ஆத்தோவோட அயிரைமீன்கொழம்பும் அங்கம்மாவும்
ஒருதடவ ஊரெல்லாம் பெருமழை வையை ஆத்துல தண்ணி கரபொறண்டு ஓடுதுன்னு பேப்பருல போட்டுருந்தான் . விளாச்சேரி காலாங்கரையிலயும் தண்ணி காவா கொள்ளாமஒடுச்சி. அக்கம்பக்கத்துல இருந்த கம்மாயெல்லாம் தண்ணி தளும்புச்சு. ஒடபெடுத்துக்கபோகுதுன்னு கவலைல இருந்தாக. கம்மா கழுங்குல தண்ணி போக ஆரம்பிச்சிடுச்சு தண்ணி வந்துக்குகிட்டே இருக்கு. எல்லா கம்மாமதகும் தொறந்துகெடக்கு. மழைன்னா சன்ன மழை. உரூ பூராம் வெள்ளக்காடு. மழை எங்கபாத்தாலும் தண்ணியாக்கெடக்கு வயலு வரப்புஎல்லாம் மூங்கிக்கெடக்கு மாடக்குளம் கம்மா ரொம்பி விளாச்சேரி வயல் மூங்கிபோச்சு. தெங்க்காக்கரை கம்மா முங்கி ரோடுவரைக்கும் தண்ணி வந்துருச்சு. அதேமாதிரி விளாச்சேரி கம்மாயும் இப்பவோ அப்பவோன்னு தளும்புது
இதுமாதிரி நேரத்துல மீனு நெறையா வரும். கம்மாயில கெடக்குற அயிரமீனு வெளிச்சி குரவை கட்லாக்கெண்டை அப்புறம் வெறாமீனு இதெல்லாம் தண்ணியோட வெளிய வரும்
வெளிச்சிமீனு கொழம்புக்கு நல்லாருக்கும். வெறாமீனு ஆட்டுக்கறி மாதிரி கொழம்பும் வைக்கலாம் வருக்கவும் செய்யலாம் அம்புட்டு ருசியா இருக்கும் அயிரமீனு கொழம்புதான் ருசி. அப்பத்தான் மீனுகளைப்புடிச்சிக் கொண்டாந்து தள்ளுவாக பானப்பொறி போட்டு அதுல அதுபாட்டுக்கு மீனு வந்துக்கிட்டே இருக்கும்
செல்லாயியும் செல்லயிபுருசனும் பானப்பொறி போட்டுருந்தாக அவுகளுக்கு மீனு வந்துச்சுன்னா ஆத்தாகிட்டத்தான் தூக்கிட்டு ஓடியாறுவாக. அன்னிக்கின்னு விரால்மீனு வலையிலயும் அயிரைமீனு பானப்பொறிலயும் மாட்டுச்சு . அம்புட்டையும் தூக்கிக்கிட்டு ஆத்தா வீட்டுக்கு ஓடியாந்தாக ஆத்தாகிட்டகுடுத்து இந்த காசு எம்புட்டுவேணாகுடு எப்பவேணா குடு மீனப்புடி மொதல்லன்னு குடுத்துட்டு காசவாங்கிட்டுப்போயிட்டாக மழை வேற ஊத்திக்கிட்டு இருக்கு, அங்கம்மா சொல்லிச்சி ஆத்தா அயிரமீனு கொழம்பு விரால்மீனு வறுவல் வைச்சிரு ஆத்தான்னு சொல்லிச்சு. இந்த வெறாமீனு இருக்காதே அம்புட்டு சீக்கிரமா சாகாது. அடிச்சித்தான் சாவடிக்கனும் அதேமாதிரி செங்கலபோட்டு கல்லு உப்பபோட்டு நல்லா செதில்லாம் போறவரைக்கும் ஒரசனும். அப்புறம் கொடலு செவிளுஎல்லாத்தையும் நறுக்கிட்டு மஞ்சள் உப்பு போட்டுகழுவனும் அது பெரியவேல அதுக்கால அத யாரும் வாங்கமாட்டாக ஆனா சமைச்சித்தின்னா ருசி மறக்க முடியாது
மீன நல்லா சுத்தப்படுத்தி கழுவி வைச்சிட்டு அயிரமீன ஆஞ்சி கழுவி வைச்சிட்டுநல்லெண்ணய ஊத்தி பெசறிவைச்சிட்டு புளி நல்லா கொய்யாப்பழம் அளவுக்கு வென்னீருல ஊறபோட்டுட்டு கரைச்சி வடிகட்டி வைச்சிக்கிடும் மசாலா அரைக்கும் ஆத்தா அதுல மஞ்சள் சீரகம் மொளகு காஞ்சமொளகாதனியா எல்லாம் வைச்சி மையா அம்மில அரைச்சி உருண்டையா எடுத்துவைச்சிக்கிடும்
அதுக்குண்ணே இருக்குற மண்சட்டிய எடுத்து அடுப்புல காயவைச்சி அதுல நல்ல எண்ணையஊத்தி கடுகு கறிவேப்பில சின்னவெங்காயம் போட்டு நல்லாவதக்கிவேகவிட்டுட்டு வெந்தபின்னாடி அதுல கரைச்ச புளியும் மசாலா உருண்டையும் கலக்கி மசாலா வாசம்போறவரை கொதிக்கவிடும். அதுல உப்பு சேத்துட்டு அயிரமீனு இல்ல விறாமீனு போட்டு லேசா அடுப்பகொறைச்சிவைச்சி வேகவிடும் மீனு வெந்துஎறக்குபோது
அதுல கொத்தமல்லிதளை போட்டு நல்லெணை கொஞ்சம் ஊத்தி எறக்கிவைக்கும் அந்தப்புளியும் சரியான மசாலாவும் மீனும் சேந்து ஒரு வாசண வரும்பாருங்க ஊருல இருக்குற பூன மொதக்கொண்டு வீட்டச்சுத்த ஆரம்பிச்சிடும். வெறாமீன மசாலாவோட பெனைஞ்சிவைச்சிட்டுஅதுல கொஞ்சம் மொறு மொறுப்புக்கு அரிசிமாவு சேத்துப்புட்டு எண்ணையகாயப்போட்டு மீனுகளை ஒவ்வொன்னாப்போட்டு எடுக்க எடுக்க மொதல்ல அங்கம்மாகாலிபண்ணும் அப்புறம் ஒவ்வொன்னா வட்டிக்கிண்ணில வைச்சிகாலிபண்ண ஆரம்பிச்சிடுங்க
போதுமுன்னு நிறுத்திப்புட்டு சோத்த வாழை எலையில போட்டு மீனுகொழம்பை அதுதலையில ஊத்தி ஒடையாம மீன எடுத்து வைக்கும்போது அம்புட்டுப்பேருக்கும் வாயில எச்சல் ஊறும் சாப்புடும்போது கண்ணுல தண்ணியா வரும் . அது காரத்துனாலயா இல்ல ருசினாலயான்னு தெரியாது அதைபாத்தாலே ஆத்தா வயிறு நெறைஞ்சிடும். மீதமிருக்குற கொழம்புக்கு மறுநாள் டிமாண்டு அதிகம். இட்லி சுட்டு மீதமிருக்குற மீன்கொழம்பு சுடவைச்சி தொட்டுக்கிட்டா இட்லி மாவு தீந்துபோகும் . எல்லாம் ஒருகட்டு கட்டுவாக
மழைநேரத்துக்கு சூடா இதைச்சாப்புடும்போது கெடைக்கிறதுதான் சொர்க்கமுன்னு சொல்லுவாங்க சொலவடையா.
ஆத்தா சொல்லும் நல்ல செக்கு எண்ணையிலதான் விசயமே இருக்கு.வெல கம்மியா இருக்குன்னு கண்ட கண்ட எண்ணைய கொழம்புல ஊத்துனா வகுத்தக்கெடுத்துப்புடும்
வீட்டுல சமையல் பண்ணுறவுகளும் டாக்டர் மாதிரிதான் அவங்க அடுப்படில உபயோகிக்கிற சமயல் சாமானுக சரியா இருந்தா மருந்து தனியாத்தேவையில்ல. வைத்தியத்துக்கும் போகவேண்டியதில்ல...... அதுமாதிரி ஆளுபாத்து நேரம்பாத்து சாப்பாடுபோடனும். ராத்திரில எண்ணப்பண்டம் கீரைமாதிரி மொரட்டு சாப்பாடு போடக்கூடாது சீக்கிரம் சீரணமாகுறமாதிரி கொஞ்சமா சாப்பாடுபோடனும்....
காலையில ராஜாமாதிரியும் மத்தியாணம் வேலைக்காரன்மாதிரியும் ராத்திரில பிச்சக்காரன்மாதிரியும் சாப்புடனும் இது வீட்டுல இருக்குற பொம்பளைகளுக்கு தெரிஞ்சிருக்கனும்ன்னு அடிக்கடி சொல்லும்.......
இதைத்தான் வள்ளுவர்
”மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.”
என்று மருந்து அதிகாரத்தில் 945 குறளில் குறிப்பிடுகிறார்....
அ.முத்துவிஜயன்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக