07.01.21
#மலை_நாட்டு_மங்கை_7
#தேவப்பெருமாள்
காயலின் கடலில் அசைந்தாடிக் கொண்டிருந்த பெரிய மரக்கலத்தின் மேல் தளத்தில் நின்றபடி காயலின் கரையைக் கவனித்த அந்த இளம் வாலிபனின் கண்கள் பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. அதிகாலை வேளை, கீழ்வானில் மெல்ல உதயமாகிக் கொண்டிருந்த கதிரவன் கடலில் இருந்து தீப்பிழம்பாய் மேலேறிக் கொண்டிருக்க, கடற்கரைப் பறவைகள் கரையெங்கும் பறந்தபடி இருக்க, கடற்கரையில் காணப்பட்ட பரபரப்பும், பாண்டிய நாட்டு பரதவர்களின் மரக்கலங்கள் கடலில் ஆங்காங்கே அணிவகுத்து நின்றபடி அசைந்தாடிக் கொண்டிருந்த அழகும், அவனது உள்ளத்திலும் பிரதிபலிக்க அதீத உற்சாகத்தில் திளைத்தான். கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக தமிழகத்தினை விட்டுப் பிரிந்து வணிகத்திற்காக கீழ்திசை நாடுகளுக்குச் சென்றுவிட்டு இப்போது தான் சொந்த நாட்டிற்குத் திரும்பியிருந்தான். எங்கெங்கு சுற்றினாலும் தாய்நாட்டின் காற்று மேனியைத் தீண்டும் போது ஏற்படும் சுகமே அலாதியானது என அவனது மனம் எண்ணத் துவங்கிய அதே வேளையில் , மேல் தளத்தில் அவனைத் தேடியபடி வந்த முதியவன் ஒருவன்,
" தேவப் பெருமாள்..தாய் நாடு வந்து விட்டது, இன்னும் சில நாழிகைப் பொழுதில் பாண்டிய மண்ணில் இறங்கி விடலாம்.." என்றான் மகிழ்ச்சி ததும்பிய குரலில் முதியவன்.
" ஆம்..ஐயா.. நமது தேசத்தில் கால் பதிக்கும் வேளையைத் தான் ஆவலுடன் எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறேன். " என்றான் மகிழ்ச்சியை தன் குரலில் வெளிப்படுத்தியவனாய்.
தமிழகத்தின் வளம் வியாபாரத்தைச் சார்ந்தே அந்நாளில் காணப்பட்டது. பாண்டிய நாட்டின் முத்தும், சேர நாட்டின் மிளகும் வணிகத்தில் பெரும் பங்கு வகித்தன. மிளகு ரோம் நகரில் ஒரு ராத்தல் விலை பதினைந்து தெனாரி மதிப்பு எனில் , அவ்விலையில் அரைபங்கு கூட தமிழகத்தில் இல்லை என வரலாற்று ஆசிரியர் பிளெனி குறிப்பிடுகிறார். ஏனெனில் தமிழகத்தில் வாங்கப் படும் பொருள்கள் கீழ்திசை நாடுகளில் பயங்கர விலை போயின. கிரேக்க, பாரசீக பெண்மணிகள் தங்களது அணிகலன்களில் தமிழகத்தின் முத்தினையே பிரதானமாக பதித்து அணிந்து கொண்டனர். எனவே தான் , அந்நாளில் யவனர் பொன்னோடு வந்து மிளகோடு பெயர்ந்தனர் என்றும், யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னோடு வந்து கறியொடு பெயரும் என அகநானூற்று பாடல் ஒன்றும் தெரிவிக்கிறது.
இதையே மதுரைக் காஞ்சியும்..
பொன் மலிந்த விழுப்பண்டம்
நாடார நன்கிழிதரும் ஆடியற் பெருநாவாய்..என்கிறது
தமிழகத்தில் இருந்து வணிகர்கள் பலரும், பல பிரிவுகளாக பிரிந்து வணிகம் செய்து பொருளீட்டி வந்தனர்.
அனைத்து நாடுகளுக்கும் செல்லும் நானாதேசிகரும், எல்லா திசைகளிலும் சென்று வணிகம் செய்யும் குழுவாக திசையாயிரத்து ஐநூற்றுவர் என்பாரும், நவதானியங்களை விற்பனை செய்யும் கூலவாணிகரும், நகரத்தார் பிரிவான பன்னிரண்டார், இருபத்தி நான்கு மனையார் என்பாரும், வளஞ்சியர் எனப்படும் சோழ நாட்டின் வணிக குழுவினரும், மணிகிராமத்தார் என்பாரும், சித்திரமேழி பெரிய நாட்டார் என்பாரும் வணிகர்களில் முக்கியமானவர்கள். அத்தோடு பல்வேறு உள் தேசத்து வணிக அமைப்புகளுடன், அஞ்சு வண்ணத்தார் என்ற அரேபிய இஸ்லாமிய வணிக குழுவினரும் இருந்தனர். வணிகத்தில் கைமாறும் பண்டங்களின் மதிப்பு பல ஆயிரம் பொன்களைக் கொண்டதென்பதால் அத்திகோசத்தார் எனும் வணிகர் பெருவழி பாதுகாப்புப் படையும் இருந்தது. இது சிறிய யானைப்படையை தன்வசம் வைத்திருந்தது. வணிக குழுக்கள் ஒன்றிணைந்து தங்களது சரக்குகளை வாணிக சாத்து எனும் பெரும் பொதி வண்டிகளில் சரக்குகளை அனுப்புவதோடு, அதனை பாதுகாத்து செல்ல அத்திகோசத்தாரையும் நியமிப்பது உண்டு.
அவ்வாறான அத்திகோசத்தாராகவும்,
திசையாயிரத்து ஐநூற்றுவர் என்ற குழுவை சேர்ந்தவனுமான தேவப்பெருமாள் வணிகத்திற்காக கீழ்திசை நாடுகளுக்குச் சென்று விட்டு தமிழகம் திரும்பியவனாய், காயல் துறைமுகத்தில் வந்திறங்கினான்.
தேவப்பெருமாள் வந்திறங்கிய மரக்கலத்தில் இருந்து படகுகள் கீழிறக்கப் பட்டன. கீழ்திசை நாடுகளில் இருந்து கொணர்ந்த சரக்குகள் முதலில் இறக்கப்பட்டன. தொடர்ந்து வணிகர்களும், பிரயாணிகளும், அரசியல் பிரதானிகளும் நூலேணி வாயிலாக இறங்கிப் படகிற்குச் சென்றனர். படகுகள் கரையை நோக்கி நகரத் துவங்கியது. கரையை நெருங்கியதும் பொருட்களை சுங்கச் சாவடியில் காண்பித்து அதற்கான முத்திரைகளைப் பதித்தும், உல்கு எனப்படும் சுங்கத் தீர்வையை செலுத்தி விட்டு வெளியேறிய தேவப்பெருமாள் , அவனோடு வந்த ஏனைய வணிகர்களிடம் சரக்குகளை ஒப்புவித்து விட்டு, தான் இங்கு ஒருவரை சந்திக்க வேண்டியுள்ளது, சந்தித்த பின் மதுரை வந்து விடுகிறேன் என்றவனாய் அந்த ஜனத்திரளில் கலந்தான்.
தேவப்பெருமாள் காயலின் பல வீதிகளைக் கடந்தவனாய், அல்லங்காடிகளையும், நாளாங்காடிகளையும் கவனித்தவாறே சென்றான். வணிகர்கள் பலர் நாளங்காடிகளை அப்போது தான் வந்து திறந்த வண்ணமிருந்தனர். அல்லங்காடி வணிகர்களோ இரவு முழுதும் விழித்திருந்து வணிகம் செய்தும், சற்றும் அயர்ச்சியின்றி புதிய வாடிக்கையாளர்களுக்கு,
விதவிதமான மணிகள், அணிகலன்கள் என விற்பனை செய்து கொண்டிருந்த காட்சிகளையும் கண்டவனாய், புன்சிரிப்புடன் கடந்து சென்றவன் பல வீதிகளைக் கடந்து அரண்மனையின் பக்கவாட்டுப் பகுதியை சென்று அடைந்திருந்தான்.
அங்கு கடை வைத்திருந்த ஒருவனிடம், "ஜமாலுதீன் எனும் அரேபிய தேசத்து குதிரை வணிகரை எங்கு சந்திக்கலாம் .."என வினவினான்.
" இதே வீதியில் சென்று திரும்புங்கள் ..அரண்மனையின் குதிரை கொட்டடி வந்துவிடும். அங்கு தான் நீங்கள் தேடி வந்தவர் இருப்பார்.."
"நன்றி ஐயா..வருகிறேன்.."
தேவப் பெருமாளுக்கு அவசரமாய் ஒரு குதிரை வேண்டியிருந்தது. தனது ஊரான **தேவேந்திர வல்லபுரம் செல்ல ஒரு குதிரை இருந்தால் நல்லது என எண்ணியவனாய், அரேபிய வணிகனை விசாரித்தறிந்து அவனிடம் பெற்றுச் செல்ல எண்ணினான்.
ஒருவழியாக குதிரை கொட்டடியை அடைந்தவனாய், " ஐயா..ஐயா.." என பலமாய் இரைந்தான்.
இவனது அழைப்பைக் கேட்டு உள்ளிருந்து வந்தவன் நிச்சயமாய் ஜமாலுதீன் தான் என்பதை உணர்ந்த தேவப்பெருமாள் சற்றே தயங்கியபடி.." ஐயா..ஜமாலுதீன் என்பது..."
" நான் தான்..தங்களுக்கு என்ன வேண்டும்..? "
"நான் அவசரமாக மதுரை செல்ல ஒரு குதிரை வேண்டும்.."
" மன்னிக்க வேண்டும்..இங்குள்ள குதிரைகள் பாண்டிய மன்னருக்கானவை, தங்களுக்கு குதிரை வேண்டுமெனில் குதிரைச் சாலை அங்காடி சென்று வாங்கலாம்."
" ஐயா..குதிரைச்சாலை அங்காடி சென்று வாங்கலாம் என்பது எனக்கும் தெரியும்..ஆனால்
நான் குதிரைச்சாலை அங்காடிக்குச் சென்று குதிரை வாங்கினேன் என்றால் இளவரசர் வீரபாண்டியர் கோபித்துக் கொள்ளக் கூடும். ஏனெனில் நான் இளவரசனின் நண்பன்.
" என்ன..உண்மையாகவா..? "
" ஆம்..இதோ..அவர் எனக்கு வழங்கியிருக்கும் பாண்டிய நாட்டு முத்திரை மோதிரம். அத்திகோசத்தார் படைப் பிரிவினை சேர்ந்த எனக்கு இளவரசர் வழங்கியது." என்றவனாய் தனது முத்திரை மோதிரத்தை எடுத்து காண்பித்தான்.
பாண்டியநாட்டின் மீன் இலச்சினையோடு திகழ்ந்த அம்மாதிரியான மோதிரங்களை பல இடங்களில், பலரிடம் கண்டிருக்கும் ஜமாலுதீன் மறுப்பேதும் சொல்லாமல் , அவனை குதிரை கொட்டடிக்குள் அழைத்துச் சென்றவனாய், அவனுக்கு நன்கு பழக்கப்பட்ட ஒரு குதிரையை அவிழ்த்து ஒப்படைத்தான்.
" நன்றி ஐயா..நான் வருகிறேன். "
" ம்..நல்லது..இளவரசரும் மதுரையில் தான் இருக்கிறார். நீங்கள் சென்றால் அவரை அங்கு சந்திக்கலாம்."
" மிக்க நல்லதாய் போயிற்று..நான் வருகிறேன்." என்ற தேவப்பெருமாள் அந்தப் புரவியில் ஏறியவனாய் அதனை மதுரை செல்லும் மார்க்கம் நோக்கி விரட்டினான்.
_ தொடரும்..
**தேவேந்திர வல்லபுரம் என்பது இந்நாளில் சித்தர்கள் நத்தம் என வழங்கப் படுகிறது.
#அனுராஜ்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக