17.12.20-கதையின் பெயர் : ஏனாதி இருளாயி - தென்குமரிக் கவிதைக்களம்

வெள்ளி, 18 டிசம்பர், 2020

17.12.20-கதையின் பெயர் : ஏனாதி இருளாயி

 



கவிச்சிகரம் அமுதன், தமிழ்நாடு


ஏனாதி இருளாயி....(சிறுகதை)


ஏனாதின்ற ஊருல பொறந்து மருதக்கோட்டைக்கி வாக்கப்பட்டு வந்ததுனால அதுக்குப்பேரு ஏனாதி இருளாயின்னு கூப்புடுவாக. ஊர்க்காரவுக.... ரெண்டுமூணு இருளாயி சொந்தத்துல இருந்ததால அடையாளத்துக்கு ஊருப்பேரு சேந்து ஏனாதி இருளாயி ஆயிருச்சு.


ஊருக்குள்ள ஆரைக்கேட்டாலும் அந்த ஏனாதிக்காரியா திமிறு பிடிச்சவளேச்சேன்னு சொல்லுவாக. ஏன்னா வாயத்தொறந்தா சாக்கடைதான் வார்த்தைக.... காது கூசிக்கிழியும்


தெருவுக்குள்ள கார்ப்பரேசன் காரன் ரெண்டுமணிநேரம்தான் நல்லதண்ணி விடுவான் ஆறுகொழாத்தண்ணி மந்தையில எப்பையும் வரும். அது டேங்க கட்டி காலையிலயும் சாயந்தரமும் மோட்டார் போடுறதால வந்துக்கிட்டு இருந்துச்சு. ஆனா வைகையில தண்ணி வத்திப்போனதால தூந்துபோச்சு.... வேறதண்ணி வசதி அங்க இல்ல.


வசதிப்பட்டவுக அவங்க வீடுகள்ல நீர்முழ்கி மோட்டார் போட்டு தண்ணி எடுத்துக்கிட்டாக ஏழைபாழைக பாவம் என்னத்த செய்யும்... அதுகளுக்கு கார்ப்பரேசன் விடுறதண்ணிதான்


அந்தத்தண்ணி காலையில வாரப்ப கொஞ்சப்பேரு வீட்டுல அடிபைப்புபோட்டு தண்ணி எடுத்துக்கிட்டாக.


அதுக்கும் வழியில்லாதவுக பொதுக்கொழாய்க்கி வருவாக. அங்கதான் சண்டை நாறும்..... டிக்ஸ்னரில இல்லாத வார்த்தை எல்லாம் அங்க பொம்பளைக வரிஞ்சி கட்டிக்கிட்டுசண்டை போடையில கேக்கலாம்.... அதுலதான் ஏனாதி இருளாயி பிரபலம். அவ பேச்சுக்குப் பயந்துக்கிட்டே அவ வந்தா இந்தா வேணுங்கிறத புடிச்சிக்கிட்டு எடத்தைகாலி பண்ணுன்னு விட்டுருவாக.... விடல அம்புட்டுத்தான் அவங்க பூர்வஜெனமத்தில ஆரம்பிச்சி இன்னிக்கி வரைக்கும் அவங்க நடத்தை நாறிடும்....


அவளுக்குதண்ணி இல்லாம யாரும் தண்ணி புடிக்கமுடியாது யாராவது கேட்டா சொல்லுவா


ஆவுடையாரும் லிங்கமும் ஆளாப்பறக்குதாம் சுத்துச்சொவரு சக்கரைப்பொங்க கேட்டுச்சாம் பா......


அவளைப்பொறுத்தவரை அவளுக்குத்தான் எல்லாமே...... எல்லாத்துக்கும் சொலவடை வைச்சிருப்பா....


தண்ணி புடிச்சிக்கிட்டு இருக்கையில ஆராவது குறுக்க வந்தா ஆழப்பொறுத்த சிறுக்கிமக வாழப்பொறுக்க மாட்டாம்பா


அவ மகன் பொறுப்பில்லாம ஊரைசுத்துறவன் அவன் ஊருபூறாம் கடன் வாங்கி வைச்சிருந்தான் அவனப்பத்தி ஆராவது கேட்டா


ஊரச்சுத்திக்கடனும்....மூஞ்சியச்சுத்தி மசிறுமா அலையுது கொழலு......ன்னு சலிச்சிக்கும்


அவளோட புருசன் சீக்காளி ஒண்ணுக்கும் புரயோசனப்பட மாட்டான் அவனப்பத்திக்கேட்டா ஆழாக்கு அரிசி வாங்கி அஞ்சுகடை மீனுவாங்கி பொழப்பத்த புருசனுக்கு போடுறதுக்குநேரமில்லன்னு சலிச்சிக்குவா...


இவ வாயப்புடுங்குறதுக்குன்னே சனங்க வந்து பேச்சுக்குடுப்பாக..... இப்புடித்தான் சொலவடையா கொட்டும்....


அவளுக்கு பொறந்த வீட்டுல இருந்து ஒண்ணும் குடுக்கல.... ஏமாத்திப்புட்டாங்க அதைக்கேட்டா சொப்பனத்துல பாத்த அரிசியெல்லாம் சோத்துக்காகுமா நம்ம பொழப்ப நாமதேன் பாத்துக்கனும் பா


உன் பொழப்பு எப்புடிப்போகுதுன்னு கேட்டா பூத்துக்கெட்டுச்சு பூவு தொறந்து கெட்டுச்சு வாயி நாறுதும்பா


இப்புடித்தான் அவளுக்கு கொண்டவனும் சரியில்ல பெத்தவனும் சரியில்ல ... ஆனாலும் சொல்லிக்குவா கொண்டவன் சரியா இருந்தா கூரையில ஏறிக்கூவலாம் வந்தவன் சரியா இருந்தா வாய்நீட்டிப்பேசலாம் ..... கொண்டவனும் சரியில்ல வந்தவனும் சரியில்ல..... வாழப்பழம் கூட வழியில்ல ம்பா


அவ புருசன் ஒருவேலையும் செய்யமாட்டான் அதுனால சொல்லுவா அவன் நின்னா நெடுஞ்சொவரு படுத்தா குட்டியச்சொவரு.... இடிச்சித்தள்ளினா..... என்மேல பாவம் பா


அவ பொழப்ப அவதான் பாத்துக்கிட்டு இருந்தா பக்கத்துல இருந்த வசதியான ஏரியாவுல வீட்டு வேலைக்கிப்போவா...... அங்க கெடைக்கிறத வைச்சித்தான் கஞ்சி குடிக்கணும்.... அதையும் அவளோட மகன் வந்து புடுங்கிட்டுப் போயிடுவான் ... போய் சீட்டாடி தோத்துட்டு வந்து நிப்பான்....


சொந்தபுத்தியும் இல்ல சொல்பேச்சும் கேக்கமாட்டான்... இவளைப்போட்டுப் பாடாப்படுத்துவான். அடிச்சி வெறட்டுவா ஒரு நேரத்துக்கு அவன் திண்ணையில ஒக்காந்து கெடப்பான்... அப்பூறம் அவளுக்கா மனசு கேக்காமா வந்து கஞ்சியக்குடிச்சித்தொலைன்னு உள்ளாற கூப்புட்டு கஞ்சிய ஊத்துவா


ஆராவது சொல்லுவாக அவனுக்கு ஏன் கஞ்சி ஊத்துறன்னு அப்ப சொல்லுவா நீரடிச்சி நீர் வெலகுமா....நீ பெத்த புள்ள இல்லைன்னு ஆயிடுமான்னு கண்ண த்தொடச்சிக்கிவா


எப்புடியோ பொழப்பு ஓடிக்கிட்டு இருந்துச்சு. அவளப்புடிக்காதவுக அவ வேலைக்கிப்போற எடத்துல முன்னபின்ன இருக்குறதா பேசிக்குவாக அது அவ காதுல விழுந்துச்சு அம்புட்டுத்தான் ஈயத்தப்பாத்து இளிச்சிதாம் பித்தளை.... மல்லாந்து படுத்துக்கிட்டு எச்சியத்துப்பாத ஆது ஒன் மார்மேலதான் வுழுகும்..... காமாலைக்கண்ணுக்காரிக்கி கண்டதெல்லாம் மஞ்சதான்.... கதைய அவுத்து வுடுறவளுக்கு காதுவரை வாயிதான்..... ந்னு போட்டு வெளுத்துப்புடுவா


....அவளோட புருசனுக்கு முடியாமப்போச்சு.... அவளுக்கும் முடியலதான்.....


அவனுக்கு ஒண்ணுக்கு மஞ்சளா போச்சு.... மஞ்சக்காமலையாகும்னு அச்சம்பத்துல கூப்புட்டுப்போய் பத்து போட்டு வந்தா.... ஆனாலும் ஒண்ணும் சரியாகல...... பக்கத்துல இருக்குற டாக்டர் கிட்ட காமிச்சா.... அவரு ஒண்ணுக்க லேபில செக்பண்ணச்சொன்னாரு பாத்ததுல காமாலை இல்லன்னு வந்துச்சு.... அதுக்கு சந்தோசப்பட்டா......


ஆனா அவனுக்கு ஒடம்பு ரொம்ப முடியாமப்போச்சு... அப்ப பெரியாஸ்பத்திரிக்கி கூப்புட்டுப்போய் காமிச்சதுல கிட்னிக்கிப்போற ரத்தக்கொழாயில கட்டின்னு சொல்லி ஆப்பரேசன் பண்ணுனாக.... அப்புறம்தான் தெரிஞ்சது அது புத்துக்கட்டின்னு


அதுனால இருளாயி ஒடஞ்சி போயிட்டா..... அவ பேச்சு கொறஞ்சிபோச்சி.... யாரு கேட்டாலும் அழுகதான் வந்துச்சு.... கேக்குறவுக கிட்ட சொன்னா எண்ண முந்துதோ திரி முந்துதோ ஏழுமலைக்கித்தான் வெளிச்சம் ந்னு கண்ணு கலங்குனா.


அவசொன்னமாதிரி ஒரு நா அவன் போயிட்டான் திரி முந்திருச்சு..... அவனுக்கு நீர்மாலைக்கித் தண்ணி கெடைக்கல...... ஆரோஎறக்கப்பட்டு ஒரு லாறி தண்ணி ஏற்பாடுபண்ணுனாக.....


எண்ணதான் பாவம் கொட்டிப்போச்சு...... அவள ஆராலும் தேத்த முடியல ... பேருக்கு புருசன்னாலும் ஊருக்கு முன்னாடி மருவாததான்... அவன் போனதுக்கு அப்புறம் அவ நடபொணமா மாறிட்டா.....


அப்ப பாத்து அவளுக்கு பொறந்த வீட்டுல இருந்து சொத்து ந்னு ஒரு காணி நெலம் வந்துச்சு.... அவளுக்கும் ரொம்ப முடியல......


அந்த ஊரு பெரிய மனுசங்களைக்கூப்புட்டு அதை வித்து தெருமுக்குல வாட்டர் டாங்கும் அதுக்கு தண்ணி ஏத்த நீர்முழ்கி மோட்டாரும் போடச்சொன்னா.......


அவகூட சண்ட ப்போட்டவுக கூட எறக்கப்பட்டாக.. இந்தத்தண்ணிக்கித்தான நான் கெட்டவளாப்போனேன்.... ஆரும் மதிக்காம ப்போயிட்டாக... அத நான் என் செலவுல தீத்துவைக்கிறேன்னு சொன்னா......அதுமாதிரியே தண்ணி த்தொட்டி வந்துச்சு


அடுத்த கொஞ்சநாளுல அவளும் போய் சேந்துட்டா... அவளுக்கு நீர்மாலைக்கி தெருவுல இருக்குறவுக எல்லாருமே வந்தாக..... அந்த தண்ணித்தொட்டில இருந்து தண்ணி கொண்டாந்தப்ப எல்லார் கண்ணும் நனைஞ்சிபோச்சி......... அந்த ஈரத்தோடவே அவளோட ஒடம்பு ஊரவுட்டுப்போகையில அழுகாத ஆம்பளைக கூட அழுகையக்கட்டுப்படுத்த முடியல......


அ.முத்துவிஜயன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages