உன்னை ஒன்று கேட்பேன்
காலில் ஆபரேஷன் செய்த ஒரு முப்பது வயது இளம் வாலிபன் ஒருவனை ஸ்ட்ரெச்சர் கொண்டு வந்து இரண்டு பேர்கள் ஷேர் செய்யும் அறைக்கு கூட்டி வந்து படுக்க வைத்து சென்றனர்
செவிலியர்கள். பின்னாலேயே கவலை தோய்ந்த முகத்துடன் அவனது வயது முதிர்ந்த பெற்றோர்கள் ஓட்டமும் நடையுமாக வந்தனர்.
அவர்களைப் பார்த்து அந்த பையன் புன்முறுவல் செய்தான். பக்கத்து கட்டிலில் படுத்திருந்த சீதா அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனது அம்மா அவனுக்கு சாப்பாடு
ஊட்டிவிட, அவன் “வேண்டாம்” என்று சொல்ல, அவர் கட்டாயப்படுத்தி அவனுக்கு ஊட்டினார். அப்பா அவனுக்கு கொடுக்க வேண்டிய மாத்திரைகள் எடுத்து வைத்து கொண்டிருந்தார். சீதாவுக்கு கையில் எலும்பு உடைந்து கையில் ப்ளட் வைத்திருந்தார்கள்.
இன்னும் கணவன் அனந்தன் வரவில்லை.
“ சாப்பிட வறீங்களா?” அக்கறையோடு விசாரித்தனர்
” வேண்டாம் வீட்டுக்காரர் வந்துகிட்டு இருக்காரு ஆமா
உங்க பையனுக்கு என்னாச்சு?”
“ மாடியில் இருந்து இறங்கும் பொது ஸ்லிப் ஆயிடிச்சு ஒரு வாரத்தில் டிஸ்சார்ஜ் ஆகிவிடலாம்னு சொல்லியிருக்காங்க”
“உங்களுக்கு?”
“ நான் கிச்சன்ல வழுக்கி விழாமல் இருக்க கையை ஊனிட்டேன்”
அதற்குள் அவரது கணவர் வர பேச்சு அத்துடன் நின்றது.
இரவு வரை அவர்கள் இருந்தார்கள். இரவு அவர்கள் வீட்டு கார் டிரைவர் வந்து துணைக்கு படுத்துக் கொண்டான். காலை நேரமே கிளம்பி அவர்கள் இருவரையும் அழைத்து வந்தான்.
காலை எட்டு மணிக்குள் டிபன் சமையல் எல்லாம் முடித்து அவரும் அவர் மனைவியும் வந்து மகன் அருகில் அமர்ந்து கொண்டனர். பையன் மேல் உசிராக இருந்தனர்.
“என்ன படிச்சிருக்காரு உங்க பிள்ளை?”
“இன்ஜினியரிங் படிச்சிருக்கான். MBAகரெஸ்பாண்டென்சில் படிக்கிறான்.”
டிஸ்சார்ஜ் ஆவதற்கு முதல் நாள் அவர்கள் இருக்கும் போது அவனை பார்க்க, ஒரு கணவன் மனைவி ஒரு பெண் வந்தனர் .
வந்த அந்த பெண்,
“ அண்ணா எப்படி இருக்கே?” என்று கேட்டு அழுதாள்.
கூட்டிக்கொண்டு வந்த பெண்,
“ நல்லா கவனிச்சுக்கிட்டு இருகாங்க நீ அழக்கூடாது”
என்று பெண்ணை கடிந்து கொள்ள, சீதாவுக்கு ஒரே குழப்பம்.
அவர்கள் சிறிது நேரம் இருந்து விட்டு சென்றனர். பெண் ரொம்ப வருத்தத்தோடு விடை பெற்றுச் சென்றாள்.
“வந்தவங்க யாருங்க?”
“ என்னோட அம்மா, அப்பா, தங்கச்சி என்றான் அந்த வாலிபன்.
“அப்ப இவங்க”
“இவங்க வீட்டில் நான் வேலை செய்யறேன்”
“என்னது?”
“நான் இவங்க வீட்டில் தங்கிட்டு MBA படிச்சுக்கிட்டு இவங்களுக்கு சின்ன சின்ன உதவி பண்றேன். எனக்கு மாசம் 15000 சம்பளம்”
என்றான்.
“உங்களுக்கு பசங்க இல்லையம்மா?”
“ அவங்க டெல்லில வேலை செய்யறாங்க. எங்களுக்கு வெய்யிலோ குளிரோ ஒத்துக்காது. அதே போல சீனியர் சிடிஸின் ஹோம் சேரவும் விருப்பம் இல்லை. இவன் கூட மாட எங்களுக்கு உதவி செஞ்சிகிட்டு படிச்சுக்கறான். எங்களுக்கு தனிமையா இல்லை.”
“ உங்க தூரத்து சொந்தமா?”
“ இல்லைம்மா இவன் போயிட்டா வேற ஒரு பிள்ளை உதவிக்கு வச்சுக்கிட்டு அவனுக்கு படிக்க உதவுவோம். எங்களுக்கும் உதவியா இருக்கும்”
“ ஆனா இவன் எங்களை விட்டு போக மாட்டேன்னு சொல்லறான் வாரம் ஒரு நாள் அவன் வீட்டுக்கு போய் இருந்திட்டு வருவான்
படிப்பு முடிஞ்சு நல்ல வேலைக்கு சேரட்டும் எங்களை அப்பப்போ வந்து பார்த்துக்கட்டும்”
குழந்தை இல்லாததால், வேறு ஒரு பிள்ளை தத்து எடுத்து வளர்க்காத செயலை நினைத்து வருத்தப்பட்டாள் சுமதி...
(என் மனதில் இருப்பதை கதையாக)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக