16.08.20-ரேவா-சித்ரமாயன்_02 - தென்குமரிக் கவிதைக்களம்

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

16.08.20-ரேவா-சித்ரமாயன்_02



கவிஞர் அனுராஜ்



#ரேவா


#சித்ரமாயன்_02


திருவத்திபுரம் அரண்மனை களையிழந்து காணப்பட்டது..கண்ணில் தென்படும் பணிமக்கள் அனைவரும் ஏதோ சோகத்தை சுமந்து கொண்டு அலைந்தார்கள்.


பல்லவ வேந்தர் பரமேஸ்வரவர்மன் போரில் இறந்து ஒரு பட்சப் பொழுதாகி விட்டது..இதற்குள் எண்ணிலடங்கா நிகழ்வுகள் நடந்தேறி விட்டன.


அரண்மனையின் ஆலோசனைக் கூடம் அன்று நிரம்பியிருந்தது..பல்லவ தளபதி பல்லவடி அரையன், பிரதம முதலமைச்சர் பிரம்மஸ்ரீ ராஜன், கடிகையார், மூலப் பிரகிருதியார், காடக முத்தரையர், சீராளன் ஆகியோரோடு உபதளபதியும், புரவிப்படைத் தலைவனுமான உதயச்சந்திரனும் அறையில் போடப்பட்டிருந்த ஆசனங்களில் கவலையுடன் அமர்ந்திருந்தனர்.


வெகுநேரம் அமைதியாக இருந்த அச்சபையின் மௌனத்தை முதலமைச்சர் பிரம்மஸ்ரீராஜனே முதலில் கலைத்தார்.


" எல்லோரும் இன்னும் கவலையாகவே காட்சி தந்து கொண்டிருந்தால் என்னாவது..? காஞ்சியின் நிலைமை என்னவென்று தெரியுமா..? " என்று விட்டு அனைவரது முகத்தையும் ஏறெடுத்தார்.


கடிகையின் தலைமை குருவான கடிகையார் தான் பதிலளித்தார்.. 


"சாளுக்கிய விக்கிரமாதித்தன் காஞ்சியைக் கைப்பற்றி விட்டான்..எதிர்க்க எவருமின்றி காஞ்சியை தங்கதாம்பாளத்தில் ஏந்தி விக்கிரமாதித்தன் கைகளில் தந்து விட்டோம்..அவனது காலில் நம்முடைய மன்னர் பரமேஸ்வரவர்மனது புதல்வன் சித்ரமாயனும், அவனது தாய் மாமன் வீரமல்லனும் விழுந்து விட்டதாக கேள்வி.." என்றார் ஆதங்கத்துடன்.


" மதுவின் போதையிலும், மங்கையின் ஆட்டத்திலும் அறிவிழந்து கிடப்பவன் சித்ரமாயன்..சித்ரமாயனுக்கோ பதினாறு அகவை தான் ஆகிறது..இந்த வயதிலேயே இப்படியிருக்கிறான்..!இவனை நம்பி காஞ்சி..?! எல்லாம் பல்லவ தேசத்திற்கு வந்த தலையெழுத்து..சித்ரமாயன் சாளுக்கிய விக்கிரமாதித்தன் காலில்  விழுந்ததில் ஆச்சர்யம் என்ன இருக்கப் போகிறது..? போயும் போயும் பரமேஸ்வரவர்மனுக்கு இப்படியொரு பிள்ளை.." என அலுத்துக் கொண்டார் மூலப் பிரகிருதியார்.


" இதில் ஓர் ஆச்சர்யமும் நடந்திருக்கிறது ..சாளுக்கிய விக்கிரமாதித்தன் காஞ்சி நகரையோ..கோவில்களையோ சூறையாட முற்படவில்லை..மக்களையும் துன்பத்திற்கு உள்ளாக்கக் கூடாது என தனது படைகளுக்கு கட்டளைப் பிறப்பித்து விட்டானாம்..எனவே நகரமே அமைதியாக இருக்கிறது..வேற்று நாட்டான் பிடியில் இருப்பதைப் போன்ற எண்ணம் மக்களிடம் எழவேயில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.." என்றான் சீராளன்..பல்லவர்களின் தலைமை ஒற்றன்.


" ஆச்சர்யம் தான்.."


"நம்ப முடியவில்லையே.." 


" எதற்காக இந்த வேசமிடுகிறான் விக்கிரமாதித்தன்.." என ஆளுக்கொரு பதில் தந்தார்கள்.


" உண்மைதான்..நரசிம்மபல்லவர் இரண்டாம் புலிகேசியை வெல்வதற்காக,  வாதாபியை அழித்து தீக்கிரையாக்கி விட்டு வந்த நாள் முதல், சாளுக்கியர்கள் தாங்கள் பட்ட அவமானத்திற்கு பல்லவ தேசத்தை பாழ் படுத்தவே எண்ணம் கொண்டிருந்தார்கள்..அந்த துவேசம் இரண்டாம் புலிகேசியின் புதல்வன் முதலாம் விக்கிரமாதித்தனுக்கும், அவனது புதல்வன் விநயாதித்தனுக்கும், அவனது புதல்வன் விஜயாதித்தனுக்கும் இருக்கவே செய்தது..இதோ இப்போது *விஜயாதித்தன் தலைநகரில் இருந்தபடி தனது மகன் இரண்டாம் விக்கிரமாதித்தனை அனுப்பி விலந்துப் போரில் நமது பல்லவ பரமேஸ்வரவர்மனை கங்க மன்னன் சிறீபுருசன் உதவியோடு கொன்றதோடு, பல்லவக் காஞ்சி வரை படையெடுத்து வந்து பரமேஸ்வரவர்மனது மகனையே அரசாட்சியிலும் அமர்த்தியிருக்கிறான் என்றால் ,  இதற்கெல்லாம் காரணமில்லாமல் இருக்குமா..? " என்றார் நெடிய மூச்சினை விட்டபடி பிரம்மஸ்ரீராஜன்..சிவந்த அவரது முகம் கோபத்தால் மேலும் சிவந்தது.


" இரண்டாம் விக்கிரமாதித்தன் தனது நன்னடத்தை வாயிலாக காஞ்சி நகர மக்களின் எண்ணங்களை கவர எண்ணுகிறான்..இதே ரீதியில் போனால் விக்கிரமாதித்தன் ஆட்சியையும் மக்கள் வரவேற்கவே செய்வார்கள்..

பரமேஸ்வரவர்மனது பிள்ளையை அதிகாரத்தில் அமர்த்தியிருப்பதும் மக்களிடம் நல்லெண்ணத்தை பெற வேண்டி தான் என எண்ணுகிறேன்." என்றார் தளபதி பல்லவடி அரையன்.


பல்லவ அரியணைக்கு சித்ரமாயன் உகந்தவன் இல்லையே..அவன் சாளுக்கிய  விக்கிரமாதித்தனின் கைப்பாவையாக அல்லவா செயல் பட்டுக் கொண்டிருக்கிறான்..அரசியல் அறிவு சித்ரமாயனிடம் துளி கூட இல்லை..எப்படித் தான் பரமேஸ்வரவர்மனுக்கு மகனாய் பிறந்தானோ..?" என  அலுத்துக் கொண்டார் சிற்றரசர்  காடக முத்தரையர்.


" நம்முடைய மன்னர் பரமேஸ்வரவர்மனது தந்தையார்  ராஜசிம்மனது தந்தை முதலாம் பரமேஸ்வரவர்மனோ, கங்க மன்னன் பூ விக்கிரமனிடம் பல்லவ குல உக்ரோதயம் எனும் மாணிக்க ஆரத்தை பறிகொடுத்தார், ராஜசிம்மனோ கங்க அரசன் பூவிக்கிரமனின் மகளான ரங்கபதாகை தேவியை மணந்தும், உக்ரோதயத்தை ஸ்ரீதனமாக பெறக் கூட விரும்பாமல், எனது சந்ததியர் போரில் அதை மீட்பதையே நான் பெருமையாய் கொள்வேன் என்றார்..ஆனால் அதற்குள் ராஜசிம்மரது புதல்வரோ இப்போது நடந்த விலந்துப் போரில் பல்லவ தேசத்தின் வெண் கொற்றக்குடையையும், சிங்க இலட்சினை முத்திரைகளையும் பறிகொடுத்து வந்திருப்பது மனதிற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.." என்றார் முதலமைச்சர் பிரம்மஸ்ரீராஜன்.


" அமைச்சரே..தங்களுக்கு இன்னொரு தகவலும் சொல்கிறேன் , கங்க மன்னன் சிறீபுருசன் நமது மன்னரது வெண்கொற்றக் குடையையும், சிங்க இலட்சினைகளைக் கைப்பற்றியதை கொண்டாடும் வகையில் " பெருமானடி" என பட்டம் சூட்டிக் கொண்டானாம்..என்றான் உதயச்சந்திரன்.


" ஆஹா..மகா கேவலம்.."என்றார் மூலப்பிரகிருதியார்.


" சித்ரமாயனை பல்லவ அரசுக்கட்டிலில் இருந்து அகற்றுவதே..நம்முடைய முதற்பணியாக இருக்க வேண்டும்.." என்றார் தளபதி பல்லவடி அரையன்.


" உண்மை தான்..இன்னொன்றையும் மறந்து விடக் கூடாது..பல்லவ வேந்தன் பரமேஸ்வரவர்மனின் அபிமானிகளான நமது தலைகளுக்கு விலை பேசப் பட்டுள்ளது..எனவே இங்கு இப்போது சில காலம் மறைந்திருப்பதே சாலச் சிறந்தது.." என்றார் கடிகையார்.


" விக்கிரமாதித்தனா இந்த ஆக்ஞையை பிறப்பித்தான்..? " 


" இல்லை..விக்கிரமாதித்தன் சுத்தமான வீரன்..அவனிடத்தில் இப்படியொரு எண்ணம் பிறக்காது..நமது தலைகளுக்கு விலை வைத்திருப்பவர்கள் சித்ரமாயனும், அவனது மாமன் வீரமல்லனும் தான்.." என்றான் சீராளன்.


" ஆம்..நாம் இருந்தால் அவர்களின் சுகபோகம்  கெடத்தானே செய்யும்..! " என்றார் பிரம்மஸ்ரீராஜன.


" இப்படியே..காலம் போய்க் கொண்டிருந்தால் என்ன வழி..? பரமேஸ்வரவர்மனின் துர்நடத்தையுள்ள பிள்ளையினை ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்ற வேண்டும்..அத்தோடு, பல்லவ சாம்ராஜ்யத்திற்கு தகுந்த ஒரு வீரனை மன்னனாக்க வேண்டும்.." என்றார் பல்லவ தளபதி பல்லவடி அரையன்.


" கேட்க நன்றாகத் தான் இருக்கிறது..ஆனால் மன்னனை எங்கே போய் தேடுவது..? நமக்கு இப்படியொரு இக்கட்டான நிலைமை வருமென நான் நினைத்துக் கூடப்  பார்க்க வில்லை..." என்றார் சோகம் கலந்த முகத்துடன் மூலப்பிரகிருதியார்.


" மூலப் பிரகிருதியாரே..எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது..! சரியாக இருக்குமா என யோசியுங்கள்..?" என்றார் முதலமைச்சர் பிரம்மஸ்ரீராஜன்.


" சொல்லுங்கள் பார்ப்போம்.."


முதலமைச்சர் பிரம்மஸ்ரீ ராஜன்  கூறிய யோசனை , அனைவருக்கும் பிடிக்கவே செய்தது..ஆனால் அதில் உள்ள காரியங்களைச் செய்து முடிப்பது என்பது அவ்வளவு  இலேசான காரியமாய் இல்லை.


_ தொடரும்..


#அனுராஜ்..


குறிப்பு : *விலந்துப் போர் விஜயாதித்தன் காலத்தில் நடந்தது என்றாலும், சாளுக்கியரது பட்டயக் குறிப்புகள் விக்கிரமாதித்தன் காலத்தில் நடைபெற்றதாக குறித்து வைத்திருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages