02.01.21 -மலை_நாட்டு_மங்கை : தொடர் எண் 2 : காயல்_துறை - தென்குமரிக் கவிதைக்களம்

சனி, 2 ஜனவரி, 2021

02.01.21 -மலை_நாட்டு_மங்கை : தொடர் எண் 2 : காயல்_துறை

 



02.01.21


#மலை_நாட்டு_மங்கை


#காயல்_துறை_2


நிலமகளுக்கு அணிகலனென மரகத ஆரமாய் படிந்திருந்த காயலின் பச்சை நிறக் கடலும் , வெண்மணற் பரப்பும் சற்றுமுன்  வானில் உதயமான  கதிரவனின் பொற்கதிர்கள் பட்டு தகதகவென மின்னிக் கொண்டிருந்தது. காலை வேளையின் முதலாம் ஜாமம் துவங்கி இரண்டரை நாழிகைப் பொழுது மட்டுமே கழிந்திருந்தும், கடற்கரையில் சந்தடி மிகுந்தே காணப்பட்டது. பரதவர்களின் மரக்கலங்களோடு அரேபிய தேசத்து மரக்கலங்கள் இரண்டு பாண்டிய நாட்டிற்குத் தேவையான புரவிகளை அம்மரக்கலங்களில் கொண்டு வந்து காயல் கடற்கரையின் வெண்மணற் பரப்பில் இறக்கிக் கொண்டிருந்தார்கள். **பஹ்ரைனின் ஹார்மோஸ், கிரீஸ், ஏடன், குல்ஹாது, லாஸா, கதீப் போன்ற அரபு தேசத்து உயர் ஜாதிப் புரவிகளோடு, கிஸ், டோஃபார்,சோயெர் மற்றும் ருக்ஸ், ருஸ்டம் என்ற பல்வகையான உயர்ஜாதிப் புரவிகளோடு, பெர்ஷியாவில் இருந்து சதீஃப், லஷா போன்ற புரவிகளும் தமிழகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டு, மரக்கலங்களிலிருந்து  அரேபிய அடிமைகளால் படகுகளில் ஏற்றிக் கொண்டு வந்து கரையில் இறக்கிக் கொண்டிருந்தார்கள். இவ்வகையான புரவிகள் 220 தினார்களில் இருந்து 400 தினார்களுக்கும் மேற்பட்ட விலையில் ஒரு புரவியானது 500 சாகி பொன்னுக்கு வாங்கப் பட்டுக் கொண்டிருந்தது. அடிமைகளின்   வித்தியாசமான கூச்சல்களும், வணிகர்களின் அதட்டல்களும், குதிரைகளின் கனைப்பொலிகளும் அப்பிராந்தியமெங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.


"விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர்

நனைந்தலைத் தேசத்து நன்கல னுய்மார்

புணர்ந்துடன் கொணர்ந்த புரவியோ டனைத்தும்.."  


என மதுரைக் காஞ்சியில் பாடப்பட்டதைப் போல காயலின் கடலெங்கும் நாவாய்களும், மரக்கலங்களும், மணற்வெளியெங்கும் புரவிகளின் கூட்டமாய் தான் காணப்பட்டது. ஆண்டுதோறும் 1400 புரவிகளை பாண்டிய நாட்டிற்கு தர வேண்டுமென ஒப்பந்தமொன்றை போட்டிருந்தான் மாலிக் எல் இஸ்லாம் ஜமாலுதீன் எனும் அரேபிய குதிரை வணிகன். அது மட்டுமின்றி அவனுக்கு குதிரைக்கு ஈடாக ஆண்டு தோறும் இருபத்திரண்டு லட்சம் தினார்கள் தங்கமாக கைமாறிக் கொண்டிருந்தது. அந்தக் குதிரைகளை நன்கு பயிற்று வித்து பாண்டியர்களின் படைகளில் சேர்க்கும் பெரும் பொறுப்பும் அவனிடமிருந்த காரணத்தால் ஜமாலுதீன் பாண்டிய அரசாங்கத்தில் ஒரு முக்கியமானவனாகவும் திகழ்ந்து கொண்டிருந்தான்.


கடற்கரையின் பரந்த மணல் வெளியில் ஜமாலுதீன் அரேபிய தேசத்துக் குதிரைகளுக்கு  மல்லகதி, மயூரகதி, வாரைகதி, சககதி, சரகதி எனும் ஐவகை கதிகளை பயிற்றுவித்ததோடு, ஒலிகளுக்குத் தக்கவாறு கீழ்படிதலையும், பயிற்றுவித்துக் கொண்டிருந்தான். அவனதுப் பயிற்சியை ஏற்று கீழ்படிந்த புரவிகளும் இருந்தன, ஒன்றிரண்டு புதிதாய் இறக்குமதியான புரவிகளோ பயிற்சிக்கு அடங்காமல் மூர்க்கமாய் திரிந்ததோடு அவனை கடிக்கவும்  செய்தன..அவ்வாறு பயிற்சிக்கு அடங்காதவைகளை அவன் தண்டிக்கவும் தவறவில்லை. அவனது செய்கைகள் அனைத்தையும் உன்னிப்பாய் கவனித்துக் கொண்டிருந்தான் பாண்டிய இளவல் வீரபாண்டியன்.


பரந்த மார்பும், விரிந்த தோள்களும், மெலிந்து நீண்ட கைகளோ உறுதி வாய்ந்தவையாய் காணப்பட, சுருண்ட கேசங்கள் அவனது தோள் வரை பரவியிருக்க,  காதில் தொங்கிய குண்டலமும், கழுத்தில் அசைந்தாடிய ஆரத்தில் தொங்கிய உயர் ரக முத்தும் அவனது எழிலைக் கூட்டிக் காண்பித்தன. தமிழகத்து நெசவாளிகளின் தரமிக்க பட்டினை இடைக் கச்சையாக அணிந்திருந்தவன், மேலங்கி அணியாமல் திறந்த மார்பினனாய் காட்சி தந்தபடி நின்று கொண்டிருந்தான்.


" ஜமாலுதீன்..ஏன் வாயில்லா விலங்குகளை துன்புறுத்துகிறாய்..? "


குரல் வந்த திசையை சட்டெனத்  திரும்பி நோக்கிய ஜமாலுதீன், 


" இளவரசே..இதில் நீங்கள் தலையிடாதீர்கள்..அடி உதவுவதைப் போல அண்ணன் தம்பிகள் கூட  உதவுவதில்லையாம்...இது உங்கள் நாட்டு பழமொழி தானே...இவைகளை இவ்வாறு தண்டித்தால் தான் நமது சொற்படி கேட்டு நடக்கும்..அதன் போக்கில் விட்டால் மூர்க்கத்தனமே மேலும் அதிகமாகும். " என்றான் தனது கைச்சாட்டையை பலமாய் சுழற்றியபடி.


" புரவிகளை அன்பாலும் பணிய வைக்க முடியும் ஜமாலுதீன்..அவைகள் நம்மை விட அதி புத்திசாலிகள்.." என்றபடியே புரவிகளுக்கு இடையே நுழைந்தவனாய் அதன் முகம், கழுத்து, முதுகு மற்றும் வயிற்றுப் பகுதியில் மென்மையாய் தடவிக் கொண்டே இருந்தான். அவனது ஸ்பரிசத்தின் தேவை உணர்ந்தவையாய் அவைகளும் அவனது முகத்தோடு தங்களது முகத்தை வைத்து இழைந்தது மட்டுமின்றி , மெல்லிய குரலெடுத்து கனைக்கவும் செய்ததோடு, மேலும் வீரபாண்டியனின் உடலோடு தங்களது உடலையும் உரசியபடி அவனை தங்களது நாவால் தடவியும் தங்களது அன்பினை வெளிப்படுத்தின.  அசுவ சாஸ்திரம் அறிந்த வீரபாண்டியனது செய்கையைக் கண்டு ஜமாலுதீனும் பிரமித்தான்.


" இளவரசே..இந்தப் புரவிகள் உங்களிடம் மட்டும் தங்களது எதிர்ப்பினைக் காட்டுவதில்லை..மாறாக பணிந்து போவது ஆச்சர்யம் தான்.." என்றான் குரலில் வியப்பைத் தேக்கியவனாய்.


"விலங்குகள் தன்னை நேசிப்பவரை தானும் நேசிக்கத் துவங்கி விடும்..அத்தோடு அதற்கிடப்படும் கட்டளைகளை அவை பணிந்து ஏற்கவும் செய்யும். அதனைப் பழக்குவதும் அப்போது எளிதான விசயமாகி விடும்.." என்றான் குதூகலமாய்  பாண்டிய இளவல்.


" உண்மை தான்..ஆனால் என் போன்றோரால் தான் விலங்குகளிடத்தில் அன்பைக் காட்ட முடிவதில்லை..சர்வ காலமும் விலங்குகளோடு பழகியே விலங்கின் குணம் தான் மேலோங்கி நிற்கிறது.." என்றான் ஜமாலுதீன்.


" சரி தான்..விலங்குகளோடு பழகினால் விலங்கின் குணம் வந்து விடுமா ..என்ன..?" என்றான் இகழ்ச்சியாய் வீரபாண்டியன்.


அப்போது..அவர்களை நோக்கி ஒரு வீரன் விரைந்து வந்தவன், வீரபாண்டியனை வணங்கி விட்டு , 


" இளவரசே..பாண்டிய நாட்டிலிருந்து ஸ்ரீமுகம் தங்களுக்கு.."என்றவனாய்

தனது கச்சையில் இருந்து ஒரு குழலை எடுத்து நீட்டினான்.


அதை வாங்கி, பிரித்து படிக்கத் துவங்கிய வீரபாண்டியனது முகம் சொல்லவொண்ணா குழப்பத்தையும், அதிர்ச்சியையும் வெளிப்படுத்தியது.


ஓலையைப் படித்து முடிக்கும் வரை அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் ஜமாலுதீன்.

ஓலையில் வீரபாண்டியனையே அதிர்ச்சியடைய வைக்கும் தகவல் இருப்பதை இளவரசனின் முகக் குறிப்பில் இருந்தே ஊகித்தறிந்து விட்ட அந்த அரேபிய தேசத்தவன், அந்த தகவல் என்னவாக இருக்கும் என அறிய விரும்பியவனாய், வீரபாண்டியனது முகத்தினையே கவனித்துக் கொண்டிருந்தான்.


" ஜமாலுதீன்..நான் உடனே மதுரை செல்ல வேண்டும்..பாண்டிய மாமன்னரை எவரோ கொலை செய்து விட்டனராம்.." என்றான் அதிர்ச்சி ததும்பும் குரலில் ஓலையைப் படித்து முடித்ததும் பரபரப்பாக வீரபாண்டியன்.


" என்ன..! மாமன்னர் மாறவர்ம குலசேகர பாண்டியரையா..? நம்ப முடியவில்லையே..? யாருக்கு அந்த துணிச்சல் வந்தது..? " என்றான் அதிர்ச்சியும் கோபமும் கொண்டவனாய் ஜமாலுதீன்.


" ஜமாலுதீன்..விசயம் முழுவதும் தெரியவில்லை..கொங்குப் பாண்டியரான சுந்தரபாண்டிய தேவர் தான் ஓலை அனுப்பி இருக்கிறார்..உடனே வரும்படி ஆக்ஞை..தாமதிக்க அவகாசமில்லை..நான் சென்று வருகிறேன். காயலின் நிலையை கவனித்துக் கொள்ளவும். ஏதேனும் தகவல் எனில் தெரியப்படுத்துகிறேன்." என்றவனாய் தனது கரியநிற புரவியிலேறி மதுரை செல்லும் மார்க்கம் நோக்கி விரைந்தான்.


பாண்டியரது இரண்டாவது தலைநகரென புகழ்பெற்றதும், முத்துக் குளித்தலின் காரணமாய் பாண்டிய தேசத்திற்கு பெரும் வருவாயை ஈட்டித் தந்த வணிகச் சிறப்பு மிக்கதுமான கொற்கைத் துறைமுகம் கடற்கோளினால் அழிந்துபட்ட பிறகு, அதற்கு ஈடான ஒரு பெரும் துறைமுகமாக காயல் பாண்டியர்களுக்கு விளங்கியது. பொருநை எனும் தாமிரபரணி ஆறானது கடலோடு கலக்கும் முகத்துவராத்தை ஒட்டியமைந்த காரணத்தால் காயலும் பாண்டியர்களுக்கு சிறப்பு மிக்க துறைமுகமாகவே திகழ்ந்தது. மேலை நாட்டு வணிகர்கள் தமிழகக் கடற்பகுதிகளை **மாபார் என்றே அழைத்தார்கள். மாபார் கடற் பிராந்தியத்தில் காயல் ஒரு தனித்த சிறப்பினைப் பெற்றே திகழ்ந்தது. கீழ்திசை நாடுகளான சீனம், சாவகம், கடாரம், ஈழத்தோடு, மேல் திசை நாடுகளான பாரசீகம், அரேபிய, கிரேக்க நாடுகளை இணைக்கும் முக்கியத் துறைமுகமாக காயல் திகழ்ந்தது.  அது மட்டுமின்றி பாண்டியர்களுக்கு தேவையான அரபு தேசத்துப் புரவிகளை அதிகம் இறக்குமதி செய்யும் முக்கியத் துறைமுகம் காயல் தான். இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த காயலில் பாண்டிய நாட்டு இளவல்கள்  தங்கி கொண்டு தான் பாண்டிய நாட்டு வளமான முத்து வணிகத்தையே மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார்கள். 


பரந்து விரிந்த பாண்டிய சாம்ராஜ்யத்தினை மதுரையில் இருந்து மாறவர்மன் குலசேகர பாண்டியனும், காயல் துறைமுகத்தில் இருந்து குலசேகர பாண்டியனின் காதல் கிழத்தியின் மகனும் பாண்டிய இளவரசனாய் அறிவிக்கப்பட்ட வீரபாண்டியனும், கொங்கு நாட்டில் இருந்து குலசேகர பாண்டியனின் தயாதிகளில் ஒருவனும் சகோதரனுமான ஜடாவர்ம சுந்தரபாண்டியனும், வீரதவளப்பட்டணத்தில் இருந்து குலசேகர பாண்டியனின் மற்றொரு தயாதியான சகோதரன் விக்கிரம பாண்டியனும், திருகானப்பேர் என்றழைக்கப் படும் காளையார் கோவிலில் குலசேகர பாண்டியனின் பட்டமகிஷியின் மகனான சுந்தர பாண்டியனும் பாண்டிய நாட்டினை நிர்வாகம் செய்து வந்தனர். இவர்களையே பாண்டியர் ஐவர் என பிற நாட்டவர் பெருமையுடன் அழைத்தனர்.


குலசேகர பாண்டியருக்கு பட்டமகிஷியின் மகனாய் இருந்தும் சுந்தர பாண்டியனுக்கு இளவரசுப் பட்டத்தை வழங்காது, குலசேகர பாண்டியர் தனது காதல் கிழத்தியும் ஆசை நாயகியின் மகனுமான வீரபாண்டியனுக்கு இளவரசுப் பட்டத்தை வழங்கியது , மூத்த மகனான சுந்தரபாண்டியனுக்கு தந்தையின் பேரில் வெறுப்பினை வளர்த்து வந்தது. இருப்பினும் தந்தையை நேரடியாய் எதிர்க்க இயலாதவனாய் திருக்கானப் பேரில் இருந்தபடி பாண்டிய நாட்டின் நிர்வாகத்தை கவனித்துக் கொண்டிருந்தான்.


இவ்வாறான நிலையில் தான் குலசேகர பாண்டியர் கொலையான தகவல் காயலை வந்தடைந்தது.


_ தொடரும்..


** மார்க்கோபோலோவின் பயண குறிப்புகள். 


** Mabhur is the oldest Historical name of Coramandal Coast. Foreign Notices of South India by A.K. N.Sastry. page_166.


_ அனுராஜ்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages