01.01.21
மலைநாட்டு_மங்கை..
இருளில்_நடந்த_கொலை_01
ஹேமந்த ருதுவின் சுக்லபட்சத்துச் சந்திரன் நாளொரு வண்ணமாய் தனது மேனியெழிலைக் கூட்டிக் கொண்டிருந்தான் எனினும் , முன்பனிக் காலமாக இருந்தபடியால் எழுந்த குளிர் காற்று, பாண்டிய நாட்டு தலைநகரான மதுரை மாநகர மாந்தர்களை சற்று சிலிர்ப்படையவே செய்து கொண்டிருந்தாலும், வீதியில் மக்கள் நடமாட்டம் அவ்வேளையிலும் சற்றேனும் குறைந்த பாடில்லை. அந்த இரவு வேளையில் இருளும், ஒளியும் போட்டி போட்டுக்கொண்டு வீதிகளை ஆக்கிரமித்திருந்தன.
சொக்கநாதர் ஆலயத்தின் மணி இரவின் மூன்றாம் ஜாமத்தினை நினைவுபடுத்தி ஒலித்து அடங்கினாலும் , தூங்கா நகர் எனப் பெயர் பெற்றிருந்த மதுரை நகரோ ஜனசந்தடியுடன் தான் காட்சி யளித்துக் கொண்டிருந்தது. வணிக வீதிகள் எங்கும் மக்களின் நடமாட்டம் சற்றே குறைவாக தென்பட்டாலும், வணிகர்களாலும், சரக்கு வாகனங்களினாலும் , பாண்டிய நாட்டு இரவுக் காவலர்களாலும் சலசலப்பிற்கும், ஆரவாரத்திற்கும் சற்றும் பங்கமில்லாமல் தான் காணப்பட்டது.
தமிழ்கெழு கூடல் என புறநானூற்றிலும், ஓங்குசீர் மதுரை என்றும் வானவர் உறையும் மதுரை என்றும் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளால் புகழப்பெற்ற மதுரை மாநகர், அந்நாளில் எந்நாட்டவரும், எவ்வூரினரும் வந்து கூடும் வளமான திருநகர் என்பதனாலேயே கூடல் நகர் எனும் சிறப்பினையும் பெற்றிருந்தது எனலாம். பல தேசத்தவர்கள் வந்து வணிகம் செய்யவும், பாண்டிய நாட்டு முத்தினை வியாபார நிமித்தமாய் பெற்றுச் செல்லவும், பாரசீகம், கிரேக்கம், சோனகம் போன்ற மேலை தேசத்தவர் பலரோடு, கீழ்திசை நாடுகளான கடாரம், காம்போஜம், ஸ்ரீவிஜயம் மற்றும் சீனத் தேசத்தவரோடு ஈழ தேசத்தவரும் அந்த இரவு வேளையைப் பொருட்படுத்தாது தங்களது வணிகத்தில் முனைப்பாய் இருந்தனர். வணிக வீதியில் காணப்பட்ட சலசலப்பு அரச பிரதிநிதிகள் வசிக்கும் ராஜ வீதிகளில் இல்லை. அங்கு ஓரளவு அமைதியே நிலவிக் கொண்டிருந்தது. ஆங்காங்கு ஏற்றி வைக்கப் பட்டிருந்த விளக்குகளும், எண்ணெய் தீர்ந்து போய் இலேசான புகையோடு கருகி அணைந்து கிடந்ததோடு , காரிருள் அப்பிப் போய் வீதியினை இருளில் ஆழ்த்தியிருந்தது. வானில் வலம் வந்து கொண்டிருந்த நிலவின் தண்ணொளியோ வீதிகளை முற்றிலும் இருள் படியாதவாறு செய்திருந்தது என்றாலும், தெருவின் இருமருங்கிலும் உயரமாய் எழுந்திருந்த மாடமாளிகைகளினால் உருவாகியிருந்த நிழலும், இருளோடு போட்டிப்போட்டுக் கொண்டு நிலவின் ஒளியை தடுக்கும் முன்னேற்பாட்டோடு காணப்பட்டது.
ராஜவீதியின் இருளடர்ந்த திருப்பமொன்றில் இருந்து வெளிப்பட்ட செந்நிறப் புரவியை செலுத்தி வந்தவன் , தனது முகத்தினை முகமூடி ஒன்றினால் மறைத்திருந்ததோடு, இருள் படர்ந்த மாளிகை நிழல்களிலேயே மெல்ல நிதானத்துடன் புரவியை நடத்திச் சென்றவனாய், நிலவின் ஒளியோ, விளக்கின் ஒளியோ தன்மீது விழுவதை துளியும் விரும்பாதவனாய் இருளிலேயே தனது பயணத்தைத் தொடர்ந்தான். இரண்டொரு வீதிகளைக் கடந்ததும் தென்பட்ட பாண்டியர்களின் அரண்மனையின் முகப்பினைத் தவிர்த்தவனாய், அரண்மனையின் பின்பகுதியை சுற்றிக் கொண்டு வந்து சேர்ந்தவன், நிதானத்துடன் அரண்மனையின் உயரமான மதிற் சுவரினை நிமிர்ந்து நோக்கியதோடு, சுற்று முற்றும் கவனித்தவனாய் தனது வாயினால் ஒருவித சமிக்ஞை ஒலியினை எழுப்பினான்.
இவனது குரலின் பலனாய் , உயரமான அரண்மனைச் சுவரின் மீதிருந்து ஒரு கயிறானது கீழ் நோக்கி வீசப்பட, மீண்டும் ஒருமுறை சுற்றுமுற்றும் கவனித்தவனாய் அந்தக் கயிறை பற்றியபடி மெல்ல மேலறத் துவங்கினான். அரண்மனைக் கோட்டைச் சுவரினில் தாவி குதித்தவனை , "பிரபு..வணக்கம்.." என்ற கரகரப்பான குரல் தேக்கி நிறுத்த.
" உஷ்..இரைந்து பேசாதே.." என்றவனாய்.
" குலபதி..நிலைமை எப்படி..? நமக்கு சாதகந்தானே..? " என்றான் மதிலேறி குதித்து வந்தவன்.
" நமக்கு சாதகமாய் தான் இருக்கிறது..**யவனரின் புலிப்படையும் அரண்மனையின் கிழக்கு வாசல் காவலுக்கு இன்று மாற்றப்பட்டு உள்ளது..அரண்மனையின் உள்ளேயும் அவ்வளவாக காவல் வீரர்கள் இல்லை.." என்று கூறிக் கொண்டுப் போனவனை,
" தென்னவன் ஆபத்துதவிகள் என்னவானார்கள்..? " என்று முகமூடி அணிந்தவனின் அடுத்த கேள்வி தேக்கி நிறுத்தியது.
" மூன்றாம் ஜாமம் ஆகி விட்டதல்லவா..அவர்களும் சற்று முன் தான் கலைந்தார்கள்..பிரபு. "
" நல்லது..நீ இங்கேயே காத்திரு..நான் காரியத்தை முடித்து விட்டு வந்து விடுகிறேன்.."
" ம்..சரி.." என்றான் குலபதி என அழைக்கப்பட்டவன்.
சுவரேறி வந்த மனிதனோ எவ்வித தயக்கமுமின்றி அரண்மனையின் உப்பரிகையை கடந்து கீழிறங்கிச் சென்ற படிகளின் வழியாக துரிதமாக நடந்து சென்றான். அவனது நடையையும், அறைகளை கடந்து செல்வதையும் கவனித்தால், அரண்மனைக்கு அவன் புதியவன் அல்லன் என்பதை ஊர்ஜிதப்படுத்துவது போல் இருந்தது. சற்றும் தயங்காது நடந்து சென்ற அவன், அரண்மனையில் மன்னரது அந்தரங்க அறை முன் சென்று நின்றதோடு, தாழ்வாரத்தின் இருமருங்கிலும் பார்வையால் துழாவியவன், சட்டென ஒரு அறையின் கதவினை ஒரு கையால் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்ததோடு,
மஞ்சத்தில் ஆழ்ந்த நித்திரையில் இருந்த மன்னரை தன் குரூர விழிகளில் விழித்துப் பார்த்தவனாய், தனது இடைக் கச்சையில் இருந்து எடுத்தக் கூரிய குறுவாளினை வலது கையில் இறுகப் பற்றியபடி மெல்ல நிதானமாய் மஞ்சத்தை இரண்டே எட்டில் அணுகினான்.
வயதான நிலையிலும் வசீகரத் தோற்றத்துடன் காட்சி தந்தபடி, சீரான மூச்சினை வெளிப்படுத்தியவாறு ஆழ்ந்த நித்திரையில் இருந்தார். பாண்டிய நாட்டின் மன்னர் மாறவர்ம குலசேகர பாண்டியர்.
மன்னரைக் காணக்காண, வந்தவனின் உள்ளத்தில் ஆவேசமும், சீற்றமும், கோபமும் மாறி மாறி உருவாகத் துவங்க, வெறி கொண்டவனாய் மாறியவன், தன் குறுவாளினை நித்திரையில் ஆழ்ந்திருந்த மன்னரது மார்பில் வேகமாய் பாய்ச்சினான். குறுவாளினை மார்பில் பாய்ச்சு முன்னரே மன்னரது வாயினை தன் இடதுகை கொண்டு அழுந்த மூடியதனால், அவரிடமிருந்து எழுந்த அலறல் அவருக்குள்ளேயே அடங்கி விட, திகைப்பும், வியப்பும் ஒருசேர எழுந்து காணப்பட்ட மன்னரது விழிகள் பரிதாபமாய் அவனை நோக்கியதோடு, அவரது உதடுகளோ.. "துரோகி..நீயா..? " என்றது வெறுப்பினை உமிழ்ந்தபடி.
" யார் துரோகி..! நீங்களா..நானா..! " என்றான் வந்தவன் சீற்றம் சற்றும் தணியாமல்.
" உன்னிடம் இந்த நயவஞ்சகச் செயலைத் தவிர நான் வேறென்ன எதிர்பார்க்க முடியும்..?! " என்றார் மன்னர் சற்றே திணறியபடி.." ம்..ம்..
மதுரையின் கதியை ஈசன் தான் இனி முடிவு செய்ய வேண்டு...ம்..." என்றபடியே கண்கள் மேல் நோக்கி சொருகிட ஆழ்ந்த மயக்கத்திற்குப் போனார்.
மன்னரது நாசியில் தன் கைகளை வைத்து பரிசோதித்தவன், அவரது நாடி அடங்கியதும் , மன்னரது இறப்பினை உறுதி செய்து கொண்டவனாய் அறையை விட்டு வெளியேறி.. வந்த வழியே திரும்பி அரண்மனை மேல் தளத்தை அடைந்ததோடு, எதிர்பட்ட குலபதியிடம் தனது வலதுகை கட்டை விரலை உயர்த்திக் காட்டியவனாய், தொங்கவிடப் பட்டிருந்த கயிற்றினைப் பற்றி கீழிறங்கியதோடு, தனது செந்நிறப் புரவியில் தாவி ஏறியவன், அதன் வயிற்றில் தன் கால்களால் அழுத்த, புழுதியை கிளப்பியபடி வேகமாய் விரையத் துவங்கியது அந்த பஹ்ரைன் தேசத்து செந்நிறப் புரவி.
_ தொடரும்..
** அந்நாளில் பாண்டியர்கள் அரண்மனைக் காவலுக்காக யவனரின் புலிப்படையை அரசாங்கத்தில் வைத்திருந்தனர். படையை சேர்ந்த யவனர்கள் மெய்ப்பை எனும் சட்டை இறுக்கமாக அணிந்து, அதன் மேல் மத்திகை எனும் அரைக்கச்சை அணிந்திருப்பர். இரும்புச் சங்கிலியால் புலியைப் பிணைத்துக் கட்டியிருப்பர்.
( முல்லைப் பாட்டு 59_62 )
_ அனுராஜ்..



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக