அருணா ரகுராமன்
04.12.20
அன்பெனும் அப்பா
****************
அன்பென்றாலே அம்மா
இதை யாவரும் உணர்ந்ததுண்டு
தந்தையின் அன்பை யாரறிவார் ?
அந்த முரட்டுதோல் பலா பழத்தின்
தேன் சொட்டும் சுவைதனை யார் உணர்வார் ?
அம்மா சுமப்பாள் கருவில் பத்து மாதம்
அப்பா சுமப்பார் நெஞ்சினிலே இறுதி வரை
அன்னை இடுப்பிலிருந்து இறங்கி விட்டால்
அப்பாவின் தோள் தானே அடைக்கலம்
கை பிடித்து கடை தெரு அழைத்து செல்வார் எதிரில்
கண்டவருக்கெல்லாம் உரைப்பார். என் மகன்
முக கண்ணாடி கூட தேவையில்லையே
என் முகத்தில் அவர் முகத்தை காண்கையிலே
பாசம் வார்த்தையில் தெரியாது
பார்த்து கொஞ்சிட அறியாது
பாறைக்குள்ளும் இருக்கும் தேரை போல்
எங்கள் பந்தம் நாள்தோறும் வளருதய்யா
அடித்து சொல்வார்
சில வேளை வாழ்வில் நான்
அடிபட்டு போக கூடாதென்று
உன்மகன் என அம்மாவிடம் கோடிட்டாலும்
அங்கே என் மகன் என்ற பெருமையே தொக்கி நிற்கும்
தோளுக்கு மிஞ்சினால் தோழனன்றோ
மீசை அரும்பி விட்டாலோ மனதில் ஆசை தான்
வளர்ந்து விட்டான் என் மகன்
விடிந்து விடும் என் கவலை
வீட்டுக்கு தலை பிள்ளை
விளங்கிடுவான் , விளக்கேற்றிடுவான்
குடும்ப கொடி ஏற்றிடுவான் நம்பி நிற்கும்
தம்பி தங்கை கரை ஏற்றிடுவான்
நெஞ்சமெல்லாம் நம்பிக்கைகள்
தன்னை தேய்த்து மணக்கும் சந்தனம் போல
அன்பெனும் அப்பா



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக