திண்ணைக்கதைகள்.(சிறுகதை)
எங்கூரு திண்ண ஒவ்வொன்னும் எழுவத்தஞ்சி கதைசொல்லும்
அதுல பாதி காதுல கேட்டதைவைச்சி கண்ணுகாது வைச்சி அப்புடியே நேருல பாத்தமாதுறி அவுத்துவுடுறது
செலது மொத்தமாவே புளுகு மூட்டையாருக்கும்
செலதுல உண்மையுமிருக்கும் ,
இப்ப நானு சொல்லப்போறது எந்தவகன்னு சொல்லமாட்டேன் அன்னிக்கிப் பாப்பாத்தி அப்புடித்தான் ஆரம்பிச்சா , சின்னத்தாயிகிட்ட பக்கத்துல இருளாயிவேற நல்லாவே உம் கொட்டுவா,
பாப்பாத்தி கதை உடுறதில ராணி. ஊருக்குள்ள இருக்குற அத்தன குடும்பத்துக்குள்ள ரகசியமா இருக்குற கதையக்கூட நேருல பாத்தமாதிரி சொல்லுவா.... மத்தியாணம் சாயங்காலங்காலத்துல அவ வீட்டுத்திண்ணையில இதுக்குன்னே பொம்பளைக வருவாக.....
அன்னிக்கி மத்தியாணம் அப்புடித்தான் ஆரம்பிச்சா.......
மேலக்குடில பெரியசாமி இருக்கானே அவன்பொண்டாட்டி வள்ளி அன்னிக்கி மத்தியாணம் கொள்ளக்கிருக்க செங்கலத்துக்கம்மா பக்கமா போயிருக்காவெயிலுக்கு முக்காட்ட தலமேல போட்டுக்குக்கிட்டு உச்சிவெயிலு மண்டயப்பொளக்குது.
கொள்ளப்பக்கம் வேலிக்காத்தானா வெளஞ்சி கெடக்கு. ஆளு நடமாட்டம் இருக்காது வெயிலுக்குப்பயந்து...ஆடுக கூட நெழலுல ஒதுங்கிக் கெடக்கு....... அகலநேரம்....
ஆமா அப்பத்தான முனி நடமாடுறநேரம்ன்னா சின்னத்தாயி
ஆமா செங்கலத்துக்கம்மாவோரம்தான அந்த அய்யரு கெணறு இருக்கு. ஆமா அதுலதான கோனார்தெரு மணிய கழுத்தறுத்துபோட்டுட்டாய்ங்க. அதுல இருந்து ஆரும் அந்தக்கெணத்துல எறங்குறதில்லைலன்னா இருளாயி
ஆம்பளைகதான் வாய்க்கா வரண்டுகெடக்குறதுனால கழுவுறதுக்கு அங்க போவாக...பொம்பளைக ஆரும் போகமாட்டாகல்லன்னா...
ஆமா அததாண்டிபோனாத்தானத்தான முள்ளுக்காடுவரும் .
இவ அததாண்டிப்போயிருக்கா போறப்போ கெணத்துக்குள்ள இருந்து ஆரோ அலறுற சத்தம் கேட்டுருக்கு, என்னய வுட்டுரு என்ன்னய விட்டுருன்னு....புள்ள பயந்துபோச்சு கெணத்துகுள்ள எட்டிப்பாத்தா ஆருமில்ல சரி அங்குட்டு ஆராவது இருக்காகலான்னு பாத்தா
ஆருமில்ல சரின்னு மனசத்தேத்திக்கிட்டு
நடந்தா ,
வள்ளியக்கா வா வா ந்னு கூப்புட்டுருக்கு அப்புட்டுதேன் ஒரே ஓட்டமா வீட்டுக்கு வந்துட்டா கொள்ளக்கிக்கூட போகாம
வந்தவளுக்கு காச்சலு படுத்துட்டா. காச்ச கொதிக்குது.....
ராத்திரிப்பூரா அலறி அலறி எந்திரிக்கிறா
மாமியா காரி போய் பாத்துருக்கா
கண்ண உருட்டி ஒம் புருசனக்கூப்புடு ஒம்புருசனைக்கூப்புடு ந்னு கண்ண உருட்டி.....தலைய விரிச்சிப்போட்டுக்கிட்டு
தலைய சுத்திக்கிட்டு கத்திருக்கா
அவபுருசன் வீரபத்திரன் பயந்துபோயிட்டான், அவனைப்பாத்து
டேய் என்னோட கழுத்த அறுத்துகெணத்துலபோட்டுட்ட இல்ல
உங்கொலத்த கருவருக்காம வுடமாட்டண்டா.ன்னு கத்துனா
அவன் பயந்துபோயிட்டான்
போயி சாமியாடியகூட்டியாந்து. விபூதி போட்டுருக்கான் ஆனா
சரியாகல அவபாட்டுக்கு அதக்கொண்டா இதைக்கொண்டான்னு வாங்கி வாங்கி தின்னுருக்கா... அப்புறம் கோடாங்கிவந்து
பேய்வெரட்டிருக்காரு.... அவளை அடிச்சி இழுத்துட்டுபோயி அவ தலமுடிய புளிய மரத்துல வைச்சி ஆணி அடிச்சிட்டு கோடாங்கி சொன்னான்... பேய மரத்துல கட்டிப்புட்டேன் இனிமே தொந்தரவு இருக்காதுன்னு காச வாங்கிட்டுபோயிட்டான். ஆனா அவ இன்னம் அப்ப அப்ப அதுமாதிரி ஆயிடுனாளாம் ந்னு
நிறுத்துனா பாப்பாத்தி....
அப்ப மணியகொன்னது அந்தாளுதானான்னு கேட்டா இருளாயி தெரியல
ஆனா அதுக்கு ஒருமாசம் கழிச்சி வள்ளிபுருசன் லாரில அடிபட்டுச்செத்துபோனான்
அதுல மனசொடைஞ்சி வீரபத்திரன் நடைபொணமா ஆயிட்டான்
அவனுக்கு ஒரு கையும் காலும் இழுத்துக்கிச்சி....
வள்ளி லூசாப்போயிட்டா அவுகளுக்கிருந்த ஒரே வாரிசு பத்துவயசுமகன் திடீருண்ணு காணாமப் போயிட்டான்னா
நெசமாவான்னா இருளாயி
அதுக்கு பாப்பாத்திசொன்னா ஆமா இப்பக்கூட மேலக்குடில கொட்டாரத்துல அந்தக்கெழவன் கண்ணுகூடத்தெரியாம
ஆராவது டீ வாங்கிக்குடுப்பாகளான்னு
ஒக்காந்துருப்பான்.....போய்ப்பாருன்னா
இப்ப சின்னத்தாயிகேட்டா அதுசரி மணியோட ஆவி பேசாம வீரப்த்திரன போட்டுத்தள்ளிருக்கலாமேன்னு
அதுக்கு ப்பாப்பாத்திசொன்னா அது மணியோட ஆத்தா விட்ட சாபம் அவமகனை கொன்னவுக அவளமாதிரியே நெனச்சி நெனச்சி நொந்தே சாகனும்றதுன்னு முடிச்சா...... இன்னும் நெறயாக்கதை கெடக்குன்னா
இருந்தாலும் வெளக்கு வைக்கிறநேரமாச்சு நான் போறேன்னா பாப்பாத்தி
சரிசரி எம்புள்ளக வார நேரமாச்சுன்னு கெளம்புனாக சின்னத்தாயும் இருளாயியும்
நம்ம திண்ணயும் பேசிச்சி கதைகேட்டநாய்களை செருப்பால அடின்னு
சொல்லிட்டு அடுத்த கதைய மறுநாகேக்க தயாராகுச்சு......
அ.முத்துவிஜயன்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக