05.01.21-மேகம் கருக்குது..... - தென்குமரிக் கவிதைக்களம்

செவ்வாய், 5 ஜனவரி, 2021

05.01.21-மேகம் கருக்குது.....

 


சுந்தரம்


மேகம் கருக்குது.....


மதியம் இரண்டு மணிக்கே வானம் இருட்டிக் கொண்டு வந்தது. நேரமே கிளம்பி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். எங்கே? அப்போதான் முக்கியமான வேலை என்று சொல்லி ஏதாவது தருவார்கள். என்னாமோ அனுப்பும் கடிதங்களுக்கு உடனே மினிஸ்டர் நடவடிக்கை எடுத்து விடுவது போல..... எரிச்சல் வந்தது. அடக்கிக் கொண்டேன்.


 இதற்கு வடிகால் கண்டிப்பாக வெளியிலோ, அல்லது வீட்டிலோ கிடைக்கும்.

பக்கத்துக்கு கட்டிடத்தில் வேலை நடந்துகொண்டிருந்தது.


 மேஸ்திரி வேகம் வேகம் மழை வந்துடும் என்று எல்லோரையும் விரட்டிக் கொண்டு இருந்தார்.


 காலை டீ குடிக்க வெளியில் சென்று வரும்போது ஒரு சிறுமி சுருக்கி போட செங்கல் உடைத்துக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. ஒரு பத்து அல்லது பதினோரு வயது தான் இருக்கும். சிறு பிள்ளையை வேலை வாங்கும் கொடுமையை தடுக்க முதலில் போட்டோ எடுத்துக் கொண்டேன். அந்த வழியே போன ஒருவர் என்னை வினோதமாக பார்த்தார்.


வேலையை முடித்து கொடுத்து நான் கிளம்பும்போது மாலை ஆறு மணி ஆகிவிட்டது. கட்டிடத்தை விட்டு வெளியில் வந்தேன். மழை வர ஆரம்பித்து விட்டது.  ஓட்டமும் நடையுமாக பஸ் ஸ்டாண்ட் அடைந்தேன்.


 பஸ் ஸ்டாண்டில் நிழற்குடை அமைத்தவரின் பயோடேட்டா தெரிந்தது. காலையில் பார்த்த அச்சிறுமி பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தாள். ஒரு சில்வர் தூக்கு பாத்திரம் வைத்திருந்தாள்.  அவளது சட்டை நனைந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது.


 நம்ம வீட்டில் பிள்ளைகள் இப்படி வந்தால் தலை துவட்டி வேறு ஒரு உடை மாற்றச் சொல்வோம்.


பீடி புகை வந்து கொண்டிருந்தது சற்று தள்ளி இரண்டு விடலை பசங்கள் உட்கார்ந்து பீடி புகைத்துக் கொண்டிருந்தனர்.

நல்லது கற்றுக் கொள்கிறார்களோ என்னவோ? கெட்டது உடனே கற்றுக் கொள்கிறார்கள் . 


பஸ் வர வேண்டிய நேரம்  தாண்டிக்  கொண்டிருந்தது. மழை வலுக்க ஆரம்பித்தது. அப்போது பைக்கில் ஒருவன் வந்து அவசர அவசரமாக பைக்கை நிறுத்தி அவனும் நிழற்குடையில் தஞ்சம் அடைந்தான். 


எனக்கு சிறுநீர் வரும்போல இருந்தது. அடக்கிக் கொண்டேன்.அந்த சிறுமியிடம் பேச்சுக் கொடுத்தேன்.


“ நீ எங்கிருந்து வரே? அப்பா அம்மா என்ன பன்றாங்க? நீ எதுக்கு இந்த வேலைக்கு வரே? படிக்கலையா?”


ஒரு பொது இடத்தில் அவளைப் பற்றி விசாரிக்கிறோமே மத்தவங்களுக்கு கேட்பாங்களே என்று என் அறிவு வேலை செய்யவில்லை. 


அப்பா அம்மா கட்டிட வேலை செய்துகொண்டிருந்த தாகவும் வண்டியில் வரும்போது விபத்தில் இறந்து விட்டதால், மேஸ்திரி பரிதாபபட்டு தனக்கு வேலை கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்க,  அவரைப் பற்றி புகார் தெரிவிக்க வேண்டும் என்ற என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்.


“வீட்டில வேற யாரு இருக்காங்க?”


“எனக்கு ரெண்டு தம்பிங்க. ஒருத்தன் ரெண்டாம் வகுப்பு படிக்கிறான். இன்னொருத்தன் நான்காம் வகுப்பு. நான் பள்ளிக்கூடம் போவதை நிறுத்திட்டேன்.”


“உனக்கு என்ன வயசு?”


விவஸ்தை இல்லாமல் கேட்டேன்.


“பனிரெண்டு”


“தம்பிங்க சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்க?”


“காலைல பக்கத்தில ஒரு ஆயா இட்லி அவிக்கும். அதை சாப்பிட்டு ஸ்கூல் போயிடுவாங்க.  தூக்குல எனக்கு கொடுத்த வடை வச்சிருக்கேன்.  நான் போய் சோறு பொங்கி கொடுப்பேன்.”


ஒரு அக்கா தாய் ஆவதை உணர்ந்தேன். அந்த விடலைப் பசங்களும், பைக்கில் வந்த இளைஞனும் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தனர்.


 எங்களையா? அல்லது அந்த சிறுமியையா? என்று தெரியவில்லை. அவள் குமரி மாதிரியும் தெரிந்தாள். நான் போக வேண்டிய பஸ் வந்தது.  இந்த சிறுமியை அப்படியே விட்டு விட்டு செல்ல மனம் வரவில்லை.  


சமூக அவலங்கள் நினைவுக்கு வர,  அவள் பஸ் ஏறி செல்லும் வரை நிற்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.


“அய்யா உங்க பஸ் வந்திடுச்சு”


 அவள் என்னை ஞாபகபடுத்த, நான் ஒன்றும் சொல்லாமல் மெல்லச் சிரித்தேன். பஸ் போய் விட,


“என்னோட பஸ்னு எப்படித் தெரியும்?”


“நான்   நீங்க அந்த பஸ்சில் போவதை பாத்திருக்கேன் சார்”


நான் அங்கேயே நின்று கொண்டு, அவளுடன் பேசிக் கொண்டிருந்தேன். மழை நின்று விட்டது.  இளைஞன் கிளம்பவில்லை. விடலைப் பசங்களும் நகரவில்லை.


தூரத்தில் பஸ் வருவதை கண்டு அவள், விடலைப் பசங்களைப் பார்த்து,


“அண்ணே நம்ம பஸ் வந்திடுச்சு” என்றாள்.


என் பார்வையின் அர்த்தம் தெரிந்தது போல என்னைப் பார்த்து, 

“எங்கூரு பசங்க தினமும் கடைசி பஸ் வரும் வரை இப்படி வந்து எங்களுக்கு பாதுகாப்பா இருப்பாங்க”


 என்று சொல்லி பஸ் ஏறினாள்.


எனக்கு அந்த பசங்கள் மீது வன்மம் குறைந்து, பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த இளைஞன் மீது திரும்பியது.


 அவனைப் பார்த்து,

“மழை விட்டிடுச்சு நீங்க ஏன் போகலை?” என்றேன்.


“ சார் உண்மையை சொல்லவா?”


“ சொல்லுப்பா”


“ என்னோட வீடு பக்கத்தில் தான். உங்க பஸ் வந்தும், நீங்க அதுல போகாம நின்னுகிட்டு இருந்தீங்களா? எனக்கு உங்க மேலேயும், அந்த பசங்க மேலயும் சந்தேகமா இருந்திச்சு. அதுதான் அந்த பொண்ணு போற வரைக்கும் நிக்கலாம்னு நினைச்சேன்.”


என் மனதை போல வானம் தெளிந்து இருந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages