"சக்திஅருளானந்தம்
07.02.21
பாலம்மா
**********
"பாம்,பாம்" சத்தம் கேட்டு விழித்துக் கொண்டேன்.இன்னும் நன்றாக விடியவில்லை.சட்டென்று விழித்ததில் எங்கிருக்கிறோம் என பிடிபடவில்லை.
"அக்கா,பால் வந்திருச்சி போலிருக்கு.வாங்கிவை" தங்கையின் குரல் குளியலறையிலிருந்து வந்தது.தங்கை வீட்டுக்கு விருந்தாளியாக வந்திருப்பது உரைத்தது.
பால் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்த எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நான் நினைத்தது போல பால்காரர் இல்லை.பால்காரம்மா! இதிலென்ன ஆச்சர்யம். பொம்பளைங்க பால் ஊத்தறது இல்லையா என்ன.பால் கணக்கை வீட்டுச் சுவரில் கோடுகள் கிழித்து கணக்கிடும் காலத்திலிருந்து பால் ஊற்றிக் கொண்டுதானே இருக்கிறார்கள்.நான் பார்த்த அவர்கள் எல்லாம் தலையில் சும்மாடு கோலி கூடையில் பால் பாத்திரம்,அளவு சொம்புடன் தலைச்சுமையாக வருவார்கள்.
இந்தப் பெண்..பெண் என்றுதான் சொல்ல வேண்டும்..முப்பது வயதிற்குள்தான் இருக்கும்.ஸ்கூட்டியில்..பால் கேனுடன் வந்திருக்கிறாள்.கூடையில் சுமந்து வருவதைப் பார்த்த எனக்கு ஸ்கூட்டியில் வருவது ஆச்சரியத்தை தருகிறதோ!
நான் கதவைத் திறந்து வரும் வரை வெறுமனே நின்றிருக்காமல் குளிர்பான பாட்டில்களில் பாலை நிரப்பிக் கொண்டிருந்தாள்.
"கௌரியக்கா அம்மாவா" புது ஆள் என்கிற வேற்றுமை பாராட்டாது இயல்பாக கேட்டபடி பாலை அளந்து நான் வைத்திருந்த பாத்திரத்தில் ஊற்றினாள்.
அம்மாவா என்பதில் முகம் ஒருநொடி சுருங்கினாலும் சுதாரித்துக்கொண்டு "இல்லம்மா அவங்க அக்கா" என்றேன்."சரிங்கம்மா"என்றபடி பறந்துவிட்டாள். அவளைச் சொல்லிக் குற்றமில்லை. காலம் அப்படி எனக்கு மிகையான மூப்பினை வழங்கியிருக்கிறதே.
"என்ன கௌரி ஸ்கூட்டியில் வந்து பால் ஊத்துறாங்க பொம்பளைங்க" என்றேன்.
"ஏன்,நம்ப ஊர்ல ஆம்பளைங்க டிவிஎஸ் பிப்டியில வந்து ஊத்தறது இல்லையா" கௌரி எதிர்க் கேள்வி போட்டாள்.சரிதான் என்பது போல தலையாட்டினேன்.ஆம்பளைங்க செஞ்சி பாத்து பழக்கப்பட்ட ஒண்ணு பொம்பளைங்க செய்யறப்ப கொஞ்சம் வித்தியாசமா தோணுது மனசுக்கு.
"சின்னவளா இருக்கா" பேச்சை மாற்றினேன்.பாலை அடுப்பில் வைத்தபடியே"பாவம்கா..அவ ஊட்டுக்காரன் பஞ்சாயத்து எலக்ஷன்ல நின்னான்.கூட போட்டி போட்டவனோட தகராறு.வாய்ச்சண்டை கைச்சண்டையா மாறி அவன் இவன வெட்டிப்புட்டான்.உசுருக்கு ஆபத்தில்லே.ஆனா படுக்கையில போட்டுடுச்சு.தேர்தலுக்கு செலவு பண்ணுனதால கடன்வேற.வயசான மாமியா,ரெண்டு புள்ளைங்க..பள்ளிக்கூடம் போகுதுங்க.குடும்பத்த நடத்தணுமில்ல.புருசன் வேலய இவ பாக்கறா"டீயைக் கலந்து என்னிடம் தந்துவிட்டு கல்லூரி செல்லும் மகனை எழுப்பச் செல்ல தொலைக்காட்சியில் இராசிபலனில் கவனத்தை செலுத்தினேன்.
வீட்டில் ஒருவரும் இல்லை. கௌரி அவள் கணவர் அலுவலகம் சென்றுவிட பையனும் கல்லூரி சென்றுவிட்டான்.வீடே அமைதி..வீடு மட்டுமல்ல அந்த வீதியும்..வீட்டுக்கு வீடு வாசப்படி.மதிய உணவை முடித்து தொலைக்காட்சியில் பழைய படமொன்றை பார்த்தபடி இருந்த நான் எப்போது உறங்கினேன் என்பது தெரியாமலேயே உறங்கிவிட்ட என்னை "பாம்..பாம்.." காலையில் எழுப்பிய அதே சப்தம்.கௌரி சொன்ன தகவல்கள் என் மனதில் இரக்கத்தை எழுப்பிவிட்டிருந்தது.பால்பாத்திரத்தை எடுத்துக் கொண்டு சென்றேன்.
அந்தப் பெண் எதிர்வீட்டு கேட்டில் மாட்டியிருந்த பையில் பால்பாட்டிலை போட்டுவிட்டு காலிபாட்டிலுடன் வந்தாள்.அவளைப் பார்த்த என் பார்வையில் கனிவு.
"என்னம்மா அக்கா என்னோட கதய சொல்லிட்டாங்க போலயே" சிரித்தபடி கேட்க அயர்ந்து போனேன்."உனக்கெப்படி.."தடுமாறினேன்.காலையில் ஆச்சரியமா பாத்தீங்க..இப்ப பாவம்ங்கறாப்ல பாக்கறீங்களே.."
"ச்சே..ச்சே..அப்படியில்ல வீட்டயும் பாத்துகிட்டு,மாட்டையும் பாத்துகிட்டு இப்படி பாலு ஊத்தவும் அலையறது கஷ்டமில்லையா.குழந்தைங்க பள்ளிக்கூடம் கிளம்பற நேரம் நீ இருக்க முடியாது.திரும்பற நேரமும் இருக்க முடியாது.குழந்தைகள உன்னால கவனிக்கவே முடியாது.." மேலே பேச்சைத் தொடரவிடாமல் இடைமறித்தாள்.
"குழந்தைகள கவனிக்கறதுன்னா இருபத்தி நாலுமணிநேரமும் அவங்ககூட இருந்து அவங்கள சின்ன சின்ன வேலைகள கூட செய்யவிடாம ஒவ்வொண்ணும் நாமே பாத்து பாத்து செய்யறதா..அப்படி செஞ்சா நாளைக்கு ஒண்ணுந் தெரியாம முழிச்சிக்கிட்டு நிக்குங்க.அதுங்களுக்கு வீட்டு சூழல் வெளங்காது.இப்போ எம்புள்ளைங்க அதுங்க வேலய அதுங்களே செஞ்சிக்குதுங்க.அம்மா எவ்ளோ கஷ்டப்படறான்னு கண்ணால பாக்குதுங்க.பொறுப்பா நடக்கணும்னு நெனைக்குதுங்க.என்னோட மாமியாவுக்கும் வீட்ல நாம சும்மா இல்ல,நம்மலால முடிஞ்சத செய்யறோம்னு திருப்தி.இத கஷ்டம்னு நெனச்சி வேற வேலைக்குப் போயிருந்தாகூட எனக்கு இந்த திருப்தி கெடச்சிருக்காது.இதுவரையிலும் எம்புள்ளைங்க பேரச் சொல்லி அவங்க ,அம்மான்னாங்க..இப்ப என்ன 'பாலம்ம்மா'ன்னு கூப்புடறாங்க.அவ்வளவு சந்தோஷமா இருக்கு."இப்போது அவளைப் பார்த்த என் பார்வையில் மதிப்பு. கையை அசைத்து கிளம்புகிறாள்.தொலைவில் ஒலிக்கிறது " பாம்..பாம்".
-சக்திஅருளானந்தம்.
#சிறுகதை



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக