3.12.20-கதையின் பெயர் : உள்ளம் கவர் கள்வன்.. - தென்குமரிக் கவிதைக்களம்

வியாழன், 3 டிசம்பர், 2020

3.12.20-கதையின் பெயர் : உள்ளம் கவர் கள்வன்..

 






சுந்தரம்


உள்ளம் கவர் கள்வன்..


செல்போன் சிணுங்க, யார் என்று பார்த்தேன். பரத் கூப்பிட்டுக் கொண்டிருந்தான்.


“ சொல்லுங்க பரத்”


“மறந்திடாதே  சாரதா .... சரியா ஆறு மணிக்கு வந்திடு...”


“சரிங்க பரத்“


போனை எடுத்து சார்ஜ்ல் போட்டபோது, பரத் எனது மனது முழுவதும் நிறைந்திருந்தான்.

படித்து முடித்ததும் உடனே எனக்கு வேலை கிடைத்து விட்டது. எனக்கு கதைகள் படிக்க, எழுத பிடிக்கும் என்பதால் பத்திரிகைகளுக்கும் எனது முகநூலுக்கும் கதைகள் எழுதுவதை எனது பொழுது போக்காக வைத்திருந்தேன்.


 எனது கதைகளை யார் வேண்டுமானாலும் படிக்கலாம் என்ற ஆப்ஷன் வைத்திருந்தேன். அப்படி எனது கதைகளைப் படித்து அழகாக விமர்சனம் பண்ணும் பரத் மிக விரைவிலேயே என்னைக் கவர்ந்தான்.


அவனது விமர்சனம் மிகச்சரியாக இருக்கும் என்பதால், தேர்வு எழுதிவிட்டு ஆசிரியர் கொடுக்கப்போகும் திருத்தப்பட்ட தேர்வு பேப்பரை வாங்கப் போகும் ஒருவித படபடப்பில் நான் காத்திருப்பேன். அவனும் தேவை இல்லாமல் என்னை புகழ்ந்து எழுத மாட்டான். 


ஒரு கட்டத்தில் நானே அவனுக்கு பிரண்ட்  ரெக்வெஸ்ட் கொடுத்தேன். . ஆனால் மூன்று நாட்கள் கழித்தே அவன் ஒத்துக் கொண்டான்.  எனது முகநூலில் எனது புகைப்படம் இருக்காது. ரோஜா பூக்கள் மட்டுமே போட்டு இருந்தேன். 


அவனுக்கு எனது கதைகளில் மாறுபட்ட எண்ணம் இருந்தாலோ, தவறுகள் தெரிந்தாலோ எனது இன்பாக்ஸ் வந்து அவனது கருத்துக்களைக் தெரிவிப்பான்.

அவனது முகநூலில் அவனது புகைப்படம் இருக்கும்.


 அந்தக்கால சுமன் மாதிரி இருந்தான். நாளடைவில் என் மனதை அவனிடம் பறி கொடுத்தேன். அவனுக்காக எனது முகநூலில் எனது புகைப்படமும் வெளியிட்டேன். எல்லோரும் புகழ்ந்திருக்க, இவன் இன்பாக்ஸ் வந்து எனக்கு அறிவுரை நிறைய கூறி இருந்தான். அடுத்த நிமிடம் எனது புகைப்படத்தினை நான் எடுத்து விட்டேன். .


அவனுக்கும் என் மீது காதல் இருப்பது எனக்குத் தெரிந்தாலும், அவன் வெளிப்படுத்த தயங்கினான். இரவு எட்டுமணிக்கு மேல் பேச மாட்டான். நானே ஒரு கட்டத்தில் என் ஆசையை தெரிவித்து விட்டேன். இருவரும் ஒரே ஊர் என்றாலும் நேரிலும் சந்திக்கவில்லை. வீடியோ காலிலும் பேசிக் கொள்ளவில்லை.


இரண்டு வருட காதல் இன்று தான் சந்திக்க நினைத்து இருந்தோம். அதுவும் நான் தான் சந்திக்கலாம் என்று சொன்னேன். கொஞ்சம் தயக்கத்திற்கு பிறகே ஒத்துக் கொண்டான். சரியாக ஆறுமணிக்கு கோனியம்மன் கோவிலுக்கு வரச் சொல்லி இருந்தான். எனக்கு சிரிப்பாக வந்தது முதன் முதல் சந்திக்க போகும் காதலியை கோயிலுக்கா வரச் சொல்லுவார்கள் என்று  சிரித்துக் கொண்டேன்.


வழக்கத்துக்கு மாறாக எனக்கு கேஷ் டேலி ஆகாததால் நான் எல்லாம் சரிபார்த்துக் கிளம்ப ஆறு மணிக்கு மேல் ஆகிவிட்டது. உடனே ஒரு ஆட்டோ பிடித்தேன். நான் போய் சேர அரைமணி நேரத்திற்கு மேல் ஆகும். தகவல் தெரிவிக்கலாமா? என்று நினைத்தேன். காதலில் காத்திருப்பும் சுகம்தானே! காத்திருக்கட்டும் என்று நினைத்துக் கொண்டேன்.


பாதி வழியில் இருந்தேன். பரத் கூப்பிட்டான்.


“பரத் நான் வந்திட்டே இருக்கேன்”


“ வேண்டாம் இன்னிக்கு! இன்னொரு நாள் பாக்கலாம் நேரமாயிட்டது”


எனக்கு கோவம் வந்தது.. காதலிக்காக கொஞ்சம் காத்திருக்க கூடாதா? என்று நினைத்தேன். நான் கோபத்தில் வெடித்தேன்.


“எனக்காக கொஞ்சம் காத்திருக்கக் கூடாதா?”


“இல்லே சாரதா... அம்மாவை டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போக ஏழரை மணிக்கு அப்பாய்ன்ட்மெண்ட் வாங்கி இருந்தேன்.  நீ திடீருனு நாம நாளைக்கு சந்திக்கலாமானு ஆசையோட கேட்டபோ, வேண்டாம்னு சொல்ல விரும்பலே.. அதனால சரினு சொன்னேன் வந்து கொஞ்ச நேரம் கழிச்சு கிளம்பலாம்னு.  நாளை மறுநாள் சந்திக்கலாமா”


ம்ம்....... சரி...”


அவன் என்னை சமாதானப் படுத்த முயற்சிக்கவில்லை. .

நான் அவனுக்கு ஒரு கிப்ட் வாங்கிக் கொண்டு கோனியம்மன் கோவிலில் காத்திருக்க, சரியாக ஆறுமணிக்கு அவனது பைக்கில் என்னருகே வந்தான்.


என் மீது கோவம் இல்லையே? கேட்பான்னு என்று நினைத்தேன். அவன் அவனாகவே இருந்தான்.


 சாமிக்கு தேங்காய், பழம், பூ வாங்கிக் கொண்டான். எனக்கு பூ  தனியாக வாங்கித் தந்தான் . என்னைப் பார்த்து முறுவலித்தான். மெதுவாக எனது கைகளைப் பற்றினான். 


 சாமி கும்பிட்டோம் . தேங்காய் சாப்பிட்டு பேசிக் கொண்டு இருந்து விட்டு கிளம்பும்போது,


“நேத்து இருந்த கோவம் போயிடிச்சா”


“நானும் அவசரப் பட்டு பேசி இருக்கக் கூடாது பரத். ஏற்கனவே உங்களுக்கு ப்ரோக்ராம் இருந்தாலும், எனக்கும் நேரம் ஒதுக்கி வந்திருந்தீங்க! எனக்கும் ஆஃபிஸில் நேரமாயிடிச்சு. நான் போன் பண்ணி சொல்லி இருந்திருக்கணும். அம்மாக்கு நேரம் ஒதுக்கியது போல, என்னையும் நீங்க நல்லா கவனிச்சுகுவீங்கனு தெரிஞ்சுது.”


என்னை புரிந்து கொண்டமைக்கு, அழகாக சிரித்து, என் மனதை அள்ளிக்  கொண்டான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages