19.01.21
#மலை_நாட்டு_மங்கை_19
#வைர_வேட்டை
பாண்டியரது அரண்மனையை விட்டு வெளியேறியவனாய், பலத்தச் சிந்தனைகளுடன் நடந்து வந்து கொண்டிருந்த ஜமாலுதீனை ஒரு கரம் சட்டென சிறிய சந்தொன்றில் தள்ளியதும், சற்றே நிலைகுலைந்ததோடு கோபத்திற்கும் ஆளானவனாய் தன்னை இழுத்துத் தள்ளியது யாரெனக் கவனித்தவன், சட்டென திகைப்புக்கும் மகிழ்ச்சிக்கும் மாறினான்.
எவரது அழைப்பின் பேரில் மதுரை வந்திருந்தானோ, யாரை தனது ஆருயிர் நண்பனாக எண்ணியிருந்தானோ அவனே எதிரில் நிற்கும் போது ஜமாலுதீன் சற்றுத் திகைப்படைந்ததில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை தான்.
தன் எதிரே இலேசான நகைப்புடன் நின்று கொண்டிருந்த வீரபாண்டியனைக் கண்டதும், " இளவரசே..தாங்களா..? " என்றான் குரலில் ஆச்சர்யத்தை தேக்கியவனாய் .
"ஜமாலுதீன், உன் மாளிகைக்கு முன் வாசல் வழியாக செல்லாமல் பின் வாசல் வழியாக செல்லலாம்..வா..என்றவனாய், ஜமாலுதீனை இழுத்துக் கொண்டு வேகமாய் அவனது மாளிகையின் பின் பகுதியை நோக்கி நடந்து செல்ல தலைப்பட்டான் வீரபாண்டியன்.
இருவரும், விரைவாக நடந்து ஜமாலுதீன் மாளிகைக்குள் பின்புற வாயில் வழியாக உள்ளே நுழைந்தனர்.
தனது பணியாளனை அழைத்து,
" எவரும் என்னை சந்திக்க வந்தால் நானிங்கு இல்லையென்று சொல்லி அனுப்பு..! என்றதோடு, என்னை சில நாழிகைப் பொழுது எவரும் தொந்தரவு செய்யக் கூடாது..! " எனக் கட்டளையையும் தனது பணியாளர்களுக்கு பிறப்பித்தவனாய், வீரபாண்டியனோடு தனது அறைக்குள் நுழைந்தான் ஜமாலுதீன்.
" ஜமாலுதீன், எனது கட்டளைகளை நிறைவேற்றினாயா..? நம்முடைய புரவிகளுக்கு யவன தேசத்தவர் போல இரும்பினால் வளையம் செய்து குளம்படிகளில் பதிக்க கூறியிருந்தேனே செய்தாயா..? "
" கட்டளைகளை பிறப்பித்து விட்டேன் இளவரசே..இங்கு புரவிகள் வந்து சேரும் போது லாடம் அடிக்கப் பட்டே வந்து சேரும்..! "
" நல்லது.."
" இளவரசே, சுந்தரபாண்டியர் தங்களையே தேடித் திரிகிறார்.. ! நான் தங்களைச் சந்தித்தேனா என அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். அவரது பேச்சிலும், நடத்தையிலும் ஏதோ வஞ்சகம் கலந்துள்ளது போல் புலப்படுகிறது..! " என்றான் ஜமாலுதீன்.
" ஜமாலுதீன் , அதை நான் அறிவேன். எனக்கு உனது ஒத்துழைப்பு அவசியமாகிறது. இன்றைய இரவின் மூன்றாம் ஜாமம் துவங்கியதும் , நீ வணிகக் கிட்டங்கிக்கு வந்து விடு..! உனக்காக நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம்."
" அவசியம் வருகிறேன் இளவரசே.."
" நான் வருகிறேன்..! நீயும் எச்சரிக்கையாக நடந்து கொள்..!சுந்தரபாண்டியன் ஐயம் கொள்ளும்படியான காரியம் எதிலும் ஈடுபடாதே..! " என்றவனாய், பின்பக்க வழியாகவே தனது நீண்ட அங்கியை நன்கு தன் மேல் இழுத்து விட்டுக் கொண்டவனாய் வெளியேறினான் வீரபாண்டியன்.
* * *
காகதீயப் பேரரசின் மன்னன் பிரதாப ருத்ரதேவன் தனது முதலமைச்சர் மற்றும் படைத்தலைவனோடு , வைரச் சுரங்கப் பகுதிகளில் வைரத் தேடலைத் தொடங்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டதோடு, அதற்காக மலையனிடம் விசயத்தைக் கூறி, அவனது ஒத்துழைப்பையும் கேட்டுப் பெற்றாகி விட்டதை உறுதி படுத்திக் கொண்டிருந்த வேளையில் , மலையனே அவர்களை நோக்கி வந்தான்.
" மலையா..வா..உன்னைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருந்தோம். கார்காலம் முடிந்து விட்டது..மலைப் பள்ளங்களில் வைரப் படிவங்கள் தென்படத் துவங்கி விட்டன. எனவே உனது ஆட்களின் ஒத்துழைப்போடு நாம் வைர வேட்டையைத் துவங்க வேண்டியது தான்." என்றார் மன்னர் பிரதாப ருத்ரதேவன்.
" அப்படியே ஆகட்டும் அரசே..! படைத் தலைவரிடமும் அது குறித்து தான் முடிவினைக் கூறி அனுப்பினேன். அமாவாசை திதி முடிந்தால், சுக்லபட்ச வளர்பிறைத் திதிகள் தான்..! நமது பணியைத் துவக்கி விடலாம்..! இம்முறை வைர வேட்டைக்கு முன் எருமை ஒன்றினை பலியிட்டு பணியைத் துவக்கி விடுவோம் அரசே..! "
" நல்லது..! பலி உயிரை தேர்வு செய்வது உன் விருப்பமே..! " என்ற பிரதாப ருத்ரதேவனின் முகத்தில் பூரண மகிழ்ச்சி தென்பட்டது.
**வாரங்கல்லின் ஓங்கி உயர்ந்த பெருமலைப் பிரதேசங்களும், மலைகளை ஒட்டியமைந்த கிடுகிடு பள்ளத்தாக்குகளும் படு பயங்கரமானவை. ஆனால் அந்த பயங்கர பூமியில் தான் வைரங்கள் மலைப் பாறைகளில் படிந்துப் போய் காலங்காலமாய் காணப்படுகிறது. மழைக் காலங்களில் விழும் பெரு மழையினால் மலைஅருவிகளில் பெருக்கெடுத்து ஓடி வரும் வெள்ளம், மண், பாறை இவைகளோடு, வைரப் படிவங்களையும் உருட்டிக் கொண்டு வந்து படு பாதாளத்தில் உள்ள பள்ளத் தாக்குகளில் சேர்ப்பித்து விடும். மனிதர்கள் எளிதில் இறங்கிச் செல்லவோ, மீண்டும் மேலேறி வரவோ இயலாத வகையில் காணப்படும் இத்தகைய மலைக்குன்று பள்ளத் தாக்குகளில், மலைக்குன்று களுக்கிடையில் பள்ளத்தாக்கினில் படிந்திருக்கும் , வைரங்கள் கதிரவனின் வெளிச்ச முகம் பட்டு இலேசாய் கண்சிமிட்டத் துவங்கும் முன்பனிக் காலங்களில், அரசின் உதவியோடு மலைவாசிகள் பலர் பெரிய பெரிய குருதி தோய்ந்த மாமிசத் துண்டுகளை மலை உச்சிகளில் இருந்து பள்ளத் தாக்கில் வீசி எறிவார்கள், வீசப்படும் துண்டுகளில் உள்ள பிசுபிசுப்புத் தன்மையால், பள்ளத்தாக்கில் மழைநீரால் அடித்துக் கொண்டு வரப்பட்டு மின்னிக் கொண்டிருக்கும் வைரங்கள் ஒட்டிக் கொள்ளும். அதனை வளர்ப்பு கழுகுகள் மூலம் பள்ளத்தாக்கில் கிடக்கும் மாமிசத் துண்டுகளை மேலே எடுத்துவரச் செய்வர். கழுகுகள் கொண்டு வரும் மாமிசத் துண்டில் ஒட்டிக் கொண்டிருக்கும் வைரமானது பின்னர் முறையாக சேகரிக்கப் படும். இதற்கெனவே மலைக் கழுகுகளுக்கு பயிற்சிகள் தரப்பட்டு வளர்க்கப் பட்டன. மலைவாசிகளின் தலைவனான மலையன் தனது கூட்டத்தினருடன் கழுகினை இதற்கெனப் பயிற்சி
கொடுத்து வளர்த்து வந்ததோடு, வைரவேட்டைக்கு உபயோகப் படுத்திக் கொள்ளவும் செய்தான். அவனுக்கும் அரசு சார்பில் பலச் சலுகைகளும், வருமானமும் இதனால் கிடைத்துக் கொண்டிருந்தது.
அவ்வாறான ஒரு வைர வேட்டைக்குத் தான் காகதீயப் பேரரசின் மன்னன் பிரதாப ருத்ரதேவன் ஏற்பாடு செய்திருந்தான்.
_ தொடரும்..
** மார்க்கோபோலாவின் பயணக் குறிப்புகள் இதை விவரிக்கின்றன.
# அனுராஜ்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக