06.01.21 பொருத்தம் - தென்குமரிக் கவிதைக்களம்

புதன், 6 ஜனவரி, 2021

06.01.21 பொருத்தம்


சுந்தரம்


06.01.21


பொருத்தம்


ஆட்டோவிலிருந்து வேக வேகமாக இறங்கி வீட்டின் கதவை திறந்தாள் ஜானகி 


 ஹாஸ்பிடலில் இருந்து கொண்டு வந்திருந்த பிளாஸ்க், டம்ளர், டிபன் கேரியர் சிங்கில் போட்டாள்.  கெய்சர் ஆன் பண்ணின கையோடு காஸ் அடுப்பில் வெண்ணீர் வைத்து பிளாஸ்க் அலம்பி வைத்தாள்.


 துணிகளை வாஷிங் மெஷினில் போட்டு கைகளை கழுவிக்கொண்டு அவசர அவசரமாக காய் நறுக்கி, பருப்பும் சாதமும் குக்கரில் வைத்து பாத்திரங்களை கழுவி தண்ணீர் பெட் பாட்டலில் நிரப்பி கொண்டாள்.


 விஸ்வத்திற்கு மாற்று உடைகள் எடுத்து வைத்து விட்டு, வீட்டை பெருக்க மட்டும் செய்தாள்.


சமையல் முடித்து, துணிகளை உலர்த்த கொடியில் போட்டு குளித்து வந்து, பால் காய்ச்சி காபி போட்டு பிளாஸ்கில் விட்டுவிட்டு, அவசர அவசரமாக குளித்து வந்தாள். 


 தட்டில் குழம்பு கறி போட்டு சாப்பிட உட்கார்ந்தாள்.  தலை வலிப்பது போல இருந்தது.  வேர்த்து கொட்டியது . பேன் வேகமாக வைத்து வாயில்  அள்ளிப் போட்டு கொண்டாள் .


விஸ்வத்திற்கு சாப்பிட வேறு ஒரு தட்டு எடுத்து வைத்துக் கொண்டு அவசரமாக கிளம்பி கதவை தாழ் போடும்போது, பக்கத்துக்கு பிளாட் லக்ஷ்மி


“ என்ன மாமி நீங்க போட்டு இருக்கற ஜாக்கெட் புடவைக்கு மேட்ச் ஆகலை “

என்று கேட்டாள் .


ஒரு சிரிப்பை அவளுக்கு கொடுத்து விட்டு ஆட்டோ பிடித்து ஹாஸ்பிடல் வந்தாள்.


 வேக வேகமாக வந்ததால் செருப்பு அறுந்து விட,  இழுத்துக் கொண்டு நடந்து கதவை திறந்தாள்.


“பசில  உயிர் போய்விடும் போல இருக்கு எத்தனை நேரம் “


அவருக்கு சாப்பாடு எடுத்து கொடுத்து டிபன் அலம்பி எடுத்து வைத்தாள்.


 நர்ஸ் வந்து பணம் கட்ட சீட்டு கொடுக்க மறுபடியும் கௌண்டருக்கு சென்று  பணம் கட்டி வந்தாள். ஒரு வாரம் ஹாஸ்பிடல் வீடு என்று அலைந்து விஸ்வம் வீடு வந்து சேர்ந்து ரெண்டு நாள் இருக்கும்.

காபி  கேட்டார் என்று அடுப்படி போனவள் அங்கேயே மயங்கி விழ,


“ காபி கொண்டு வர இத்தனை நேரமா?  என்று சமையலறை வந்தவர், பதறி போய் ஹாஸ்பிடலில் சேர்த்தார். 


 மூன்று நாள் ஹாஸ்பிடலில் இருப்பதற்குள் ரொம்பவே மூணுமுணுத்தார்.


 பார்க்க வந்தவர்களிடம் நான் ஒரு வாரம் இருந்ததற்கு இப்ப இவள் பழி வாங்கறா போல என்று ஜோக் அடித்துக் கொண்டிருந்தார். 


மாமி நீங்க போட்டு இருக்கற ஜாக்கெட்  புடவைக்கு மேட்ச் ஆகலைனு லக்ஷ்மி சொன்னது நினைவுக்கு வந்தது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages