வரலாற்றில் இன்று 02.12.2020
December 2, 2020
என்றும்....
அன்புடன்.....
என் இனிய காலை வணக்கங்கள்..
டிசம்பர் 2 கிரிகோரியன் ஆண்டின் 336 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 337 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 29 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1755 – ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாவது எடிஸ்டோன் கலங்கரை விளக்கம் தீ விபத்தில் அழிந்தது.
1804 – பாரிசில் நெப்போலியன் பொனபார்ட் பிரான்சின் பேரரசனாக முடிசூடினான்.
1805 – நெப்போலியனின் தலைமையில் பிரெஞ்சுப் படைகள் ஓஸ்டர்லிட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் ரஷ்ய-ஆஸ்திரியக் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தனர்.
1843 – யாழ்ப்பாணத்தில் கடும் சூறாவளி வீசியதில் பலத்த அழிவுகள் ஏற்பட்டன.
1848 – முதலாம் பிரான்ஸ் ஜோசப் என்பவன் ஆஸ்திரியாவின் பேரரசன் ஆனான்.
1851 – புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரெஞ்சு தலைவன் சார்ல்ஸ் லூயி பொனபார்ட் இரண்டாம் குடியரசைக் கலைத்தான்.
1852 – மூன்றாம் நெப்போலியன் பிரான்சின் பேரரசன் ஆனான்.
1908 – பூ யி தனது இரண்டாவது அகவையில் சீனாவின் பேரரசனாக முடிசூடினான்.
1942 – மன்காட்டன் திட்டம்: என்றிக்கோ பெர்மி தலைமையிலான குழு செயற்கையாகத் தானே தொடருமாறு நிகழும் அணுக்கரு தொடர்வினையை ஆரம்பித்தது.
1946 – பிரித்தானிய அரசாங்கம் நேரு, பால்தேவ் சிங், ஜின்னா, மற்றும் லியாகத் அலி கான் ஆகிய தலைவர்களை இந்தியாவின் சட்ட சபையைப் பிரதிநிதித்துவப்படுத்த அழைத்தது.
1947 – பாலஸ்தீன நாட்டைப் பிரிக்க ஐநா சபை எடுத்த முடிவை அடுத்து ஜெருசலேமில் கலவரம் வெடித்தது.
1954 – சீனாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பத்தம் வாஷிங்டன் டிசியில் கைச்சாத்திடப்பட்டது.
1956 – பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா மற்றும் ஆதரவாளர்களும் கியூபா புரட்சியை முன்னெடுப்பதற்காக கிரான்மா என்ற படகில் கியூபாவை சென்றடைந்தனர்.
1961 – பிடெல் காஸ்ட்ரோ தன்னை ஒரு மார்க்சிச-லெனினிசவாதி எனவும் கியூபா கம்யூனிச நாடாக இருக்கும் எனவும் அறிவித்தார்.
1971 – அபுதாபி, புஜெய்ரா, ஷார்ஜா, துபாய் மற்றும் உம் அல் குவைன் ஆகியன இணைக்கப்பட்டு ஐக்கிய அரபு அமீரகம் என்ற ஒரே நாடாக ஆக்கப்பட்டது.
1971 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் விடுதலை பெற்றது.
1975 – பத்தே லாவோ என்பவர் லாவோசின் ஆட்சியைப் பிடித்து லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசை அமைத்தார்.
1976 – பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசுத் தலைவரானார்.
1980 – எல் சல்வடோரில் நான்கு ஐக்கிய அமெரிக்க கன்னியாஸ்திரிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
1988 – பெனாசீர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரானார்.
1990 – ஒன்றுபட்ட ஜேர்மனியில் 1932 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற முதலாவது பொதுத்தேர்தலில் அதன் வேந்தர் ஹெல்முட் கோல் தலைமையிலாண கூட்டணி வெற்றி பெற்றது.
1993 – ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியைத் திருத்தும் நோக்கோடு நாசாவின் எண்டெவர் விண்ணோடம் விண்ணுக்கு ஏவப்பட்டது.
1995 – யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கை இராணுவத்திடம் வீழ்ச்சி அடைந்தது.
2002 – இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஒஸ்லோவில் ஆரம்பமாயின.
2005 – போதைப்பொருள் கடத்தல் குற்றத்துக்காக ஆஸ்திரேலியரான வான் துவோங் நியூவென் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார்.
2006 – பரிதிமாற் கலைஞரின் நூல்கள் தமிழக அரசினால் நாட்டுடமை ஆக்கப்பட்டன.
2006 – பீகார் மாநிலத்தின் பகல்பூரில் பாலம் இடிந்து வீழ்ந்ததில் அதன் வழியாகச் சென்ற கடுகதித் தொடருந்து வண்டி விபத்துக்குள்ளாகியதில் 35 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1885 – ஜார்ஜ் மினாட், அமெரிக்க மருத்துவர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1950)
1910 – ரா. வெங்கட்ராமன், இந்தியாவின் 8வது குடியரசுத் தலைவர்
1933 – கி. வீரமணி, திராவிடர் கழகத் தலைவர்.
1937 – மனோகர் ஜோஷி, இந்திய அரசியல்வாதி, 15வது மகாராட்டிரா முதல்வர்
1960 – சில்க் ஸ்மிதா, தென்னிந்திய நடிகை (இ. 1996)
1963 – நெப்போலியன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி
1978 – நெல்லி ஃபர்ட்டடோ, கனடிய நடிகை
1980 – டேரின் ரேண்டால், தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர் (இ. 2013)
1981 – பிரிட்னி ஸ்பியர்ஸ், அமெரிக்கப் பாடகி
1982 – முருகதாசன், தீக்குளித்து இறந்த ஈழத்தமிழன் (இ. 2009)
இறப்புகள்
1547 – எர்னான் கோட்டெஸ், நாடுபிடிப்பாளர் (பி. 1485)
1552 – புனித பிரான்சிஸ் சேவியர், ரோமன் கத்தோலிக்க மிஷனறி (பி. 1506)
1911 – பாண்டித்துரைத் தேவர், தமிழறிஞர் (பி. 1867)
1933 – ஜி. கிட்டப்பா, நாடக நடிகர்
2006 – வீ. துருவசங்கரி, இலங்கையின் அறிவியலாளர் (பி. 1950)
2008 – மு. கு. ஜகந்நாதராஜா, பன்மொழிப் புலவர் (பி. 1933)
சிறப்பு நாள்
லாவோஸ் – தேசிய நாள்
ஐக்கிய அரபு அமீரகம் – தேசிய நாள் (1971)
ஐக்கிய நாடுகள் – அடிமைத்தனத்தை அழிக்கும் சர்வதேச நாள்
சிவா ஐயாதுரை: முதன்முதலில் மின்னஞ்சலைக் கண்டுபிடித்த தமிழன்
வி. ஏ. சிவா ஐயாதுரை (V. A. Shiva Ayyadurai) (பிறப்பு திசம்பர் 2 1963, தமிழ்நாடு, இந்தியா) தமிழ்நாட்டில் பிறந்து அமெரிக்காவின் குடிமகனாகிய ஓர் அறிவியலாளரும் புதியன கண்டுருவாக்குநரும் (புத்தியற்றுநரும்) தொழில் முனைவோரும் ஆவார்.
இன்று அறியப்படும் மின்னஞ்சல் ("EMAIL") என்பதை உருவாக்கியவர் என்னும் பெருமைக்குரியவர்
.
இவர் 1978 இல் உயர்நிலைப்பள்ளியில் இருந்தபொழுதே மின்வழி அஞ்சல்களை அனுப்பும் மின்னஞ்சல் முறைமையையும், மின்னஞ்சல் என்பதை "EMAIL" என்னும் பெயரிலும் உருவாக்கி நிறுவியவர். இதற்கான காப்புரிமத்தை (காப்புரிமப் படிவம் "TXu-111-775") ஐக்கிய அமெரிக்காவின் காப்புரிம அலுவலகத்தில் இருந்து 1982 இல் பெற்றுள்ளார்.
இன்று உலக மக்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு முகவரி இருக்கிறது. அவரவர் வீட்டு முகவரி என நினைத்துவிடாதீர்கள். ஒரே வீட்டில் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு முகவரி இருக்கிறது. அதுதான் மின்னஞ்சல்(e-mail) முகவரி. இன்றைய நவின காலத்தில் எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் மின்னஞ்சல் கண்டிப்பாகத் தேவை என்று ஆகிவிட்டது.
இந்த மின்னஞ்சலைக் கண்டுபிடித்தவர் ஒரு ‘தமிழன்’ என அறியும்போது ‘தமிழன் என்று சொல்லடா; தலைநிமிர்ந்து நில்லடா’ என்று நெற்றிப் புருவம் மேலே ஏறுகின்றது! நரம்புகளில் ஏதோ ஓர் உணர்வு முறுக்கேறுகின்றது.
வெள்ளைத் தாளில் தூவலைப்(பேனா) பிடித்து கடிதம் எழுதிய பாரம்பரிய முறையை மாற்றிப்போட்டு மின்னியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்மடல் எழுதும் புதிய பரிணாமம்தான் இந்த மின்னஞ்சல். ஆனால், இன்றோ அதனுடைய பயன்பாடு பல்வகைப்பட்டதாக மாறிவிட்டது. நவின உலகத்தில் மின்சாரம் இல்லாமல் எப்படி வாழ முடியாதோ அப்படி ஆகிவிட்டது இந்த மின்னஞ்சல். இ-மெயில் எனப்படும் மின்னஞ்சல் இல்லாமல் இன்றைய உலகத்தில் வாழ முடியாது என்னும் நிலைமை வந்துவிட்டது.
ஆகக் கடைசியாக வந்திருக்கும் முகநூல் (Facebook), டுவிட்டர் (Twitter), கூகிள் + (g+) யூ டியூப் (You Tube) என்று எந்தத் தொழில்நுட்பத்தை எடுத்துக்கொண்டாலும் இந்த மின்னஞ்சல் இல்லாமல் எதுவும் செயல்படாது; எதிலும் நாம் செயல்பட முடியாது.
அந்த அளவுக்கு முகமைத்தன்மை வாய்ந்த மின்னஞ்சலை முதன் முதலாகக் கண்டுபிடித்து உலகத்திற்கு வழங்கிய அறிவியலாளர் - தொழில்நுட்பர் வி.ஏ.சிவா ஐயாதுரை என்பவராவார். மின்னஞ்சல் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்ததற்கான காப்புரிமையையும் (copyright) இவர் பெற்றிருக்கிறார். இவர் தமிழ்நாட்டில், தமிழ்க் குடும்பத்தில் பிறந்து பின்னர் அமெரிக்காவில் குடியேறிய தமிழர்.
தற்பொழுது 57 அகவை நிரம்பிய சிவா ஐயாதுரை, மின்னஞ்சலைக் கண்டுபிடித்த பொழுது 14 வயது இளைஞராக இருந்தார் என்னும் செய்தியை அறியும்போது நமக்குப் பெரும் வியப்பும் பெருமிதமும் ஏற்படுகிறது.
30 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் மின்னஞ்சல் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து உலகத்திற்கு அறிமுகப்படுத்திய பொழுது அதனை அமெரிக்க அரசாங்கம் அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை. குடியேற்ற சிறுபான்மை இனத்தவர் என்ற காரணத்தினாலோ என்னவோ இவருக்கு உரிய உறுதிபாட்டையும் காப்புரிமையையும் கொடுக்கவில்லை. இதனால், மின்னஞ்சலுக்குப் பலரும் சொந்தம் கொண்டாடினர்.
ஆனாலும், 4 ஆண்டுகள் கழித்து 1982ஆம் ஆண்டு ஆகத்து 30ஆம் நாள் சிவா ஐயாதுரையின் அரிய கண்டுபிடிப்புக்கு உரிய உறுதிப்பாடும் மின்னஞ்சல் காப்புரிமையும் (e-mail copyright) வழங்கப்பட்டது.
இ-மெயில் (e-mail) என்ற பெயரை உருவாக்கியவரும் இவர்தான். அதோடு, மின்னஞ்சலின் உள்ளடக்கங்கள் (inbox, outbox, draft), செயல்முறைகள் (reply, forward, attachment, broadcasting), குறிப்பான்கள் (to, from, subject, Cc, Bcc, Date, Body) ஆகிய எல்லாவற்றையும் உருவாக்கியவரும் பெயரிட்டவரும் இவரேதான்.
சிவா ஐயாதுரை தற்பொழுது அமெரிக்காவின் புகழ்பெற்ற எம்.ஐ.டி பல்கலையில் விரிவுரையாளராக பணியாற்றுகிறார். முன்பு மாணவனாக இருந்தபொழுது தன்னுடைய கண்டுபிடிப்புக்கு சரியான உறுதிப்பாடு கிடைக்காமல் போனதால் மிகவும் மனமுடைந்து போனதன் காரணமாக, தன்னைப்போல் எந்தவொரு மாணவரும் உரிய மதிப்பு கிடைக்காமல் வருத்தமடைய கூடாது என்னும் எண்ணத்தில் இன்னோவேசன் கார்ப்சு (Innovation Corps) என்ற ஒரு நிறுவனத்தை நிறுவியுள்ளார். இந்த நிறுவனம் மாணவர்களின் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தவும் அவற்றைத் தொழில்படுத்தவும் உதவும் என அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நோவார்க்கு நகர உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு இலக்கம் அமெரிக்க டாலர் (USD100,000) பரிசுத் தொகையை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
சிவா ஐயாத்துரையின் கண்டுபிடிப்பு இன்று உலகத்தையே கட்டிப்போட்டுத் தன் வயப்படுத்தி இருக்கிறது. தமிழனால் முடியும்! தமிழன் சாதிக்கப் பிறந்தவன்! என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் சாதனைத் தமிழன் சிவா ஐயாதுரை.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக