ந்து வந்தான் .


“நீங்க எங்க வரீங்க? நாங்க பொம்பளைங்க! ஏதாவது பேசிக்கொள்வோம், போங்க ஹாலுக்கு!”


அவன் திரும்பி ஹாலுக்கு சென்றான் .


சாமி படங்களுக்கு நான் கொடுத்த மலர்களை அணிவித்து ஒரு தட்டில் அழகான பட்டுபுடவை, பூ எல்லாம் வைத்து எனக்கு கொடுத்து என் கால்களில் விழுந்து அழுதாள் .'


நான் பதறினேன்!


“என்ன விசா எதுக்கு அழுகிறாய் ?”

.

“அக்கா! உங்ககிட்ட நான் ஒண்ணு கேட்கணும்.”


“சொல்லு விசா!”


எங்களுக்கு கல்யாணமாகி பத்து வருஷம் ஆனாலும் இதுவரை எங்களுக்குள் எந்தவித சண்டைகளும் வரவில்லை. நீங்க ஊருக்கு வந்த பின்னாடி தினமும் உங்களை பத்தி மட்டுமே பேசுகிறார் . எங்களுக்குனு எந்தவிதமான பேச்சும் கிடையாது . நான் முதலில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை . நாளாக நாளாக எப்போ பார்த்தாலும் உங்க பேச்சுதான் . எனக்கு இப்போது பயம் வந்துவிட்டது. என்னை விட்டுட்டு உங்ககூட வந்துவிடுவாரோ என்று ! உங்க தோழமை எனக்கு தெரிந்திருந்தாலும் பயம் வந்து ராத்திரி தூக்கம் வர மாட்டிங்குது. .தலைவலி வந்திட்டுது . அதனால ...


சொல்லிவிட்டு சற்று நிறுத்தி வேறுபக்கம் பார்த்து


, நீங்க இந்த ஊரில் தங்க போறீங்கன்னா நாங்க எங்க ஊருக்குபோகலாம்னு நினைத்து கொண்டுருக்கிறேன் . தயவுசெய்து நான் சொன்னதை அவர்கிட்ட சொல்லாதீங்க!


அம்மா, அப்பா, உடன்பிறப்புக்கள், ஊர், கேசவன் என்று   ஆசையோட வந்த எனக்கு , ஒவ்வொன்றாக என்னைவிட்டு போவது தெரிந்தது 


. அங்கே நின்று கொண்டிருந்த  ஒவ்வொரு நொடியும்

நரகமாக இருந்தது .


கவலைப்பட வேண்டாம் விசா ! நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நான் இங்கே இருக்கப் போவது இல்லை .சென்னை சென்று விடுவேன் "


ஹாலில் அமர்ந்திருந்த  கேசவனை கடைசியாக ஒருமுறை உள்வாங்கிக் கொண்டேன் .


“போயிட்டு வரேன் கேசவா !”


அவன் தலையசைத்தான் ..

.

“ மங்களம்,  வீடு எனக்கு வேண்டாம் நீ வைத்துக்கொள் . உனது பேருக்கு மாற்றி எழுதித்தரேன். அண்ணன்களுக்கு தலைக்கு அஞ்சு லட்சம் கொடுத்துவிடுகிறேன் . உனக்கு ரெண்டு லட்சம் தரேன். அப்பா அம்மா நாம எல்லாம் வாழ்த்த இடத்தில் நீ இரு.”


“நீ என்ன பண்ண போகிறாய் இங்கே இருந்திடுவாயா ?”


அவளது பயம் எனக்கு சிரிப்பை தந்தது .

.

“இல்லே மங்களம்! நான் சென்னைக்கு சென்று விடுவேன் .

எனக்குன்னு யாரு இருக்காங்க சொல்லு?”.

'

மங்களம் பேசாமல் கேட்டு கொண்டு இருந்தாள். நாங்க இருக்கோம் என்று சொல்லவில்லை. :


. மங்களம் பெயருக்கு வீட்டை எழுதி கொடுந்தேன் . அண்ணன்கள் அவரவர் குடும்பங்களுடன் வந்து பணத்தை பெற்று கொண்டனர் . அனைவருடனும் செஃல்பி  எடுத்துக்கொண்டேன் .


 துணிகள் அடங்கிய சின்ன பையை எடுத்துக்கொண்டேன் .


அப்பா வீதியில் துரத்திவிட்டபோது பாட்டி தந்த இரண்டாயிரம் ரூபாய் இருந்தது .

இப்ப சின்ன பை அவ்வளவுதான் வித்தியாசம்.


போய்வருகிறேன் என்று சொன்னபோது ஒருவரும் போகவேண்டாம் என்று சொல்லவும் இல்லை! உன்னை இனி எப்பொழுது பார்ப்போம் என்று கேட்கவும் இல்லை!


ஏதாவது வேணும்ன்னா என்னை கூப்பிடுங்க என்று சொல்லி எனது செல்போன் எண்ணை எழுதிகொடுந்தேன் .


அவர்கள் அவர்களது நம்பர்   தரவில்லை .


ரயில் ஏறி பையை ஓரமாக வைத்தேன் .


கைகளை தட்டி காசு கேட்க ஆரம்பித்தேன் ............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages