உன்னைதானே.... தஞ்சம் என்று...
தண்ணீரில் நனைந்த பேப்பர்போல கட்டிலில் கிடந்தாள் சந்திரா . சாப்பிட கொடுத்திருந்த உணவு அப்படியே இருந்தது. மருந்துகள் வாங்கி கொண்டு அந்த தனி வார்டில் நுழைந்த கணேசன்,
சந்திராவின் பார்வை எங்கோ வெறித்தபடி இருக்க அசைவே இல்லாத அவளைப் பார்த்ததும் ஆடிப் போனார் . சந்திரா என்று பதட்டத்துடன் அருகில் வர, குரல் கேட்டு அவரைப் பார்த்தவள் வறண்ட புன்னகை உதிர்த்தாள்.
“என்னோட பயம் உங்களுக்கும் வந்துடுச்சா?”
“அசையாம இருந்தயா.. பயந்திட்டேன் ஏன் சாப்பிடாம அப்படியே வச்சிட்டே .. உடம்புல தெம்பு வேண்டாமா? ரெண்டு நாள் கழித்து ஆபரேஷன்”
“ ஏங்க எத்தனை ஆபரேஷன். முடியலீங்க. சின்ன வயசில ஸ்கூல் போகும்போது ஆட்டோ மோதி கால் ஒடஞ்சு அப்புறம் சரியாச்சு. ரெண்டு சிசேரியன், ஹிரண்யா, கர்ப்பப்பையில் கட்டினு அதையும் எடுத்தாச்சு . இப்போ ஹார்ட் வால்வு மாத்தணும். முடியலை. நீங்க எத்தனை கஷ்டப்பட்டுடீங்க என்னால?”
“சந்திரா என்ன இப்படி எல்லாம் பேசறே!”
“எனக்கு மனசு தாங்கலீங்க! நீங்க காதலிச்ச கௌரியை கல்யாணம் பண்ணிக்கிட்டு இருந்தீங்கன்னா நல்லா இருந்திருப்பீங்களோனு மனசு சொல்லுது.”
உனக்கென்ன என்ன பயித்தியமா புடிச்சிருக்கு?”
“ என்னை கொஞ்சம் பேச விடுங்க! நீங்களும் கௌரியும் வேலை செய்து கிட்டு இருந்த ஆஃபீஸில் நான் வந்து சேர்த்த கொஞ்ச நாளிலேயே உங்களை தான் என்னோட கணவரா வரணும்னு நினைச்சுக்கிட்டேன். முதல்ல நீங்க கௌரியை விரும்பறது எனக்கு தெரியாது. அதுக்குள்ள நான் உங்க மேல ரொம்ப ஆசை வச்சிட்டேன்”
“அதெல்லாம் இப்ப எதுக்கு சொல்றே”
“ என்னோட மனசு தாங்கலீங்க. நீங்க கௌரியை விரும்பறதும் அவளுக்கும் உங்க மேல ஆசை இருந்ததும் தெரிஞ்சதும் என்னால உங்களை விட்டு கொடுக்க முடியலை.”
“ அதனால என்ன? இப்ப நமக்கு என்ன குறைச்சல்?”
“ அப்படி இல்லீங்க ! உங்ககிட்ட என்னோட ஆசையை நான் சொன்னப்ப, நீங்களும் கௌரியும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பறதுபத்தி நீங்க என்கிட்ட சொன்னபோது நான் கண்ணியமா ஒதுங்கி இருக்கணும். நான் தற்கொலை வரைக்கும் போனப்போ, நீங்க என்னை சந்திச்சு என்னை சமாதானப்படுத்தி என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க “
“நாம சந்தோஷமா தானே இருக்கோம் சந்திரா”
“ நான் உங்களை பண்ணியது எமோஷனல் பிளாக்மெயில். என் மேல கொஞ்சம் கூட கோபப்படாம இதுநாள் வரை நடந்துகிட்டு இருக்கீங்க. என் கூட சந்தோஷமா இருந்த நாட்களைவிட என்கூட ஆஸ்பத்திரியில் நிறைய நாள் இருந்திட்டீங்க. இப்ப என்னோட மனசு சொல்லுது. நீங்க கௌரிகூட வாழ்த்திருந்தீங்கன்னா நல்லா இருந்திருப்பீங்கனு”
“நான் கௌரியை ஆசைப்பட்டது இருக்கட்டும். நீ என்னை அந்தளவுக்கு விரும்பி கிடைக்க மாட்டேனோ என்ற நிலையில் உன்னோட உசிரைக் கூட அழிச்சுக்க இருந்தயே.. நான் விரும்பறதைவிட என்னை விரும்பற பொண்ணை திருமணம் செய்துக்கிட்டது தப்பில்லையே”
“ ஆனா கௌரியும் உங்களை விரும்பினாளே! நான் தான் அவ ஆசையிலும் மண் அள்ளிப் போட்டுட்டேன் “
“அப்படிச் சொல்லாதே! கௌரி கல்யாணத்துக்கு போயிருதேனே! மாப்பிள்ளை துபாய்ல வேலை பாக்கறாரு நல்லாவும் இருந்தாரு. இப்ப எங்க இருக்காங்கனு தெரியலை!”
“ஆபரேஷன்ல நான் போயிட்டா உங்களை தனியே விட்டு போறபோல இருக்கு... நான் இருந்தாலும் பாதி நாள் ஆஸ்பத்திரினு நீங்க இருக்க வேண்டி இருக்கு”
“அலட்டிக்காம இரு சந்திரா”
ஆதரவுடன் அவளை தடவி, சாப்பாட்டை அவளுக்கு ஊட்டி விட்டபடி இருந்தவர் கண்களில் கொப்பளித்த நீரை உள்வாங்கி கொண்டு,
கௌரி திருமணமே செய்து கொள்ளாமல் ஒரு முதியோர் இல்லத்தில் சேவை செய்து வருவதை அவளிடம் மறைத்து விட்டார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக