பங்காளி
“டேய் கீர்த்தி... அசையாதடா! பின் குத்திண்டு இருக்கேன்! அப்புறம் உடம்புல குத்தினா அழுவே”
“நான் தான் சொன்னேனே எனக்கு இதில இன்டெரெஸ்ட் இல்லைனு...”
“அம்மாக்கு ஆசைடா செல்லம்”
“போம்மா! எனக்கு ஸ்டேஜ் ஏற வெக்கமா இருக்கும்”
“ஸ்டேஜ் பயம் போயிடும்டா கண்ணா...”
“அம்மா என்னம்மா பண்றே?”
மழலையில் கேட்டாள் சாரதா
“அண்ணாக்கு ஸ்கூல்ல ஒரு போட்டி”
“போட்டினா?”
“யாரு நல்லா டிரஸ் பண்ணிக்கிட்டு வராங்களோ? அவங்களுக்கு கிப்ட் கொடுப்பாங்க”
“அப்ப எனக்கும் பண்ணிவிடு”
“போடி! நீ எல்லாம் இல்லை”
சாரதா அழ ஆரம்பித்தாள்.
..அவனை மேக்கப் பண்ண விடாமல் அவனது ட்ரெஸ்ஸை கலைத்தாள்.
“ சரி... சரி... அழாதே! உனக்கும் பண்றேன்”
“அம்மா இவளை விட மாட்டாங்க”
“தெரியும் நீ பேசாதே”
ஒருவழியா அவனுக்கு கிருஷ்ணன் மேக்கப்.
சாரதா ராதாவாக மாறினாள்.
ஆட்டோ பிடித்து ஸ்கூல் வருவதற்குள் வேர்த்து விறுவிறுத்து போனாள் லலிதா
“ கண்ணா டூ வெல் கிப்ட் கிடைச்சாலும் கிடைக்காவிட்டாலும் கவலை பட கூடாது "
"ஓகே மா”
அரைமணி நேரத்தில் ஸ்கூல் போய் அவனை விட்டு விட்டு வரும் போது சாரதா கேட்டாள்.
“ அம்மா எனக்கு கிப்ட் தரலையே!
"அண்ணா வரும்போது கொண்டு வருவான்."
காய் வாங்கிக்கொண்டு வரும் வழியில் கிப்ட் ஒன்று சாரதாவுக்கு தெரியாமல் பேக் [பண்ணி வாங்கிகொண்டாள்.
தூங்கி எழுந்ததும் சாரதாவுக்கு கிப்ட் கொடுத்தாள் லலிதா.
“அம்மா அண்ணா வரலை அப்புறம் கிப்ட் யாரு கொண்டு வந்தா?”
“ஸ்கூல இருந்து கொண்டு வந்து கொடுத்திட்டு போனாங்க”
“அம்மா! அண்ணா வந்ததும் பிரிச்சுப் பாக்கறேன்”
கீர்த்திக்கு காத்திருந்தாள் சாரதா.
மாலை வாடி வதங்கி வந்தான் கீர்த்தி.
“என்னாச்சுடா?”
“போம்மா! நான் தான் சொன்னேனே நான் சேர மாட்டேன்னு
எட்டு கிருஷ்ணன், ரெண்டு முருகன், ஒரு சிவன், ஒரு பிச்சைக்காரன் அவனுக்குத்தான் கிப்ட் “
“அண்ணா உனக்கு தரலயா?
“இல்லை”
ஓடி போய் அவளுக்கு கிடைத்ததை கொண்டு வந்து அவனிடம் கொடுத்து,
“ எனக்கு கிடைச்சது நாம ரெண்டு பேரும் வச்சுக்கலாம்´ என்றாள்.
அவளை அப்படியே கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தான் கீர்த்தி.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக