உலகம் பெரிது
“என்ன.. என்னவோ போல இருக்கே தீப்தி ?
“மேனகாவை நினச்சு கவலையா இருக்கு பரத்”
“ஏன் என்னாச்சு?”
“அவ இப்ப ரொம்ப பிரச்சனைல இருக்கா பரத். என்னோட சின்ன வயசில இருந்து அவ தான் என்னோட பெஸ்ட் பிரிண்ட். அவளோட பிரச்சனை என்னோட பிரச்சனைபோல இருக்கு”
“கொஞ்சம் விவரமா சொல்லு”
“அவ ஸ்ரீகாந்தை லவ் பண்ணிக்கிட்டு இருந்தப்போ ரொம்ப மோசமா இல்லாட்டியும் அவன் கூட கொஞ்சம் நெருக்கமா இருக்கறாப்போல போட்டோ எடுத்துக்கிட்டு இருந்திருக்கா! ஸ்ரீகாந்த் ஒரு பொம்பளை பொறுக்கினு அவளுக்கு தெரிஞ்ச உடனே அவன் கிட்ட இருந்து அவ விலக நினைக்கிறா. அவன் அவளை பிளாக்மெயில் பண்ணறான். போலீசில் சொல்லுன்னு சொன்னா அப்பா அம்மாக்கு தெரிஞ்சா பிரச்சனைன்னு எங்கிட்ட சொல்லி அழறா! நீ வக்கீல்தானே? கொஞ்சம் ஹெல்ப் பண்ணு பரத்”
“நான் என்ன பண்ணணும்?”
“அவனை கண்டிச்சு அந்த போட்டோவை வாங்கணும்”
“நான் கூப்பிட்டா எப்படி வருவான்? மேனகாவை அவன் விருப்பப்படி நடக்கறே.ன் போட்டோ மெமரி கார்டு எல்லாம் கொண்டு வந்து கொடுன்னு சொல்லச் சொல்லு. மேல எப்படினு நான் பார்த்துக்கறேன்”
அவன் அப்படிச் சொன்னதும் பிரச்சனை தீர்ந்துவிட்டது போல தோன்றியது. அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்தேன். உடனே உதட்டைக் காட்டினான்.
“ போடா... போ.. அதெல்லாம் முடியாது”
விலக, அவன் என்னை இறுக்கி பெற்றுக் கொண்டான். எனக்கு வெட்கமாக இருந்தது.
“ சோ ஸ்வீட்.. இன்னும் ஒண்ணு ப்ளீஸ்...”
“போடா!”
ஒரு வாரம் கழித்து மேனகா என்னை வந்து சந்தித்தாள்.
“என்னாச்சு மேனகா?”
“பரத் சொன்னபடி, எங்க அப்பா அம்மா வெளில போயிருந்த போது, ஸ்ரீகாந்தை வீட்டுக்கு வர சொன்னேன். அதுக்கு முன்னே பரத்தும் அவனோட நண்பர்களும் வீட்டில் ஒளிச்சுகிட்டு இருந்தாங்க. அவன் மடக்கி ஒதைச்சு இனிமே என்னோட விஷயத்துக்கு வரமாட்டேன்னு எழுதி வாங்கி போட்டோஸ் மெமரி கார்டு எல்லாத்தையும் பறிச்சுக்கிட்டாரு. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் டி”
எனக்கு ரொம்ப பெருமையா இருந்தது. .
வழக்கமா நாங்க சந்திக்கும் பார்க்குக்கு பரத் வந்தான். எப்பவும் ரொம்ப ரொம்ப துரு துருனும், குறும்பாவும் இருப்பவன் கொஞ்சம் சுரத்து குறைச்சலாக இருப்பதுபோல எனக்கு தெரிஞ்சது.
“என்ன பரத்?”
“ஒண்ணும் இல்லே பெரிய ஒரு கேஸ் வந்திருக்கு அதனால கொஞ்ச நாளைக்கு நாம சந்திக்க முடியாது அதுதான் யோசனையா இருக்கு”
“அதனால என்ன பரத் நீ அந்த கேஸ்ல ஜெயிச்சு பெரிய வக்கீல் ஆகணும்”
தினசரி சந்திப்பு என்பது இல்லாமல் நின்றாலும் மாதம் ஒரு முறை சந்தித்துக் கொண்டோம்.
என்னோட அத்தையின் மகளுக்கு வளைகாப்புக்கு நானும் அம்மாவும் ஆட்டோவில் போய்க் கொண்டிருந்தபோது சிக்னல் விழுந்து விட, தூரத்தில் மேனகா பில்லியனில் உட்கார்ந்து கொண்டு கட்டிக்கொண்டு இருந்தாள் ஹெல்மெட், பைக், சட்டை எல்லாமே பரத். அவனை செல்போனில் அழைத்தேன். உடனே சட்டையில் இருந்து எடுத்து ஹெல்மெட் கழற்றி பேசினான்.
“நான் சிக்னல்ல இருக்கேன். அப்புறம் கூப்பிடறேன்”
மேனகா அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள். அவன் கூப்பிடவே இல்லை. நான் கூப்பிடபோது கேஸ் விஷயமா அலைந்து கொண்டிருப்பதாக சொன்னான்.
மருதமலை முருகனை தரிசிக்க நான் படிவழியே மேலே சென்று கொண்டிருந்தேன். கைகளைக் கோர்த்தபடி பரத்தும், மேனகாவும் படிவழியே இறங்கி வந்து கொண்டிருந்தார்கள். தீடிர் என்று என்னை எதிர்பார்க்காததால் அதிர்ச்சி அடைந்து கைகளை விலக்கிக் கொண்டனர்.
நான் அவர்களைத் தாண்டிச் செல்ல இருந்தபோது,
“தீப்தி கொஞ்சம் நில்லு” பரத் அழைத்தான்.
“என்ன பரத்”
“நான் சுத்தி வளைச்சு பேச விரும்பலை. உன்னால தான் எனக்கு மேனகாவோட அறிமுகம் கிடைச்சது. நான் அவ பிரச்சனைக்கு அவளை சந்திச்ச பின்னாலே எங்க ரெண்டு பேருக்கும் ஒரு நெருக்கம் அமைஞ்சிடுச்சு. என்னை விட்டு அவளும் அவளை விட்டு நானும் இருக்க முடியாது அப்படிங்கற நிலைமை ஆயிடிச்சு. அதே சமயம் உன்னை விட்டுடவும் விரும்பலை
நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன் மேனகா தலையைக் குனிந்து கொண்டிருந்தாள் .
கொஞ்சம் நிறுத்தியவன்,
“ நீ இப்ப கும்பிட போற முருகனுக்கே ரெண்டு பெண்டாட்டிதானே”
மேல என்ன பேசுவது என்று தெரியாமல் தடுமாறினான்.
“வக்கீலுக்கு படிச்சிட்டு தடுமாறரே பரத்! என்ன சொல்ல வரே? அப்ப எங்க ரெண்டு பேர்ல யாரு வள்ளி?
“அது... அது...
“எந்த நிலையிலும் நாம மாறாம இருக்கணும். மேனகாவை அறிமுக படுத்தி வச்சது எதுக்கு? அதெல்லாம் போகட்டும். நான் ஒண்ணு கேக்கறேன் பதில் சொல்லு “
என்ன?
“நான் திரௌபதியா இருந்தா ஒத்துக்குவியா”
"தீப்தி"
ஒரே சமயத்தில் என்னோட ஸ்நேகிதியையும், என்னோட காதலனையும் நான் இழந்திட்டேன். நல்லவேளை நாம கல்யாணம் பண்ணிக்கலை.
கோயிலில் இருந்து மணி ஓசை கேட்டது.
\
முருகனை தரிசிக்க நான் படியின் மீது ஏறி,
மேலே மேலே சென்று கொண்டிருந்தேன்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக