03.01.21
#மலை_நாட்டு_மங்கை
#வையைக்_கரைதனிலே_3
மதுரைக்கு பெருமைச் சேர்த்த வையையின் பெரும்புனல் சுழித்தபடி ஓடிக் கொண்டிருந்தது. மதுரையின்
வேந்தன் மரணத்தை தழுவியதாலோ என்னவோ, கதிரவன் கூட தன் முகம் காட்டாது சோகத்தில் ஆழ்ந்தவனாய் மேகங்களுக்கிடையே மறைந்து கொண்டான். நதியினை ஒட்டியமைந்த தோப்புகளில் காணப்பட்ட மரங்களில் குடியிருக்கும் பறவையினங்களோ பயங்கரக் கூச்சலிட்டுக் கொண்டிருப்பதைக் காண்கையில் மன்னனின் மரணத்திற்கு தங்களது துயரத்தைப் பகிர்ந்து கொண்டதை போலிருந்தது. வையையின் கரையில் பாண்டிய மாமன்னர் மாறவர்ம குலசேகர பாண்டியனது உடல் தருப்பைப் புல்லின் மேல் கிடத்தப் பட்டிருந்தது.
உடலினைச் சுற்றி உறவுகள் கூடியிருந்தார்கள். கொங்கு தேசத்தில் இருந்தபடி பாண்டிய நாட்டின் நிர்வாகத்தை கவனித்தவனும், மாறவர்ம குலசேகர பாண்டியனின் தயாதியுமான சகோதரன் ஜடாவர்ம சுந்தரபாண்டியன் சோகம் ததும்பிய முகத்தினனாய் இறுதி சடங்கினில் ஈடுபட்டிருந்தான். அவனோடு
வீரதவளப்பட்டணத்தில் இருந்தபடி பாண்டிய நாட்டின் நிர்வாகத்தினை கவனித்த மாறவர்ம குலசேகர பாண்டியனின் மற்றொரு தயாதி சகோதரன் விக்கிரம பாண்டியரும் கவலை முகத்தில் பரிபூரணமாய் தென்பட காவலர்களை குற்றேவல் புரிய பணித்துக் கொண்டிருந்தார்.
மாறவர்ம குலசேகர பாண்டியனது உடலுக்கு இருபுறமும் , பட்டமகிஷியின் மகனும் , திருகானப்பேரில் இருந்து கொண்டு பாண்டிய நாட்டின் நிர்வாகங்களை கவனித்து வந்த சுந்தரபாண்டியனும், காயலில் இருந்து வந்த இளவரசன் வீரபாண்டியனும் கவலை தோய்ந்த முகத்தோடு காணப்பட்டார்கள்.
நெடுநாட்களாய் நோய்வாய்ப்பட்டிருந்த பாண்டிய மன்னரது நோயினை குணப்படுத்த அழைக்கப்பட்டு, பாண்டிய நாட்டு அரசியலுக்குள் சிக்கிக் கொண்ட பாரசீக வரலாற்று ஆசிரியனும் , பாரசீகத்தின் மங்கோலிய மன்னனான சுல்தான் உல்ஜாயிதுவால் வாஸப்_உல்_ஹஸரத் என்று இலக்கியச் சிறப்புப் பெயர் பெற்றவனும், பாண்டியர்களது ஆட்சி மேன்மை குறித்து பயணக்கட்டுரை எழுத வந்தவனுமான ஸிராஸ் நகரத்து அப்துல்லா வாஸப்பும் அங்கு காணப்பட்டான். பாண்டிய நாட்டு மாமன்னரான மாறவர்ம குலசேகர பாண்டியரை படுத்த படுக்கையில் இருந்து சமீபத்தில் தான் மீண்டெழச் செய்த மகத்துவமான மருத்துவனும் அவனல்லவா. ஆனாலும் என்ன பயன்..?
உடல் நலம் பெற்று தேறிய மன்னரோ இன்று கொலையுண்டல்லவா கிடத்தப் பட்டிருக்கிறார்..! விழலுக்கு இறைத்த நீராய் அல்லவா போய் விட்டது , பாடுபட்டு அவரை காப்பாற்றியது என்ற பெரும் கவலை அப்துல்லா வாஸப்பை வாட்டிக் கொண்டிருக்க சோகத்தில் தலைகுனிந்து காணப்பட்டான்.
வந்திருந்த பிரதானிகள் அனைவரையும் ஓரக் கண்களால் பார்த்தபடி அங்குமிங்கும் ஓடியபடி குற்றேவல் புரிந்து கொண்டிருந்தான் சுந்தரபாண்டியனின் நம்பிக்கைக்கு உரிய குலபதி.
மற்றும் அங்கு பாண்டிய நாட்டின் துணை அமைச்சரும் அப்துல்லா வாஸப்பை குலசேகர பாண்டிய மன்னரை குணப்படுத்த அழைத்து வந்தவரும், முகமது திபியின் புதல்வருமான , தகியுத்தீன் அப்துல் ரகுமானும் சோகம் ததும்பியவராய் காணப்பட்டார்.
பாண்டிய நாடே, அன்று களையிழந்து காணப்பட்டது. காண்பவர் அனைவருமே கவலையிலும், சோகத்திலும் ஆழ்ந்து கிடந்தார்கள்.
மன்னரானவர் போரில் இறக்காது, நோய்வாய்பட்டு மீண்டெழும் வேளையில் இவ்வாறான துர்மரணம் நிகழ்ந்ததனால் அவரது ஆன்மா சுவர்க்கம் செல்லாது எனக் கருதி, மன்னரும் அப்பேற்றினை அடைய வேண்டி அந்தணர்கள் கொண்டு மந்திரம் சபித்து சடங்குகள் செய்வித்து, தருப்பைப் புல்லில் கிடத்தி வாளால் இறந்த மன்னரது மார்பில் கீறி அடக்கம் செய்தனர்.
** நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக்
காதல் மறந்தவர் தீதுமருங் கறுமார்
அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம்புரி புசும்புல் பரப்பினர் கிடப்பி
மறம்கந் தாக நல்லமர் வீழ்ந்த
நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்கென
வாள்போழ்ந் தடக்கலும் உய்ந்தனர்.
இறந்துபட்டவருக்கு மைந்தர் செய்யும் கடமையாக சுந்தரபாண்டியனும், வீரபாண்டியனும் "தென்புலத்தார் கடன் "
செய்து முடித்தனர்.
கூட்டமும் மெல்ல அந்த மயான பூமியிலிருந்து கலையத் துவங்கியது.
கைகளைப் பின்னுக்கு கட்டியபடி சென்று கொண்டிருந்த வீரபாண்டியனை நெருங்கிய அப்துல்லா வாஸப் யாரும் அறியாமல் , வீரபாண்டியனது கைகளில் ஒரு ஓலையை திணித்து விட்டு கூட்டத்தோடு கூட்டமாய் கலந்து விட்டான்.
தனது கைகளில் ஏதோவொன்று திணிக்கப் பட்டதும் சுயநிலையடைந்தவனாய் , திணித்தது யாரென அறிய முற்பட்டான் வீரபாண்டியன். ஆனால் கூட்டத்தில் யாரென அறிவதென்பது அவ்வளவு எளிதான காரியமாய் இருக்கவில்லை. எனவே கைகளில் திணிக்கப் பட்டிருந்த ஓலையில் தனது பார்வையைச் செலுத்தினான். அதில் இருந்தது இரண்டே வரிகள் தான்.
" எச்சரிக்கையாய் இரு. உன்னைச் சுற்றி ஆபத்து சூழ்ந்துள்ளது. "
_ தொடரும்..
** ஔவை எழுதிய புறநானூற்றுப் பாடல்.(93)
_ அனுராஜ்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக