தலையைத்_தாழ்த்திய_மென்கரம்_07 - தென்குமரிக் கவிதைக்களம்

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

தலையைத்_தாழ்த்திய_மென்கரம்_07

 




#ரேவா


#தலையைத்_தாழ்த்திய_மென்கரம்_07


காம்புஜதேசம் அன்று விழாக் கோலம் பூண்டிருந்தது. தெருவெங்கும்  வித்தியாசமான தோரணங்களும், அழகிய வண்ணங்களில் கோலங்களும் வீடுகள்  தோறும் காணப்பட்டன.


நகரத்தின் நுழை வாயிலில் காணப்பட்ட பிரம்மாண்டமான கோட்டைச் சுவர்களும், அகலமான கோட்டைச் சுவர்களின் மேல் சதாசர்வ காலமும் நடைபயின்று கொண்டிருந்த வீரர்களும், ஆங்காங்கு வேல்களும், வாட்களும் ஏந்தியபடி வலம் வந்து கொண்டிருந்த காவலர் கூட்டமும், புரவிகளில் புழுதியைக் கிளப்பியபடி சென்று கொண்டிருந்த வீரர்களின் அணிவகுப்பும் அன்றைய முக்கிய நாளின் மகத்துவத்தைப் பறைசாட்டுவதாய் இருந்தது.


காம்புஜ நாட்டின் கடற்கரைக்கு வந்து சேர்ந்திருந்த உதயச்சந்திரனது மரக்கலத்திலிருந்து ஒரு படகொன்று இறக்கப்பட்டதோடு, பல்லவக் காஞ்சியில் இருந்தே கொண்டு வரப்பட்ட உதயச்சந்திரனின் புரவியும் அதே படகில் இறக்கப்பட, படகானது மெல்ல  * மேகாங் நதியின் முகத்துவாரத்தின் வழியே உள் நுழைந்து வடக்கு நோக்கி நெடுநேரம் பயணித்து அதன் கிளை நதிகளில் ஒன்றான டோன்லே சாப்பை எட்டியவன், அதிலும் சில நாழிகை தூரம் பயணம் செய்தவன், இறுதியாக ** நாம்குலேன் மலைத்தொடரினை எட்டினான்..அதன் பின் அவனது பயணம் புரவியில் தொடர்ந்தது..காம்புஜ தேசத்தின் இயற்கை எழிலும் எங்கு நோக்கினும் பாய்ந்தோடும் நதிகளும், அருவிகளும் நிறைந்த அந்த அழகிய மலைத்தொடர் உதயச்சந்திரனது மனதிற்குள் மகிழ்ச்சியை உண்டு பண்ணியிருந்தது. கடந்த ஒரு பட்சத்திற்கும் மேலாய் நீலவானத்தையும், நெடுங்கடலையுமே கண்டு வந்தவன் கண்களுக்கு பசுமை வனமும், பல வண்ண மலர்களும், காணுமிடமெங்கும் பூத்துக் குலுங்கும் இயற்கையின் செழிப்பு மனதிற்கு ஒரு உத்வேகத்தை விதைத்திருந்தது. 


காம்புஜ தேசத்தின் மன்னர் கடவேச ஹரிவர்மா என்றழைக்கப்படும் ஹிரண்யவர்மருக்கு பல்லவ காஞ்சியின் தலைமை அமைச்சர் பிரம்மஸ்ரீராஜன் எழுதித் தந்த ஓலை  தனது இடுப்பின் கச்சையில் பத்திரமாக உள்ளதா என சரிபார்த்துக் கொண்டவன், பல்லவரது சிம்ம இலச்சினையையும் சரிபார்த்து பத்திரப் படுத்தி வைத்துக் கொண்டான்.


காம்புஜ தேசத்தின் நாம்குலேன் மலைகளுக்கு அப்பால் தெரிந்தது, புனான் தேசத்தின் தலைநகர் அங்கோர்தாம் .  ஓங்கி உயர்ந்த கோட்டைச் சுவர்களும், அழகிய கோபுரங்களோடும், மாட மாளிகைகளோடும் காணப்பட்ட அந்நகரினைக் கண்டு ரசித்தவனாய் , புரவியை வேகமாக அந்நகரை நோக்கிச் செலுத்தினான்.


அங்கோர்தாம் நகர் சதுர வடிவில் அமையப் பெற்றிருந்தது.நகரைச் சுற்றிலும் அகலமான அகழிகளும், உயரமான கோட்டைச் சுவர்களும் காட்சி தந்து கொண்டிருந்தன. மன்னர் திங்கள் தோறும் மக்களைக் காண வரும் பெரும்விழா நகரமெங்கும் கொண்டாடப் பட்டுக் கொண்டிருந்தது. கதிரவன் மேற்கு வானில் இறங்கிய ஒரு நாழிகைப் பொழுதில், நகர வீதியெங்கும் வானவேடிக்கைகளும், விளக்கொளிகளும் ரம்மியமாய் காட்சி தந்து கொண்டிருந்தன.


அரண்மனைக்குள் செல்லுவதற்கு முன், நகர் முழுவதையும் சுற்றிப் பார்த்து விட்டுச் செல்வது என முடிவெடுத்து நகரின் உயர்ந்த சத்திரமொன்றில் தனது உடமைகளையும், புரவிகளையும் பத்திரப்படுத்தி விட்டு, நகரின் அழகில் மயங்கியவனாய் ஒவ்வொரு வீதியாக வலம் வந்து கொண்டிருந்தான் உதயச்சந்திரன்.


மன்னரது வீதியுலாவை முன்னிட்டு, புரவியில் அமர்ந்தபடி வீரர்கள் அணிவகுத்து வந்தனர், அதன் பின் மகளிர்கள் கைகளில் விளக்கினை ஏந்தியபடி ஊர்வலமாக வர, ஆயுதங்களை தாங்கிய மகளிர் படையும் அந்த ஊர்வலத்தில் பங்கேற்றது.

அரண்மனைப் பெண்டிரும், இளவரசர்களும் யானைகளின் மேல் அமர்ந்து கம்பீரமாக வந்தார்கள்..இறுதியாக நன்கு அலங்கரிக்கப்பட்ட பட்டத்து யானையின் மேல் தங்க வாளினை கைகளில் ஏந்தியபடி கம்பீரமாக காம்புஜத்தின் மன்னர் கடவேச ஹரிவர்மன் என்றழைக்கப்பட்ட ஹிரண்யவர்மர் வந்தார்.. அவரது வருகையை அறிவிக்கும் முகமாய் முரசினை அதிர செய்தபடி ஒருவன்  நகர, அங்கோர்தம் நகர மக்கள் அனைவரும் சட்டெனத் தலைவணங்கி மன்னனை வணங்கினர். 


இக்காட்சியைக் கண்டு மெய்மறந்து போய் நின்றிருந்த உதயச்சந்திரனது நிமிர்ந்த தலையை ஒரு மென்கரம் அழுத்தி வணங்கச் செய்ததோடு, "முரசு சப்தம் அடங்கும் வரை தலையை உயர்த்த முனைய வேண்டாமென கட்டளையும் இட்டது " அதிகாரமாய்.


தலையை உயர்த்த முனைந்தவன், அந்த மென் கரத்தில் அவ்வளவு வலு எங்கிருந்து வந்தது எனப் புரியாமல் திகைத்து, அந்த மெல்லிடையாளின் கட்டளைக்கு அப்படியே கீழ்படிந்தான்.


ஒரு நாழிகைப் பொழுதில், முரசு சத்தம் முற்றிலும் அடங்கி வெகு தொலைவில் கேட்கத் துவங்கிய பின் , உதயச்சந்திரன் தலையை மெல்ல உயர்த்தி தன்னை அவ்வாறு பணிய வைத்தவள் யாரென்று பார்க்க  எத்தனித்தான்.


நிமிர்ந்த அவனை சிறிதும் இலட்சியம் செய்யாத அவளோ, மிக அலட்சியமாக.." இந்த தேசத்திற்கு நீங்கள் புதியவரா..? " என்றாள் கிள்ளை மொழியில்.


நிமிர்ந்தவன், அவளது அழகில் மயங்கியதோடல்லாது, அவள் கேட்டதைக் கூட சரியாக காதில் வாங்காமல்..அவளையே பார்த்துக் கொண்டு நினறான், அவள் மறுபடியும் அவனை நோக்கி, " நீங்கள் இந்த தேசத்திற்கு புதிதா..? " என்றாள்..க்ளுக் என சிரித்தபடியே.


சட்டென சுதாரித்துக் கொண்டவனாய்.." ஆம்..நான் பாரதத்தின் தமிழகத்தை சேர்ந்தவன்.." என்றான் பெருமையாய்.


" அது தானே பார்த்தேன்..வேற்று தேசத்தை சேர்ந்தவர் என்பதால் தான் விசயம் தெரியவில்லை..உங்களுக்கு.."


" என்ன விசயம்..? "


"மன்னர் வரும் போது தலை வணங்காவிடில் , தலை வணங்காதவர் தலை உடலை விட்டு அப்புறப் படுத்தப்பட்டு விடும்..உன் தலையே உனக்கு சொந்தமில்லை என்றாகி விடும்.." என்றாள் குதர்க்கமாய் .


" இது என்ன கொடுமை..? 

இந்த நாட்டின் சட்டதிட்டங்களை வேற்று தேசத்தவர் எவ்வாறு அறிவது..? "


" விசாரணையில் நீங்கள் வேற்றுத் தேசத்தவர் எனத் தெரிந்தால் மன்னர் மன்னிப்பை வழங்குவார்.."


" நல்லவேளை என்னை அந்த தொல்லையில் இருந்து காப்பாற்றி விட்டாய்..நன்றி பெண்ணே ..நீ இந்த தேசத்தை சேர்ந்தவள் தானா..?


" வீரரே..தங்களைப் போல நானும் பாரத தேசத்தை சேர்ந்தவள் தான்... என் தாய் மறைவிற்கு பிறகு இந்த தேசத்திற்கு வந்ததாக என் தந்தை கூறியிருக்கிறார்.." என அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே.. "பியூஷா..பியூஷா .." என அழைத்துக் கொண்டே ஒரு முதியவன் அவர்களை நோக்கி வர, " நான் பிறகு உங்களை சந்திக்கிறேன் " என்ற அவள் சட்டென கூட்டத்தில் கலந்து அந்த முதியவனை இழுத்துக் கொண்டு எதிர் திசையில் மறைந்தாள்.


மன்னரது ஊர்வலத்தில் திடுமென முளைத்ததோடு, தனது தலையைத் தாழ்த்தி அசையவொட்டாது செய்தவள், ஒரு முதியவன் வந்து அழைத்ததும் விருட்டென மறைந்து விட்டாளே..ம்..அவன் ஏதோ பெயர் சொல்லி அவளை அழைத்தானே...பியூஷா..ஆம்..அப்படித்தானே அழைத்தான்..வித்தியாசமான பெயர் தான்..அவள் நடவடிக்கையும் வித்தியாசமாகத் தான் இருக்கிறது..என மனதிற்குள் நினைத்துக் கொண்டவனாய், அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.


பியூஷா என அழைக்கப்பட்ட அவள் , அவளைத் தேடிவந்த முதியவனுடன் அவசரமாக எதிர் திசையில் சென்று விட்டதை தொடர்ந்து, தனது மனம் போன போக்கில் சுற்றித் திரிந்த உதயச் சந்திரன் இரவின் மூன்றாம் ஜாமத்தை நெருங்கும் போது , தான் தங்கியிருந்த சத்திரத்தை அடைந்தான்.அவன் தங்கியிருந்த சத்திரம் நந்தவனம் ஒன்றின் மையத்தில் அமையப் பெற்றிருந்தது.


நிலவின் குளுமையான ஒளியும், நானாவித மலர்களின் சுகந்தமும்  அவனது நாசியை வருட,  சத்திரத்தின் உள்ளே செல்ல மனமில்லாதவனாய் சத்திரத்தை சுற்றியிருந்த நந்தவனத்திற்குள் சென்றதோடு அங்கிருந்த பொய்கையொன்றின் கரையில் அமர்ந்து விட்டான். அவனது நினைவில் பல்லவரது காஞ்சியும், பிரம்மஸ்ரீராஜனும், பல்லவடி அரையனும், கடிகையாரும், மூலப்பிரகிருதியாரும் வந்து போனார்கள்..காஞ்சியின் கைலாசநாதர் கோவிலும் வந்து போனது.

என்ன இருந்தாலும் நமது பல்லவ தேசத்தின் பெருமைக்கு ஈடாகுமா இந்த காம்புஜம்..என மனதிற்குள் பலவாறு எண்ணம் கொண்டவனாய் அப்படியே அந்த பொய்கைக் கரையிலேயே படுத்து கண்களை மூடி நித்திரையில் ஆழ்ந்தான். தொடர்ந்து பயணம் செய்த களைப்பும், சில்லென்று குளுமையாய் வீசிய காற்றும், நாசியைத் தழுவிச் சென்ற நானாவித மலர் மணமும் அவனை மயக்கத்தில் ஆழ்த்தவே, நித்திரையில் ஆழ்ந்தவனை, " ஏய்..யார் நீ..எழுந்திரு.." என நான்கு காவலர்கள் வேல்முனையைக் கொண்டு உடலில் இலேசாக தட்டியெழுப்பவும் திடுக்கிட்டு கண் விழித்தான்.


_ தொடரும்..


# அனுராஜ்..


குறிப்பு : * மேகாங் நதி மியான்மரில் பனிமலையில் உற்பத்தியாகி, சீனா, தாய்லாந்த், லாவோஸ்,  வியட்நாம், கம்போடியா வழியாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பாய்ந்து கடலில் கலக்கும் ஒரு பெரிய நதியாகும்.


**நாம் குலேன் மலைகளில் இருந்து தான் உலக பிரசித்த பெற்ற அங்கோர்வாட் கோவிலுக்கான கற்கள் வெட்டி எடுக்கப் பட்டுள்ளதாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages