06.01.21 #மலை_நாட்டு_மங்கை_6 #எதிர்பாரா_விருந்தாளி - தென்குமரிக் கவிதைக்களம்

புதன், 6 ஜனவரி, 2021

06.01.21 #மலை_நாட்டு_மங்கை_6 #எதிர்பாரா_விருந்தாளி


06.01.21


#மலை_நாட்டு_மங்கை_6


#எதிர்பாரா_விருந்தாளி


கரிய நிற வானில் தன் வெண்மை நிறக் கதிர்களைப் பரப்பிய வண்ணம் விரைந்து கொண்டிருந்த நிலவின் குளுமையான ஒளியோ, மார்கழித் திங்களின்  சிலிர்க்க வைக்கும் குளிரோ, தென்பொதிகையின் காற்றோ, நந்தவனத்து பலஜாதி மலர் செடிகளில் இருந்து எழுந்து வந்த மணமோ, இவை எதுவும்  வீரபாண்டியனது கவனத்தைக் கவரவில்லை எனினும்,  மாளிகையை ஒட்டியமைந்திருந்த பல அடர்ந்த  மரங்களில் வாசம் செய்த பறவைகளின் ஒலிகளும் கூட வீரபாண்டியனது சிந்தையைக் கவரவில்லை. அவன் மனமோ பலவித சிந்தனைகளிலும் குழப்பத்திலும் சிக்கித்தவித்துக் கொண்டிருந்தது. பாண்டிய மாமன்னரும் தந்தையுமான மாறவர்ம குலசேகர பாண்டியரது மரணம் அவனை பெருங் கவலை கொள்ளச் செய்தது. அதை விட அவர், முன்னர் அவனை வரவழைத்து வீரபாண்டியனது எண்ணத்திற்கு விரோதமாக இளவரசுப் பட்டத்தை அரண்மனையின் சபையில் அறிவித்ததும்,  அதைத் தொடர்ந்து எழுந்த சுந்தரபாண்டியனின் ஆட்சேபணையும் , அவன் சபையை விட்டு கோபமாய் வெளியேறியதும் சட்டென நினைவில் வந்து போனது. கூடவே தான் மன்னரோடு விவாதித்த விசயங்களையும் மறந்து விடவில்லை அவன்.


" தந்தையே, மூத்தவன் இருக்க இளையவனுக்கு இளவரசு பட்டம் சூட்டுவது முறையான செயல் அல்லவே.." என்றான் மாறவர்மர் குலசேகர பாண்டியரை  நோக்கியவனாய், வீரபாண்டியன்.


" மகனே..பாண்டியநாடு எதிர்கொள்ள விருக்கும் ஆபத்துகள் பல. வடதிசையில் இருந்து முகமதியர்கள் முழுமுனைப்புடன் தென்பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டு வருகிறார்கள். அது மட்டுமின்றி ஹொய்சாள மன்னன் வல்லாளனும் நமக்கு எதிராக பல நாசவேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான். சுந்தரபாண்டியனிடத்தில் உன்னிடம் உள்ளதைப் போன்ற நிர்வாகத் திறமை துளியளவும்  இல்லை. அது மட்டுமின்றி அவனிடத்தில் முன்கோபமும், முரட்டுத் தனமும் தான் காணப்படுகிறதேயன்றி

பொறுமையும், நிதானமும் அவனிடத்தில் இல்லை. மக்களிடமும் அவனுக்கு செல்வாக்கு என்பது சரிந்தே காணப்படுகிறது. காண்பவர் மீதெல்லாம் எரிந்து விழுகிறான். நினைப்பதை சாதிக்க தவறான வழிமுறைகளையும் கையாள்கிறான்..பொறுப்பற்ற ஒருவனிடம் ஆட்சியினை ஒப்படைக்க என் மனம் இடந்தரவில்லை. எனவே தான் இளவரசுப் பட்டத்தினை உனக்கு சூட்டியதோடு, எனக்குப் பின் பாண்டிய அரியணையில் ஏறுகின்ற வாய்ப்பினையும் உனக்கு வழங்க உத்தரவிட்டேன். எனது சகோதரர்கள் எனது பேச்சினை மீறுவதில்லை. விக்கிரம பாண்டியனும் , ஜடாவர்ம சுந்தரபாண்டியனும் எனது எண்ணங்களுக்கு குறுக்கே நிற்பதில்லை. ஆனால் எனது மகனாய் பிறந்திருக்கிறானே ஒரு பொறுப்பற்றவன், தந்தை என்ன காரணத்திற்காக இளையவனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டுகிறார் என்பதைக் கூட அறிய மாட்டாதவனாக இருப்பவனுக்கு எனது செயல் வருத்தத்தையும், வேதனையையும் தான் தரும்..ஆனால் அது குறித்த கவலை எனக்கில்லை..! எனக்கு எனது நாட்டின் பிற்கால நலன் முக்கியம். இந்த நாட்டினை அன்னியரது ஆதிக்கத்தில் இருந்து காப்பாற்றுவது உன்னால் மட்டுமே சாத்தியம். எனவே இளவரசுப் பட்டத்தை மனமுவந்து ஏற்றுக் கொள்." என்றார் நெடிய பெருமூச்சொன்றை விட்டபடி.


அன்று குலசேகர பாண்டியரது கோரிக்கையை தான் ஏற்றது ஒருவேளை அண்ணனுக்கு பிடித்தமில்லாமல் போய் விட்டதா..அவ்வாறெனில் இந்த பதவியை அவனுக்கே வழங்கி விடலாமே..நாம் வழக்கம் போல காயலின் நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டு அங்கேயே தங்கி விடலாமே..மன்னராகும் முழுத் தகுதி மூத்தவன் அவனுக்குத் தானே உள்ளது.." என மனதிற்குள் எண்ணிக் கொண்டான் வீரபாண்டியன்.


ஆனால் சுந்தரபாண்டியனது மனதில் வீரபாண்டியன் தகுதியற்றவன் என்பதோடு,  தந்தையின்  ஆசைநாயகியின் மகன் எனும் மன வேற்றுமை அவனது உள்ளத்தில் கறையாக படிந்து விட்டதை வீரபாண்டியன் முழுதும் உணர்ந்திருக்கவில்லை. எனவே தான் எவரேனும் வீரபாண்டியனை உனது சகோதரன் தானே என்றோ, தம்பி தானே என்றோ தொடங்கினாலே எரிச்சலுக்கும், ஆவேசத்திற்கும் உள்ளானவனாய் மாறி விடுகிறான் சுந்தரபாண்டியன். அத்தோடு மாறவர்ம குலசேகர பாண்டியர் வீரபாண்டியனை அரியணைக்கு உரியவனாக தேர்வு செய்ததும் சுந்தரபாண்டியனது உள்ளத்தில் பெரும் தீயை மூட்டி விட்டிருந்தது. அந்த கொடுந்தணல் வீரபாண்டியனை எரிக்காமல் நிற்காது என்பதையும் வீரபாண்டியன் உணர்ந்திருக்கவில்லை.


பல்வேறு சிந்தனைகளின் விளைவாக தூக்கமின்றி மஞ்சத்தில் புரண்டு கொண்டிருந்த வீரபாண்டியன்,  இரவின் மூன்றாம் ஜாமம் நெருங்குகையில் இமைகளை நித்திரை தழுவ தூக்கத்தில் ஆழ்ந்தான்.


அப்போது, அவனது மாளிகையின் மேல் தளத்தினை நோக்கி வளர்ந்திருந்த மரங்களைப் பற்றி மடமடவென ஏறிய மூவர், மாளிகையின் முதல் தளத்தில் குதித்ததோடு, கைகளில் தங்களது இடைக்கச்சையில் இருந்த வாளினை உருவி வைத்துக் கொண்டவர்களாய், நிதானமாக வீரபாண்டியன் இருந்த அறைக்குள் நுழைந்ததோடு, அவனை வாளின் முனையால் மெல்லத் தட்டி எழுப்பினார்கள்.


திடுக்கிட்டு விழித்த வீரபாண்டியன் தன் எதிரே வாளுடன் நின்றிருந்தவர்களை கண்டதும், சற்றும் நிதானத்தைக் கைவிடாதவனாய், " யார் நீங்கள்..? உங்களுக்கு என்ன தேவை..? " என்றான் கோபமாக.


" இளவரசே..தாங்கள் எங்களுடன் அமைதியாக வந்து விட்டால், உங்களுக்கு எந்தவொரு ஆபத்துமில்லை.."


" வராவிட்டால்.."


" எங்களது வாட்களுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.." என்றான் இகழ்ச்சியாக மூவரில் தலைமையேற்று வந்த குலபதி.


அப்போது..அந்த அறையின் வாசலில் இருந்து எழுந்தது ஒரு குரல்.


" உங்களது வாட்களுக்கு இளவரசர் பதிலளிப்பது இருக்கட்டும்..இதோ அந்த குறுவாள்களுக்கு உன்னுடன் வந்தவர்கள் பதிலளிக்கட்டும்." 


குரல் வந்த திசையை சட்டென அனைவரும் நோக்க, அங்கு கம்பீரமாக இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு நின்றிருந்தான் அப்துல்லா வாஸப்.


அந்தக் காட்சியைக் கண்டதும் விலாநோக சிரித்த குலபதி,    "முட்டாள்..நீயே நிராயுதபாணியாக நிற்கிறாய், நீ எங்களை குறுவாள் எறிந்து கொல்லப் போகிறாயா..! " என்றான் பலமாய் நகைத்தபடி.


" தம்பீ..சற்றே மஞ்சத்தின் பக்கமாய் உனது பார்வையை ஓட்டு..புரிந்து கொள்வாய்.." என்றான் அமைதியாக அப்துல்லா வாஸப்.


சட்டெனத் திரும்பியவர்கள் ஆச்சர்யத்தின் வசப்பட்டார்கள்..இரண்டு கைகளிலும் குறுவாளை ஏந்தியபடி ஒரு அழகிய  இளம்பெண் குலபதியோடு வந்தவர்களையே கண்ணிமைக்காமல்  கவனித்துக் கொண்டிருந்தாள்.


குலபதிக்கோ ஆச்சர்யமாய் இருந்தது. இவள் எப்போது உள் நுழைந்தாள்..! நாம் மஞ்சத்தை விட்டு வீரபாண்டியனை சற்று அப்புறப் படுத்தி அழைத்து வருவதற்குள் நம் பின்னால் வந்து நுழைந்து விட்டாளா..!  அழகாய் இருக்கிறாள் , இவளுக்கு ஏனிந்த விபரீத விளையாட்டு..! குலபதியின் மனம் பல்வேறாக சிந்தித்துக் கொண்டிருந்த அதே வேளையில் ..வீரபாண்டியனும் அவளைப் பற்றி அதே கருத்தையே தன் மனதிலும் நினைத்துக் கொண்டிருந்தான்.


வீரபாண்டியனுக்கோ அவளைக் கண்டதும், ஏன் ஆபத்தை விலைக்கு வாங்க முற்படுகிறாள் இவள்..இந்த வீரர்களை சமாளிக்க இவளால் முடியுமா..! என்ற  யோசனையில் ஆழ்ந்ததோடு, அவளை எடைபோடவும் தொடங்கினான்.


சுருண்ட கேசங்களை அழகாய் பின்னி தூக்கிக் கட்டியிருந்தாள், கூரான நாசியும், பிறை நெற்றியும், துறுதுறுவென அலைபாயும் கண்களும், செம்பவளங்களை தோற்கடிக்கும் இதழ்களும், மெலிந்த இடையும், குறுவாளை அவள் இலாவகமாக ஏந்தி நின்ற அழகும், அந்தக் கோலத்தில் அவள் இடை இலேசாய் வளைந்து முன் வைத்த கடைந்தெடுத்த கால்களும், அவளது காதுகளில் தொங்கிக் கொண்டிருந்த காதணிகளும், அவளது மார்பில் தவழ்ந்த ஆரமும், இளமையின் பூரிப்பை முழுதும் தாங்கி நிற்கும் அவளது எடுப்பான மார்பழகும் வீரபாண்டியனது கவனத்தை முழுதும் ஈர்த்ததோடு, அவனைக் கவலை கொள்ளவும் செய்தது. இவளுக்கு ஏன் இந்த வேலை..வீணாக ஆபத்தில் சிக்கிக் கொண்டாளே..இந்த முட்டாள்கள் பெண் என்றும் பாராமல் தாக்க முற்பட்டால் என்ன செய்வது..! 


வீரபாண்டியனது மனதிலோடிய எண்ணத்தை சற்று நேரத்திலேயே தவிடுபொடியாக்கி விட்டாள் அவள்.


வாசலில் நின்றவன் விளையாடவில்லை என்பதையும், அறைக்குள்  உள்ளே நுழைந்த பெண் தங்களை குறிவைத்து குறுவாளை எறியக் காத்திருப்பதைக் கண்டாலும், ஒரு பெண்ணால் ஒரே சமயத்தில் இருவரை எதிர்கொள்வதென்பது சாத்தியமில்லை என உணர்ந்தவனாய், வீரபாண்டியனை தனது வாளால் தேக்கி நிறுத்திக் கொண்டு, இரு வீரர்களையும், " அவளை பிடியுங்கள் " எனக் கத்தினான் குலபதி.


தனது வார்த்தை எத்தகையதொரு தவறை செய்து விட்டது என்பதை பிறகு தான் உணர்ந்தான். அவன் அதை முழுதும் உணர்வதற்குள் அனைத்தும் எல்லைமீறி போய்விட்டது. 


இருவரும் அவளை நெருங்குவதற்குள் மின்னலென அவளிடமிருந்து பாய்ந்த குறுவாள்கள் இருவரது வலது தோள்களையும் பதம் பார்த்துவிட்டதனால்,  இருவரும் அலறியபடியே தங்களது வாட்களை கீழே நழுவ விட்டனர். குறுவாளினை அவள் பயன்படுத்திய வேகமும், விவேகமும் குலபதியை மட்டுமின்றி, வீரபாண்டியனையும் மெய்மறக்கச் செய்து விட்டது.


அவளது நோக்கம் இருவரையும் கொல்லாமல், அவர்கள் ஆயுதங்களை உபயோகப் படுத்தவியலாமல் செய்வதே என்பதை உணர்ந்த போது வீரபாண்டியனது பிரமிப்பு மேலும் அதிகரிக்கவே செய்தது..! அத்தோடு அவளால் இருவரது உயிரையும் நொடியில் மாய்த்திருக்க முடியும் என்பதையும், ஆனால் அவள் அவ்வாறு செய்யாமல் எச்சரிக்கும் விதமாக நடந்து கொண்டதை எண்ணி பெரு மதிப்பும் அவளிடத்தில் உருவானது.


அப்போது எதிர்பாராது அப்துல்லா வாசப் குலபதியை நெருங்கி வந்து, அவனது தாடையில்  விட்ட ஒரு குத்தில் நிலைகுலைந்த குலபதி மயங்கி விழுந்தான்.


நடப்பவை அனைத்தும் கனவு போல் இருக்க..திக்பிரமையில் செய்வதறியாது திகைத்துப் போய் நின்றிருந்த வீரபாண்டியனை, நெருங்கிய அப்துல்லா வாஸப்,


" இளவரசே..இங்கு தாமதிப்பது மேலும் ஆபத்தை விளைவிக்கும்..வாருங்கள் வெளியேறி விடுவோம்.." என்றவனாய் அவனை இழுத்துக் கொண்டு முன்னே நடக்க..அவர்கள் இருவரைத் தொடர்ந்தாள் அவ்விளம்பெண்.


_ தொடரும்..


#அனுராஜ்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages