#ரேவா..
#இருளில்_விரைந்த_ரதம்_01
சரத் ருதுவின் அன்றைய இரவுப் பொழுது மிகக் கொடுமையானதாக இருந்தது..காலைப் பொழுதினில் அவ்விடத்தில் மழைப் பொழிந்திருக்க வேண்டும்..காணுமிடங்கும் செடி, கொடிகள் பசுமையைச் சுமந்தபடி இருந்தன..ஆனால் இப்போது கரியநிற சாயத்தைப் பூசியது போல் காணப்பட்டது..வண்டின் ரீங்காரமும், தவளைகளின் கீதமுமாய் கேட்டுக் கொண்டிருக்க..மண் பாதையெங்கும் ஈரம் அப்பிப் போய் கிடந்தது..ஆங்காங்கே சாலைகளில் காணப்பட்ட பள்ளங்களில் மழைநீர் தேங்கிக் காணப்பட்டது.
அடர்ந்திருந்த மலைப்பாதை , இருளின் அடர்த்தியில் பயங்கரமாய் காட்சி தந்தது..அவ்வப்போது எழுந்து அடங்கிய கோட்டான்களின் சத்தமும் அச்சத்தை உண்டு பண்ணுவதாக இருந்தது. வானுயர்ந்து வளர்ந்திருந்த காட்டுமரங்கள் வகைக்கு ஒன்றாய் வரிசையாக கடந்து போய்க் கொண்டிருந்தது..அந்த மிரட்டும் இருளோ..உடலை ஊசியாய் துளைக்கும் சில்லிட்டக் காற்றோ, எதையும் இலட்சியம் செய்யாது விரைந்து கொண்டிருந்த இரு புரவிகள் பூட்டிய ரதத்தினை ஓட்டிக் கொண்டிருந்தான் அவன்.
அவனது கண்களிலிருந்தோ அல்லது முகத்திலிருந்தோ என்ன மனநிலையில் இருக்கிறான் என்பதை அறிய இயலவில்லை..இறுகிப் போன முகம் எவ்வித உணர்ச்சிகளையும் பிரதிபலிக்காது இருந்தது..
இளவயதினன் குதிரைகளின் கடிவாளத்தை அவன் கையாளும் விதத்திலேயே ஒரு அசட்டைத் தனம் இருந்தது..புரவிகளின் இலட்சணமும், அதன் போக்கும் அறிந்தவனாய் இருப்பான் போலிருக்கிறது..
அவ்வப்போது அமர்ந்தும் சட்டென எழுந்து நின்று கொண்டும் அந்த ரதத்தினை காற்றிலும் வேகமாய் விரட்டிக் கொண்டிருந்தான்..ரதம் ஓடிய வேகத்தில் சக்கரங்கள் சாலையின் பள்ளத்தில் தேங்கியிருந்த நீரினை வாரியிறைத்தன..அது மட்டுமின்றி குதிரைகளின் குளம்புகள் பட்டும் சாலைகளில் தேங்கியிருந்த நீர் தெறித்து அவனது முகத்தில் விழுந்தது..அதையும் அவன் பொருட்படுத்தியதாய் தெரியவில்லை..காற்றில் அலைந்த அவனது முடிக்கற்றைகள் அவ்வப்போது கண்களை மறைத்தாலும், அதனை இலாவகமாக ஒதுக்கி விட்டுக் கொண்டான்..மலைப்பாதையில் சரேல் சரேலென வளைந்து திரும்பும் போதெல்லாம் ரதமும் பயங்கரமாய் குலுங்கவும் ஆடவும் செய்தது.
" உதயசந்திரா..வேகம் அவசியம் தான்..கூடவே விவேகமும் இருக்கட்டும்.." என்ற குரல் ரதத்திலிருந்து கட்டளையிடும் தொனியில் கேட்டது.
" புரிந்தது தளபதியாரே.." என்றான் அவ்விளைஞன்.
ரதத்தில் இருந்து கேட்ட குரலின் வாயிலாக ரதத்தினைச் செலுத்திக் கொண்டிருப்பவனது பெயர் உதயச் சந்திரன் என அறிய முடிகிறது..அளவான உடற்கட்டுடன் காணப்பட்ட அவனது கைகள் மெலிந்து நீளமாய் காணப்பட்டது , எனினும் அது உறுதியாயும் வலிமையாயும் இருப்பதும் அவனது கைகளின் போக்கிலேயே புலப்பட்டது..அவன் முதுகில் ஒரு *விசித்திரமான ஆயுதத்தை செருகியிருந்தான்..இரு பட்டையான கத்திகள் இருபக்கமும் கூர்மையாக எதிரெதிர் வசத்தில் ஒன்றோடொன்று இணைந்திருந்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருந்தது அவனது ஆயுதம்..கைகள் பிடிக்கும் பகுதி நடுவில் இருந்தது..வாளினைச் சுழற்றினால் கைமணிக்கட்டிற்குத் தான் பயிற்சி கிடைக்கும்..ஆனால் இந்த ஆயுதத்தைக் கையாளப் புஜத்தில் வலிமை வேண்டும்.
காதில் தொங்கிக் கொண்டிருந்த குண்டலங்களும், கழுத்தில் தொங்கிய முத்து மாலையும் அவனுக்கு அழகு சேர்ப்பதாய் இருந்தன.
பாதையின் பயங்கரத்தை சிறிதும் உணராதவனாய் அனாயாசமாய் ரதத்தினைச் செலுத்திக் கொண்டிருந்தான்.
" தளபதியாரே..இப்போது நிலைமை எப்படி உள்ளது..? " பாதையிலிருந்துப் பார்வையை மாற்றாமலேயே கேள்வியொன்றை கேட்டான் .
" முன்னேற்ற மில்லை..அப்படியே தான் இருக்கிறது.."
" நாடி.."
" அதுவும் மெல்ல இறங்குவதாக தெரிகிறது.." என்றது உள்ளிருந்து வந்த குரல்.
" தலைநகர் வரை தாங்குவாரா...? " என்றான் கவலையுடன்.
" கூறுவதற்கில்லை..
ஆனால் உதயசந்திரா, நாம் தலைநகர் செல்வது உசிதமில்லை." என்றது உள்ளிருந்து வந்த குரல்.
" பிறகு..? "
" காஞ்சிக்கு தென்மேற்கில் உள்ள திருவத்திபுரம் சென்றுவிடு..
அங்குள்ள நமது மன்னரது ஓய்வு மாளிகை தெரியுமல்லவா..? "
" ம்.."
" ரதத்தை அங்கேயே செலுத்து..தலைநகர் ராஜபாட்டையில் இருந்து விலகி வந்தது நல்லதாய் போயிற்று..சாளுக்கியவிஜயாதித்தனின் புதல்வன் இளவரன் விக்கிரமாதித்தன் தனது பெரும்படையை அழைத்துக் கொண்டு தலைநகர் நோக்கி நமது படையை விரட்டிக் கொண்டு போகிறான்.."
" நமது இந்தத் தோல்வி..மிகவும் துரதிருஷ்டவசமானது தளபதியாரே.." என்றான் வருத்தத்துடன் உதயசந்திரன்.
" என்ன செய்வது..வெற்றியும் தோல்வியும் அரசுகளில் சகஜமானவையே.." என்றார் ஆதங்கத்துடன் தளபதி.
" என்னால் இதை சகஜமாய் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.." என்றான் வருத்ததுடன்.
" உதயசந்திரா..நீ ஒன்றை மறந்து விட்டாய்..இப்போது சரத் காலம், ஆறுகளில் எல்லாம் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது..நானும் மன்னரும் நமது முன்னணி படைகளுடன் ஆற்றைக் கடந்து முதலில் சென்று விட்டோம்..ஆனால் நீயோ, உனது படைவீரர்களுடன் ஆற்றைக் கடந்து வர சற்று காலதாமதமாகி விட்டது..அதற்குள்ளாக கங்க நாட்டின் சிறீபுருசனும், விக்கிரமாதித்தனும் சூழ்ந்து கொண்டு விட்டார்கள்..நமது வெண்கொற்ற குடையையும், முத்திரையையும் அபகரித்துக் கொண்டதோடு, மன்னரது நிலையையும் கவலைக்கிடமாக்கி விட்டான் சிறீபுருசன்..நமது படைகளும் பின் வாங்கத் துவங்கி விட்டன..நல்லவேளையாய் நீ வந்த காரணத்தால் மன்னரை படுகாயத்துடன் போர்க்களத்தை விட்டகற்றி, உன்னுடன் பயணப்பட்டு விட்டேன்..இல்லையெனில், நம் கதியும் அதோகதி தான்.."
" உண்மைதான் தளபதியாரே..நம் மன்னர் காலத்தை உணர்ந்து இந்தப் போரினை நடத்தியிருக்கலாம்..சிறீபுருசன் அறைகூவல் விடுக்கிறான் என்பதற்காக வலியப் போய் வேதனையை வாங்கியது தான் தவறு.."
" உன்னுடன் வந்த படைவீரர்களுக்கு என்ன கட்டளையைப் பிறப்பித்தாய்..?"
" கலைந்து சென்று , எப்படியாவது தலைநகர் வந்துசேரும் படி சொல்லியிருக்கிறேன்..இந்நேரம் காவிரியைத் தாண்டி, மேற்குமலைத் தொடரில் சில காலம் உறைந்து, பின் தெற்கு நோக்கி நகர்ந்து, கிழக்குமுகமாய் திரும்பச் சொல்லியிருக்கிறேன்.."
"நல்ல காரியம் செய்தாய்.."
" மன்னரது நிலையில் ஏதாவது முன்னேற்றம் தெரிகிறதா..? உடல் அசைவு இருக்கிறதா..? மயக்கம் தெளிந்ததா..?
" ஊஹூம்..அப்படியே தான் இருக்கிறார்.."
"தலைமை அமைச்சர் பிரம்மஸ்ரீ ராஜனையும், கடிகையாரையும், மாளிகைக்கு வரச் சொல்லி சீராளனை நேற்றே அனுப்பி விட்டேன்..இப்போது நமக்காக அவர்கள் காத்திருப்பார்கள்..விரைந்து செல்..உதயசந்திரா.."
" தளபதியாரே..நெருங்கி விட்டோம் , இன்னும் ஒரு நாழிகைப் பொழுதில் நாம் மாளிகையில் இருக்கலாம்." என்றான் புரவிகளை விரைவாக செலுத்தியபடியே.
திருவத்திபுர நகரக் கோட்டை தெரிந்தது..காற்றிலும் வேகமாய் விரைந்த புரவிகள் கோட்டை வாசலைத் தாண்டி நகருக்குள் நுழைந்து, பெரு வீதிகளைக் கடந்து மாளிகையின் முன் நிற்க, உள்ளிருந்து ஓடிவந்தனர் ஒருசிலர்.
" மெல்ல இறக்குங்கள்..காயங்கள் பலமாக உள்ளன.." என்றார் கவலை தோய்ந்தவராய் தளபதி பல்லவடி அரையன்.
சில வீரர்கள் நிதானமாக மன்னரது உடலை ரதத்திலிருந்து இறக்கி, மாளிகைக்குள் பல அடுக்குகளைத் தாண்டிக் கொண்டு சென்று ஒரு பெரிய அறையின் மஞ்சத்தில் கிடத்தினர்..தயாராக நின்றிருந்த அரண்மனை வைத்தியர் மன்னரது கைநாடியினை பிடித்து சரிபார்த்தவர், மன்னரது இமைகளை விலக்கி, சூன்யத்தில் நிலைத்துப் போன கண்களைப் பார்த்து விட்டு உதட்டினைப் பிதுக்கியபடி, "ஊஹூம்..பயனில்லை" என்றார்.
சுற்றி நின்ற அனைவரது தலைகளும் தாழ்ந்திட..ஒரு கனத்தச் சோகம் அந்த இடத்தை ஆக்கிரமிக்கத் துவங்கியது.
கீழ்வானம் இலேசாய் வெளிச்சம் காட்ட, தீப்பிழம்பாய் விழித்தபடி ஆதவன் மெல்ல உக்கிரமாய் மேலேறத் துவங்கிய
அதே வேளையில்..**விலந்து எனும் இடத்திலிருந்து கிளம்பிய பெரும் படையானது சாளுக்கிய விக்கிரமாதித்தன் தலைமையில் காஞ்சியை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.
_ தொடரும்..
#அனுராஜ்..
குறிப்பு : * ஹேலடி ( Haladie ) எனப்படும் இரு முனையும் வளைந்து கூர்மையாக உள்ள இந்த ஆயுதத்தை இந்தியாவில் ராஜபுத்திரர்களும், சிரியாவிலும் பயன்படுத்தி இருக்கிறார்கள்..தமிழகத்தில்
பின்னாளில் அரேபியாவிலும் இது பயன்படுத்தப் பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளது.
** பல்லவ மன்னன் பரமேஸ்வரனும் கங்க மன்னன் சிறீபுருசனும் விலந்து எனுமிடத்தில் நடந்த போரில் போரிட, சாளுக்கிய விக்கிரமாதித்தனும் கங்க மன்னனுக்கு உதவ, நடந்த போரில் பரமேஸ்வர்மன் கொல்லப்பட்டான்.
The History of South India (1955 )
Sri. K.A.Nilakanda Sastry. M.A. page 139



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக