வெள்ளேந்தி மனுசங்க(சிறுகதை)
வேலைகெடச்சு அந்த நகரியத்துக்கு வந்து ஆறு மாசமாயிருந்துச்சு.
அதுவரைக்கிம் சொந்த ஊருல லோயர் மிடில் கிளாஸ்ல நொந்து நூடுல்ஸ் ஆகி கஞ்சிக்கே வழியில்லாம கஸ்ட்டப்பட்டுட்டு இங்க வந்து மூணுவேளையும் மூக்குப்பிடிக்க சாப்பாடு கெடச்சதே ஒரு சொர்கத்துக்கு வந்துட்ட ஃபீலிங்
அப்பயெல்லாம் லெட்டர் வீட்டுக்கு எழுதும் போது இங்குணக்குள்ள தெனம் இட்லி தோசை பூரியெல்லாம் காலையில டிப்பனா சாப்புடுறேன்னு எழுதுற அளவுக்கு இருந்தேன்.
தம்பிமாருக தெனமுமா அப்ப கஞ்சியெல்லாம் இல்லையான்னு ஆச்சர்யப்பட்டுக் கேட்டானுக
அதேமாதிரி மூணுவேளையும் சாப்புடுறீயா குடுத்துவைச்சவன் நீன்னு தம்பி மாருக விட்ட பெருமூச்சு இங்க வரைக்கும் வந்துச்சி.
அப்ப அவனுக அண்ணே நாங்க வந்து ஒரு வாரம் இருந்துட்டு வரலாமா தெனம் இட்லி தோசை பூரி யெல்லாம் சாப்புடலாமுல்லன்னு கேட்டப்ப பாவமா இருந்துச்சு. ஆனா அதெல்லாம் வேலைசெய்யிற எடத்துல இருக்குற கேண்டீன்லன்னு சொல்லி அவங்களை வருத்தப்படவைக்க வேணாமுன்னு சரி வாங்க சாப்புடலாமுன்னு சொல்லிட்டேன்
அவனுகளும் ரயில்வே பாசுல (ஓசிதான) மூணுபேரும் வந்துட்டானுக அன்னிக்கி லீவையும் போட்டுட்டு எல்லா ஏற்பாடும் பண்ணி வைச்சிருந்தேன். அவங்களுக்கு பிரஸ் பேஸ்ட் சோப்பு வாசனை எண்ணை எல்லாம் வாங்கி வைச்சிருந்தேன்
ஏன் இதைச்சொல்றேன்னா எங்கவீட்டுல பல்பொடியெல்லாம் கெடையாது. சாம்பல்தான் பல்லு வெளக்க. அதேமாதிரி சோப்பு எல்லாம் கெடயாது. அப்பா வீட்டுல இருக்குறப்ப ஒரு லைப்பாய் சோப்பு அவரோட வேலைக்குப்போற பையில இருக்கும். அத அவருக்குத்தெரியாம எடுத்துக்குளிச்சிட்டா கத்துவாரு.
ஒரு தடவ ஆத்துக்கு குளிக்கப்போனப்ப ஆரோ சோப்புதுண்டு விட்டுட்டுப்போயிட்டாக. நல்லா அழுக்குப்போகுதுன்னு தேய்ச்சிக்குளிச்சிட்டு இருந்தப்பதான் பாத்துட்டு ஒருத்தர் சொன்னாரு டேய் அது துணிக்கிப்போடுற சோப்புடா..... உடம்புக்குப்போடகூடாதுன்னு. ஏன்னா அதுவரைக்கும் செல்லம் சோப்புத்தான் துணிக்கே போட்டுட்டு இருந்தோம். இது ஊதாக்கலருல இருந்தது அப்புறம் இங்கவந்து தெரிஞ்சிக்கிட்டதுதான் ரின் சோப்பே
அதே மாதிரி இங்க பாத்ரூமுல சவர் இருந்துச்சு. அதே ஆச்சர்யமா இருந்துச்சு. அதுக்காகவே மூணு தடவ குளிப்பேன். இங்க வந்த புதுசுல கெணறுகள்ல எல்லாம் தரை மட்டத்துக்கு தண்ணி கெடக்குறது ஆச்சர்யமா இருக்கும்.....
இப்ப தம்பிகளுக்காக தோசைக்கி மாவரைச்சி மூணு சட்டினி எல்லாம் ரெடி பண்ணி வச்சிருந்தேன். டேய் பல்லு வெளக்கிட்டு குளிச்சிட்டு வாங்கடான்னு சொன்னவன்ன அவனுக பாத்ரூமையும் சவரையும் அதிசயமாப்பாத்தானுக. வாங்கிவைச்சிருந்த பிரஸ் எடுத்துக்குடுத்து சோப் எடுத்துக்குடுத்தேன் சாம்பு கூட குடுத்துட்டு வந்தேன்
பல்லு வெளக்கப்போன ஒருத்தன் கொஞ்சநேரத்துல மூஞ்சியெல்லாம் நொரை தள்ள வந்தான் அள்ணேன் நொரை நழ்ளா வருதுன்னான். போய் பாத்தா பயபுள்ள சேவிங் பேஸ்ட்ட எடுத்து பல்லு வெளக்கிருக்கு. துப்பித்தொலைடா அது சேவிங் பண்ணுறதுன்னு சொல்லி அப்புறம் டூத் பேஸ்ட்ட எடுத்துக்கையில குடுத்துட்டு வந்தேன்.
அவன் ஒரு வழியா வெளியவந்தான்
அடுத்தவன் கிட்ட பேஸ்ட் பிரஸ் ரெண்டையும் கைல குடுத்துட்டு வந்தேன். கொஞ்சநேரத்துல பாத் ரூமுல இருந்து பினாயில் நாத்தம் வந்தது.
டேய் பாத்ரூமெல்லாம் கழுவாத குளிச்சிட்டு மாத்திரம் வாடான்னு கொரல் குடுத்தேன்.... அண்ணேன் இந்த சாம்பு வாசமா இருக்கு ஆனா நொரை வரலண்ணான். அப்புறம்தான் விபரீதம் எனக்குப்புரிஞ்சது..... பினாயில சாம்புன்னு தலைக்கிப்போட்டுறுக்கான்
கதவைதட்டி தொறந்து பாத்தப்ப அவன் மேலெல்லாம் ஒரே பினாயில் நாத்தம் அதுவேற மல்லிகவாசம் வார பினாயில். அவன் சொன்னான் அண்ணேன் வாசம் நல்லாருக்குண்ணேன் சவருல நல்லாத்தண்ணி கொட்டுதுண்ணேன் நான்
சவரே அவனுக்கு ஆச்சர்யமா இருந்துச்சு,. ஏன்னா ஊருல பாத்ரூமுன்னு ஒன்னு கெடையாது வாளில தண்ணியப்புடிச்சி சொம்புல மொந்து ஊத்தி ரோட்டுலயே குளிக்கிறதுதான்....
அப்புறம் அவனுகளைக்கூப்புட்டுபோய் கக்கூஸ் பயன்பாட்ட சொல்லிக்குடுத்தேன் வாரப்ப எல்லாத்தையும் கழுவிட்டு வரணும் பிளஸ் அவுட் பண்ணனும்ன்னு சொன்னேன். அதெல்லாம் அவனுகளுக்குப் புதுசா இருந்துச்சு.
அவனுக தோச ஒரு ஆளுக்கு எத்தனைன்னு கேட்டப்ப கண்ணுல தண்னி வந்துருச்சு. எத்தனை வேணுமானாலும் சாப்புடுங்கடா அளவெல்லாம் இல்லைடான்னு சொன்னப்ப அப்புடியாண்ணேன் தெனமும் அளவில்லாம தோச நீ திம்பியான்னு அப்பாவித்தனமாக் கேட்டப்ப பாவமா இருந்துச்சு. ஏன்னா ஊரு நெலமை அப்புடி....
அவனுக நல்லா வயிறு நெறைய தோசை சாப்புட்டானுக.மத்தியானத்துக்கு கறி எடுத்துக்கொழம்பு வைச்சிருந்தேன். சமைச்சிட்டு சாப்புட கூப்புட்டா பயலுக எந்திரிக்கல. அசந்து தூங்கிட்டு இருந்தானுக
எந்திரிச்சதும் சாப்புடுங்கடான்னு சொன்னேன் . என்னா கொழம்புன்னு கேட்டானுக. கறிக்கொழம்புன்னு சொன்னவன்ன அவங்களுக்கு ஒரே சந்தோசம் .
இதுவும் தெனமுமாண்ணேன் நு கேட்டானுக. இல்லடா வாரத்துல ஒரு நாள் ஞாயித்துக் கெழமதான் நு சொன்னேன் அப்ப பக்கத்துல இருந்து ஒரே வாசம் பக்கத்துல மலையாளிக குடியிருந்தானுக. கூட வேலை பாக்குறவுகதான்.
அந்த வாசம் நல்லாருக்குண்ணே நானுக. எனக்குத்தெரியும் அவனுக காங்கிரஸ்(மாட்டுகறி) வாங்கி சமைக்கிறது... அத இவனுககிட்ட சொன்னேன். அவனுக அப்பாவியாக்கேட்டானுக அவங்க எல்லாம் செவப்பா இருக்கானுகளே இதெல்லாமா திம்பானுகன்னு.....நான் என்ன பதிலச்சொல்ல அவங்க ஊருல அது சகஜம்டான்னு சொன்னேன்....
ஆனா அவனுகளால மத்தியானம் சரியா சாப்பிட முடியல. ஏன்னா காலையில திண்ணதே இன்னும் செமிக்கல. அண்ணே ராத்திரிக்கி வைச்சிக்கலாமுண்ணேன் நு சொன்னானுக.
சரி வாங்கடா சாயங்காலம் மகாபலிபுரம் கூட்டிட்டுப்போறேன்னு கூப்புட்டுபோனேன்
கடல் கரை பாத்து அசந்துபோயிட்டானுக எம்புட்டுத்தண்ணி.... அதுல குளிக்கலாமாண்ணேன்னு கேட்டானுக. வேணாம் அதுல அலை இழுத்துட்டுப்போயிடும்ன்னு சொல்லி எல்லாத்தையும் காமிச்சி கூப்புட்டு வந்தேன்
மத்தியாணம் சரியா சாப்புடாத்தாலயும் இப்ப நல்லா நடந்ததாலயும் நல்ல பசி அவனுகளுக்கு, பசிக்குதுண்ணேன் நு சொன்னானுக சரின்னு மாமல்ல பவன் ஓட்டலுக்குக் கூப்புட்டுப்போனேன் .
என்னாடா சாப்புடுறீங்கன்னு கேட்டவன்ன ஒரே கொரல்ல சொன்னானுக பூரி ந்னு . ஆனா அங்க பூரி இல்ல சோலா பூரிதான் இருந்துச்சு. ஆளுக்கு ஒரு சோளாபூரி சொன்னேன்.
சர்வர் கொண்டாந்ததும் பாத்துட்டு அய் பூரி எம்புட்டுப்பெருசா இருக்குக்குன்னு கண்ணெல்லாம் விரியச்சொன்னானுக
. அது நல்லா உப்பியிருந்துச்சா. நடுவுல விரல்லகுத்திஆவிவெளியவந்ததைப்பாத்துட்டு வாயப்பொழந்தானுக. சாப்புட்டு தட்டுல 5 ரூ டிப்ஸ் வைச்சேன். அண்ணே டிப்ஸ் அஞ்சு ரூவாயா நம்ம ஊருல பத்து இட்லி வாங்கலாமுன்னு சொன்னானுக.
அப்புறம் வீடுதிரும்பி வந்து சாப்புட்டு படுத்தப்ப அவனுக சொன்னானுக அண்ணேன் நாங்க எல்லாரும் இங்கயே வந்துருட்டுமா... ஊருல அம்மா சரியா சோறு போட மாட்டீங்குதுன்னேன்னானுக. அப்ப எனக்கு கண்ணு கலங்குச்சு.
இப்ப முடியாதுடா ஏன்னா இன்னும் வீடு எனக்குக்குடுக்கல இந்த வீட்டுல நாலுபேரு இருக்கோம் அவங்க எல்லாம் ஊருக்குப்போயிருக்காங்க....வந்துருவாக ஆனா எனக்கு வீடு தனியா கெடச்சவன்ன வந்துருங்கன்னு சொன்னேன்.... அவங்க அப்படியே சந்தோசத்துல பேசிக்கிட்டே இருந்தானுக எப்ப த்தூங்குனானுகன்னு தெரியல.
ஆனா அவங்க மொகத்துல இருந்த சந்தோசமும் சிரிப்பும் எனக்கு மனசுல நின்னுச்சு.... இது மாதிரியே அவங்களை வைச்சிருக்கனும்ன்னு நெனச்சிக்கிட்டேன்
ஆனா எனக்குத்தான் தூக்கம் வரல ஏன்னா
இவங்க வந்து மூணுநாள் தங்குன செலவுக்கு வாங்குன கடன் நெனவுக்கு வந்துச்சு...
ஏன்னா அப்ப சம்பளம் எனக்கு 185 ரூ...தான்
அ.முத்துவிஜயன்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக