அகன்
தமிழ் தெரிந்து கொள்வோம்.
0 = 0 = 0 = 0 = 00 =0 = 0 = 0 = 0
கொஞ்சம் தமிழ்… கொஞ்சும் தமிழ்...
^^^^+++^^^^+++++++^^^^+++^^^^
...................கிராமியப் பாடல் அல்லது
.........................நாட்டுப்புறப் பாடல்.
........................<^> - <^> - <^> - <^>
கிராமியப் பாடல் அல்லது நாட்டுப்புறப் பாடல் போன்றவற்றிற்கு தேமா, புளிமா, கூவிளம், கருவிளம், காய்ச் சீர், கனிச் சீர் என்ற இலக்கணங்கள் எல்லாம் கிடையாது.
இசைக்கு, ஓசை நயத்துக்கு, சந்த ஒழுங்குக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து கிராமப் புறங்களில் பாமர மக்களால் பாடப் பட்டு வந்தவையே நாட்டுப்புறப் பாடல்கள்.
கிராமியப் பாடல்களில் வட்டார வழக்குச் சொற்கள் இருக்கும். பேச்சுத் தமிழ் என்கிற கொச்சைத் தமிழ் இருக்கும். அப்படி இல்லாமலும் நல்ல தமிழிலும் எழுதலாம்.
சிலர் கொச்சைத் தமிழில் தான் எழுத வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பர். அதில் எனக்குச் சம்மதமில்லை.
எல்லா பாமர மக்களும் நாட்டுப் புறப் பாடல்களைப் பாட முடியுமா…? என்று கேட்டால் 'முடியாது' என்று தான் சொல்வேன்.
அதற்கு இசை அறிவு வேண்டும்.
இசை அறிவு இருந்ததால் தான் ஒரு பாமர பறவை முனியம்மா, தேனி குஞ்சரம்மாள் கிடைத்தார்கள். படித்த விஜயலெட்சுமி நவநீத கிருஷ்ணன் கிடைத்தார்.
இவை, பெரும்பாலும் அளவான, சின்னச் சின்னச் சொற்களால் அழகாகப் பின்னப் பட்டு தலைமுறை தலைமுறையாக நம் மக்களால் பாடப் பட்டு வந்திருக்கின்றன.
ஏற்றப் பாட்டு, களை பறிக்கும் பெண்கள் பாடும் வயற்பாட்டு, தாலாட்டுப் பாட்டு, ஒப்பாரிப் பாட்டு, எசப் பாட்டு, கடல் பாட்டு, தெம்மாங்குப் பாட்டு, பணியாளர்கள் தங்கள் களைப்புத் தீரப் பாடும் பாடல்கள், என்று நாட்டுப் புறப் பாடல்களில் பலவகை உண்டு.
மாமன் மச்சான்களை கேலி செய்து பாடும் பாடல், ஆரத்திப் பாடல்கள், ஏற்றப் பாடல்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
எல்லாப் பாடல்களிலும் ஓசை நயம், சந்த ஒழுங்கு, இசைக் கட்டு எல்லாம் இருக்கும்.
இவை இல்லாமல் புதுக் கவிதை போல எழுதுகிற உரைநடைகளைக் கிராமியப் பாடல்களில் சேர்க்க முடியாது.
அவற்றைப் பாடவும் முடியாது.
முகநூல் குழுமங்கள் நடத்தும் பல நாட்டுப் புறப் பாடல்கள் புதுக் கவிதை வடிவில் இருப்பதைப் பார்க்கிறேன். அவர்கள் கொஞ்சமாவது இசைக்கக் கற்றுக் கொண்டால் நான் மகிழ்வேன்.
நான் இரசித்த எளிமையான கிராமியப் பாடல் ஒன்றைப் பாருங்கள்.
உ - ம்:
மழையை நம்பி ஏலேலோ
மண் இருக்கு ஐலசா...
மண்ணை நம்பி ஏலேலோ
மரம் இருக்கு ஐலசா...
மரத்தை நம்பி ஏலேலோ
கிளை இருக்கு ஐலசா...
கிளையை நம்பி ஏலேலோ
இலை இருக்கு ஐலசா...
இலையை நம்பி ஏலேலோ
பூ விருக்கு ஐலசா...
பூவை நம்பி ஏலேலோ
கா யிருக்கு ஐலசா...
காயை நம்பி ஏலேலோ
கனி யிருக்கு ஐலசா...
கனியை நம்பி ஏலேலோ
கிளி யிருக்கு ஐலசா...
என்று பாமர மக்களின் மனம் போன போக்கில் - ஆனால், பொருளோடு - பாடல் நீண்டு கொண்டு போகும்.
மேலே இருக்கும் பாடலைப் பாடிப் பாருங்கள்.
சுகமானப் பாடலிது. இலக்கணமில்லா நாட்டுப்புறப் பாடலின் இலக்கணம் சந்த ஒழுங்கும், ஓசை நயமும் தான்.
இது நான் எழுதிய நாட்டுப்புறப் பாடல்.
இசையும், ஓசை நயமும், சந்த ஒழுங்கும் இருக்கிறதா என்று பாடிப் பார்த்து உங்கள் கருத்தைப் பின்னூட்டமாய் இடுங்களேன்.
================================
…..எப்ப வர்றே, சொல்லுடி.
....ॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐ
வார்த்தைகளில் பந்தல்கட்டி
வாசமல்லிக் கொடிவளர்த்து
தங்க ரத்தினமே... - என்
பொன்னுரத்தினமே...
ஆசைமச்சான் அடிமனசை
ஆட்டிப்புட்டே மல்லிகையே.
தங்க ரத்தினமே... - என்
பொன்னுரத்தினமே...
சொன்னாக்க வருவேன்டி
சொல்லிவச்சுத் தருவேன்டி
தங்க ரத்தினமே... - என்
பொன்னுரத்தினமே...
சொந்தமெனக் கானவளே,
கொல்லுதடி உன்நினைப்பு.
தங்க ரத்தினமே... - என்
பொன்னுரத்தினமே...
சிரிச்சாக்க பூவாசம்
சேர்த்தணைச்சா ஆவேசம்.
தங்க ரத்தினமே... - என்
பொன்னுரத்தினமே...
பருகசுவை பாயாசம்
பம்பரமாய்க் கண்பேசும்.
தங்க ரத்தினமே... - என்
பொன்னுரத்தினமே...
கூந்தலிலே செருகிவச்சக்
கொத்துமல்லிப் பூத்தடவும்
தங்க ரத்தினமே... - என்
பொன்னுரத்தினமே...
காந்தல் விரல்சொடுக்கி
கதைசொல்ல வாறேன்டி.
தங்க ரத்தினமே... - என்
பொன்னுரத்தினமே...
சிரிச்சாக்க பல்லழகி
செவந்தாக்க பொன்னழகி
தங்க ரத்தினமே... - என்
பொன்னுரத்தினமே...
பரிச்சாக்க பூவழகி
சரிச்சிபுட்ட பேரழகி.
தங்க ரத்தினமே... - என்
பொன்னுரத்தினமே...
பார்த்தாக்க உயிரிருக்கும்
பார்க்காட்டி எதுபிழைக்கும்
தங்க ரத்தினமே... - என்
பொன்னுரத்தினமே...
நேற்றில்லே, இன்றில்லே
நாளைக்கும் கூடவாடி.
தங்க ரத்தினமே... - என்
பொன்னுரத்தினமே...
பந்தக்கால் ஊனிவப்பேன்
பரிசப்பணம் தட்டில்வப்பேன்.
தங்க ரத்தினமே... - என்
பொன்னுரத்தினமே...
தேதிகூட குறிச்சிவச்சு
தேவதையைக் கரம்புடிப்பேன்.
தங்க ரத்தினமே... - என்
பொன்னுரத்தினமே...
மாமன்நான் வரும்போது
மல்லிகைப்பூ பூமணக்க
தங்க ரத்தினமே... - என்
பொன்னுரத்தினமே...
வாசலிலே காத்திருந்தா
நேசமனம் கலகலக்கும்.
தங்க ரத்தினமே... - என்
பொன்னுரத்தினமே...
மல்லிகையே, மருக்கொழுந்தே,
மச்சமுள்ளக் குலக்கொழுந்தே,
தங்க ரத்தினமே... - என்
பொன்னுரத்தினமே...
வச்சிருக்கேன் தாலிக்கொடி
வாங்கிக்கநீ எப்பவர்றே?
தங்க ரத்தினமே... - என்
பொன்னுரத்தினமே...
நீங்களும் இசை நயம், ஓசை நயம், சந்த ஒழுங்கு பயில நாட்டுப் புறப் பாடல்களை எழுதிப் பாடிப் பழகுங்கள். எளிது தான்.
..............- "அகன்" @ அனுராதா கட்டபொம்மன்.
……..……...............................……..................…….21.08.2021.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக