18.01.21 எங்க ஊரு டாக்டரு.....(சிறுகதை) - தென்குமரிக் கவிதைக்களம்

செவ்வாய், 19 ஜனவரி, 2021

18.01.21 எங்க ஊரு டாக்டரு.....(சிறுகதை)




18.01.21



எங்க ஊரு டாக்டரு.....(சிறுகதை)


எல்லா ஊரைப்போலவே எங்கௌஉருல ஒரு டாக்டரு இருந்தாரு. தங்கய்யா அரசு மருத்துவமனை ந்னு வீட்டு வாசல்ல போடு மாட்டீருப்பாரு. காலையில ஆஸ்பத்திரிக்கி வேலைக்கிப்போய்டுவாரு. சாயங்காலம்தான் உள்ளூரு வைத்தியமெல்லாம்.


அவர் வேலைசெய்யிற ஆஸ்பத்திரி 48 கி.மீ எங்கௌஉருல இருந்து. அதுனால வெள்ளனாவே கெளம்பிடுவாரு சாயங்காலம் 4 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துட்டு கிளினிக் தொறந்துருவாரு வீட்டு வாசல்ல தாவாரத்தப்போட்டு ஒரு பெஞ்ச் போட்டுருப்பாரு. உள்ளாற திண்ணைய மடக்கி ரூம் மாதிரி ஆக்கிதெரை போட்டுருப்பாரு பச்சக்கலர்ல. அதுல அ.ம ந்னு எழுதிருக்கும்...


உள்ளாற வெள்ள கலர்ல டாக்டர் கோட்டு பேண்ட் சட்டை போட்டுருப்பாரு. டேபிள் போட்டு அதுல பிரசர் பாக்க ஒடம்பு பெம்பரேச்சர் பாக்க வைச்சிருப்பாரு. அங்க ஒரு சேரும் பெஞ்சும் போட்டுருப்பாரு. பெஞ்சில பச்சைகலர் துணி விரிச்சிருக்கும். உள்ளாற போனாலே மருந்து வாசம் அடிக்கும்....


எங்க ஊருல இருக்குற சின்னப்பிள்ளகல்ல இருந்து வயசாளிக வர அவர்கிட்டதான் வைத்தியம் பாக்கனும். ஊசியோட சேத்து 10 ரூவாதான் சார்ஜ். வெறும் மாத்திர மருந்துன்னா 5 ரூதான் வாங்குவாரு...


குளுக்கோஸ் ஏத்துனா 50 ரூ அதுக்குமேல அரசாங்க ஆஸ்பத்திரிக்கி வரச்சொல்லிருவாரு


காய்ச்சல் சளி வாந்திபேதி வயத்த வலி இதுகளுக்கு அவர் குடுக்குறமருந்து மாதிரி மத்த மருந்துக கேக்காதுன்னு ஊருக்குள்ள பேச்சு...


அவர் இல்லாத நேரங்கல்ல அவரோட சம்சாரம் பொன்னம்மா மருந்து குடுக்கும்...அதுவும் ஆஸ்பத்திரிலதான் வேலை செய்யிது....


சின்ன பிள்ளைகளுக்கு காய்ச்சல் சளின்னு போனா தெர்மா மீட்டர் அக்குள்ள வைச்சி பாப்பாரு நாக்க நீட்டசொல்லி டார்ச் அடிச்சிப்பாப்பாரு. அப்புறம் ஸ்ட்தெஸ்கோப் வைச்சி நெஞ்சில முதுகுல செக்பண்ணுவாரு..


அப்புறமா ஊசி ஒன்னு போட்டுட்டு பவுடர் மாதிரி மடிச்சி வைச்சிருப்பாரு மருந்த. அந்த மடிப்பே அழகா இருக்கும் அதுல மூண க்குடுத்து மூணுவேளைக்கி தேனில கொழைச்சி குடுக்கச்சொல்லுவாரு. அப்புறம் பாட்டில் கொண்டாத்துருக்கயான்னு கேட்டு வாங்கி சிவப்புகலருல மருந்து ஊத்திக்குடுப்பாரு....அது புள்லைக விரும்பிக்குடிக்கும் குடிச்சா நல்லாத்தூக்கம் வரும் இனிப்பா இருக்கும்.....


அம்புட்டுதான் வைத்தியம் இதுக்கு 10 ரூ வாங்குவாரு...நம்ம ஆளுக அதுக்கும் கடன் சொல்லிட்டு வருவாக......


வயித்தால போச்சுன்னா இதேமாதிரி செக்பண்னிட்டு மருந்து மட்டும் மடிச்சிக்குடுப்பாரு... தயிர்சோறு சாப்புடச்சொல்லுவாரு.... எப்புடி தண்ணியா போச்சா இல்ல முருக்குப்புளியிற மாதிரியா இல்ல கட்டாணி முட்டாணியா போச்சான்னு கேப்பாரு.... ஆனா எல்லா மருந்தும் ஒரே மாதிரிதான் இருக்கும்.... ஆனா சரியாகிடும்...


இதுக்கு தெனம் அம்பது அறுவது கேஸ் பாப்பாரு. மழைசீசன்ல அதிகமா கூட்டம் இருக்கும்.


இது போக இன்னோன்னுக்கும் அவரைத்தேடுவாக. வயசாளிக ஆருக்காவது ரொம்ப முடியாமப்போச்சுன்னுன்னா எப்ப போகும்ன்னு பாக்க அவரைக்கூப்புடுவாக.... அவரு வந்து பாத்துட்டு நாள் குறிப்பாரு... தப்பாது தப்புனா வந்து சொன்னா முடிச்சி விட்டுருவாரு... அதுக்கு 50 ரூ வாங்குவாரு ஆளப்பொறுத்து 100 வாங்குவாரு சும்மாவும் பண்ணு வாரு...


அதுமாதிரிதான் தனிக்கோடிக்கெழவி படுத்த படுக்கயாயிருச்சு. ஒடம்பு பூராம் புண்ணு பொத்து ஊத்துது.... பாயில படுக்கப்போட்டு சுத்தி எறும்புப்பொடி போட்டு இப்பவோ அப்ப வோன்னு பாத்துக்கிட்டு இருந்தாக....


அவளோட பேரம் பேத்திக எல்லாம் வந்து காத்துக்கெடந்தாக. முடிச்சிட்டுப்போகலாமுன்னு... அது தொணடைக்கும் நெஞ்சுக்குமா இழுத்துக்கிட்டு இருந்துச்சு....


பேரம் பேத்திக எல்லாம் வாயில பால் ஊத்திப்பாத்தாச்சு.... மண்ணாசை இருக்குமுன்னு மண்ணை கரைச்சி ஊத்திப்பாத்தாச்சு. பொண்ணாசை இருக்குமுன்னு பொன்ன ஒரசி தண்ணி ஊத்தியாச்சு.....கெழவி அசரல.....


வந்தவுக எல்லாம் சொல்லவும் மெல்லவுமில்லாம குசு குசுன்னு பேசிக்கிட்டு இருந்தாக.. ரெண்டு நாள்ல பள்ளிக்கொடம் தொறக்குது அப்புறம் லீவு போடமுடியாது பஸ் டிக்கெட் கெடைக்காது கெழவி....ய ஒண்ணும் சொல்ல முடியாம முளி பிதுங்கிட்டு இருந்தாக.....


அப்ப அவளோட புருசன் வந்து பாத்தாரு நெலவரத்தை பாத்துட்டு நம்ம தங்கையாவ கூப்புட்டு வாங்கய்யா என்னான்னு பாக்கட்டுமுன்னு சொன்னாரு. அன்னைக்கி சனிக்கெழம... வீட்டுல தான் இருந்தாரு அவரு


வழக்கம்போல பையத்தூக்கிட்டு வந்து பாத்தாரு. பாத்துட்டுச்சொன்னாரு அவளோட வீட்டுக்காரர் கிட்ட... இன்னும் நேரம் வரலயேன்னு...


அவளோட வீட்டுக்காரருக்கு ரொம்ப சங்கடமாப்போச்சு... வந்தவுகள சமாளிக்க முடியல... இவங்க எல்லாம் போய் திரும்பி வரவைக்கிறதான்னு ரோசனை பண்ணுனாரு


தங்கையாக்கிட்ட சொன்னாரு. கெளவி ஆண்டு அனுபவிச்சிருச்சு... இனிமே பாக்க ஒன்னுமில்ல. ஆளுகளும் செரமப்படுவாக. ஆளுக என் சம்சாரத்த பேசுறது தாங்க முடியல. முடிச்சி விட்டுருங்க டாக்டருன்னு சொன்னாரு கண்ணத் தொடச்சிக்கிட்டு...


தங்கையாவும் சொன்னாரு .சரி இதுநமக்குள்ள இருக்கட்டும் விளம்பரப்படுத்தாதீகன்னு சொல்லி ஒரு ஊசியப்போட்டுட்டு முடிஞ்சிரும் ந்னு சொல்லிட்டு காச வாங்கிட்டுக்கெளம்பிட்டாரு அவரு போன கொஞ்சநேரத்துல முடிஞ்சிருச்சு...


எல்லாருக்கும் மனசுக்குள்ள அப்பாடா முடிஞ்சிருச்சு சந்தோசப்பட்டுகிட்டே ஓன்னு ஒப்பாறிவைக்கத்தொடங்குனாக.... அவளோட புருசன் மாத்திரம் கண்ணீரோட தனியா அழுதுட்டு இருந்தாரு....அப்புறம் வேலைக மள மளன்னு நடக்க ஆரம்பிச்சது.....


இதுமாதிரி சேவைகளும் அவர் பண்ணுவாரு. எனக்கு வேலை கெடச்சப்ப மெடிக்கல் சர்ட்டிபிகேட் தேவப்பட்டுச்சு நான் அதான் இருக்கவே இருக்குறாரே நம்ம டாக்ட்டர் ந்னு அவர் கிட்ட கேட்டேன் அப்ப அவர் சொன்னாரு இங்க சீல் எல்லாம் இல்ல நீ நாளைக்கி ஆஸ்பத்திரிக்கி வா தாறேன்னு சொன்னாரு


மறுநா அங்கபோய் விசாரிச்சேன். மருந்து குடுக்குற எடத்துல இருப்பாரு போய் பாருன்னு சொன்னாக


நான் அங்கபோய் பாத்தப்ப மருந்து கவுண்டர்ல மருந்து குடுத்துட்டு இருந்தாரு.... நான் சும்மா இருக்காம ஏன் டாக்டர் அதை கம்பவுண்டர் குடுக்க மாட்டாரா நீங்க ஏன் குடுக்கனும்ன்னு கேட்டேன்.... அவன் இன்னிக்கி லீவுன்னாரு..


அப்புறமா காப்பியெல்லாம் வாங்கிக்குடுத்து ஒரு டாக்டர்கிட்டப்போய் சர்டிபிகேட் வாங்கிக்குடுத்தாரு...நான் கேட்டேன் நீங்களே குடுக்கலாமேன்னு


அதுக்கு அவர் சொன்னாரு.... சொந்தக்காரவுககிட்ட சர்டிபிகேட் வாங்குனா செல்லாது அதான்.... அவர்கிட்ட வாங்கிக்குடுத்தேன் அவர் நம்ம பிரண்டுதான்ன்னு......எப்புடியோ வேலை முடிஞ்சசந்தோசத்துல 10 ரூ குடுத்தேன் வாங்கி என் பையில வச்சிட்டு சொன்னாரு தம்பி ஒரு வேண்டுகோள் நான் இங்க கம்பவுண்டர் தான் இதை ஊருக்குள்ள போய் சொல்லிப்புடாத பொழப்பு கெட்டுறும்ன்னாரு...... சரின்னு ஊருக்கு வந்தேன்..... ஆனா ஊருக்குள்ள ஒரு பெரியவர் சொன்னாரு.... அவர் என்னவா வேன்னா இருக்கட்டும் அவர் மருந்துல நோவு சரியாகுதுல கோழி குருடான்றதா முக்கியம் கொழம்பு நல்லாருக்கா அது போதும்ன்னாரு


இன்னொருத்தர் விவாதமே பண்ணுனாரு.... ஏம்மா மெக்கானிக்க சேந்தவன் மொதலாளி ஆகுறான் வாத்தியாரா சேந்தவன் ஹெட்மாஸ்ட்டரா ஆகுறான் கிளர்க்கா சேந்தவன் சப் கலெக்ட்டரா ஆகுறான்... அப்புடி கம்பவுண்டரா சேந்தவன் நர்சாகி ஏன் டாக்ட்டராகக்கூடாதுன்னு அப்பாவித்தனமாகேட்டப்ப ஆமா அதுவும் சரிதானன்னு சிரிச்சாக.....எல்லாரும்


அ.முத்துவிஜயன்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages